எத்தியோப்பியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குற்ற கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு, பிணைக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை பிரஜைகள் மூன்று பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்சமயம் தூதரக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே இவ்வாறு கடத்தலுக்கு உள்ளாகியிருந்தனர். இவர்கள் சட்டவிரோதமான முறையில் கனடாவுக்குச் செல்வதற்காக எத்தியோப்பியா ஊடாகப் பயணிக்க முற்பட்ட போதே இக்கடத்தல் கும்பலிடம் சிக்கியுள்ளனர்.
எத்தியோப்பியாவிலுள்ள சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்று தங்களைத் தடுத்து வைத்துள்ளதாகவும், தங்களை விடுவிப்பதற்குப் பெருந்தொகை பணத்தைப் பிணைப்பணமாக வழங்குமாறு கோரி வற்புறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இலங்கையிலுள்ள தங்களது உறவினர்களுக்குத் தொலைபேசி ஊடாகத் தகவல் வழங்கியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து உறவினர்களால் இலங்கைப் பொலிஸாருக்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் அவசர முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இதேவேளை, இந்தச் சட்டவிரோத மனிதக் கடத்தல் மற்றும் வெளிநாட்டுப் பயண ஒழுங்கமைப்புகளைச் சட்டவிரோதமான முறையில் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் அண்மையில் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



