Home Blog Page 2794

ஐ.நா. வாகனங்கள் தொடர்பாக வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை – சிறீலங்கா இராணுவம்

.நா. சபை இலட்சினை பொறிக்கப்பட்ட வாகனங்கள், மாலி இராச்சியத்தில் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு அனுப்புவதற்காக தயாரித்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ண தெரிவித்துள்ளார்.

குறித்த தகவல்கள் தொடர்பாக சமூகவலைத் தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகங்களின் வினாக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேற்படி தெரிவித்தார்.

அந்த வாகனங்கள், மாலி இராச்சியத்தில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு அனுப்பி வைப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதை பரீட்சித்த போது புகைப்படம் எடுக்கப்பட்டு, அவை முகநூல் ஊடாக பரப்பப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

வாகனங்கள் வேறிடத்திலிருந்து கொண்டு வரப்படவில்லை என்றும், இராணுவத்தினரிடமிருந்த ஒரு ரக வாகனங்களே புதுப்பிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே இத்தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் லியோன் நகரில் குண்டுவெடிப்பு- 13 பேர் காயம்

பிரான்சு நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான லியோன் நகரில் நேற்று மாலை நடைபெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் காயமடைந்துள்ளனர். லியோன் நகரின் மையப்பகுதியில் விக்டர் ஹியூகோ வீதியில் மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக்குண்டுவெடிப்பு தொடர்பான ஒரு சந்தேக நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், வெடிகுண்டு அடங்கிய பார்சல் ஒன்றை, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மதிவண்டி ஒன்றில் வைத்ததாக கூறப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பயங்கரவாத தொடர்பு இருக்குமா? கோணத்திலும் விசாரணை நடப்பதாக பிரான்சு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து மக்கள் வெளியேற்றபட்டு பிரான்சு ராணுவத்தினரால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் – அமைச்சர் இராதாகிருஷ்ணன்

இலங்கையில் இருக்கின்ற வட கிழக்கு, மலையகம் உட்பட உள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று (25) காலை ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பாக கருத்து கேட்ட பொழுது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. இதன்போது ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட வேண்டும் என பெரும்பான்மை மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கமைய பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அவருடைய விடுதலை சரியா பிழையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க தமிழ் அரசியல் கைதிகளும் இதேபோல பொது மன்னிப்பின் கீழ் மகி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும்.

அண்மையில் வவுணதீவு வில் பொலிஸாரைக் கொலைசெய்ததற்காகக் கூறி கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி நிரபராதி என காணப்பட்டு விடுவிக்கப்பட்டார். அவர் விடுதலை பெற்று வந்த பின்பு தான் அனுபவித்த துன்பங்களையும் இந்த காலகட்டத்தில் தன்னுடைய குடும்பத்தின் நிலைமை பின்னடைவை சந்தித்திருப்பதையும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதையும் ஊடகங்கள் மூலமாக தெரிவித்திருந்தார். இதே நிலையே இன்று தமிழ் அரசியல் கைதிகளின்குடும்பங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு மனிதாபிமான ரீதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும்.

ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நேரடியாக தலையிட்டு இந்த கைதிகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை பெற்றுக்கொண்டு விடுதலை செய்வதற்கு அல்லது அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க சீன தூதுவரை சந்தித்தார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன தூதுவர் செஞ்சியா இற்குமிடையிலான சந்திப்பொன்று இன்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பில், இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், சுற்றுலா, கலாசாரம், மற்றும் தீவிரவாத முறியடிப்புத் துறைகளில் எவ்வாறு ஒத்துழைப்பது என்பது பற்றி ஆராயப்பட்டது. அத்துடன் ஆசிய நாகரீகங்களின் மாநாடு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சீனத் தூதுவர் விளக்கமளித்துள்ளார்.

பிபிசி க்கு எதிராக தமிழர்கள் போராட்டம்

தமிழீழ விடுதலைப்போரையும் அதன் தலைமையையும் கொச்சைப் படுத்தியதாகக் கூறி லண்டனை உள்ள பிரித்தானிய ஒலிபரப்புச் சேவைக்கு எதிராக தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 18 .05 .2019 அன்று உலகத்த தமிழர்களால் நினைவுகூரப்பட்ட
இனவழிப்பு நாளையொட்டி பிபிசி யின் தமிழ் பிரிவு இரு காணொளிகளை வெளியிட்டிருந்தது. இக்காணொளிகள் தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றை மலினப்படுத்துவதாகவும்,உண்மைக்குப் புறம்பான விடயங்களை கொண்டிருந்ததாகவும் தமிழர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதனைக்கண்டித்து தாம் இலண்டனில் இந்த போராட்டத்தை நடத்துவதாவும், இனத்தின் மேதகு தேசியத் தலைவரையும், தேசவிடுதலை வீரர்களையும் அவர்களின் தர்மத்தின் வழியிலான ஆயுத போராட்டத்தையும் எவராயினும் இனிக் கொச்சைப்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டோர் தெரிவித்தனர். இது போன்ற போராட்டங்கள்
புலம்பெயர் தேசமெங்கும் நடைபெற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.FB IMG 1558727574485 1 பிபிசி க்கு எதிராக தமிழர்கள் போராட்டம்

நல்லிணக்கம் பற்றி பேசும் தார்மிக தகுதி முஸ்லீம் அரசியல்வாதிகருக்கு இருக்கிறதா? பாராளுமன்றத்தில் வியாழேந்திரன்

நல்லிணக்கம் என்பது வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசுவதாலோ, ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதாலோ, பாராளுமன்றத்தில் பேசுவதாலோ வந்துவிடுவதில்லை . செயற்பாட்டு ரீதியாக வரவேண்டும். இன்று பேச்சளவில் கூட முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் நல்லிணக்கத்தை காண முடியாத துர்ப்பாக்கிய நிலமை இருக்கின்றது. இதற்கு சில உதாரணங்களை முன்வைக்க முடியும்

உண்மையிலே கடந்த மூன்று தசாப்த காலத்தில் எமது தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு உடப்ட இலங்கையின் பல பகுதிகளில் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதில் உச்சக்கட்டமாக 2009. இந்த நிலையில் எந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளாவது இது தொடர்பாக எழும்பி பேசினார்களா? இதை எதிர்த்துப் பேசினார்களா? இல்லை . மாறாக கொடியைப் பறக்கவிட்டு கொண்டாடினார்கள். இந்த நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்பட போகிறது?

வடக்கு கிழக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்று MLA ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் பேசிய போது அத்தனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனமாக தான் இருந்தீர்கள். ஒருவராவது எழும்பி இவருடைய கருத்தை எதிர்த்து பேசினார்களா? இல்லை. உங்களுடைய மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி. ஆகவே இந்நிலையில் எப்படி நல்லிணக்கம் ஏற்படப்போகிறது?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த சொல்லி இந்த நல்லாட்சியில் கூட எத்தனை எத்தனை மக்கள் போராட்டங்கள் முன்னெடுத்தார்கள். இன்று அவர்கள் 30 வருடத்திற்கு மேலாக முன்னெடுக்கின்ற உண்மையான ஏற்றுக் கொள்ளக்கூடிய யதார்த்த பூர்வமானபோராட்டத்திற்கு யாராவது ஒரு முஸ்லிம் அரசியல் வாதியாவது ஆதரவாக பேசியது உண்டா? இல்லை.இன்று அம்பாறையில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கருத்தை ஏற்றுக் கொண்டு இருக்கின்றீர்கள்.

இந்த நல்லாட்சி காலத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 11 இந்து கோயில்கள் எல்லைப்புறங்களில்உடைக்கப்பட்டிருக்கின்றன. மாட்டினுடைய அதாவது பசு கன்று வெட்டப்பட்டு மூலஸ்தானத்தில் வீசி எறியப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு பல உதாரணங்களை சொல்ல முடியும்.இன்று அந்த மாவட்டத்திலே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய தேசியக் கட்சியிலும் தமிழ் மக்களின் வாக்குகளையும் சேர்த்து பெற்றுக்கொண்டு அமைச்சர்களாக வந்து பாராளுமன்றத்தில் இருக்கின்ற எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ? எந்த முஸ்லிம் அமைச்சர்? இந்த செயற்பாட்டை கண்டித்துப் பேசினார்கள்? பேசவில்லை. இந்த நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்பட போகிறது?

இது மாத்திரமா அம்பாறை மாவட்டத்தில் ஒலிவில் மீனாட்சி அம்மன் ஆலயம், தீகவாவி சிவன் ஆலயம், நிந்தவூர் பிள்ளையார் ஆலயங்கள் உடைக்கப்பட்ட போதும், காணி தினம் அபகரிக்கப்படும் போது இது தொடர்பாக குரல் எழுப்பும் போது இதற்கு சார்பாக யாராவது பேசினார்களா இல்லை, மௌனமாக இருக்கின்றீர்கள் இருந்தீர்கள். உங்கள் கண்களில் வந்தால் இரத்தம் . எங்கள் கண்களில் வந்தால் தக்காளி சட்னியா? ஆகவே இந்த மௌனம் எதைக் காட்டுகிறது? இந்த நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்பட போகின்றது.?

ஆகவே நல்லிணக்கம் என்பது நீங்கள் பேச்சளவில் கூட கடந்த காலங்களில் நீங்கள் காட்டவில்லை. ஏன் நிகழ்காலத்தில் கூட உங்களிடத்தில் பேச்சளவில் கூட நல்லிணக்கத்தை காணவில்லை. ஆனால் இன்று நீங்கள் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு பின்பு நல்லிணக்கத்தை பற்றி பேசுகிறீர்கள். ஆனால் இன்று எங்கள் மத்தியில் இருந்து கொண்டு உங்களுக்காக எங்கள் தலைமைகள் நல்லிணக்கத்தை பற்றி பேசுகின்றன.

உண்மையிலேயே உண்மையான நல்லிணக்கம் என்பது பேச்சிலும் பேச்சிற்கப்பால் செயற்பாட்டிலும் இடம் பெறவேண்டும். இன்று உங்களிடம் பேச்சிலும் இல்லை. செயற்பாட்டிலும் இல்லை. ஆகவே அந்த நிலை ஏற்படும் போது தான் இந்த நாட்டிலே ஒரு சிறந்த நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டு என நான் இந்த உயரிய சபையிலே தெரிவித்துக்கொள்கின்றேன்.

உண்மையிலேயே உங்களுக்கு சவால் விடுகின்றேன் யாராவது கடந்த காலத்திலே தமிழ் மக்கள் பல வகையிலும் பாதிக்கப்பட்ட போது அவர்களுடைய நில வளங்கள் அபகரிக்கப்பட்ட போது சூறையாடப்பட்ட போது யாராவது இதற்கு எதிராக இலங்கையில் எந்த பகுதியிலும் இருந்து எந்த முஸ்லிம் தலைமைத்துவமும் குரல் கொடுத்ததா? இல்லை அப்படி இருந்தால் நான் சவால் விடுகின்றேன் எழும்பி கூறுங்கள்.

உங்களால் முடியாது. ஆகவே கடந்த காலங்களில் பள்ளிவாசல் உடைக்கப்பட்ட போது பன்றி உடல் வெட்டிப் போடப்பட்ட போதும் நீங்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக தான் இருந்தீர்கள். உங்களுக்காக நாங்கள் பரிந்து பேசினோம். அதற்காக குரல் கொடுத்தோம். அதற்காக தமிழ் தலைமைகள் குரல் கொடுத்தன.

ஆகவே கடந்த காலத்தில் 7 ஆசனங்களை கொண்ட முஸ்லிம் காங்கிரசுற்கு 11 ஆசனங்களை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்துக் கொடுத்தது. இது மாத்திரமல்லவடமாகாணத்தில் அஸ்மீர் என்று சொல்லக்கூடிய ஒருவருக்கு மாகாணசபையில்கூட அவருக்கு மாகாண சபை உறுப்பினர் என்ற அந்தஸ்தை வழங்கியது.

நாட்டில் இரத்த ஆறு ஓடும் – அன்று ஹிஸ்புல்லா, நாட்டில் பாரிய அழிவு ஏற்படும் – இன்று அசாத் சாலி

இஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி எச்சரித்துள்ளார்.

பாதுகாப்புப் பிரிவினர் ஒரே முஸ்லிம் பள்ளிவாசலில் மேற்கொள்ளும் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு தான் பாதுகாப்பு சபையில் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முன்னராக ‘வடக்குக்கிழக்கு இணைந்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடும்’
என தற்போதைய கிழக்குமாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா குறிப்பிட்டிருந்தமை நாமறிந்ததே.

அவுஸ்ரேலியாவில் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் ‘தமிழீழ கட்டுமானங்கள்’ (“Structures of Tamil Eelam: A Handbook”) என்ற நூல் அண்மையில் சுவிற்சலாந்தில் வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து இந்த நூல் புலம் பெயர் நாடுகளில் பரவலாக வெளியீடுசெய்யப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக அவுஸ்ரேலியாவில் இந்த வெளியீடு நடைபெறுகிறது. எதிர்வரும் 09.06. 2019 அன்று பி.ப 5.00 மணிக்கு  Reg Byrne Community Centre
Wentworthmille 2145 Sidney Australia  என்ற முகவரியில் இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இந்த நிகழ்வு தொடர்ப்பன சுவரொட்டிகள் அவுஸ்திரேலியாவில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.WhatsApp Image 2019 05 25 at 09.59.25 அவுஸ்ரேலியாவில் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

WhatsApp Image 2019 05 25 at 09.59.251 அவுஸ்ரேலியாவில் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

பொறுப்பான எவரினதும் பிரசன்னம் இன்றி அவசரகாலாச் சட்ட விவாதம் – கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிப்பு

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அனுமதியை பாராளுமன்றம் நேற்று வழங்கியது. மிகக்குறைந்தளவான உறுப்பினர்களே சமூகமளித்திருந்த நிலையில் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் கிடைத்தன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்ததுடன், எதிர்க்கட்சி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

சபையில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான சபைநடவடிக்கைள் இடம்பெற்றபோது பாதுகாப்பு அமைச்சரோ,இராஜாங்க அமைச்சரோ அல்லது பாதுகாப்புச் செயலாளரோ சமூகமளித்திருக்கவில்லை. அத்துடன் முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிவுகளும் கூட அங்கிருக்கவில்லை.

அங்கு உரையாற்றிய சபைமுதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது சம்பிரதாயப்படி முப்படைய அதிகாரிகள்,காவல்துறை தரப்பு மற்றும் பாதுகாப்புச் செயலாளர் சபையில் சமுகமளித்திருக்க வேண்டும். அவர்கள் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டும். ஆனால் இம்முறை ட்டுமல்ல கடந்தமுறையும் சமூகம் தரவில்லை.இவர்கள் ஏன் இவ்வாறுசெய்கின்றனர் எனது தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வருடங்களில் சீனா சந்தித்த முதலாவது விண்வெளித் தோல்வி

சீனாவின் விண்வெளித் திட்டம் இந்த வாரம் தோல்வியைச் சந்தித்துள்ளதாக றோய்ட்டர் செய்தி நிறுவனம் நேற்று (24) தெரிவித்ததுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செய்மதி ஒன்றைச் செலுத்தும் முயற்சியில் கடந்த வியாழக்கிழமை (23) சீனா தோல்வியைச் சந்தித்துள்ளது. விண்வெளித் திட்டத்தில் கடந்த சில வருடங்களாக சீனாவே முன்னிலை வகித்து வந்துள்ளது.

ஏனைய நாடுகளை விட அதிக செய்மதிகளை கடந்த வருடம் சீனா விண்ணுக்கு அனுப்பியிருந்தது. கடந்த வருடம் ஜனவரி மாதம் சந்திரனின் மறு பக்கத்தில் நிலைகொள்ளுமாறு செய்மதியை செலுத்தியதன் மூலம் சீனா வரலாற்றில் இடம்பிடித்திருந்தது.

ஆனால் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது செய்மதியை எடுத்துச் செல்லும் ஏவுகணை அதன் மூன்றாவது நிலையில் செயற்படவில்லை என சீனாவின் சிங்குவா ஊடகம் தெரிவித்துள்ளது.

150 அடி நீளமான ஏவுகணையானது செய்மதியை எடுத்துச் செல்ல முற்பட்டபோதே இந்த தோல்வி நிகழ்ந்துள்ளது.

சீனா அரசுக்கு தேவையான புலனாய்வுத் தகவல்களைத் சேகரிக்கும் நோக்கத்துடன் விண்ணில் செலுத்தப்படவிருந்த இந்த செய்மதியின் தோல்வி குறித்து பொறியியலாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.