அலி சப்ரியை நிதி அமைச்சர் பதவிக்கு ஜனாதிபதி தெரிவு செய்ய காரணம்? | அகிலன்

அலி சப்ரிஅகிலன்

அலி சப்ரி தெரிவு செய்ய காரணம்?

”நாட்டின் நிதி  அமைச்சர் நான்தான். நாட்டிற்கான எனது பணியில் என் உயிர் போனாலும் கவலைப்பட மாட்டேன்” என அலி சப்ரி பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை அதிரடியாக அறிவித்தபோது அது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதற்கு காரணம் இருந்தது.

நிதி அமைச்சர்  ஒருவர் உள்ளாரா என்பது தொடர்பாக அரசியலில் கடும் சர்ச்சை உருவாகியிருக்கும் நிலையில்தான் இவ்வாறான அறிவித்தலை வெளியிட்டு அரசின் மீதான தனது விசுவாசத்தை அலி சப்ரி வெளிப்படுத்தியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு பதவி துறந்த போது அலி சப்ரியும் தனது நீதி அமைச்சர் பதவியை துறந்தார். பின்னர் இடைக்கால அமைச்சரவை என்ற பெயரில் திங்கட்கிழமை நிதி அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அலி சப்ரி, செவ்வாய்கிழமை அந்தப் பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.

இலங்கையில் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக தீவிரமடைந்துவரும் நிலையில், இவற்றின் மையப்புள்ளியாக இருப்பவர் நிதி அமைச்சர்தான். பஸில் ராஜபக்சவை அமெரிக்காவிலிருந்து பலத்த எதிர்பார்ப்புக் களுடன் ஜனாதிபதி நாட்டுக்குக் கொண்டுவந்து நிதி அமைச்சராக நியமித்த போது, நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வைக் கொண்டுவருவார் எனத் தெரிவிக்கப்பட்டது.

பஸிலின் வருகை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதனை விஸ்வரூபமெடுக்கச் செய்தது. பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்தது. மொட்டு அணிக்குள் உள்ளகப் பிரச்சினை தீவிரமடைவதற்கும் இதுதான் காரணமாக இருந்தது. அதாவது – விமல் வீரவன்ச – உதய கம்மன்பில – வாசுதேவ நாணயக்கார தரப்பினர் உட்கட்சி மோதலை ஆரம்பிப்பதற்கும் பஸிலின் வருகைதான் காரணமாக அமைந்தது.

”ஊத்தை அமெரிக்கன்” என பஸிலை விமல் விமர்ச்சிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைய அரசிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். பொருளாதார – வாழ்வாதார நெருக்கடியால் அரசுக்கு எதிரான மக்களின் உணர்வுகள் உச்சத்தையடைந்திருந்த நிலையில், அரசிலிருந்து வெளியேற்றப்பட்டதையிட்டு அவர்கள் கவலையடையவில்லை. அதேவேளையில் பஸில் மீது சேற்றை வாரியிறைக்கும் பிரச்சாரத்தையும் இவர்கள் தீவிரப்படுத்தினார்கள்

அலி சப்ரிஆக பஸிலின் வருகையும் அவரது அணுகு முறையும் நெருக்கடியைத் தணிப்பதற்குப் பதிலாக தீவிரப் படுத்துவதாகவே அமைந்திருந்தது. பொருளாதாரப் பிரச்சினையை அரசியல் நெருக்கடி யாக்கியது. மக்களின் சீற்றத்தை பஸில் மீது திருப்புவதிலும் விமல் – கம்மன்பில – வாசு குழுவினர் வெற்றி பெற்றார்கள். பஸிலின் இல்லம் கூட சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டிருக்கின்றது. மக்களின் நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்ட நிலையில், பஸிலை மாற்றுவதைவிட ஜனாதிபதிக்கு வேறு வழியிருக்கவில்லை.

தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதில் முக்கிய பங்காற்ற வேண்டியவர் நிதி அமைச்சர்தான். கடனுக்கான வட்டியைக் கொடுப்பதற்கும், கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கும் தொடர்ந்தும் கடனைப் பெறுவது என்பதுதான் இலங்கை அரசின் உபாயமாக இருந்து வருகின்றது. இது பாரிய புதைகுழி ஒன்றுக்குள் இலங்கையைத் தள்ளிவிடும் என பொருளாதார நிபுணர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்ற போதிலும், அரசிடம் மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை.

இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர – சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் பலரும் தொடர்ச்சியாக ஆலோசனை தெரிவித்து வந்திருக்கின்றார்கள். ஆனால் – அவர்கள் முன்வைக்கக்கூடிய நிபந்தனைகளையிட்டு அஞ்சிய அரசாங்கம், அதனை நிராகரித்தே வந்திருக்கின்றது. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவராட் கப்ரால் நாணய நிதியத்திடம் செல்லக்கூடாது என்பதை கடுமையாக வலியுறுத்தி வந்திருக்கின்றார். கடந்த வாரம் அவர் பதவியைத் துறக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் கடந்த வாரம் கொழும்பு வந்து ஆரம்ப கட்டப் பேச்சுக்களை நடத்தியிருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக பஸில் ராஜபக்ச அடுத்த சில தினங்களில் அமெரிக்கா சென்று நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில்தான் இலங்கையில் மக்கள் கிளர்ச்சி உருவாகி அமைச்சர்கள் ஞாயிறு இரவு பதவி துறந்திருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில்தான் அவசரமாக திங்கட்கிழமை இடைக்கால அரசாங்கம் என்ற பெயரில் ஜனாதிபதி அமைத்த 4 பேர் கொண்ட அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி செவ்வாய்கிழமை அந்தப் பதவியைத் துறப்பதாக அறிவித்தார். பதவியைத் துறந்து ஜனாதிபதிக்கு அவர் கொடுத்த கடிதத்தில் தெரிவித்த தகவல்கள் முக்கியமானவை. நிதி அமைச்சர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமியுங்கள். வெளியிலிருந்து இதற்காக ஒருவரைக் கொண்டு வருவதற்கு நீங்கள் விரும்பினால் – அதற்காக எனது தேசியப்பட்டியல் எம்.பி. பதவியையும் விட்டுத்தர நான் தயாராக இருக்கின்றேன் – என்று அவர் தெரிவித்திருந்தார்.

அதாவது – இன்றைய காலகட்டத்தில் நாட்டை மீட்பதற்கு நிதி அமைச்சர் பதவி முக்கியமானது என்பது மட்டுமன்றி – அதற்கு மிகவும் பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதையும் அவரது இந்தக் கடிதம் உணர்த்துகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களை முன்னெடுப்பது – இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்றை முன்வைப்பது என்பது உட்பட பல தலையாய பணிகள் அவரிடம் உள்ளது. இந்தப் பணிகளைத் தன்னால் சுமக்க முடியாது என்பதை உணர்ந்த நிலையில்தான் பதவி துறப்பதாக அவர் அறிவித்தார்.

ஆனால், புதிய நிதி அமைச்சர் ஒருவரை ஜனாதிபதியால் தேடிப்பிடிக்க முடியவில்லை. இந்தப் பின்னணியிலேயே தொடர்ந்தும் நிதி அமைச்சராகவே செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் சப்ரிக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை சில தினங்களில் அமெரிக்காவில் நடைபெறவிருந்தது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இதனைத்தான் அரசாங்கம் நம்பியிருந்தது. ஆனால், இலங்கையில் தொடரும் நெருக்கடியும், அமைச்சரவையில் உருவாகியிருக்கும் சிக்கல்களும் இந்த பேச்சுவார்த்தையை காலவரையறையின்றி ஒத்திவைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நிர்ப்பந்தித்திருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீது பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போதே அலி சப்ரி உணர்ச்சி வசப்பட்டவராக தான்தான் நிதி அமைச்சர் என அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் அலி சப்ரி உரையாற்றிக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. யான எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அறிக்கை தொடர்பான நிதி அமைச்சுடன் தொடர்புபட்ட இந்த விவாதத்தில் நீங்கள் நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் பேசுகின்றீர்களா அல்லது எம்.பி.யாக பேசுகின்றீர்களா எனக்கேள்வி எழுப்பினார்.

இதற்கு அலி சப்ரி பதிலளிக்கும் போதே – ”நான்தான் இந்த நாட்டின் தற்போதைய நிதி அமைச்சர். ஜனாதிபதி நிதி அமைச்சுப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். ஆனால் என்னை விட சிறந்தவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள். நான் தேவையானால் எம்.பி. பதவியிலிருந்து கூட விலகுவதற்கு தயாராகவுள்ளேன் என ஜனாதிபதியிடம் கூறி இராஜினாமா கடிதம் கையளித்தேன். ஜனாதிபதியும் சிறந்தவர்களை வந்து பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தார். எதிர்க் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் யாரும் பொறுப்பேற்க முன்வரவில்லை. இவ்வாறான நாட்டின் ஸ்திரமற்ற நிலை எதிர்காலத்துக்கு பாதிப்பாக அமையுமென சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகள் சுட்டிக்காட்டின.

நிதி அமைச்சை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில் தான் நாட்டை நேசிக்கும் ஒருவனாக நிதி அமைச்சை பொறுப்பேற்றுள்ளேன். எனது இந்தப்பணியின் போது எனது உயிர் போனாலும் நான் கவலைப்பட மாட்டேன். நாட்டிற்காக எனது பணியை முன்னெடுப்பேன்” என்றார்.

அலி சப்ரியின் இந்த உரை பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றது. முதலாவது- நிதி அமைச்சைப் பொறுப்பேற்க யாரும் அஞ்சும் ஒரு நிலை உள்ளது. காரணம் தெரிந்ததுதான். இரண்டாவது – மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார உதவிகளை அரசாங்கம் பெருமளவுக்கு எதிர்பார்ப்பதால், முஸ்லிம் ஒருவர் நிதி அமைச்சராக இருப்பதை ஜனாதிபதி விரும்புகின்றார். மூன்றாவது – உள்நாட்டிலும் முஸ்லிம் மக்களின் ஆதரவை ஓரளவுக்காவது தக்கவைத்துக்கொள்ள இது உதவும். நான்காவது – அமைச்சரவையில் சிறுபான்மையினத்தவர்களும் உள்ளனர் என சர்வதேசத்துக்கு காட்டிக்கொள்ள முடியும். இதனைவிட சப்ரி தனக்கு மிகவும் விசுவாசமாக நடந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஜனாதிபதிக்குள்ளது.

நிதி அமைச்சர் பதவிக்கு அலி சப்ரிதான் பொருத்தமானவர் என ஜனாதிபதி கருத இவை அனைத்தும் காரணமாக இருந்திருக்கலாம். இதனைவிட இன்னொரு காரணமும் இருந்துள்ளது,

அலி சப்ரியை பெயரளவுக்கு நிதி அமைச்சராக வைத்துக்கொண்டு விவகாரங்கள் அனைத்தையும் தானே கையாளலாம் என பஸில் ராஜபக்ச கருதலாம். அலி சப்ரி நீதி அமைச்சராக இருந்தபோது முக்கியமான சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்ட போது அது தொடர்பில் தனக்குத் தெரியாது என அலி சப்ரி தெரிவித்திருந்தார். அளவுக்கதிகமான ராஜபக்ச விசுவாசம் காரணமாக ராஜபக்சக்கள் நடத்தக்கூடிய செயற்பாடுகளுக்கு பொறுப்பெடுக்கக் கூடியவராக சப்ரி இருப்பார் என ராஜபக்சகளின் கணிப்பீடும் இதற்கு காரணம். சப்ரியின் பாராளுமன்ற உரையும் அதனைத்தான் உணர்த்துகின்றது.

Tamil News