இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மூன்று பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வான் பாதுகாப்புத் திறன் மேம்பாடு, இராணுவக் கல்வி மற்றும் இளைஞர் ஒத்துழைப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இதன்கீழ், இலங்கை விமானப்படையிடம் உள்ள ஆறு 40 மில்லிமீற்றர் எல்70 ரக வான் பாதுகாப்புப் பீரங்கிகளை நவீனமயப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் மானிய உதவி வழங்கவுள்ளது.

மேம்படுத்தப்படும் இந்த அமைப்புகள், முக்கிய தேசிய சொத்துக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் ஒட்டுமொத்த வான் பாதுகாப்புத் திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இலங்கையின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது

இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கிடையே அறிவுப் பரிமாற்றம், நிபுணத்துவப் பகிர்வு மற்றும் தேசிய பாதுகாப்பு, மூலோபாய விவகாரங்கள் தொடர்பான கல்விசார் கலந்துரையாடல்களுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய தேசிய மாணவர் படைக்கும் இலங்கை தேசிய மாணவர் படைக்கும் இடையிலான ஒத்துழைப்பை முறைப்படுத்துவதாக அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தேசிய படை மாணவர்கள் ஆண்டுதோறும் இந்தியாவுக்குச் சென்று தேசிய மாணவர் படை நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் இந்த ஒத்துழைப்பின் ஊடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.