ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker Türk) இரண்டாவது பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இந்த ஆண்டு ஓக்டோபர் 11 ஆம் திகதியுடன் முடிவடைய இருந்த அவரது பதவிக்காலம், மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய பிரதானியை தெரிவு செய்வதற்காக ஐ.நா. பொது சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவர், 134 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்.
இதன்போது அவருக்கு ஆதரவாக 144 உறுப்பு நாடுகள் வாக்களித்த நிலையில், 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
மேலும் 13 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் விலகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா மற்றும் வடகொரியா உள்ளிட்ட ஆறு நாடுகள் வொல்கர் ரெக்கிற்கு எதிராக வாக்களித்துள்ளன.
வொல்கர் ரெக் தனது இரண்டாவது பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தால், 1993ஆம் ஆண்டு இப்பதவி உருவாக்கப்பட்டதற்குப் பிறகு இரண்டு தடவை பதவிக்காலங்களை முழுமையாக நிறைவு செய்யும் முதல் ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் என்ற பெருமையைப் பெறுவார்.
குறிப்பாக கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டதுடன் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் உள்ளிட்ட தமிழ் தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



