61 ஆண்டுகளாகத் தொடரும் விண்வெளிப் பயணத்தை அமைதிக்காக எப்படிப் பயன்படுத்தலாமென்னும் கேள்வி – ஐ.நா.வின் அனைத்துலக விண்வெளிப்பறப்பு நாள்: ஏப்ரல் 12 | சூ.யோ. பற்றிமாகரன்

அனைத்துலக விண்வெளிப்பறப்பு நாள்மூத்த கலை விஞ்ஞான அரசியல் விஞ்ஞான ஆசிரியர் சூ.யோ. பற்றிமாகரன்; BA, BSc, MA, Phd Researcher

ஐ.நா.வின் அனைத்துலக விண்வெளிப்பறப்பு நாள்

பூமிக்கு அப்பாலான வான்வெளிப் பரப்பில் மனிதன் இஸ்புட்னிக் 1 விண்கலத்தில் பயணிக்கத் தொடங்கிய வரலாற்று நாள் 12.04.1961. இந்த அறிவியல் தொழில்நுட்ப எழுச்சிச் சாதனையை ரஸ்யாவின் விண்வெளி வீரர் யூரி ககாரின் நிகழ்த்திய பொழுது, மண்ணிலிருந்து விண்ணுக்கு மனிதன் பயணிக்கும் வான்வெளிப் பறப்பு யுகம் ஆரம்பமாகியது. இந்நாள் உலக வரலாற்றில் எல்லா மனிதர்களின் நன்மைக்காகவும், விண்வெளியைப் பயன்படுத்தும் அறிவியல் வளர்ச்சிக்கு விண்வெளிப் பயணம் வித்திட்ட நாளாக அமைகிறது.

ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 12ம் நாளை அனைத்துலக வான்வெளிப் பறப்பு நாளாக அனைத்துலக நாடுகளின் சபை கொண்டாடி வருகிறது. இந்நாளில் வான்வெளியை அமைதிக்காக எப்படிப் பயன்படுத்தலாம் என்னும் மனித குலத்தின் இருப்புக்கான முக்கிய கேள்வி எழுப்பப்பட்டு வான்வெளிப் பயணத்தின் மூலம் பெறப்படும் நன்மைகள் எல்லா நாடுகளிலும் வாழும் மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்னும் அழைப்பும் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் வான்வெளிப் பயணம் உலகின் பாதுகாப்பான அமைதியை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்கிற விழிப்புணர்வும் வளர்க்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் மனித விண்வெளிப் பயணத்தின் 61வது ஆண்டு நிறைவடைந்துள்ள 2022 இலும் இந்த விழிப்புணர்வு மனித இருப்பின் பாதுகாப்புக்கான முன்நிபந்தனையாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

அனைத்துலக விண்வெளிப்பறப்பு நாள்1957ம் ஆண்டு அக்டோபர் 4ம்நாள், மனிதன் உருவாக்கிய முதலாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 1, வான்வெளிக்கு உந்தப்பட்ட வரலாற்று நிகழ்வுடன் கோள் ஒழுக்கில் மனிதனால் செய்யப்பட்ட செயற்கைக் கோள் மனிதனில்லாத தன்னியக்க நிலையில் வலம்வரத் தொடங்கியது. 12.04. 1961 இல் யூரி ககாரின் வான்வெளியில் பயணித்த முதல் மனிதன் என்கிற பெருமையைப் பெற்றதை அடுத்து, 16.06.1963 அன்று விண்வெளியில் பூமியை வலம் வந்த முதல் பெண்ணாக வலன்ரினா திரேசுகொவா வரலாறு படைத்தார். தொடர்ந்து 20.07.1969 இல் அமெரிக்கரான நீல்ஸ் ஆம்ஸ்ரோங் அப்பலோ விண்கலத்தில் சந்திரனுக்குப் பயணித்துத் தரையிறங்கி நிலவில் கால்பதித்த முதல் மனிதனாகப் பெரும்புகழ் பெற்றார். இது சிறிய அடி. ஆனால் மனித குலத்தின் பெரிய வெற்றி என அவரால் மனிதனின் நிலவிறக்கம் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 15.07.1977இல் அப்பலோ சோயுஸ் விண்கலம் வெற்றிகரமாகச் சந்திரனில் தரையிறக்கம் செய்யப்பட்டு, சந்திர மண்டலத்தைக் குறித்த அறிவு வளர்ச்சி அறிவார்ந்த முறையில் வளரத் தொடங்கியது.

இதன்வழி பல்தேசியத் தன்மை கொண்ட அறிவியலார்களின் ஒத்துழைப்புடன் கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட மனித அறிவாற்றல் தொழில்நுட்ப ஆற்றல்கள் வழியாக விண்வெளி நிலையம் விண்வெளி அறிவுக்கான தேடலை அறிவார்ந்த முறையில் ஆழப்படுத்த வானில் மிதக்க விடப்பட்டது. கூடவே வானில் உள்ள மற்றைய கோள்களில் ஏதாயினும் உயிர்கள் வாழ்ந்தால், அவற்றுக்கு பூமி குறித்தும் அதில் வாழும் மனித குலம் மற்றைய உயிரினங்கள் குறித்தும் தகவல்களையும் தரவுகளையும் அறிய உதவும் இலத்திரனியல் தரவுத் தட்டு ஒன்றை 55 மொழிகளிலான வாழ்த்தொலிகளுடனும் ஒலிஒளி மூலமான விளக்கங்களுடனும் மனித வாழ்வியலை அடையாளப்படுத்தும் இலத்திரனியல் தட்டுக்களைச் சந்திரனில் தரையிறக்கம் செய்து “மனிதர்களாகிய நாமனைவரும் பூமியால் ஒன்றாக இணைக்கப்பட்டவர்கள்”  என்பதை வானுக்கான செய்தியாகப் பதிவாக்கினர்.  இன்று செவ்வாய் போன்ற பூமிக்குச் சமானமான உயிர்வாழ்தலுக்கான இயற்கைத் தன்மையைக் கொண்ட கோள்களில் மனிதக் குடியிருப்புக்களை அமைத்தல் முதல் சூரியன் போன்ற சக்திப் பேராற்றல்களை ஆய்வு செய்தல், கருங்குழி என்னும் அண்டங்களில் உள்ள அனைத்தினதும் நிலைத்த சக்தியினையும் இயக்க சக்தியினையும் முறைப்படுத்தும் பேராற்றலைக் குறித்த ஆய்வுகள் என விண்வெளி ஆய்வு பரந்து விரிந்து சென்று கொண்டிருக்கிறது.

விண்வெளி ஆய்வின் தொடக்க காலத்திலேயே அனைத்து உலக நாடுகளின் மன்றத்தால் விண்வெளி குறித்த விஞ்ஞான அறிவு வளர்ச்சி மனித இருக்கைக்கான புதிய பரிணாமமாக உணரப்பட்டது. விண்வெளிப் பயணங்களின் வழியான அனைத்துக் கண்டுபிடிப்புக்களும் முழு மனிதகுலத்தினதும் நன்மைக்கான பெறுதிகளாக அமைய வேண்டும் என்கிற கருத்து விண்வெளிப்பயணத் தொடக்க காலம் முதல் இன்றுவரை ஐக்கிய நாடுகள் சபையின் மையக்கருத்தாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வான்வெளி குறித்த முதல் தீர்மானத்தின் 1348ம் இலக்க பதின்மூன்றாவது அலகின்படி “பூமிக்கு அப்பாலான வெளியின் அமைதிப் பயன்பாடு குறித்த கேள்வி என்றுமே தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்துலகினதும் தேடலாக அறிவிக்கப்பட்டது. 10.10.1967இல் வான்வெளிப் பெரும் பட்டயம் எனத் தமிழிலும் “பெருவெளியின் மக்னா கார்ட்ட” என்னும் நிலவையும் வான்வெளியில் சக்திப் பொருள்களாக நிலை கொண்டுள்ளவற்றையும் கண்டறியும் உலக நாடுகளின் நடவடிக்கைகள் எவ்வாறு மனித இருப்புக்கும் பூமியின் இருக்கைக்கும் தீங்கு விளைவிக்காதவாறு கையாளப்பட வேண்டும் என்பதை பட்டயப்படுத்தியது.

இதன் அடிப்படையிலேயே இன்று வான்பெருவெளி விவகாரங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் செயற்பட்டு அமைதியான முறையில் அனைத்துலக நாடுகளதும் ஓத்துழைப்புடன் மனிதகுல நன்மைக்காகப் பயன்படுத்துதல் என்ற சமகாலத்துக்கான மிக முக்கிய தேவையை ஒழுங்கு அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது. இது ஆங்கிலத்தில் “UNOOSA” எனவும் தமிழில் ‘யுனூசா’ எனவும் சுட்டப்பட்டு வருகிறது. இவ்வமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் வான்வெளியை அமைதிக்காகவும் மனித நலனுக்காகவும் பயன்படுத்த வைக்கும் செயலகமாகச் செயற்படுகிறது. அனைத்துலக வான்வெளிச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் இவ்வமைப்புக்கு உண்டு. அத்துடன் வான்வெளிக்குள் செலுத்தப்படும் அத்தனை பொருட்கள் குறித்த பதிவேட்டைப் பேண வேண்டிய பொறுப்பும் இவ்வமைப்புக்கு உண்டு.

அனைத்துல விண்வெளிப் பறப்பு நாளில் விண்வெளியை மனிதன் அமைதிக்காவும் வளர்ச்சிக்காகவும்  பயன்படுத்துவதற்கான அறிவு வளத்தையும் தொழில்நுட்பப் பலத்தையும் பெருக்க வேண்டியதன் தேவையையும் அவ்வளர்ச்சியில் மனிதனுக்குள்ள பொறுப்புக்களையும் குறித்த விழிப்புணர்வு வளர்க்கப்படுகிறது.

அனைத்துலக விண்வெளிப்பறப்பு நாள்இன்று சுவிசில் உள்ள உலகம் எவ்வாறு தோன்றியது என்பதற்கான உலகின் மிகப் பிரமாண்டமான நிலத்தடி ஆய்வு நிலையமான நுண்துணிக்கைகள் ஆய்வு நிலையத்தின் முன் கூத்தனின் ஆடல் திருவுருவம் வைக்கப்பட்டு, காரைக்காலம்மையாரால் முன்மொழியப் பட்ட திருக்கூத்து திருவுருவம் என்னும் ஆடல்வல்லான் நடனத்திருவுருவம் அண்டங்களின் சக்திச் சுழற்சி குறித்த உலகம் போற்றும் கலைவடிவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அண்டங்களுக்கும் அதில் உள்ள உயிர்களுக்கும் இவற்றின் மூலப்பொருளாக உள்ள பேராற்றலுக்கும் இடையுள்ள தொடர்புகளின் தொன்மையும் தொடர்புகளும் பூமி எவ்வாறு தோன்றியது என்ற தேடலின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டிய அறிவியலாக முன்னெடுக்கப்படுகிறது.

ஆனால் இந்த அண்டச் சுழற்சி உண்மைகளின் அறிவியல் மொழியாகத் தமிழ்த்தாய் காரைக்காலம்மையார் முதல் மாணிக்கவாசகர் வரைத் தமிழ் அறிவாளர்களால் கட்டமைக்கப்பட்டது என்ற உண்மை தமிழர்க்கே தெரியாத நிலையில், வடமொழியில் உள்ள பிங்கல லகரியில் உள்ள வடமொழிச் சுலோகங்களுடன் சுவிசில் உள்ள திருக்கூத்துத் திருவுருவம் அமைக்கப்பட்டு உள்ளது. மின்னுரு எனக் காரைக்காலம்மையார் மூலப்பொருளுக்குத் தந்த சொல்லாட்சியின் உண்மையை உறுதி செய்யும் வகையிலேயே “போசன்” இன் மூலமானதென ஒரு சில வினாடிகள் தான் தோன்றிய பேரொளித் துகள் ஒளிர்வுக்கு ‘கடவுள் துணிக்கை’ என்றே பெயரமைந்தமை வியப்பளிக்கும் ஒற்றுமையாக உள்ளது.

தரையிறக்கம் என்ற சொல்லாட்சியை மனித அறிவுடன் இணைத்த பெருமை காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதிக்கு உண்டு. இன்று பேசப்படும் ‘வேர்ட்யுவல் ரியலிட்டி” என்பதற்கான மூலச்சொல்லாக மருட்கை தொல்காப்பியத்தில் பேசப்பட்டுள்ளது தமிழருக்குத் தெரியாது. சங்க இலக்கியங்கள் முதல் தொல்காப்பியம் வரை பேசப்பட்ட அறிவியல் உண்மைகளை அறியாதவர்களாகவே தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  தமிழர்கள் தங்கள் இலக்கியங்களின்  ஆன்மிக இலக்கியங்களைத் தங்களில் இருந்து அந்நியப்படுத்தும் ஐரோப்பியவாக்க உணர்வுகளுள்ளும் மூடத்தனங்களையும் பகைமை வெறுப்புக்களையும் தமிழரின் அறிவாகவே மாற்றி நிற்கும் வடமொழியாக்கத்திலும் சிக்கி ஐரோப்பிய வடமொழிச் சிந்தனைகளையே அறிவியல் நாகரிகம் என நம்புவது அவர்களின் தொன்மையும் தொடர்ச்சியுமான தேசியத் தன்மையின் அறிவியல் பெருமைகளை இழக்க வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் என்கிற ஏற்புடைமைத் தகுதியையும் இழக்க வைத்துள்ளது.

அனைத்துலக விண்வெளிப்பறப்பு நாள்பிரித்தானியக் காலனித்துவக் கால ஈழத்துத் தமிழ்த் தலைமையான அறிவாற்றல் ஆளுமை நிறை முத்துக்குமாரசுவாமி அவர்களின் மகனான கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி எழுதிய ‘சிவநடனம்’ என்னும் திருக்கூத்து குறித்த அறிவார்ந்த நூல்தான் இன்று சுவிசில் உலகின் முக்கிய அறிவியல் ஆய்வு கூடத்தின் தலைவாயில் வரவேற்பு உருவமாக கூத்தன் திருவுருவை அமைத்துள்ளது என்பது இன்றையத் தமிழருக்குத் தெரியாது. யாழ்ப்பாணத்தில் பனை மரத்தின் உச்சியில் சிறு ஆய்வுக்குடில் அமைத்து, வான்வெளியை ஆய்வு செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டன என்பதும், இதற்காக அவ்வாய்வாளர் பிரித்தானியப் பேரரசின் மதிப்பளிப்புக்கு உள்ளாகி அந்த மாதிரி அமைப்பு இன்றைய நாசா ஆய்வுக்கான தூண்டல்களில் ஒன்றாக இருந்தது என்பதும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கொடிகாம நிலப்பப்புக்கும் வானுக்கும் உள்ள சரிவு அமைப்பு நாசாபோன்று வான்வெளிக்கு செயற்கைக்கோள்களை, விண்கலங்களை விண் ஆய்வுக் கூடங்களை குறைந்த செலவில் நிறைவாக ஏவுவதற்குரியதாக உள்ளது என்பதும் தமிழர்களுக்குத் தெரியாது.

இந்த அனைத்து உலக விண்வெளிப் பறப்பு நாளிலாவது தமிழர்கள் தங்களின் தமிழியல் அறிவியலின் பொறிமுறையியல் தொழில்நுட்ப இயலின் தொன்மை களையும் தொடர்ச்சிகளையும் உணர்ச்சி நிலைகளுக்கு அப்பால் உணர்வு நிலையில் அறிவார்ந்த தேடல்கள் வழி மீள்வாசிப்புச் செய்து தங்களின் தேசிய தாயக தன்னாட்சி முறைமைகள் உலக அமைதிக்கும் மனிதாய வளர்ச்சிக்கும் எந்தளவு தூரத்துக்கு உதவிய பெருமையுள்ளவை என்பதைச் சான்றாதரங்களுடன் வெளிப்படுத்த முயற்சிப்பார்களானால் உலகின் தொன்மைக் குடி தமிழ்க்குடி; அதனைப் பேணவேண்டிய பெரும் பொறுப்பு தமக்கு உண்டென உலக நாடுகளும் உலக அமைப்புக்களும் முன்வரும் என்பது உறுதி.

Tamil News

1 COMMENT

  1. […] ஐ.நா.வின் அனைத்துலக விண்வெளிப்பறப்பு நாள் பூமிக்கு அப்பாலான வான்வெளிப் பரப்பில் மனிதன் இஸ்புட்னிக் 1 விண்கலத்தில் பயணிக்கத் தொடங்கிய வரலாற்று நாள் 12.04.1961.மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-177-april-10/ மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/  […]

Leave a Reply