நெருக்கடியில் இருந்து மீட்க அனைவரும் ஒன்றிணைவார்களா? நிலைமையை மேலும் உருக்குலைப்பார்களா? | பி.மாணிக்கவாசகம்

நெருக்கடியில் இருந்துபி.மாணிக்கவாசகம்

நெருக்கடியில் இருந்து மீட்க அனைவரும் ஒன்றிணைவார்களா?

அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் அண்டை நாடாகிய பாரதம் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு எரிபொருட்களை வழங்கி உதவியிருக்கின்றது. கடன் அடிப்படையிலான உதவியாக இருந்த போதிலும், இடுக்கண் நேர்ந்துள்ள வேளையில் வழங்கப்படுகின்ற இந்த உதவி மனிதாபிமான ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிக முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்திய உதவியின் மூலம் நாட்டின் எரிபொருள் பிரச்சினையில் ஓரளவு தளர்வு ஏற்பட்டிருக்கின்றது. இது மிக மோசமான பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ள மக்களுக்குப் பேருதவியாக அமைந்திருக்கின்றது. ஆனால் இந்த உதவிக்குப் பின்னர் நிலைமைகள் என்னவாகும், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அரசியல்வாதிகள் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

பொருளாதார நெருக்கடி மோசமான அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தி இருக்கின்றது. பாதிக்கப்பட்ட நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு விரைந்து தீர்வைக் காணுங்கள் என்ற செய்தியையே இந்த மக்கள் போராட்டங்கள் அழுத்தமாக வெளிப்படுத்தி வருகின்றன.

ஆனால் நாடெங்கிலும் கிளர்ந்துள்ள போராட்டங்களில் ஒரே குரலில் முன்வைக்கப் படுகின்ற கோ ஹோம் கோத்தா என்ற எதிர்ப்புக் கோஷம் இந்தப் போராட்டங்களுக்கான ஒரு பெக் (Peg) – தங்களுடைய கருத்தை வெளிப்படுத் துவதற்கான ஊன்றுகோல் ஆகும். அது அரசியல் சார்ந்தது. ஆனால் உண்மையில் பற்றாக்குறைகளினால் மக்கள் கொண்டுள்ள சீற்றத்தின் வெளிப்பாடு. அவர்கள் பொறுமை இழந்திருப்பதன் அடையாளம்.

தன்னெழுச்சியாக முகிழ்த்துள்ள இந்த மக்கள் போராட்டத்தை எதிர்க்கட்சியினர் தமது ஆட்சி மாற்றக் கோரிக்கைக்கான அடையாளமாக மாற்றியிருக்கின்றார்கள். ஆட்சி மாற்றத்தைக் கோருவது மக்களுடைய முதன்மை நிலை நோக்கமல்ல. அவர்கள் அரசு மீதும், ஆட்சியாளர்கள் மீதும் அடைந்துள்ள அவநம்பிக்கையின் வெளிப்பாடே இந்தப் போராட்டங்களிலான எதிர்ப்புக் குரலாகும்.

ஆட்சியின் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை இழந்துள்ள மக்களின் நம்பிக்கையை எதிர்க்கட்சியினரும் கொண்டிருக்கவில்லை. அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கத்தக்க வகையிலான அரசியல் செயற்பாடுகளை எதிரணியில் உள்ளவர்களிடம் காணவில்லை. அதேபோன்று தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய திட்டங்களையோ அரசியல் செயல் வல்லமையையோ அவர்களிடம் நாட்டு மக்களினால் காண முடியவில்லை. மொத்தத்தில் நாட்டு மக்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான அரசியல்வாதிகளோ ஆட்சியாளர்களோ அரசியல் களத்தில் காணப்படவில்லை என்பதே இப்போதைய அரசியல் யதார்த்தம்.

நிலைமை என்ன?

அரசுமீது நம்பிக்கை இழந்துள்ள மக்கள் கொதித்து எழுந்து, இரவு பகல் பாராமல் போராட்டங்களில் குதித்திருக்கின்றார்கள். இதனால் நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது தெரியாத ஒரு நிச்சயமற்ற சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைக்குள் நாடு ஆழ்ந்திருக்கின்றது. இந்த நிலைமை பாரதூரமானது. மிகவும் பாரதூரமானது.

ஆனால் ஏற்கனவே மோசமடைந்து மீட்சியின்றி சென்று கொண்டிருக்கின்ற நாட்டின் நிலைமைகள் குறித்து ஆட்சியாளர்களும், எதிர்க்கட்சியினரும் தீவிரமாகச் சிந்தித்திருப்பதாகவோ அல்லது இந்த நிலைமையை எதிர்கொள்வது எப்படி என்பதற்கான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகவோ தெரியவில்லை.

ஏற்கனவே குறிப்பிட்டவாறு நெருக்கடி நிலைமையில் ஒரு தற்காலிக தளர்வை இந்திய உதவிகள் ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த உதவிகள் நிரந்தரமாகத் தொடரப் போவதில்லை என்பது மிகக் கசப்பான உண்மை. மிஞ்சிப் போனால் இன்னும் இரண்டு மாதம் அல்லது ஒரு மாதத்திற்கு இந்தியா இந்த உதவிகளை வழங்கக் கூடும். அதற்குப் பின்னர் நாட்டின் நிலைமை என்னவாகும் என்பது சிக்கல் நிறைந்த கேள்வியாக விசுவரூபம் எடுத்திருக்கின்றது.

கூடிச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்

இந்திய எரிபொருள் உதவி நிறுத்தப்படுமானால், நாட்டில் எரிபொருளையே காண முடியாத நிலைமை உருவாகலாம். எரிபொருள் இல்லாவிட்டால் மின்சார உற்பத்தி முழுமையாகப் பாதிக்கப்படலாம். இதனால் முழு நாடும், முழு நாளும் இருளில் மூழ்கக்கூடிய ஆபத்து ஏற்படலாம். அது மட்டுமல்ல, நாட்டில் உள்ள வாகனங்கள் எதுவும் ஓட முடியாமல் ஆங்காங்கே தரித்து நிற்கின்ற நிலைமை உருவாகலாம். இதனால் நாடு முழுமையாக ஸ்தம்பிதமடைகின்ற ஆபத்தும் நேரிடலாம். இப்போதுள்ள நிலைமையை நோக்குகையில், இத்தகைய ஆபத்தான நிலைமை நாட்டிற்கு உருவாகலாம் என்றே தோன்றுகின்றது.

நெருக்கடியில் இருந்துஜனாதிபதி பதவி விலக வேண்டும். ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் ரீதியாக வலுவாக முன்வைக்கப் பட்டிருக்கின்றது. நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் முகிழ்த்துள்ள போராட்டங்கள் போதாது என்பதற்காகவா எதிர்க் கட்சியினர் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினார்கள்? அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் வலுத்து வருகின்றன என்பதை எல்லோரும் அறிவார்கள். இதனை உறுதிப்படுத்துவதற்காகவா அல்லது ஆட்சியாளர்களுக்கு இன்னும் அழுத்தமாக உரைப்பதற்காகவா நாடாளுமன்றத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது?

நாடாளுமன்றம் என்பது போராட்டத்திற்கான களமல்ல. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான விவாதங்களை நடத்தி, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குரிய சட்டங்களை உருவாக்குகின்ற உயர்ந்த அவையாகும். அங்கு அரசுக்கு எதிரான கருத்துக்கள் விமர்சனங்கள் ஆணித்தரமாக முன்வைக்கப் படலாம். அதேவேளை, நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கின்ற  இந்தச் சந்தர்ப்பத்தில் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது, அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது குறித்து கூடி சிந்தித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிதே இப்போதைய தேவை.

தங்களுக்குள்ளேயே நம்பிக்கையற்ற நிலை

அரசு மீது மக்களும் எதிர்க்கட்சியினரும் நம்பிக்கை இழந்துள்ள நிலையில், அமைச்சரவை கலைக்கப்பட்டு தேய்ந்து நலிந்த எலும்புக்கூடு வடிவில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையே உருவாக்கப் பட்டிருக்கின்றது.

நாட்டின் நெருக்கடிகளுக்கு மூலகாரணமாகிய டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டியதும் அவசரமாகச் செயற்பட வேண்டியதுமான தருணம் இது. அந்த வகையில் நாடு மிக முக்கியமான ஓர் அரசியல் கால கட்டத்தில் தேங்கி நிற்கின்றது. ஏனெனில் நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் இல்லை. அரச தலைவர்களை பதவி விலகக் கோரும் கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

தற்காலிக அரசாங்கத்தையோ அல்லது இடைக்கால அரசாங்கத்தையோ உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆட்சியாளர்கள், அரச தரப்பினர் மற்றும் எதிர்த்தரப்பினர் என்ற பேதமின்றி நாட்டு மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்காகச் செயற்பட வேண்டிய முக்கியமான கால கட்டம் இது.

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ள எதிர்க்கட்சியினர் மற்றும் அரச கூட்டணியின் பங்காளிக் கட்சிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் தங்களுக்குப் பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்பதை நிரூபித்து, அதன் மூலம் ஆட்சி அமைப்பதற்கு முடியாமல் இருக்கின்றது. அரசாங்கத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றார்களேயொழிய ஒன்றிணைந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்வருகின்றார்களில்லை. அவர்கள் தங்களுக்குள்ளேயே அரசியல் ரீதியாக நம்பிக்கையற்றிருப்பதையே இது காட்டுகின்றது.

சபாநாயகரின் கருத்துக்கு மதிப்பளிக்கப்படுமா?

ஆனால் 69 இலட்சம் மக்கள் தன்னைத் தேர்தலில் தெரிவு செய்திருப்பதனால் தான் பதவி விலகப் போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார். நாட்டு மக்கள் அவர் மீதும், அரசு மீதும் நம்பிக்கை இழந்து அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு அரசியல் ரீதியாகக் கோரியுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகப் போவதில்லை என்று கூறியிருப்பதும், இக்கட்டான ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்குப் பின்னடித்திருப்பதும் நிலைகுலைந்துள்ள அரசியல் நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

இந்த நிலையில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்து கவனத்துக்கு உரியது. “நாட்டின் இப்போதைய பொருளாதார நெருக்கடி நிலையிலும், நாடாளுமன்றத்தில் வழமைபோல அரசியலே பேசப்படுகின்றது. நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பது தொடர்பில் நேர்மறையான கருத்துக்களோ அல்லது தீர்வுகளோ முன்வைக்கப்படவில்லை. இது கவலையளிக்கின்றது” என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டதும், அதனை இரண்டு தடவைகள் ஒத்திவைக்கத் தக்கவகையில் குழப்பியதை தற்போதைய சூழலில் வேண்டத்தகாத நடவடிக்கையாகவே தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் விஜேதாச ராஜபக்ச ஆகிய இருவரும் மாத்திரமே அனைவரும் கட்சி பேதங்களின்றி தமது அரசியல் குறிக்கோள்களைப் புறந்தள்ளிவிட்டு, நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டத்தைத் தயாரிக்க முன்வரவேண்டும் என்ற முக்கியமான கருத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பதாகவும், அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சபாநாயகரின் இந்தக் கருத்து இன்றைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இது குறித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும். இது இன்றைய அரசியல் நிலையில் மிகவும் அவசியமானவை. அவசரமானதும்கூட.

Tamil News