சிக்கல் நிறைந்த களமுனையை கையாளும் சிறப்பு யாருக்கு உண்டு? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

463 Views

சிக்கல் நிறைந்த களமுனைவேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிக்கல் நிறைந்த களமுனையை கையாளும் சிறப்பு யாருக்கு உண்டு?

உக்ரைன் சமரில் மேற்குலகத்தினதும், அதன் மனிதாபிமான அமைப்புக்களினதும் முகத்திரைகள் முற்றாக அகன்றுள்ளன. அதனை தான் உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் ஹெபிரியஸ் அவர்களின் அண்மைய கருத்தும் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு மாதமாக உக்ரைன் போர் தொடர்பில் அனைத்துலக சமூகமும், அதன் அமைப்புகளும், ஊடகங்களும் காண்பிக்கும் அக்கறைகள் ஏனைய போர்களில் காண்பிக்கப்படவில்லை என்பது தான் அவரின் வருத்தம்.

உக்ரைனை வைத்து மேற்குலகம் ரஸ்யாவை அழித்துவிடவே இந்த போரை நடத்துகின்றது, உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களின் அளவைக் கொண்டு அதனை இலகுவாகக் கணிப்பிட முடியும். உக்ரைனுக்கு ஆயுதங்களை இனிமேல் வழங்க முடியாது என பல நாடுகள் கைவிரிக்கும் அளவுக்கு அவர்களின் ஆயுதக் களஞ்சியம் வறண்டு விட்டது.

இந்த பத்தி எழுதும்போது, உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை வழங்கினால், தனது பாதுகாப்புக்கு ஆயுதங்கள் போதாமல் போய்விடும் என தெரிவித்துள்ளது கிறீஸ்.

தொடர்ந்து விநியோகம் செய்வதற்குத் தேவையான ஆயுதங்கள் இல்லை என அமெரிக்காவின் ஆயுத நிறுவனங்களான Raytheon, Boeing, Lockheed Martin, Northrop Grumman, General Dynamics and L3 Harris Technologies என்பன கைவிரித்துள்ள நிலையில், அவர்களை அழைத்துப் பேசியுள்ளார் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன். உக்ரைன் போர் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை அமெரிக்கா 2.6 பில்லியன் டொலர்களை ஆயுதங்களுக்காக வழங்கியுள்ளது. இது அங்கு வாழும் மக்களுக்கான மறுவாழ்வுக்காக அல்ல. ஆயுதம் ஏந்திப் போர் புரிவதற்கான உதவி.

சிக்கல் நிறைந்த களமுனைஅது மட்டுமல்லாது, அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் தலைமையிலான சிறப்பு படையணிகளும் களத்தில் நின்று உக்ரைன் படையினரை வழிநடத்துகின்றன. தற்போதைய மரியப்போல் முற்றுகையில் அவர்களில் பலர் சரணடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பத்தி எழுதப்படும் போது மரியப்போல் முற்றாக வீழ்ச்சி கண்டுள்ளதாகவே கருதப்படுகின்றது. சில பகுதிகளில் முடக்கப்பட்டுள்ள 36 ஆவது கடற்படை சிறப்பு படையணிகள் மற்றும் அசோவ் பற்றாலியன் என்படும் சிறப்புப் படையணிகளுடனான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

சிக்கல் நிறைந்த களமுனைமரியப்போல் மீதான முற்றுகை என்பது, கடந்த மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் ஆரம்பமாகியது. மிகப்பெரும் பிரதேசம் ஒன்றை சென்சென்னிய, லுகான்ஸ் மற்றும் டொனஸ்ற் படைகளை கொண்டு முற்றுகையிட்டது ரஸ்யப் படை. முற்றுகை ஆரம்பமானபோது, உக்ரைனின் 36 ஆவது கடற்படை பிரிகேட், அசோவ் சிறப்பு படையணி, 12 ஆவது நடவடிக்கை பிரிகேட், தேசிய காவல் படையணி, எல்லைக் காவல் பாதுகாப்புப் படையணி, 555 ஆவது படைத்துறை மருத்துவக் குழு மற்றும் தேசிய காவல்துறை ஆகிய படையணிகள் அங்கு தங்கியிருந்தன.

மெல்ல மெல்ல தனது பிடியை இறுக்கிய ரஸ்ய இராணுவம், இறுதியாக இருந்த பகுதியை இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பல துண்டுகளாகப் பிரித்த பின்னர், சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்ததாக ஜ.எஸ்.டபிள்யூ எனப்படும் போர் கற்கை பயிற்சிப் பள்ளி தெரிவித்துள்ளது.

Azovstal plant பகுதியில் இருந்த படையணியே ரஸ்யாவுக்கு சவாலாக இருந்தது. இந்த பகுதியானது, உருக்குப் பொருட்களின் தயாரிப்புப் பட்டறையாகும். எனினும் உக்ரைன் படையினருக்கான விநியோக வழிகள் மூடப்பட்டதுடன், தொடர்ச்சியான தாக்குதல்களும் அவர்களின் போரிடும் வலுவைக் குறைத்திருந்தது.

இது எமது இறுதிச் சமர், நாம் கொல்லப்படலாம், ஏனையவர்கள் கைப்பற்றப்படலாம், எம்மிடம் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் எதுவும் இல்லை. நாம் கைவிடப்பட்டுள்ளோம் என கடந்த திங்கட்கிழமை (11) உக்ரைன் படையினரின் 36 ஆவது படையணி தனது முகநூலில் தகவல் வெளியிட்டிருந்தது. தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டதால், அவர்களின் நிலையை உக்ரைனினால் அறியமுடியவில்லை.

முற்றுகைக்குள் சிக்கிய படையினரின் கையிடத் தொலைபேசிகளைக் கண்டறிந்து, ரஸ்யப் படையினர் துல்லியமாகத் தாக்குவதால், அவர்கள் ஒரு கட்டத்தில் தமது தொலைபேசிகளைக்கூட கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். போரின் ஆரம்பத்திலேயே ரஸ்யப் படையினர் மரியப்போல் நகரத்தை உக்ரைனில் இருந்து துண்டித்து விட்டனர் என தெரிவித்துள்ளார் Royal United Services Institute (RUSI) இன் ஆய்வாளர் ஜஸ்ரின் புறொங் அவர்கள்.

சிக்கல் நிறைந்த களமுனைமுற்றுகைக்குள் அகப்பட்ட வெளிநாட்டுப் படையினர் மற்றும் உயர் அதிகாரிகளை வெளியேற்றுவதற்கு வான்படை மூலம் மேற்கொண்ட முயற்சி கடந்த வாரம் முறியடிக்கப் பட்டிருந்தது. அதன் போது எம்.ஐ-8 உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த வாரத்தின் இறுதியில் ஒடிசா பகுதி கடற்பகுதி ஊடாக பொதுமக்களின் அதிவிரைவுப் படகு ஒன்றின் மூலம் அவர்களை மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்திருந்தது. படகு மூழ்கடிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும், கடந்த செவ்வாய்க்கிழமை (12), அசோ பற்றலியனின் எஞ்சிய படையினர் ஒரு முற்றுகை உடைப்பு சமரை மேற்கொண்டிருந்தனர். தெற்கில் இருந்து நகர்ந்து வடக்காக முற்றுகைக்குள் சிக்கியுள்ள 36 ஆவது கடற்படை அணியுடன் இணைவது தான் திட்டம்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் துருப்புக்காவி வாகனங்கள், அமெரிக்காவின் கியூம்வி ரக கவச வாகனங்கள் மற்றும் அவர்கள் வசம் இருந்த டாங்கிகளுடன் நகர்வை மேற்கொண்டனர், தமது வாகனங்களுக்கு ரஸ்யப் படையினர் பயன்படுத்தும் Z வகை குறியீடுகளை இட்டு ரஸ்யப் படையினரின் கண்களில் மண்ணைத் தூவவும் முற்பட்டிருந்தனர். (கைப்பற்றப்பட்ட அமெரிக்க தயாரிப்பு வாகனத்தில் உள்ள குறியீட்டை நீங்கள் படத்தில் காணலாம்).

சிக்கல் நிறைந்த களமுனைஎனினும் இந்த நகர்வை ஆட்லறி மற்றும் தமது உலங்குவானூர்திப் படையினரைக் கொண்டு ரஸ்யப் படையினர் முறியடித்திருந்தனர். இந்த சமரில் பெருமளவானவர்கள் கொல்லப்பட்டும், 40 இற்கு மேற்பட்டவர்கள் சரணடைந்ததுடன் முற்றுகை உடைப்புச் சமர் தோல்வியில் முடிவடைந்திருந்தது.

இந்த சமரின் தோல்வியைத் தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் உக்ரைன் படையினர் பெருமளவில் சரணடையும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பல தொகுதிகளாக சரணடைபவர்கள் தம்மிடம் உள்ள நேட்டோ நாடுகள் வழங்கிய பெருமளவான ஆயுதங்களையும் கைவிட்டுச் செல்கின்றனர். கடந்த 14 ஆம் நாள் வரையிலும் 3000 இற்கு மேற்பட்டவர்கள் சரணடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் லெப். கேணல் தர அதிகரிகள் உட்பட 200 இற்கு மேற்பட்ட அதிகாரிகளும், 50 இற்கு மேற்பட்ட பெண் படையினரும் அடங்கியுள்ளனர்.

மரியப்போலின் வீழ்ச்சி என்பது உக்ரைனுக்கு கேந்திர மற்றும் பொருளாதார மையத்தின் இழப்பாகும். ரஸ்யாவைப் பொறுத்தவரையில், டொன்பாஸ் பகுதிக்கான விநியோகத்திற்கும், தொடர்ந்து நடைபெறப்போகும் போருக்கான பின்தளமாகவும் பயன்படக்கூடியது, மேலும் உக்ரைனின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தவும் அதனை ரஸ்யா பயன்படுத்தலாம்.

மேற்குலகத்தை பொறுத்தவரையில் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியின் இழப்பாகும். எனவே தான் இதுவரை காலமும் இலகுரக ஆயுதங்களை வழங்கிவந்த மேற்குலகம், தற்போது எஸ்-300 வகை ஏவுகணைகள், எம்.ஐ-17 வகை உலங்குவானூர்திகள் மற்றும் கவச வாகனங்களை உக்ரைன் படையினருக்கு வழங்கி வருகின்றது.

எனினும் கடந்த ஏழு வாரப் போரில் தன்னிடமிருந்த கணிசமான கனரக வாகனங்களையும், ஆயுதங்களையும் இழந்து நிற்கும் உக்ரைன், தற்போது பெறும் ஆயுதங்களை எவ்வாறு பாதுகாத்து சமர்க்களத்தில் பயன்படுத்தும் என்பதும் கேள்விக்குறியே.

சிக்கல் நிறைந்த களமுனைகடந்த வாரம் ஸ்லோவாக்கியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட எஸ்-300 வகையான ஏவுகணை தொகுதியின் மறைவிடத்தை கண்டறிந்து தனது கலிபர் வகை குரூஸ் ஏவுகைணகள் மூலம் நிர்மூலம் செய்துவிட்டது ரஸ்யா. இந்த நிகழ்வானது, மேலே எழுப்பப்பட்ட கேள்வியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரைன் சமர் என்பது மிகவும் சிக்கல் நிறைந்த போர்க்களமாக நாளுக்கு நாள் மாறிவருகின்றது. அந்த சிக்கல்களை கண்டறிந்து அகற்றுவது தான் சிறந்த படைக் கட்டமைப்பின் சிறப்பு. யாருக்கு அந்த சிறப்பு உண்டு என்பதை காலம் விரைவில் உணர்த்தும்.

Tamil News

1 COMMENT

  1. […] சிக்கல் நிறைந்த களமுனையை கையாளும் சிறப்பு யாருக்கு உண்டு? உக்ரைன் சமரில் மேற்குலகத்தினதும், அதன் மனிதாபிமான அமைப்புக்களினதும் முகத்திரைகள் முற்றாக அகன்றுள்ளன.மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-178-april-17/  […]

Leave a Reply