இலக்கு மின்னிதழ் 177 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 177 ஆசிரியர் தலையங்கம்இலக்கு மின்னிதழ் 177 ஆசிரியர் தலையங்கம்

ஈழத்தமிழரிடை பட்டினிநிலை தோன்றவிடாது புலம்பெயர் தமிழர்கள் உடன்செயற்பட வேண்டும்.

உண்ண உணவின்மை, உயிர்காக்க மருந்தின்மை, நாளாந்த வாழ்வுக்கான தகவல் தரவுகள், போக்குவரத்தின்மை, கல்வியின்மை, வேலைவாய்ப்புக்களின்மை, சக்தி வளங்களான மின்சாரம், எரிபொருட்கள், எண்ணெய்கள் இன்மையென இலங்கையில் மக்களின் நாளாந்த வாழ்வு ஈடுசெய்ய இயலாத வகையில் மரணத்துடன் போராடும் வாழ்வாகி வருகிறது.

இவ்விடத்தில் இந்த மரணத்திலிருந்து விடுபடும் போராட்டத்தில் இலங்கைத் தீவைத் தாயகமாகக் கொண்ட அத்தனை பேரும் மொழி மத பிரதேச வேறுபாடுகளைக் கடந்து மனிதாய உணர்வுடன் பசிப்பிணி தீர்த்தலில் ஒன்றிணைவது, இலங்கைத் தீவின் மக்கள் தங்களுக்கான பாதுகாப்பைத் தாங்களே உறுதிப்படுத்தும் புதிய அரசியல் மாற்றத்தினை உருவாக்கும் உறவுப்பாலமாக மாறும்.

இந்நேரத்தில் சிறிலங்காவின் அரச தலைவர் கோட்டாபய ராசபக்ச இந்தியாவிடம் உடனடி உதவிகளையும், நீண்டகாலத்துக்கு அனைத்துலக நாணயமாற்று நிதியக் கடனுதவிகளையும் பெறுவதன்மூலம், மக்களின் விருப்புக்கு மாறாகத் தனது ஆட்சியை உறுதிப்படுத்தப் பகிரங்கப் பிரயத்தனம் செய்து வருகின்றார். ஆனால் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபயவும் அவரது ராசபக்ச குடும்ப ஆட்சியும்  பதவி விலகலும் பொறுப்புத் துறப்புமே  தங்களது நல்வாழ்வுக்கான முதல் தேவை என இலங்கை முழுவதிலும் மக்கள் ஒன்றிணைந்த போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோட்டாபயவின் அரசின் பாராளுமன்றப் பெரும்பான்மையும், அமைச்சரவை உறுதிப்பாடும் மிகவும் எல்லைப்பட்டுள்ளது. இதனால் இன்றைய அரசாங்கத்தின் உறுதித்தன்மை இழக்கப்பட்டுள்ளதால், இனி கடுமையான நிபந்தனைகளின்றி எந்த நாடும் எந்த அமைப்பும் சிறிலங்காவுக்குக் கடனோ வேறு நிதியுதவிகளோ அளிப்பது கடினமாகவிருக்கும். கடனைப் பெற்றால், அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது சிறிலங்காவுக்கு இயலாததாக அமைந்து, இறைமையிழப்பு ஏற்படும். இலங்கையைத் தாயகமாகக் கொண்ட மக்களனைவரதும் ஒருங்கிணைந்த பங்களிப்புக்கான முறையில் நாளாந்த அரசியல் மாற்றப்பட்டால் மட்டும்தான் பொருளாதார மீட்சி சாத்தியம்.

ஆயினும் சிங்களவர்களின் இந்தப் போராட்ட முயற்சிகள் தங்களது அரசின் ஆட்சி மாற்றத்தை நோக்காகக் கொண்டதே தவிர, ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினையான அவர்களின் இறைமையின் அடிப்படையிலான தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளுக்கோ அல்லது மலையக மற்றும் முஸ்லீம் மக்களின் அரசியல் உரிமைகளுக்கோ உறுதிப்படுத்தல் அளித்து, பாதுகாப்பான அமைதியை இலங்கைத் தீவில் நிலைப்படுத்தும் நோக்கம் கொண்டவையல்ல. இதனால் ஈழ – முஸ்லீம் – மலையக முத்தரப்பு குடைநிழல் அமைப்பொன்றின் தோற்றுவாய் மூலமே முத்தரப்பினரும் தங்கள் அரசியல்  உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய நேரமிது.

மேலும் இந்தப் போராட்டங்கள் குறித்த அனைத்துலக அக்கறை என்பது சிறிலங்கா என்னும் அரசின் உறுதிப்படுத்தலை மையமாகக் கொண்டதாகவே உள்ளது.  இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் சமகாலப் பிரச்சினை குறித்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.  “அதிகரித்து வரும் இராணுவ மயமாக்கல் மற்றும் வீழ்ச்சி கண்டிருக்கும் கட்டமைப்பு ரீதியான நியாயத்துவம் என்பன சிறிலங்காவின் இன்றைய நெருக்கடியின் காரணமாகப் பார்க்கிறதே தவிர, ஈழத்தமிழின அழிப்புக்கான அரசியற் செயற்திட்டங்களுக்காக அன்றும் இன்றும் பில்லியன் டிரில்லியன் கணக்கான இலங்கை ரூபாய்கள் செலவிடப்பட்டு வருவதும், மலையக முஸ்லீம் மக்களது சுதந்திரமான சமூக பொருளாதார அரசியல் வாழ்வினை மறுப்பதனால் இவ்வினங்களின் சுதந்திரமான பொருளாதாரப் பங்களிப்புக்கள் இழக்கப்பட்டு வருவதும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான மூலகாரணம் என்பதை வெளிப்படுத்தத் தவறியுள்ளது.

  1. சிறிலங்கா அரசின் கட்டமைப்புப் பிரச்சினைகள் தான், அது பொருளாதார நெருக்கடியைக் கையாள முடியாத இயலாமைக்குள் கொண்டு சென்றுள்ளதென்றும்,
  2. அனைத்துக் குடிகளுக்குமான பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளை உறுதிப்பாட்டை வலுவிழக்கச் செய்துள்ளது எனவும்,
  3. இது தொடர்பான திறனாய்வுச் செயற்பாடுகளை சிறிலங்கா கையாளும் முறைமை மாற்றப்பட வேண்டும்

எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் கருத்து வெளியிட்டுள்ளதே தவிர, ஈழத்தமிழர்களின் இனஅழிப்பின் பின்னணியில், மலையக முஸ்லீம் மக்களின் உரிமைகள் மறுப்பின் வழி தாங்கள் சிங்கள பௌத்த பாதுகாவலர்கள் என்னும் உணர்வைச் சிங்கள மக்களிடை வளர்த்த, இன்றைய சிறிலங்காத் தலைமைகள் நாட்டின் திறைசேரிப் பணத்தைக் கொள்ளையடித்ததின் விளைவு இந்த பொருளாதார நெருக்கடி என்ற உண்மையைத் திட்டமிட்ட கவனமான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் மூடிமறைத்துள்ளது. இந்நிலைக்குத் தீர்வாக பொருளாதார மற்றும் அரசியல் தீர்வுகள் குறித்து அரசாங்கம், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம் என்னும் முத்தரப்பு உரையாடல்கள் தோன்ற வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையகம் கூறியுள்ளதன் வழி சிறிலங்காவின் உள்ளக பொறிமுறைக்குள் தீர்வு என்னும் தனது பௌத்த சிங்கள மேலாண்மையை உறுதிப்படுத்தும் கண்துடைப்பு தீர்வுகளை முன்னெடுக்கப் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

இது தற்போது வலுவடைந்து வரும் புதிய உலக அரசியல் முறையிலும், ரஸ்ய உக்ரேன் யுத்த களத்திலும் சிறிலங்காவைச் சீனாவின் பக்கமிருந்து இழுக்கும் அரசியல் உத்தியாக இருந்தாலும், இதன் விளைவாக ஈழத்தமிழர்களின் சமூகப் பாதுகாப்பு, சமூக நீதி என்பன மேலும் இழக்கப்பட்டு, அவர்கள் பட்டினிச் சாவுக்கு உட்படும் அபாயகரமான நிலை உருவாகும் என்பதைப் புலம்பெயர்ந்து புலம்பதிந்து வாழும் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் இனத்துவத் துடிப்புடன் உணர்ந்து ஈழத் தமிழரிடை பட்டினி நிலை தோன்றிடாது தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்புள்ளவர் களாக உள்ளனர் என்பதை இலக்கு நினைவிருத்த விரும்புகிறது.

தமிழக முதலமைச்சர் மாண்பமை ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமரிடம் ஈழத்தமிழர்களுக்கு உதவுவதற்கான அனுமதியை நேரடியாகக் கேட்டமை, தமிழகமும் உலகத் தமிழர்களும் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களுடன் ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதில் இணைந்து செயற்படுவர் என்கிற நம்பிக்கையை வலுப்படுத்தி யுள்ளது. இப்போது கேள்வி இதனை நடைமுறைப்படுத்தும் குடைநிழல் அமைப்பை எப்படி புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கப் போகிறார்கள் என்பதே!.

Tamil News