Home Blog Page 23

கோட்டாபயவைக் கைது செய்ய திட்டம் : புதிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணி தலைவர் சுகிஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் இந்தக் கைதுத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

அதற்காக முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்கனவே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தச் செயல்முறை அரசியல் நலன்களின் அடிப்படையில் நடத்தப்படும் ஒரு அரசியல் வேட்டை என்றும் புதிய மக்கள் முன்னணி தலைவர் சுகிஸ்வர பண்டார குற்றம்சாட்டினார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த பாடகரை யாழ் சிறைச்சாலையில் இன்றைய தினம் அவர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

“தனது இனத்தின் வரலாற்று வலிகளையும், இழப்புகளையும், மன உணர்வுகளையும் இசை மற்றும் பாடல் வழியாக வெளிப்படுத்திய ஓர் இளைஞன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழ் மக்களிடையே மிகுந்த அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு கலைப் படைப்பின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை குற்றமாகக் கருதி, அதற்காக ஓர் இளைஞனின் சுதந்திரம் பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது, இந்த நாட்டில் தமிழர்கள் எதிர்கொள்ளும் கருத்துரிமைச் சவால்களின் தீவிரத்தையே எடுத்துக்காட்டுவதாக மக்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, தமிழ் மக்களினதும் இளைஞர்களினதும் நம்பிக்கையையும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பையும் அடித்தளமாகக் கொண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இத்தகைய கைது இடம்பெற்றிருப்பது, தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான ஏமாற்றத்தையும் நம்பிக்கைச் சிதைவையும் ஏற்படுத்தியுள்ளதாக சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

சமத்துவம், நீதி, ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை முன்னிறுத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் இவ்வாறான நடவடிக்கைகளால் கேள்விக்குள்ளாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலங்களில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளும் கூட, தமிழர் ஆயுதப் போராட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாடல்கள், நினைவுகள் மற்றும் அரசியல் குறியீடுகள் காணப்பட்ட சூழல்களில் மக்களின் ஆதரவை நாடியமை மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.

அவ்வாறிருக்க, இன்று ஒரு இளைஞன் பாடல் ஒன்றை வெளியிட்டதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது, சட்டத்தின் பயன்பாடு தொடர்பில் பாரிய முரண்பாடுகளையும் நியாயப்பூர்வமான கேள்விகளையும் எழுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கை சங்கீத்சன் என்ற இளைஞனின் தற்போதைய சுதந்திரத்தை மட்டுமல்லாது, அவரது எதிர்காலக் கல்வி, தொழில், சமூக வாழ்வு மற்றும் கலைப் பயணத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

அதேவேளை, அவரது குடும்பம் மிகுந்த மன உளைச்சலுக்கும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றமை துயர்மிகுந்த விடயமாகும்.

“ஒரு ஜனநாயக நாட்டின் உயரிய பொறுப்பில் அமர்ந்திருக்கும் தாங்கள், சட்டத்தின் ஆட்சியை மதிப்பதோடு மட்டுமல்லாது, நீதியின் உயிரையும் மனிதாபிமானத்தின் விழுமியங்களையும் காக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பையும் சுமக்கின்றீர்கள்.

இவ்விடயத்தில் மனிதாபிமான அடிப்படையிலும், நல்லிணக்கத்தின் அடிப்படையிலும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமநீதியை உறுதிப்படுத்தும் அடிப்படையிலும் தங்களது நேரடி தலையீட்டின் மூலம், கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனுக்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரங்களின் கீழ் பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் உடனடி விடுதலையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்” என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

செம்மணி மனித புதைகுழியில் 318 மனித என்பு தொகுதிகள் அடையாளம்!

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 19வது நாளான இன்று 318 மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் 318 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் 302 எலும்பு எச்சங்கள் சுத்தம்செய்யப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இன்று புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றுள் இதுவரை காலமும் மொத்தமாக 20 தொகுதி எலும்புக்கூடுகள் குவியல்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதில் சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டத்திற்கு அழைப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி இலங்கை தமிழ் அரசுக் கட்சி – மன்னார் கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை (11) காலை மன்னார் நகரில் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் தொடர்பாக அறிவிக்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (8) பகல் ஊடக சந்திப்பு நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளைத் தலைவர் பா.ஜேக்குமார், கட்சியின் செயலாளர் ப.ஜஸ்ரின் துரம், கட்சியின் மாந்தை மேற்கு பிரதேச கிளை செயலாளர் ஐ.கணேசபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அக்குழுவினர் குறித்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கையில் மேலும் கூறுகையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக இலங்கை தமிழ் அரசு கட்சி மன்னார் நகர பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக எதிர்வரும் 11ஆம் திகதி வியாழக்கிழமை காலை போராட்டம் நடத்தவுள்ளது.

இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கவேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எமது இளைஞர்கள் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

எனவே கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி வேண்டியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை இந்த நாட்டில் இல்லாமற்செய்து, சமமான நீதியை வழங்கக்கூடிய ஒரு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.

எனவே, மாவட்டத்தில் உள்ள தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், சர்வமத தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவை வழங்க வேண்டும்.

இப்போராட்டம் அரசுக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுத்து, குறித்த இளைஞரின் விடுதலைக்கு வழிவகுக்கவேண்டும் என்பதோடு, இந்த பயங்கரவாத தடைச் சட்டமும் மாற்றப்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆதரவு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை ஊடக சந்திப்பு வேளையில் முன்வைத்துள்ளனர்.

சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (08) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா கலைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கருத்துச் சுதந்திரத்தையும் கலைஞர்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், சங்கீதனை நிபந்தனையின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

கலைஞர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் தமது கவலையை தெரிவித்தனர்.

பழைய பேருந்து நிலைய பகுதியில் ஆரம்பமான குறித்த போராட்டம் அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரசந்தி வரை ஊர்வலமாக சென்று மீண்டும் போராட்ட இடத்தை அடைந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் சந்திரசேகரன் சொன்னால் இனிக்கும் சங்கீதன் சொன்னால் புளிக்குதோ, கலைஞர்களுக்கும் கைவிலங்கோ,பாடுவதும் ஆடுவதும் பயங்கரவாதமா போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகம் ஆரம்பம்: தாயாரும் பங்கேற்பு

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (08) கொழும்பு கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் ஆரம்பமானது.

இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த சத்தியாக்கிரகத்தில் சுரேஷ் சலேவின் தாயாரும் பங்கேற்றிருந்தார்.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் சுரேஷ் சலே அந்தத் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஈரான், இஸ்ரேல் இடையே மீண்டும் வெடித்த மோதல்

இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று (ஜூன் 8) ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடுத்தது. இத்தகைய சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது.

போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.

லெபனானிலும் போர் நிறுத்தம் அமல்படுத்த வேண்டுமென ஈரான் நிபந்தனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், போர் நிறுத்தம் அமலில் உள்ள சூழலில் ஞாயிற்றுக்கிழமை அன்று லெபனான் மீது தீவிர தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேலும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இதை ஈரான் மற்றும் இஸ்ரேல் தரப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக தெஹ்ரானில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டது. அதே நேரத்தில் தங்கள் நாட்டு பிராந்தியத்தின் மீது ஏமன் ஏவுகணை வீசியதை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் பின்னடைவை ஏற்படுத்தும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் அமைதி ஒப்பந்தம் மூலம் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் தொடங்கும் என உலக நாடுகளின் எதிர்பார்ப்பு சற்று தேக்கமடைந்துள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 2 டாலர்கள் உயர்ந்துள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் பிரென்ட் க்ரூட் – 96 டாலர்களாக உள்ளது. இந்த விலை மேலும் உயரும் பட்சத்தில் அதன் தாக்கம் சர்வதேச நாடுகளில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்துக! – அரசிடம் ரெலோ கோரிக்கை

மாகாண சபை தேர்தல்களுக்கு தடங்கலாக இருக்கும் சட்ட சிக்கல்களை தாண்டுவதற்கு பாராளுமன்றத் தெரிவு குழுவுக்கு முன்வைக்கப்பட்ட சட்ட மா அதிபர்  திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து நடத்தவேண்டும் என ரெலோ அமைப்பானது அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

சட்ட மா அதிபரினாலேயே பரிந்துரைக்கப்பட்ட 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை இரத்து செய்து 1988 சட்டத்தின் கீழ் இருந்த முந்தைய தேர்தல் முறைக்கு திரும்புதல் மூலம் மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வழி செய்துள்ளது.

இருப்பினும் அந்த பரிந்துரையை கருத்தில் கொள்ளாது அரச தரப்பு புதிய திருத்தச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்றும் அதில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக ஒதுக்கீடுகளை செய்வது பற்றிய புதிய  திருத்தச் சட்டத்தை எப்படி கொண்டுவருவது என்பது குறித்தும் ஆலோசிக்கவேண்டும் என்று கூறுவது காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும்.

ஏற்கனவே தமிழர்கள் தரப்பு கூறி வருகின்ற பழைய தேர்தல் முறையின் மூலம் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சட்ட மா அதிபர் திணைக்களமும் பரிந்துரை செய்துள்ளது. இதைக் கருத்தில் கொள்ளாது அவர்கள் பரிந்துரைத்த மற்ற விடயங்களை அரசு கவனத்தில் எடுப்பது என்பது மாகாண சபை தேர்தல்களை பிற்போடுவதற்கு முயற்சி செய்வதாகவே அமையும்.

சட்ட மா அதிபரினால் பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவுகளில் ஒன்று- 2017-ஆம் ஆண்டின் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம், எண் 17-ஐ இரத்து செய்து, 1988 சட்டத்தின் கீழ் இருந்த முந்தைய தேர்தல் முறைக்குத் திரும்புதல்; 2017ஆம் ஆண்டு திருத்தம் இருந்தபோதிலும், முந்தைய தேர்தல் சட்டத்தை மீண்டும் வருங்கால அடிப்படையில் நடைமுறைக்குக் கொண்டுவருதல்; மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 3A(14)-இன் கீழ், (தொகுதி வரையறை) எல்லைகள் மீள்நிர்ணய குழு தனது அறிக்கையைத் தேவையான காலத்துக்குள் சமர்ப்பிக்கத் தவறியதால், தற்போதுள்ள 2017 திருத்தத்தை இப்போது முழுமையாக செயற்படுத்த முடியாது என்று சட்ட மா அதிபர் கூறிய விடயம் ஏற்கனவே தெரிந்ததே. அதனால் அதை இரத்து செய்து பழைய முறைக்கு செல்வதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை விரைந்து நடத்த முடியும் என்றார்.

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று யாழ். இளைஞர்கள் மீட்பு

எத்தியோப்பியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குற்ற கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு, பிணைக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை பிரஜைகள் மூன்று பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் எத்தியோப்பிய அதிகாரிகளால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை ஒன்றின் மூலமே இவர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்சமயம் தூதரக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே இவ்வாறு கடத்தலுக்கு உள்ளாகியிருந்தனர். இவர்கள் சட்டவிரோதமான முறையில் கனடாவுக்குச் செல்வதற்காக எத்தியோப்பியா ஊடாகப் பயணிக்க முற்பட்ட போதே இக்கடத்தல் கும்பலிடம் சிக்கியுள்ளனர்.

எத்தியோப்பியாவிலுள்ள சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்று தங்களைத் தடுத்து வைத்துள்ளதாகவும், தங்களை விடுவிப்பதற்குப் பெருந்தொகை பணத்தைப் பிணைப்பணமாக  வழங்குமாறு கோரி வற்புறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இலங்கையிலுள்ள தங்களது உறவினர்களுக்குத் தொலைபேசி ஊடாகத் தகவல் வழங்கியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து உறவினர்களால் இலங்கைப் பொலிஸாருக்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் அவசர முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இதேவேளை, இந்தச் சட்டவிரோத மனிதக் கடத்தல் மற்றும் வெளிநாட்டுப் பயண ஒழுங்கமைப்புகளைச் சட்டவிரோதமான முறையில் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் அண்மையில் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் கூறியுள்ளது.

பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

எனினும், இரு நாடுகளிலும் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக, இந்த நிலநடுக்கம் 8.2 ரிக்டர் அளவில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தது. அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பும் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் எச்சரிக்கையை விடுத்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் முகமையான ‘பிவோல்க்ஸ்’ இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாகக் கூறியதோடு, சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஒரு மீட்டருக்கும் அதிக உயரமுள்ள சுனாமி அலைகள் உருவாகி பல மணி நேரங்களுக்கு நீடிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்தோனேசியாவின் புவியியல் ஆராய்ச்சி நிறுவகம் இந்த நிலநடுக்கத்தை 7.7 ரிக்டர் அளவாகக் கணக்கிட்டுள்ளது.

உயிரிழப்புகள் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை என்றும், ஆனால் பலத்த அதிர்வு காரணமாக சிலர் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.