ஆபத்தின் விளிம்பில் தள்ளாடும் இலங்கை: அழிவைத் தடுத்து நிலைநிறுத்தப் போவது யார்? | பி.மாணிக்கவாசகம்

தள்ளாடும் இலங்கைபி.மாணிக்கவாசகம்

ஆபத்தின் விளிம்பில் தள்ளாடும் இலங்கை

ஆசியப் பிராந்தியத்தில் நீண்டகால ஜனநாயகப் பாரம்பரியத்தைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கின்றது. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் அந்தப் பெருமை இப்போது மண் கவ்வியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அடைந்த வெற்றியின் மமதையில் நாட்டை இராணுவ மயமான ஆட்சிச் சூழலுக்குள் இட்டுச் சென்ற அவரது போக்கு, நாட்டு மக்களைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளே தள்ளியுள்ளது. அத்துடன் மோசமான ஜனநாயக நெருக்கடிக்குள்ளேயும் நாட்டை ஆழ்த்தியுள்ளது.

தள்ளாடும் இலங்கைஜனநாயக வழிமுறை என்பது, நாட்டு மக்களின் ஆதரவையும் அரவணைப்பையும் கொண்ட ஆட்சியை உள்ளடக்கியதாக அமையும். ஆனால் இனவாதத்தை முதன்மைப்படுத்தி பௌத்த சிங்களத் தேசியத்தை முழுமையாக நிலை நிறுத்துவதற்காக கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தில் சிங்கள மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டார்கள். அந்த வழிநடத்தலில் வரலாறு காணாத வகையில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று அமோகமாக ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டார்.

நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டை ஜனநாயக வழியில் கொண்டு செல்வதற்குப் பதிலாகக் குடும்ப ஆட்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்திருந்தார். இராணுவ அதிகாரிகளை சிவில் நிர்வாக உயர் பொறுப்புக்களில் நியமித்ததன் மூலம் நாட்டின் சிவில் நிர்வாக நிலைமைகளும் குலைந்து இராணுவமயமாகின.

யுத்தத்திற்காகவும், யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகவும் கண்மண் தெரியாமல் வாங்கிய கடன்கள் நாட்டின் நிலையான பொருளாதார மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படவில்லை. யுத்தம் முடிவுற்ற பின்னரும்  தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தின் நலன்களை மேம்படுத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ராஜபக்சக்கள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டிருக்க வேண்டும். அதன் ஊடாக தமிழ் மக்களையும் பங்காளிகளாக்கி, யுத்தத்தில் சிதைந்து போன நாட்டைக் கட்டி எழுப்பியிருக்க வேண்டும். இவற்றை அவர்கள் செய்யவில்லை. மாறாக பயங்கரவாதத்தை மீண்டும் உயிர்ப்பித்து விடுவர்கள் என்ற போலிப் பிரசாரத்தை முன்வைத்து அவர்களை இராணுவத்தின் அழுத்தமான பிடிக்குள் அடக்கி ஒடுக்கி வைத்திருந்தனர்.

இறக்குமதிப் பொருளாதாரத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட இலங்கைக்கு ராஜபக்சக்களினதும், அவர்களின் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மைத்திரி – ரணில் கூட்டணியினரதும் ஆட்சிப் போக்கு தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வழிசமைக்கவில்லை. நாட்டின் திறைசேரியை நிலையான வலுவுள்ளதாக மாற்றவுமில்லை. செலவினம் சார்ந்த பொருளாதாரப் போக்கிலேயே நாடு வழிநடத்தப்பட்டது.

முற்றுகைக்கு உள்ளாகும் அரசியல்வாதிகள்

இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சியில் நாட்டைத் தாக்கிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்கனவே நலிந்திருந்த பொருளாதாரத்தின் முதுகெலும்பை முறித்தது. நிலைமையைச் சமாளிக்க கடன் பெறுவதையே வழிமுறையாக அவரது அரசு கொண்டிருந்தது. இதனால் கடன்சுமை அதிக அளவில் ஏறியது. திறைசேரி காலியாகியது. அந்நியச் செலவாணியை ஈட்ட முடியாத நிலையில் அன்றாடச்  செலவுக்கான டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கே அல்லாட வேண்டியதாயிற்று.

அரிசி தொடக்கம் பருப்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான உணவுப் பொருட்கள் உள்ளடங்கலாக உணவுப் பொருட்களையும், எரிபொருட்களையும் அந்நிய நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்வதே அன்றாடச் செலவாகும். அதற்கே வழி இல்லாத நிலையில் திறைசேரி வரண்டு போனது. அளவுக்கு மிஞ்சிய வகையில் பண நோட்டுக்களை அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதனால் பணவீக்கம் 17 வீதமாக அதிகரித்தது. ரூபாவின் பெறுமதி மோசமாக வீழ்ச்சி அடைந்தது. இதனாலும், டொலர் பற்றாக்குறையினாலும் நாடு வறுமை நிலைக்குள் தள்ளப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக விலைகளும் அதிகரித்தன. அதிக விலை கொடுத்தும் பொருட்களை வாங்க முடியாத நிலைமை உருவாகியது. அது மட்டுமல்லாமல், மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறையினால் நாளொன்றக்கு 13 மணித்தியாலங்கள் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டது.

தள்ளாடும் இலங்கைஇந்த நிலையில் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமல் நாட்டு மக்கள் கஷ்டத்திற்குள் தள்ளப்பட்டனர். குடும்ப வருமானத்திற்கான நடவடிக்கைகளைக் கைவிட்டு விற்பனை நிலையங்களுக்கு முன்னால் எரிபொருளுக்காக வரிசைகளில் – வீதிகளில் மக்கள் காத்துக் கிடக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். நீண்ட நேரம் காத்திருந்த போதிலும் அனைவருக்கும் தேவையான பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசுக்கு எதிராகத் தன்னெழுச்சி கொண்டு கிளர்ந்தெழுந்து வீதிகளில் இறங்கிப் போராடுகின்றார்கள்.

அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி, பொது மக்களும், எதிரணியினரும் நடத்திய போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதற்காக அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து ஊரடங்கு உத்தரவையும் ஜனாதிபதி நடைமுறைப்படுத்தினார். சமூக வலைத் தளங்களின் ஊடாகவே மக்கள் போராட்டத்திற்காக அணிதிரட்டப் படுகின்றார்கள் என்று கருதிய அரசாங்கம் வலைத்தளங்களை முடக்கியது.

ஆனால் ஊரடங்கு உத்தரவினாலும் சமூக வலைத்தள முடக்கத்தினாலும் அரசுக்கு எதிராக சீற்றம் கொண்ட மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஊரடங்கு வேளையிலும் மக்கள் வீதிகளில் இறங்கப் போராடினார்கள். ஜனாதிபதியினதும், பிரதமரினதும் இல்லங்களை முற்றுகையிட்டு அவற்றுக்குள் பிரவேசிக்க முற்பட்டார்கள். நிலைமை அத்துடன் நிற்கவில்லை. அரச தலைவர்களின் அலுவலகங்கள், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் முற்றுகைக்கு உள்ளாகி வருகின்றன.

விசுவரூபமெடுத்துள்ள கேள்வி

தள்ளாடும் இலங்கைபொதுமக்கள் மட்டுமன்றி, பல்லைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களின் மாணவர்கள், துறைசார்ந்த தொழிலாளர்கள், தச்சர்கள், சட்டத்தரணிகள் என சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் அரசுக்கு எதிரான இந்த வீதிப் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திண்டாட நேர்ந்துள்ளது.

எதிர்பாராத வகையிலான பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்திய ஆட்சியாளர்களை பதவி விலகி வீட்டுக்குச் செல்லுமாறு கோரி, விரட்டி அடிக்கும் வகையில் கிளர்ந்துள்ள நாட்டு மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் பொலிசார் பின்வாங்க வேண்டிய நிலைமையும் சில இடங்களில் ஏற்பட்டிருக்கின்றது. கைமீறிய நிலையில் தொடர்கின்ற மக்களுடைய எதிர்ப்பை எதிர்கொள்ள அரசுக்கு வழிவகை தெரியவில்லை.

இந்த நிலையில், நாடாளுமன்ற அமர்வு நடைபெற்ற போதிலும், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைவிட்டு தனித்து இயங்கப் போவதாக அறிவித்து விட்டன. இதனால் பொதுஜன பெரமுன என்ற அரசாங்கத்தின் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை இழந்து தவிக்கின்றது.

நிலைமையைச் சமாளிப்பதற்காக அமைச்சர்களை பதவி துறக்கச் செய்து அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க முன்வருமாறு கோட்டாபய விடுத்த வேண்டுகோளை எவரும் ஏற்கவில்லை. இதனால் நான்கு பேரை மாத்திரமே தற்காலிக அமைச்சரவைக்கு அவரால் நியமிக்க முடிந்தது.

ஆயினும் அந்த நான்கு பேரில் – நீதி அமைச்சராக இருந்து ஏனைய அமைச்சர்களுடன் பதவி துறந்த அல் சப்ரியை கோட்டாபய நிதி அமைச்சராக நியமித்தார். ஆனால் மறுநாளே அவர் அந்தப் பதவியைத் துறந்தார். அத்துடன் நிதி அமைச்சின் செயலாளரும் தனது பதவியைத் துறந்து வெளியேறினார். இந்த இரண்டு பதவிகளுக்கும் புதியவர்களை நியமிக்க வேண்டிய நிலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆளாகிப் போனார். பொருளாதார சிக்கலில் நாட்டை மீட்டெடுப்பதற்கு நிதி அமைச்சுப்பதவி முக்கியமானது. ஆனால் அந்த பொறுப்பை ஏற்பதற்கே சரியான – தகுதியான ஒருவரைத் தேடிப் பிடிக்க வேண்டிய இக்கட்டான நிலை.

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து அரசாங்கம் அதிகாரத்தில் இருந்து வருகின்றது. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஜனாதிபதி உடனடியாகப் பதவியைத் துறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகத் தயாராக இல்லை.

ஜனாதிபதியைப் பதவி விலகக் கோரும் எதிரணி அரசியல் கட்சிகள் அனைத்தும் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கின்றன. பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த முடியாத சூழலே நாட்டில் இப்போது நிலவுகின்றது என்பதே இதற்கு முக்கிய காரணம்.

இந்த நிலையில் அரசாங்கம் கவிழ்ந்தும் கவிழாத நிலையிலேயே நாடு அல்லாடிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் இருந்தும் இல்லை என்ற நிலைமையே காணப்படுகின்றது. இது நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது என்றே கூற வேண்டும்.

நாளுக்கு நாள் நாட்டு மக்களின் எதிர்ப்பு வலுவடைந்து போராட்டங்கள் விரிவடைந்து கொண்டிருக்கின்றன. மக்களின் சீற்றத்தைத் தணிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எந்த வேளையிலும் நாட்டில் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் தலையெடுக்கக் கூடிய ஆபத்து உருவாகலாம்.

மக்களின் நியாயமான சீற்றத்தைத் தணிப்பதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதற்கு ஆட்சியாளர்களினால் முடியாமல் உள்ளது. அதேவேளை மக்களின் நலன்களுக்காகச் செயற்பட வேண்டிய எதிரணியினரும், ஏனைய அரசியல்வாதிகளும்கூட நிலைமையை சீர்செய்வதற்கு தாங்களாகவே முன்வந்து செயற்படுவதாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தின் பிடிக்குள் நாட்டைத் தள்ளிவிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்பதையும் மறுக்க முடியாது.

மொத்தத்தில் நாடு சீரழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கின்ற நாட்டை யார், எந்த வழியில் மீட்டு நிலைநிறுத்தப் போகின்றார்கள்? – இந்தக் கேள்வியே இப்போது விசுவரூபம் எடுத்திருக்கின்றது.

Tamil News