முப்படைகளின் பலமா? வல்லரசுகளின் நலனா? : விதுரன்
பிரித்தானியா ஏற்படுத்திய பிரச்சனையை தீர்க்க அவர்கள் வரவேண்டும் – நேபாளப் பிரதமர்
யாழ் சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடை: கடற்றொழில் அமைச்சர் மீது குற்றஞ்சாட்டு
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு கலாசார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதற்கு மறுப்புத் தெரிவிப்பதாக இந்து பௌத்த அமைப்பின் இணைப்பாளர் கலாநிதி சிதம்பர மேகன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
லண்டனில் வாழும் தமிழ் அன்பர் ஒருவர் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் வைப்பதற்காக இந்த நடராஜர் சிலையை அனுப்பி வைத்திருந்ததாக கலாநிதி சிதம்பர மேகன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிலையை விமான நிலைய வளாகத்தில் நிறுவுவதற்கான முயற்சிகளைத் தாம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் உள்ளூர் விகாராதிபதி ஆகியோருடன் இணைந்து மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிக்குக் கலாசார அமைச்சர் பச்சைக்கொடி காட்டியிருந்த நிலையிலும், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மத முரண்பாடுகள் தோன்றிவிடும் எனக் கூறி இந்த சிலையை வைக்க விடாமல் தடுத்து வருவதாக அவர் சாடியுள்ளார்.
அமைச்சரின் இந்த முட்டுக்கட்டை மற்றும் எதிர்ப்புத் காரணமாக, லண்டனில் இருந்து விமான நிலையத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை, தற்போது யாழ்ப்பாணம் நாக விகாரைக்குள் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஆகவே, இந்த விவகாரம் அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களின் கலாசார அடையாளத்தைப் பாதிக்கும் ஒன்றாக மாறுவதற்கு முன்பதாக, சம்பந்தப்பட்ட உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவால் புற்றுநோய்க்கு சிகிச்சை
வடக்கு மாகாணத்துக்கு அதிகார பகிர்வு வழங்குவது தேசத்துரோகம் : ஜனாதிபதிக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை
வடக்கு மாகாண சபைக்குக் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என தாம் நம்புவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் தேர்தலை நடத்தி அதன் பின்னர் வடக்கு மாகாண சபைக்குக் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கினால்தான் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும் என்று சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இதுவரை ஆட்சி புரிந்த எந்தவொரு ஜனாதிபதியும் மாகாணங்களுக்குக் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கும் இந்த வேலையைச் செய்யவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதே அணுகுமுறையைத்தான் பின்பற்றுவார் எனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
ஒருவேளை வடக்கு மாகாணத்திற்கு இத்தகைய காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டால், இந்த நாடு ஒரு கூட்டாட்சி ராஜ்யமாக மாறிவிடும் என்று சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் இதுவரைகாலமும் இரத்தமும் தியாகமும் சிந்திப் பாதுகாத்து வந்த நாட்டின் ஒற்றையாட்சி முறைமை முற்றாக இல்லாமல்போகும் என குறிப்பிடப்பட்டார்.
எனவே, இது ஒரு தேசத்துரோக நடவடிக்கையாகவே அமையும் என்றும், இவ்வாறானதொரு செயலை ஜனாதிபதி செய்யமாட்டார் என்றே தாம் நம்புவதாகவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
செம்மணியில் சிறுவர்களின் என்புக்கூடுகள் தொடர்ச்சியாக மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் இருந்து மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன் , 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 17ஆம் நாள் அகழ்வு பணிகளின் போது அவை மீட்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, 296 என்பு கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 290 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை அகழ்வு பணிகளின் போது , என்பு கூடொன்றுடன் தகர வடிவிலான பொருள் ஒன்று மீட்கப்பட்டு அது சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
“இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” எனும் புதிய அமைப்பு உருவாக்கம்
நாட்டின் ஊடகத் துறையில் பணியாற்றும் உயர்தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் ஏதுவாக “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” எனும் புதிய அமைப்பைத் ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதியிடப்பட்டு இந்த விசேட வர்த்தமானி குறைநிரப்பியாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தின்படி, புதிய நிறுவகமானது சுயாதீனமாக இயங்கும் ஒரு கூட்டுத்தாபனமாக அமையவுள்ளதுடன் முக்கிய குறிக்கோள்களைக் கொண்டு செயற்படவுள்ளது.
ஊடகத்துறையில் பணியாற்றும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பதிப்பாசிரியர்கள், தொகுப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊடக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து உயர்தொழிலாளர்களையும் ஒரே தொழில்சார் ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவருதல் இதன் நோக்கமாகும்.
அத்துடன் தகைமை வாய்ந்த ஊடகவியலாளர்களை உறுப்பினர்களாக நிரலிற் சேர்த்தல் மற்றும் அவர்களின் தராதரங்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமளித்தல், ஊடகக் கல்வி, பயிற்சி நெறிகள் மற்றும் பரீட்சைகளை நடாத்தி, சர்வதேச ஊடகப் போக்குகளுக்கு ஏற்ப ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல் போன்ற செயற்பாடுகளும் இதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளன.
மிக முக்கியமாக, அனைத்து உறுப்பினர்களும் மாணவர்களும் பின்பற்றுவதற்கென விசேட நடத்தைக் கோவையொன்றைத் தயாரித்து, தொழில்சார் ஒழுக்காற்றைப் பேணுதல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான தமிழ் பாடகருக்கு விடுதலை கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளம் தமிழ் பாடகர் கணேஷ்குமார் சங்கீதனுக்கு விடுதலை கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதன்படி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கான, ஆவணங்கள் மற்றும் சத்தியக் கடதாசியில் கையொப்பம் பெறப்பட்டுள்ளதாக சங்கீதன் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விரைவில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தி, உள்நாட்டிலும், சர்வதேச நாடுகளிலும் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் எழுச்சிப் பாடலை, அண்மையில் நிகழ்வொன்றில் பாடியதாக தெரிவித்து, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த பாடலை பாடியதன் மூலம், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்துள்ளார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால் தற்போதைய அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை அவர்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
‘மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் கோழைத்தனமான அநுரவின் வெறியாட்டத்தை தோற்கடிப்போம்’ என்ற கருப்பொருளில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஆட்சிக்கு வந்த மிகக் குறுகிய காலத்திற்குள் தற்போதைய அரசாங்கம் சுமார் 23 இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது. தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் மேலும் பல இலட்சம் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தினால், மக்கள் மத்தியில் செல்ல அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது.
நாட்டு மக்கள் கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எந்தவொரு தரப்பிற்கும் பாராமன்றத்தில் அல்லது ஆட்சியில் அபரிமிதமான (மூன்றில் இரண்டு) அதிகாரத்தை வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் அதிகார மமதையால் நாட்டை சீரழிக்கும் தவறான அரச ஆளுகை முறையே உருவாகும்.
ஒரே மாற்றாகக் காணப்படும் ஐக்கிய மக்கள் சக்திக்குக் கூட சாதாரண பெரும்பான்மையே போதுமானது; அறுதிப் பெரும்பான்மையோ அல்லது அபரிமிதமான அதிகாரமோ எமக்கும் தேவையில்லை.
மக்களின் துயரங்களை விற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இன்று அவற்றை மறந்து சுகபோகங்களை அனுபவித்து வருகின்றது. உலக சந்தையில் நிலவரங்கள் சாதகமாக இருந்தும், மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்கவோ அல்லது எரிபொருளுக்கான வரிகளை நீக்கி மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ இந்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியால் “தேசிய நடவடிக்கைக் குழு” ஒன்று ஸ்தாபிக்கப்படும். இதில் பதவிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், மக்களின் துயரங்களைத் தீர்க்கப் போராடும் அனைவரும் உள்வாங்கப்படுவர்.
மாகாண சபைகள் மூலம் சர்வதேச முதலீடுகளைக் கூட ஈர்த்து சிறந்த சேவையாற்ற முடியும். நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து, அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய 13 ஆவது திருத்தச் சட்டம் அவசியமானது. சர்வதேசத்திற்குச் சென்றால் ’13 பிளஸ்’ என்றும், உள்நாட்டில் சில பகுதிகளில் ’13 மைனஸ்’ என்றும் இரட்டை வேடம் போடும் அரசியல் எமக்குக் கிடையாது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.
