உரிமைக்கு குரல் கொடுப்போம் | துரைசாமி நடராஜா

தள்ளாடும் இலங்கைதுரைசாமி நடராஜா

ஆபத்தின் விளிம்பில் தள்ளாடும் இலங்கை

இலங்கை அதள பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. எல்லாத் துறைகளும் முடக்க நிலையை அடைந்திருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியும் அதிகரித்து வருகின்றமை தெரிந்த விடயமாகும். இந்நிலையில் மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் நிலைமைகள் தொடர்பில் கவலையான வெளிப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சமகால நெருக்கீடுகளை சமாளிக்க முடியாமல் அவர்கள் திண்டாடுகின்றனர்.

உரிமைக்கு குரல் கொடுப்போம்ஒருவேளை உணவையேனும் திருப்தியாக உண்ண முடியாத நிலையில் அவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது. எனவே பெருந்தோட்ட மக்களின் பல்துறை நெருக்கீடுகளையும் மழுங்கடித்து, அவர்களின் எழுச்சி கருதி தொழிற்சங்கங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டிய தேவை இப்போது மேலெழுந்திருக்கின்றது. எனினும் தொழிற்சங்கங்களின் சமகால போக்குகள் இவ்விடயத்தில் திருப்தியளிப்பதாக இல்லை என்ற குற்றச்சாட்டுப் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இக்குற்றச்சாட்டில் இருந்தும் விடுபடுவதற்கு பிரச்சினைகளுக்கான தீர்வு கருதிய தொழிற்சங்க அழுத்தங்கள் மென்மேலும் அதிகரிக்கப்படுவது அவசியமாகிவுள்ளதாக புத்திஜீவிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

முறையான திட்டமிடல் இல்லாததன் காரணமாக  நாட்டின் சமகாலமும், எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருகின்றது. பொருட்களுக்கான தட்டுப்பாடு வேகமாக அதிகரித்து வருகின்றது. ‘ஒரு நாடு ஒரு வேளை உணவு’ என்றவாறு நிலைமைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக கண்டனக் குரல்கள் மேலோங்கி வருகின்றன. அரசாங்கத்தின் இயலாமையும் தவறான முகாமைத்துவமுமே நெருக்கடிக்கு காரணமாகுமென்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நாட்டில் கொடிய யுத்தம் நிலவிய காலத்தில் கூட மக்கள் இத்தகையதொரு அவலத்தை சந்தித்திராத நிலையில், அரசாங்கம் மீதான வக்கிரப் பார்வை நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகின்றது சுகாதார ஊழியர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், சாரதிகள், பொறியியலாளர்கள், கலைஞர்கள், விவசாயிகள் எனப் பல்துறை சார்ந்தவர்களும் அரசாங்கத்திற்கு எதிரான சுலோகங்களுடன் வீதியில் இறங்கி அன்றாடம் போராடி வருகின்றனர்.

சர்வதேச நாடுகளில் வாழும் இலங்கையர்களும் இப்போராட்டத்தின் நியாயத் தன்மையை  உணர்ந்து  தமது ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத் தக்கதாகும்.   இந்நிலையில்  மக்களின் சொல்லொணாத் துன்பக் கதை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மாற்றம் எல்லாவற்றையும் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்பி வாக்களித்து சமகால அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றிய மக்கள், இன்று தமது கனவு கலைந்து போனதாக நொந்து கொள்வதோடு இன்னொரு மாற்றத்தை வேண்டி காத்திருக்கின்றார்கள். அத்தியாவசிய உணவு, எரிவாயு, எரிபொருட்கள் இவற்றுடன் மருந்துக்கான தட்டுப்பாடு, நோயின் உக்கிரத்தை அதிகரிக்கச் செய்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் நிலைமையினைத் தோற்றுவித்திருக்கின்றது.

நாட்டில் மருந்து பற்றாக்குறை தீவிரமடைந்துள்ள நிலையில், 250 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், சுகாதாரத்துறை அமைச்சுக்கு இது குறித்து அறிவித்துள்ளது. இந்நிலை மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை. மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு பல உயிர்களைக் காவு கொள்ளக்கூடிய அபாயமும் மேலெழுந்துள்ளது. இதனிடையே பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் அபாயமுள்ளதாகவும், உலக நிலைமைகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாமையே இதற்கான காரணமாகுமென்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளமையும் நோக்கத்தக்கதாகும். மின்சாரம் மற்றும்  நீர்க் கட்டணங்களும் அதிகரிப்பினை எதிர்நோக்கியுள்ளன.

அரச எதிர்ப்புப் பணி

மக்களின் துன்பியல் நிலைமைகளை மாற்றியமைத்து, அவர்களின் நலன்களை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி உள்ளிட்ட பல கட்சிகள் மக்களை ஒன்று திரட்டி தீவிர அரச எதிர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே மலையக மக்கள் நாட்டின் சமகால நிலைமைகளினால் பெரிதும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஒரு கிலோ பால்மாவை கொள்வனவு செய்வதற்கு இரண்டு நாட்களும், எரிவாயுவை வாங்குவதற்கு நான்கு நாட்களும் தொழில்புரிய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதற்கும் மேலாக இது போன்ற பல பொருட்களின் கொள்வனவிற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால், வேலைக்குச் செல்ல முடியாத நிலைக்கும் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலை மிகவும் மோசமானதாகும் என்பதோடு, பல்துறைப் பின்னடைவுகளும்  இதனால் மேலெழுந்து வருகின்றன. அரசாங்கம் பின்தங்கிய நிலையில் உள்ள இம்மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதாக இல்லை. குறைந்த விலையில்  கோதுமை மாவினை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையும் பூரண வெற்றியளிக்காத நிலையில் இவ்வாறு வழங்கப்படும் கோதுமை மாவின் தரம் தொடர்பிலும் அதிருப்தியான வெளிப்பாடுகளே தொழிலாளர்களின் மத்தியில் இருந்து வருகின்றன.

தள்ளாடும் இலங்கைஅரசாங்கத்தின் பங்காளிக் கட்சியும், ஆசியாவின் பெரிய தொழிற்சங்கம் என்று பெயர் பெற்றதுமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போது அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் மருதுபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள். இதன் காரணமாக அரசினால் வழங்கப்படும் கோதுமை மா நிவாரணம் போன்ற ஒரு சில நிவாரணங்களும் மலையக மக்களுக்கு  இனியும் கிடைக்காது போகும் நிலை மேலெழுந்துள்ளது. பொருளாதார நெருகீடுகளின் உக்கிரம்  தாமாகவே போராட்டங்களில் தொழிலாளர்களை  ஈடுபடத் தூண்டியுள்ளது. இதனடிப்படையில் நுவரெலியா – இராகலை, மாக்குடுகளை மற்றும் கொத்மலை பிரதேசம் உள்ளிட்ட பல தோட்டங்களின் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக அண்மையில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். மக்கள் நெருக்கடிகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமாறு தாமாகவே முன்வந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றபோதும் இதில் தொழிற்சங்கங்களின் வகிபாகம் குறிப்பிடத்தக்கதவாறு இல்லையென்று புத்திஜீவிகள் பலரும் பொதுவாக தொழிற்சங்கங்களை குற்றம் சுமத்தியுள்ளனர். இவர்களின் கருத்தில் ஒரு நம்பகத்தன்மையையும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் மலையகத்தைப் பொறுத்தவரையிலும், இவ்விடயத்தில் தொழிற் சங்கங்களின் வகிபாகம் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அளவுக்கதிகமாக அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டால்,  அடக்குமுறைகளுக்கு உள்ளாக நேரிடுமோ என்றதொரு அச்சமும் இவற்றிற்கிருப்பதாகவும் கருத்துக்கள் எதிரொலித்து வருகின்றன. இதனால்தானோ என்னவோ தொழிற்சங்கங்கள் உரிய முன்னெடுப்புக்களை மேற்கொள்ளாது வாய்மூடி மௌனித்திருக்கின்றன. மலையக மக்களுக்கும் தொழிற்சங்கங்களுக்குமான உறவு மிகவும் இறுக்கமானது. பாமர மக்களின் வாழ்வின் வழிகாட்டியாக தொழிற்சங்கங்களே தோள் கொடுத்தன என்றால் மிகையாகாது. இம்மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து இம்மக்களுக்கு நல்வழி காட்டி, உரிமைகள் பலவற்றையும் பெற்றுக் கொள்ள அழுத்தம் கொடுத்த பெருமை தொழிற்சங்கங்களுக்குள்ளது. காணியுரிமை, வீட்டுரிமை, சம்பள அதிகரிப்பு, மலையக இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள், கலாசார மேம்பாடு, தொழில் பிணக்குகளுக்கான தீர்வு என்று இன்னோரன்ன விடயங்களையும் மையப்படுத்தி தொழிலாளர்களுக்கு நலன்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் தொழிற் சங்கங்கள் ஏற்கனவே குரல் கொடுத்திருந்தன. இவற்றின் ஊடாக தொழிலாளர்களுக்கு பல சாதக விளைவுகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன என்பதையும் கூறியாதல் வேண்டும்.

வலுவிழக்கும் தொழிற்சங்கங்கள்

எனினும் தொழிற்சங்கங்களின் சமகாலப் போக்குகள் தொடர்பில் தொழிலாளர்களிடையே அதிருப்தியான வெளிப்பாடுகள் இருந்து வருவதையும் நீங்கள் நன்கறிவீர்கள். இந்நிலையானது தொழிலாளர்களையும், தொழிற் சங்கங்களையும் அந்நியப்படுத்தி வருகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. இத்தகைய போக்குகள் எதிர்காலத்தில் தொழிற்சங்கக் கலாசாரத்தை வலுவிழக்கச் செய்யும் அபாயமுள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இப்போதைய அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உள்ளிட்ட நெருக்கீடுகளால் மலையகப் பெருந்தோட்ட மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு, அவர்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை என்ற குற்றச்சாட்டு மேலெழுந்து வருகின்றது. தமது அங்கத்தினர்களை அதிகரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் பிரச்சினைகளை உரியவாறு செவிமடுப்பதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு இல்லாமலில்லை.

இதேவேளை மலையக மக்கள் பசியுடனும் பட்டினியுடனும்  போராடிக் கொண்டிருக்கையில், அரசியல்வாதிகள் அதனைக் கண்டும் காணாதவாறு அடுத்த தேர்தல் வெற்றியையும், அமைச்சுப் பதவியையும் மையப்படுத்தி காய் நகர்த்திக் கொண்டிருப்பதாகவும், அப்பாவி மக்களின் வாக்குகளால் அரசியல் பிரவேசம் செய்தவர்கள் அம்மக்களுக்கு இழைக்கும் துரோகம் இதுவாகுமென்றும் அரசியல் அவதானிகள்   வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஆயிரம் ரூபா நாட்சம்பளம் என்பது யானைப் பசிக்கு சோளப் பொரியைப் போன்றதாகும் என்று கூறும்  அவர்கள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை அரசியல்வாதிகள் பெற்றுக் கொடுக்காவிட்டால் மக்களின் கண்ணீர் அவர்களைச் சும்மா விடாது என்றும் கடிந்து கொண்டுள்ளனர். இதனிடையே பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மையப்படுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிரான போராட்டமொன்றை அண்மையில் தலவாக்கலையில் ஏற்பாடு செய்திருந்தது. எனினும் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தினால் இது சாத்தியமாகவில்லை.   பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கான அழுத்தங்கள் தொடர்ச்சியாக இடம்பெற வேண்டிய நிலையில், இது சாதக விளைவுகளைப் பெற்றுக் கொள்ள  உந்துசக்தியாக அமையும்.

மலையகத்தில் தொழிற்சங்கவாதிகள்  மற்றும் அரசியல்வாதிகளுக்கிடையில் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது. தொழிற்சங்கவாதிகள்தான் இங்கு அரசியல்வாதிகளாக பரிணமித்திருக்கின்றார்கள். அரசியல் களம் புகுவதற்கு தொழிற்சங்கங்களை வாய்ப்பாக தொழிற்சங்கவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரித்துப் பார்க்க முடியாத இவ்விரு சாராரும்  பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட மலையக மக்களின்  பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க ஆக்கபூர்வமான காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் தேவையுள்ளபோது வாய்மூடி மௌனித்து இருந்து விட்டு பின்னர் வருத்தப்படுவதால் எவ்விதமான நன்மையும் ஏற்படப் போவதில்லை. மக்களின் பல்வேறு உரிமைகளையும் உறுதிப்படுத்த இவர்கள் முதுகெலும்புடன் செயற்பட வேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாகும்.

Tamil News