இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்து ள்ள இலங்கைத்தீவு, வரலாற்று ரீதியாகவே சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாயப் பாதைகளின் சந்திப்புப் புள்ளி யாக விளங்கி வருகிறது.
அண்மையக் காலங்களில் இலங்கையின் முப் படைகளுக்கும், பொலிஸாருக்கும் சர்வதேச நாடுகளிட மிருந்து தாராளமாக வந்திறங்கும் இராணுவத் தளவாடங்கள், வான்கலன்கள் மற்றும் வாகனக் கொடைகள் வெறும் ‘நட்புறவு’ சார்ந்த உதவிகள் அல்ல.
மாறாக, அவை தீவிரமடைந்து வரும் பூகோள அரசியல் போட்டியின் நேரடிப் பிரதிபலிப்பாகும். அவற்றுக் குப் பின்னால் தூரநோக்குடைய நிகழ்ச்சி நிரல்களும் இருக் கின்றன என்பதை மறுப்பதிற்கில்லை.
அமெரிக்கா, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் தத்தமது செல்வாக்கை நிலைநிறுத்த முற்படுவதை இக்கொடைகள் அப்பட்டமாக உணர்த்துகின்றன.
இலங்கைப் படைகளின் பலத்தை அதிகரிப்பதை விட, தமது சொந்தப் பிராந்தியப் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதே இந்நாடுகளின் முதன்மை இலக்காகும். இலங்கைக்கு அண்மையில் கிடைத்த இராணுவ உதவிகளை உற்று நோக்கினால், ஒவ்வொரு நாட்டின் பின்னணியிலும் உள்ள மூலோபாய கணக்குகள் தெளி வாகப் புலப்படும்.
அவுஸ்திரேலியா இலங்கை கடலோரக் காவல் படைக்கு 12 அதிநவீன கண்காணிப்பு ட்ரோன் களை வழங்கியுள்ளது. மிரிஸ்ஸ கடலோரக் காவல்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, அவுஸ்திரேலி யாவின் நீண்டகால பாதுகாப்பு கவலையோடு தொடர்பு டையது.
இறுதிக்கட்டப் போருக்குப் பின்னர், இலங்கை யிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற சட்டவிரோத அகதிகள் படகுகள் அந்நாட்டுக்கு பெரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தின.
அவுஸ்திரேலியா கண்காணிக்க வேண்டிய 5500 கிலோமீற்றர் பரந்து விரிந்த கடற்பரப்பில் தனது சொந் தப் போர்க்கப்பல்களை நிறுத்துவதை விட, இலங்கை கடற்படையினதும் கடலோரக் காவல்படையினதும் கண் காணிப்புத் திறனை மேம்படுத்துவது அதற்கு செலவு குறைந்த உத்தியாகும்.
குறைந்த மனிதவளம் மற்றும் எரிபொருள் செல வில் அதிக பரப்பளவைக் கண்காணிக்க உதவும் இந்த ட்ரோன்கள், அவுஸ்திரேலியாவின் எல்லையை இலங்கைக் கடற்பரப்பிலேயே பாதுகாக்கும் ஒரு ‘முன்னரங்கு வேலி’ அமைப்பாகச் தொழிற்படுகின்றன.
மறுபுறம், அமெரிக்க கடலோரக் காவற்படையால் வழங்கப்பட்ட ‘டெசிசிவ்’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், ‘என்எல்என்எஸ் சமுத்ரவிஜய’ (பி-628) என்ற பெயரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பால்டிமோரிலிருந்து 78 நாட்கள் பயணித்து, 14,775 கடல் மைல்களைக் கடந்து இலங்கை கடற்படை வரலாற்றில் மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டு இக்கப்பல் வந்து சேர்ந்துள்ளது. இதற்கு இணையாக, அமெரிக்க கடற்படையில் பயன்படுத்தப்பட்டு மறுசீரமைக்கப்பட்ட பத்து ‘ரி.எச்-57 சீ ரேஞ்சர்’ பலநோக்கு ஹெலிகொப்டர்களும் விமானப் படைக்கு வழங்கப்பட்டுள்ளன.
போர் நடைபெற்ற காலத்தில் கூட ஒரே தடவையில் இவ்வளவு எண்ணிக்கையிலான வான்கலன்கள் இலங்கைக்கு வந்ததில்லை. அமெரிக்காவின் நோக்கம் முற்றிலும் சர்வதேச கடல்சார் பாதைகளின் பாதுகாப்போடு தொடர்புடையது.
இலங்கைக்கு தெற்கே 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள உலகளாவிய எரிபொருள் மற்றும் வர்த்தகப் பாதையைத் தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதே அமெரிக்காவின் ‘இந்தோ-பசுபிக் மூலோபாயத்தின்’ முக்கிய அங்கமாகும்.
ஏற்கனவே வழங்கப்பட்ட சமுத்ர, கஜபாகு, விஜயபாகு கப்பல்களின் வரிசையில் சமுத்ரவிஜயவும் இணைந்திருப்பது, இலங்கை கடற்படையை அமெரிக்கத் தரநிலைகளுக்கு பழக்கப்படுத்துவதோடு, இவ்வாறான கொடைகளின் மூலம் இலங்கையின் பாதுகாப்பு கொள்கையைத் தன்வசப்படுத்த அமெரிக்கா முயல்வதைக் காட்டுகிறது.
கடல்சார் பாதுகாப்புக்கு அப்பால், இலங்கையின் உள்நாட்டுப் பாதுகாப்பிலும் நிலைத்தன்மையிலும் இந்தியா தீவிர அக்கறை காட்டுகிறது. அதனொரு பகுதியாக, வட மாகாண பொலிஸாரின் பயன்பாட்டிற்காக 300 மில்லியன் ரூபா பெறுமதியான 134 கப் வாகனங்களை இந்தியா கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கையின் உள்நாட்டுப் பாதுகாப்பில் ஏற்படும் எந்தவொரு தளம்பலும், இந்தியாவின் – குறிப்பாக தமிழ் நாட்டின் – சமூக, அரசியல் சூழலில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புதுடில்லி நன்கறியும்.
போர்க்கால ஆயுதங்களை வழங்குவது இலங்கைக் குள் தேவையற்ற அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தலாம் என்பதால், பொலிஸ் மற்றும் சட்ட அமுலாக்கக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இத்தகைய சிவில்-பாதுகாப்பு உதவிகளை இந்தியா வழங்குகிறது. இதன் மூலம் வடக்கில் தனது மூலோபாய இருப்பை இந்தியா உறுதி செய்கிறது.
இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்குள் பூகோள சக்திகளின் ஊடுருவல் என்பது அண்மைக்கால நிகழ்வல்ல. முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போதும், அதற்குப் பின்னரும் சீனா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகள் ஆற்றிய பங்களிப்பு இன்றும் தொடர்கிறது.
உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் இலங் கைக்கு பெருமளவிலான கனரக ஆயுதங்களையும், போர்க் கப்பல்களையும் தங்கு தடையின்றி வழங்கிய நாடு சீனா. போரின் பின்னரும் இலங்கை கடற்படைக்கு ‘பி-625’ என்ற அதிநவீன ரோந்துக் கப்பலைக் கொடையாக வழங்கியது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான சீனாவின் கட்டுப்பாடும், அதன் ‘மறைமுக இராணுவப் பயன்பாட்டு’ அச்சமும் பிராந்தியத்தில் பெரும் விவாதப் பொருளாக உள்ளது.
அதேபோல, இலங்கையின் விமானப்படை மற்றும் காலாட்படை வீரர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சிகளையும், போர்க்காலத்தில் அவசர ஆயுத விநியோகங்களையும் வழங்கியதன் மூலம் பாகிஸ்தான் இலங்கையின் பாது காப்புத் துறையில் நம்பகமான பங்காளியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
ஜப்பானும் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் அனர்த்த முகாமைத்துவத்தில் தொடர்ந்து இலங்கைக்கு நிதியுதவிகளையும், சிறிய ரக ரோந்துப் படகுகளையும் வழங்கி வருகிறது.
தற்போது கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கவும் ஜப்பான் முன்வந்துள்ளது. இது சீனாவின் ‘ஒரே மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சி’ திட்டத்திற்குப் போட்டியாக ஜப்பானின் ‘சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசுபிக்’ கொள்கையின் கீழ் அமைகிறது.
வல்லரசுகளின் இந்த அதீத ‘கொடைக் கலாசாரம்’ இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் எதிர்காலத்தை சிக்கலான புள்ளிக்கு இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது.அமெரிக்கா மற்றும் சீனா வழங்கும் கப்பல்களும் ஹெலிகொப்டர்களும் ஏற்கனவே பயன்படுத்தப் பட்டவையாகும். இவை ஆரம்பத்தில் கொடையாகக் கிடைத் தாலும், இவற்றின் நீண்டகாலப் பராமரிப்பு, உதிரிப்பாகங்கள் கொள்வனவு மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கு இலங்கை அந்தந்த நாடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும்.
இது இலங்கையின் பாதுகாப்பு வரவு,செலவுத் திட்டத்தில் மறைமுகப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத் துவதோடு, அவசர காலங்களில் அந்த நாடுகள் உதிரிப்பாக விநியோகத்தை நிறுத்தினால் இத்தளவாடங்கள் முடங்கிப் போகும் அபாயமும் உண்டு. மேலும், இலங்கைப் படைகளின் ஒரு பிரிவி னருக்கு அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் பயிற்சிய ளிக்க, மறுபுறம் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தத்தமது இராணுவக் கோட்பாடுகளின்படி பயிற்சி யளிக்கின்றன.
ஒரே பாதுகாப்புப் படைக்குள் வெவ்வேறான மூலோபாயக் சிந்தனைகளைக் கொண்ட நாடுகள் ஊடுருவும் போது, அது இலங்கையின் தேசியப் பாதுகாப்புக் கொள்கையில் ஒருமுகத்தன்மை இல்லாமையை ஏற்படுத்தும்.
சர்வதேச நாடுகள் வழங்கும் நவீன கண்காணிப்பு உபகரணங்கள் மூலம் சேகரிக்கப்படும் கடல்சார் புலனாய்வுத் தகவல்கள் மறைமுகமாக அந்த வல்லரசுகளின் கட்டுப்பாட்டு மையங்களுக்கும் பகிரப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால், இலங்கையின் கடல் எல்லைக்குள் நடக்கும் அனைத்து நகர்வுகளையும் வெளிப்புற சக்திகள் கண் காணிக்கும் நிலையும் உருவாக்கும் ஆபத்துக்கள் நிறைந்து வருகின்றன.
சர்வதேச நாடுகள் இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்புகிறதோ இல்லையோ, இலங்கை யைச் சுற்றியுள்ள கடற்பகுதியின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதன் மூலம் தமது சொந்தப் பாதுகாப்பு நலன்களை அடைந்துகொள்ள முயல்கின்றன என்பதே தற்போதைய யதார்த்தம்.
பூகோள சக்திகளின் இந்த மூலோபாயப் போட்டியை இலங்கை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாதுரியமான இராஜதந்திரத்தைக் கையாள வேண்டும். எந்தவொரு குறிப்பிட்ட வல்லரசுக்கும் இலங்கையின் இராணுவத் தளங்களையோ அல்லது கொள்கைகளையோ தாராளமாகப் பயன்படுத்த இடமளிக்கக்கூடாது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிச் சூழலில், சொந்தப் பணத்தில் வாங்க முடியாத நவீன கப்பல்களையும் ஹெலிகொப்டர்களையும் கொடையாகப் பெற்று, நாட்டின் கடல்சார் வளக் கொள்ளை, மனிதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு இவற்றை இலங்கை திறம்படப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பூகோள அரசியல் சதுரங்கத்தில் இலங்கை பகடைக் காயாகவும் மாறிவிடாமல், அதேநேரம் வல்லரசுகளின் தேவைகளைத் தனது சொந்தத் தேசியப் பாதுகாப்புப் பலமாக மாற்றிக் கொள்ளும் புத்திசாலித்தனமான இராஜ தந்திரப் பாதையிலேயே அதன் எதிர்காலப் பாதுகாப்பு தங்கியுள்ளது.



