ஆட்சி மாற்ற கோசத்திற்குள் தமிழின விடுதலையை குழி தோண்டிப் புதைக்கும் தமிழ்த் தலைமைகள்! | இரா.ம.அனுதரன்

தமிழின விடுதலைஇரா.ம.அனுதரன்

தமிழின விடுதலையை குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றது

இலங்கைத் தீவு வரலாறு காணாத பொருளாதார நெருக்குவாரத்தைச் சந்தித்து நிற்கும் பின்னணியில் சிங்கள தேசம் மிகப்பெரும் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கித் திணறி வருகின்றது.

ஈழத்தமிழனத்தை அழித்தொழிப்பதில் மும்முரமாக செயற்பட்டுவந்த சிறிலங்கா ஆட்சியாளர்கள், தங்களது தலையில் தாங்களே அள்ளிக்கொட்டிய வினைகள் மொத்தமாக இப்போது ஒன்றுசேர்ந்து அறுக்கத் தொடங்கியுள்ளதன் வெளிப்பாடே சிங்கள தேசம் சந்தித்து நிற்கும் தற்போதைய வரலாறுகாணாத நெருக்கடிக்குக் காரணமாகும்.

கோட்டாபயஇந்நிலையில் சிங்கள தேசத்தின் ‘Go Home gota’ ஆட்சி மாற்ற கோசத்தை தமிழ் அரசியல் தலைமைகளும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளதுடன் வடக்கு, கிழக்கில் அதனை வலியுறுத்திய போராட்டங்களையும் முன்னெடுக்கத் தலைப்பட்டிருப் பதானது, தமிழின விடுதலையைக் குழி தோண்டிப் புதைக்கும் மாபாதகச் செயலாகவே அமையும்.

சிங்கள தேசம் இன்று சந்தித்து நிற்கும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலும் பார்க்க மலையளவு நெருக்குவாரங்களையெல்லாம் ஈழத்தமிழினம் சந்தித்து நின்றதனையும், அதனைக் கடந்து உலகம் வியக்கும் வகையில் தலைநிமிர்ந்து நின்றமையும் வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ளன. மலையளவு நெருக்குவாரங்களைச் சந்தித்து நின்றபோதிலும், மூச்சுவிட அவகாசமின்றி சாவு விரடிக்கொண்டிருந்த பேரவலத்திற்குள் வாழ்வு சிறைப்படுத்தப்படுத்தப்பட்ட போதிலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டே ஈழத்தமிழினம் பயணப்பட்டு வந்தது, வருகிறது.

தமிழர்களது மரபுவழித் தாயகமான இணைந்த வடக்கு கிழக்கில் எம்மை நாமே ஆட்சி செய்யும் சுய அதிகாரத்துடனும், சுய கௌரவத்துடனும் வாழ வேண்டும் என்ற விடுதலை வேட்கையே ஈழத் தமிழினத்திற்கு இதுபோன்ற பல நெருப்பாறுகளைக் கடக்கும் மனோதைரியத்தை கொடுத்தது.

ஆம், ஈழத்தமிழினம் இத்தனை துன்பங்களையும், துயரங்களையும், நெருக்கு வாரங்களையும் சந்தித்து நிற்கின்றபோதிலும், சாம்பல் மேட்டில் இருந்து மீண்டும் மீண்டும் புதிதாய் பிறப்பெடுக்கும் பீனிக்ஸ் பறவைகளாய் மீண்டெழுவதற்கு அதுவே அடிப்படையாகும். ஒப்புவமையற்ற உன்னத தியாக வரலாற்றின் அப்படையிலேயே இந்நிலை சாத்தியமாகி வருகின்றது.

இவ்வாறான நிலையில் ஈழத்தமிழினம் மேற்கொண்டு வரும் தாயகம் – தேசியம் – தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தைப் பொருளாதாரப் பிரச்சினைக்கான போராட்டமாக மலினப்படுத்துவதோடு அல்லாமல், படுகுழியில் புதைக்கும் மாபாதகச் செயலாகவே ஆட்சி மாற்ற கோசத்தை முன்னிறுத்தியதாக தமிழ்த் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் அமைந்துள்ளன.

தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டு வரும் கட்சிகள் கூட்டாகவும், தனித் தனியாகவும் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தியதாக அறிக்கைகளை விடுத்தும், கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து பிரதமர் தவிர்ந்த அமைச்சரவை, கூட்டாகப் பதவி விலகியுள்ளது. இதனையடுத்து தமிழ்க் கட்சிகள் தரப்பில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. மக்கள் கோருவது அமைச்சரவை மாற்றத்தையல்ல, ஆட்சி மாற்றத்தையே என்பதை சுட்டிக்காட்டுவதாக அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழின விடுதலைஇவை ஒருபுறம் இருக்க, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் ஆட்சி மாற்ற கோசத்தை முன்னிறுத்தி போராட்டத்தை நடத்தியிருந்ததுடன், அரச ஆதரவுத் தரப்பாக செயற்பட்டுவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவர் சந்திரகாந்தன் அலுவலகத்திற்கு முன்பாக சென்று முற்றுகைப் போராட்டமும் நடத்தப்பட்டிருந்தது. உண்மையில் இச்செயற்பாடு கோமாளித்தனமான ஒன்றாகவே அமைந்துள்ள.

பாராளுமன்ற பிரதிநிதித்துவம் எனும் அரசியல் அங்கீகாரத்தை கொண்டு ஈழத்தமிழனத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவோ, மறுக்கப்பட்டேவரும் நீதியை பெற்றுக்கொள்வதற்காகவோ எவ்வித ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் செய்யாது அடையாள அரசியலுக்குள் காலத்தை வீணடித்துவரும் இவர்கள், தங்களைப் புனிதர்களாக மக்கள் மத்தியில் நிலைநிறுத்தவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோமாளித்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு, எரிபொருள் என்பவற்றுக்கான தட்டுப்பாட்டு நிலையும் அதிகரித்து வரும் விலையேற்றமும், மீளச் செலுத்தவேண்டிய பன்னாட்டு கடன் மற்றும் அந்நியச் செலாவணி நெருக்கடிகள் ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கள மக்கள், அதற்கு காரணமாக அரசை பதவிவிலக வலியுறுத்தி போராட்டுகின்றனர். அது அவர்கள் தரப்பு நியாயமாகவே இருந்துவிட்டு போகட்டும்.

ஆட்சி மாறினாலும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மையாகும். அதனை உணர்ந்தே எதிர்த்தரப்பினரும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் அதிக ஆர்வம்காட்டாதுள்ளனர். அதல பாதாளத்தை நோக்கி நிலைகுத்தி சரிந்திருக்கும் இலங்கைத்தீவின் பொருளாதார நிலையானது, உலகநாடுகளிடம் பெறும் கடனுதவிகளின் மூலமாகவோ, இன்னபிற ஒத்துழைப்புகள் மூலமாகவோ உடனடியாக தீர்த்துவிடக் கூடியதாக இல்லை என்பது விடயத்தை உணர்ந்த அனைவராலும் உணரப்பட்டே உள்ளது.

இந்நிலையை நன்குணர்ந்தே, பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களது ஆதரவை உறுதி செய்யும் தரப்பிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்தார். ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து 40 இற்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த நிலையில், கூட ஆட்சியை கவிழ்க்கும் முனைப்பில் எதிர்த்தரப்பினர் ஈடுபடாதுள்ளமை இந்நிலையை உறுதி செய்கிறது.

இலங்கைத் தீவு இன்று சந்தித்து நிற்கும் இந்நெருக்கடி நிலைக்கு சிறிலங்காவை ஆட்சி செய்த தரப்பினர் எவ்வளவுக்கு எவ்வளவு காரணமோ அதேயளவுக்கு எதிர்க்கட்சிகளாக செயற்பட்ட தரப்பினரும் காரணமாவார்கள். இப்போது கூட மக்கள் தன்னிச்சையாக அரசுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்களே அரசியல் நெருக்கடி நிலைக்கு வித்திட்டுள்ளதே தவிர எதிர்த்தரப்பினரால் அல்ல.

இலங்கைத்தீவு சந்திதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையானது சிங்கள தேசத்து அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்துள்ளதையடுத்து ஏற்படும் காட்சி மாற்றமானது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அதனால் சிங்கள மக்களுக்கு ஆறுதல்கிட்டும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

நிலைமை இவ்வாறு இருக்கும் பின்னணியில்தான், தமிழ்த் தரப்பும் ஆட்சி மாற்ற கோசத்தை தூக்கிப்பிடிப்பது காலப்பொருத்தமற்ற செயலாக அமைந்துவிடுகிறது.

பொருளாதார நெருக்கடி நிலையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டு வரும் ஆட்சி மாற்ற கோசத்தை தமிழ்த் தரப்பினரும் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு பொருளாதார பிரச்சினையே உள்ளது என காலத்திற்கு காலம் சிறிலங்காவை ஆட்சி செய்யும் தரப்பினர் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை மெய்ப்பிக்கும் வகையிலேயே அமைந்து விடுகின்றன.

மேற்சொன்ன சிங்கள தேசத்து அரசியல் நெருக்கடி நிலை, 2015 போல் காட்சி மாற்றத்தை கொண்டு வருவதாகவே இருக்கட்டும். அப்படி ஏற்படும் காட்சி மாற்றத்தினால், ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை உடனடியாக போக்கிவிடவே முடியாது. இந்நிலையானது தமிழ் மக்கள் உள்ளிட்ட இலங்கையர் அனைவருக்கும் பொதுப்படையான ஏமாற்றமாகவே இருக்கும்.

அதேவேளை, ஏற்படும் காட்சி மாற்றத்தினூடாக, ஈழத் தமிழனத்தின் அரசியல் அபிலாசைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக அதிகார பகிர்வு மூலம் இனப்  பிரச்சினைக்குத் தீர்வை காண முடியுமா? வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரது விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுமா? அரச படைகளாலும், அரச கட்டமைப்புகளினாலும் வன்வளைப்பு செய்யப்பட்ட தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் மீளளிக்கப்படுமா? இல்லை தொடர்ந்தும் கபளீகரம் செய்யப்படாமலாவது தடுக்கப்படுமா? தமிழர்கள் மீது கவ்வியிருக்கும் பயங்கரவாத தடைச்சட்ட அச்சுறுத்தல் நீங்குமா? சிறைக் கொட்டடிக்குள் இருண்டே கிடக்கும் தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் விடிவு பிறக்குமா? கடந்த 13 ஆண்டுகளாக இந்த கேள்விகளுக்கு என்ன பதில் கிடைத்ததோ அதே பதில் தான் புதிய காட்சி மாற்றத்தின் பின்னரும் ஈழத்தமிழத்திற்கு பதிலாய் கிட்டும் என்பது வலராறு கூறிநிற்கும் பெரும் படிப்பினையாகும்.

இந்தப் பட்டறிவை புறமொதுக்கிவிட்டு, சிங்கள தேசத்தின் ‘Go Home gota’ ஆட்சி மாற்ற கோசத்தை முன்னிறுத்தியதாக செயற்பட்டுவரும் தமிழ்த் தலைமைகளின் கோமாளித்தனமானது, தமிழின விடுதலையை குழி தோண்டிப் புதைக்கும் மாபாதகச் செயலாகவே அமையும் என்பது திண்ணம்.

Tamil News