மாகாண சபை தேர்தல்களுக்கு தடங்கலாக இருக்கும் சட்ட சிக்கல்களை தாண்டுவதற்கு பாராளுமன்றத் தெரிவு குழுவுக்கு முன்வைக்கப்பட்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து நடத்தவேண்டும் என ரெலோ அமைப்பானது அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
சட்ட மா அதிபரினாலேயே பரிந்துரைக்கப்பட்ட 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை இரத்து செய்து 1988 சட்டத்தின் கீழ் இருந்த முந்தைய தேர்தல் முறைக்கு திரும்புதல் மூலம் மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வழி செய்துள்ளது.
இருப்பினும் அந்த பரிந்துரையை கருத்தில் கொள்ளாது அரச தரப்பு புதிய திருத்தச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்றும் அதில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக ஒதுக்கீடுகளை செய்வது பற்றிய புதிய திருத்தச் சட்டத்தை எப்படி கொண்டுவருவது என்பது குறித்தும் ஆலோசிக்கவேண்டும் என்று கூறுவது காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும்.
ஏற்கனவே தமிழர்கள் தரப்பு கூறி வருகின்ற பழைய தேர்தல் முறையின் மூலம் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சட்ட மா அதிபர் திணைக்களமும் பரிந்துரை செய்துள்ளது. இதைக் கருத்தில் கொள்ளாது அவர்கள் பரிந்துரைத்த மற்ற விடயங்களை அரசு கவனத்தில் எடுப்பது என்பது மாகாண சபை தேர்தல்களை பிற்போடுவதற்கு முயற்சி செய்வதாகவே அமையும்.
சட்ட மா அதிபரினால் பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவுகளில் ஒன்று- 2017-ஆம் ஆண்டின் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம், எண் 17-ஐ இரத்து செய்து, 1988 சட்டத்தின் கீழ் இருந்த முந்தைய தேர்தல் முறைக்குத் திரும்புதல்; 2017ஆம் ஆண்டு திருத்தம் இருந்தபோதிலும், முந்தைய தேர்தல் சட்டத்தை மீண்டும் வருங்கால அடிப்படையில் நடைமுறைக்குக் கொண்டுவருதல்; மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 3A(14)-இன் கீழ், (தொகுதி வரையறை) எல்லைகள் மீள்நிர்ணய குழு தனது அறிக்கையைத் தேவையான காலத்துக்குள் சமர்ப்பிக்கத் தவறியதால், தற்போதுள்ள 2017 திருத்தத்தை இப்போது முழுமையாக செயற்படுத்த முடியாது என்று சட்ட மா அதிபர் கூறிய விடயம் ஏற்கனவே தெரிந்ததே. அதனால் அதை இரத்து செய்து பழைய முறைக்கு செல்வதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை விரைந்து நடத்த முடியும் என்றார்.



