மலைய மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தற்போது மறந்துள்ளது. அதனால் மலையக தோட்டத் தொழிலாளர்களின் காணிப் பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசாங்கம் மலையக மக்களுக்கு வேண்டியளவுக்கு வாக்குறுதிகளை வழங்குகின்றது. இந்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்டமொன்றில் காணி, இருப்பிடம் இல்லாத மலையக பிரஜையொருவர் சிறிய கூடாரமொன்றை அமைத்தார் என்பதற்காக அந்த தோட்டத்தின் பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து விரட்டியடித்து, அந்த கூடாரத்தை அகற்றியுள்ளனர்.
லயன் அறைகளில் வாழ்க்கை நடத்தும் மலையக மக்கள் நாட்டுக்கு தேவையான அந்நிய செலாவணியை கொண்டுவருவதற்கு பெரும் அர்ப்பணிப்பை செய்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் வழங்கிய வாக்குறுதிகள், அவர்களுடனான சமூக உடன்படிக்கைகள் உங்களுக்கு மறந்துள்ளது. ஆனால் எமது அரசாங்கத்தில் மலையக மக்கள் உள்ளிட்ட வளங்கள் இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு தரிசு காணியில் அபிவிருத்தியுடன் சிறிய தேயிலை தோட்டங்களின் உரிமையாளர்களாக சமூகத்தில் வாழக்கூடிய வாய்ப்பை வழங்க எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.



