நம்பிக்கையில்லா பிரேரணையும் திரைமறைவு பேரம் பேசல்களும் | அகிலன்

பேரம் பேசல்கள்அகிலன்

திரைமறைவு பேரம் பேசல்கள்

இலங்கையில் ஒரு புறம் ‘கோட்டா கோ ஹோம்‘ என்ற கோஷத்துடனான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில், பாராளுமன்ற பெரும்பான்மையைத் தக்கவைப்பதற்கான குதிரை பேரங்களும் சூடுபிடித்திருக்கின்றன. ராஜபக்சக்கள் மக்கள் போராட்டத்தை ஒருபுறம் எதிர்கொள்ளும் அதேவேளையில், மறுபுறம் எதிரணி உறுப்பினர்களுடன் இரகசிய பேரங்களையும் ஆரம்பித்துள்ளார்கள்.

இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அதிரடியான அரசியல் மாற்றங்களால் ஆளும் மொட்டு கூட்டணியிலிருந்து வெளியேறி, தனித்து இயங்கப் போவதாக பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த 42 எம்.பி.க்கள் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பின் மூலம் அரசின் பெரும்பான்மை ஆட்டம் கண்டது. ராஜபக்சக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி இது.

அரசின் பெரும்பான்மை கேள்விக்குறியாகிறது என்ற நிலையில், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச களமிறங்கியிருக்கின்றார். அவசரம் – அவசரமாக கையொப்பங்கள் பெறப்படுகின்றன. ஆனால், சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கைக்குழு அடுத்த வாரம் பேச்சுக்களை ஆரம்பிக்கவிருப்பதால், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிப்பதை எதிரணி பின்போட்டிருக்கின்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவது அவசப்பட்ட ஒரு முயற்சி – அரசு தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்கும் இது வழிவகுக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த முயற்சியில் அவர் இறங்கினார். ‘அரசாங்கம் பதவி விலக வேண்டும்’ என்ற கோரிக்கைக்கு – “113 எம்.பி.க்களுடன் வந்தால் அரசாங்கத்தை தர நான் தயார்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் சவால் விடுத்திருந்தமை கவனிக்கத்தக்கது.

பேரம் பேசல்கள்இப்போது – நம்பிக்கையில்லாப் பிரேரணை என சஜித் காய்நகர்த்தியிருப்பதால், கோட்டாபயவும் பதிலடியைத் தொடங்கி யிருக்கின்றார்.  சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்திருந்த 42 எம்.பி.க் களையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அழைத்த ஜனாதிபதி, அவர்களுடன் விரிவான பேச்சுக்களை நடத்தினார். இவர்கள் ஜனாதிபதியை சந்திக்கப்போகின்றார்கள் என்றவுடன், தானும் அவர்களைப் பேச்சுக்கு அழைத்தார் சஜித். ஞாயிறு பகல் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு செல்வதற்கு முன்னதாகவே சஜித்துடனான சந்திப்பு இடம்பெற்றது.

இந்தப் பேச்சுக்களையடுத்து இடம்பெற்ற இரகசியப் பேரங்களையடுத்து இரண்டு விக்கட்டுகளை ஜனாதிபதி வீழ்த்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவாரென அறிவிப்பு விடுத்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவை,  ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன வளைத்துப் போட்டுள்ளது.  அவருக்கு விவசாயத்துறை இராஜாங்க அமைச்சு பதவியும் வழங்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை ஜனாதிபதியிடமிருந்து அவர் அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து சீற்றமடைந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சாந்த பண்டாரவின் கட்சிப் பதவிகள் அனைத்தையும் பிடுங்கியுள்ளது. அதனைவிட ஜனாதிபதியுடன் எதிர்காலத்தில் பேச்சுக்களுக்குச் செல்லப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளது. சுதந்திரக் கட்சிக்கும், மொட்டு அணிக்கும் இடையிலான உறவுகளை கடுமையாகப் பாதிக்கக்கூடிய நிலை இதனால் உருவாகியுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது கடந்த   பொதுத் தேர்தலின்போது யாழ்ப்பாணம்  உட்பட சில மாவட்டங்களில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்திலும் களமிறங்கியது. அக்கட்சியின் சார்பில் 14 பேர் நாடாளுமன்றம் தெரிவாகினர். அங்கஜன் மட்டுமே சு.கவின் கை சின்னத்தில் களமிறங்கி சபைக்கு வந்தார். ஏனையோர் மொட்டு சின்னத்தில்தான் சபைக்கு தெரிவாகினர்.

அரச பங்காளிக் கட்சியாக செயற்பட்ட சுதந்திரக்கட்சி கடந்த 5 ஆம் திகதி அரசுக்கான ஆதரவை  விலக்கிக்கொண்டது. கட்சியின் 14 எம்.பிக்களும் சபையில் சுயாதீனமாக செயற்படுவார்கள் என்ற அறிவிப்பும் விடுக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர் மட்டக்கூட்டதில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சுதந்திரக் கட்சி தொடர்ந்து ராஜபக்சக்களால்  அவமதிக்கப்படுவதால் இவ்வாறான முடிவு ஒன்றை எடுப்பதைவிட அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை.

இந்நிலையிலேயே 14 பேர் அணியில் இடம்பெற்ற  ஒருவர் அரசுக்கு ஆதரவை தெரிவித்து, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுள்ளார். ராஜபக்ச குடும்ப உறுப்பினரான சசீந்திர ராஜபக்ச பதவி விலகியதை யடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே சாந்த பண்டார உள்வாங்கப் பட்டுள்ளார். அவருடனான பேரத்துக்கு இராஜாங்க அமைச்சர் பதவி மட்டும்தான் கொடுக்கப்பட்டதா வேறு ஏதாவது உறுதிமொழிகள் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

பேரம் பேசல்கள்அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்த பியங்கர ஜயரத்னவின் இராஜினமாவை ஜனாதிபதி கோட்டபாய ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இவரும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்.

திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்ததன் பின்னர் தனது இராஜாங்க அமைச்சுப் பதவியில் நீடிக்க தீர்மானித்துள்ளார். இதன்படி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர் மீள இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுள்ளார். இதன்படி சுதந்திரக் கட்சியின் இரண்டாவது விக்கட்டும் வீழ்ந்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் 14 பேர், இ.தொ.காவின் இருவர் உட்பட நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக  செயற்படபோவதாக 42 பேர் கடந்த 5 ஆம் திகதி அறிவித்திருந்தனர். இதனால் அரசின் சாதாரணப் பெரும்பான்மைகூட ஆட்டம் காணும் மட்டத்தில் இருந்தது.

பேரம் பேசல்கள்இதனை கணித்து – அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், ராஜபக்சக்களின் நகர்வு எதிரணியைத் தடுமாற வைக்கலாம். தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் ஆளுங்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர் – அதற்காக காய்களை நகர்த்துகின்றனர். திரைமறைவில் குதிரை பேரங்களும் இடம்பெறுகின்றன. அதன் பலன்தான் இரண்டு பேரை சுதந்திரக் கட்சி இழந்திருப்பது.

கப்பல் கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் அவசரமாக பலர் கப்பலிலிருந்து பாய்ந்து தப்ப முயன்றார்கள். கப்பல் உடனடியாக கவிழாது போலிருப்பதால் – இன்னும் இரண்டரை வருடங்களுக்குத் தொடர்ந்தும் ஓடுமோ என்ற சந்தேகம் அந்த 42 பேரில் பலருக்கு வந்திருப்பதைத்தான் இந்ந இரண்டு எம்.பி.க்களினதும் முடிவு உணர்த்துகின்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக கையளிக்காமலிருப்பதற்கு சஜித் எடுத்த முடிவுக்குப் பின்னணியில் அது தோற்கடிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் கூட காரணமாக இருக்கலாம்!

Tamil News