தமிழ் சமூகம் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிப்பதாக சாணக்கியன் பாராளுமன்றில் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை வரவேற்றுள்ளதாக திரிபுப்படுத்தப்பட்ட வகையில் செய்தி வெளியிடப்படுகின்ற போதிலும் உயர்ஸ்தானிகர் தனது வெளிப்படுத்தலில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தி, மிகுதியாகவுள்ள காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமான நகர்வுகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள அறிக்கை மற்றும் அதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தில் இன்று (09) அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்

மோதல் தொடர்பான மனித உரிமை மீறல்கள் பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கும், போதிய சான்றுகள் உள்ள நபர்களை நீதிமன்றங்களின் முன் கொண்டு வருவதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் முன் அரசாங்கம் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதா? உயர்ஸ்தானிகரின் பொறுப்புக்கூறல் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய மனித உரிமைகள் பேரவைக்கு அளிக்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானவை என அரசாங்கம் கருதுகின்றதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

உள்நாட்டு வழிமுறைகள் மீது பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நம்பிக்கை இல்லை என்பதையும், அச்சமூகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற வகையில், பாதிக்கப்பட்ட சமூகம் உள்நாட்டு வழிமுறைகளை மட்டும் ஒரு போதுமான தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் பதிவு செய்வதாக சாணக்கியன் இதன் போது குறிப்பிட்டார்.

இந்தச் சூழலில், அர்த்தமுள்ள சர்வதேச பங்கேற்பு, சுயாதீன அரச வழக்கறிஞர்கள், சர்வதேச தடயவியல் நிபுணத்துவம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்பு மற்றும் கட்டளைப் பொறுப்பு உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணை தொடர்பாக மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள நிலைப்பாடு குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியிருந்தார்.