“இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” எனும் புதிய அமைப்பு உருவாக்கம்

நாட்டின் ஊடகத் துறையில் பணியாற்றும் உயர்தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் ஏதுவாக “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” எனும் புதிய அமைப்பைத் ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதியிடப்பட்டு இந்த விசேட வர்த்தமானி குறைநிரப்பியாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின்படி, புதிய நிறுவகமானது சுயாதீனமாக இயங்கும் ஒரு கூட்டுத்தாபனமாக அமையவுள்ளதுடன் முக்கிய குறிக்கோள்களைக் கொண்டு செயற்படவுள்ளது.

ஊடகத்துறையில் பணியாற்றும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பதிப்பாசிரியர்கள், தொகுப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊடக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து உயர்தொழிலாளர்களையும் ஒரே தொழில்சார் ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவருதல் இதன் நோக்கமாகும்.

அத்துடன் தகைமை வாய்ந்த ஊடகவியலாளர்களை உறுப்பினர்களாக நிரலிற் சேர்த்தல் மற்றும் அவர்களின் தராதரங்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமளித்தல், ஊடகக் கல்வி, பயிற்சி நெறிகள் மற்றும் பரீட்சைகளை நடாத்தி, சர்வதேச ஊடகப் போக்குகளுக்கு ஏற்ப ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல் போன்ற செயற்பாடுகளும் இதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

மிக முக்கியமாக, அனைத்து உறுப்பினர்களும் மாணவர்களும் பின்பற்றுவதற்கென விசேட நடத்தைக் கோவையொன்றைத் தயாரித்து, தொழில்சார் ஒழுக்காற்றைப் பேணுதல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.