எமக்கான உரிமையைப் பெற்றெடுக்கக் கூடியதான இராஜதந்திர செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் | மட்டு.நகரான்

319 Views

இராஜதந்திர செயற்பாடுமட்டு.நகரான்

இராஜதந்திர செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும்

தற்போதுள்ள சூழ்நிலையினைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சர்வதேசத்திடம் அழுத்தம் கொடுத்து, எமக்கான உரிமையைப் பெற்றெடுக்கக் கூடியதான இராஜதந்திர செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலக்கு வார இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இந்தக் கோரிக்கையினை அவர் முன்வைத்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் முழுமையான செவ்வி:-

கேள்வி:
இலங்கையின் நிலைமையினை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்:
இலங்கையின் நிலைமை என்றுமில்லாதளவு பொருளாதார நெருக்கடி, விலை ஏற்றம், எரிபொருள் தட்டுப்பாடும் விலை அதிகரிப்பும், மின்சாரத்தடை இவ்வாறு பல நெருக்கடிகளை மக்கள் சந்தித்து, இந்த கோட்டாபய அரசுக்கு எதிராக தடைகளை மீறி சுதந்திரமாக மக்கள் தாமாக கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தும் நிலை உருவாகியுள்ளது.

சுருக்கமாக இதை கூறுவதானால், மக்களுக்கும் நிம்மதி இல்லை, ஆட்சியாளர்களுக்கும் நிம்மதி இல்லாத கடனால் சூழப்பட்ட இலங்கையாக தற்போது காட்சியளிக்கிறது. இந்த நிலைமை காலப்போக்கில் வன்முறைகளாக மாறக் கூடிய நிலையும் வரலாம்.

கேள்வி:
இன்றைய நிலை காரணமாகத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன? இந்த நிலையினை தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?

பதில்:
இன்றைய நிலையில் தமிழ் மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களும் முழு அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்பகுதி சிங்கள மக்களின் 69, இலட்சம் வாக்குகளால்தான் தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதாகவே கோட்டாபய பல முறை பெருமையாகக் கூறினார்.

இதே 69, இலட்சம் மக்களும் இன்று திரண்டு அவர் வேண்டாம் “கோட்டபாய வீட்டுக்குப் போ” என்று பகிரங்கமாகவே போராட்டம் செய்யும் நிலையில், தமிழ் மக்களாகிய நாம் இந்த ஜனாதிபதியை எப்போதுமே ஏற்கவில்லை என்பதை கருத்தில் எடுத்து தென்பகுதி மக்களின் போராட்டத்தை அவதானிக்க வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரை கோட்டாபய ராஜபக்சவை மாற்றிவிட்டு சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக நியமிப்பதாலோ அல்லது அநுரகுமார திசநாயக்கவை ஜனாதிபதியாக நியமித்தாலோ பெயரும் முகமும் மட்டுமே மாறுமே தவிர, அவர்களின் அடிமனதில் உள்ள இனவாதம், பௌத்த மேலாண்மைச் சிந்தனை மாறாது.

எனவே தமிழ் மக்கள் எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கலை பண்பாடு, எமது நிலம் சார்ந்து தனித்துவமான சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வைப் பெறும் வகையில் இந்த காலத்தைப் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாகத் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் அரசைக் காப்பாற்றவோ, எதிர்கட்சிகளை காப்பாற்றவோ பங்களிப்புகளை வழங்காமல், நாம் நாமாக அரசியல் பணிகளை செய்ய வேண்டும். தமிழ் இளைஞர்களும் பகடைக்காய்களாக மாறாமல், இலங்கையில் நடக்கும் இந்த செயல்களை அவதானித்து, பார்வையாளர்களாக இருப்பதே நல்லது! அதேவேளை அரசுக்கு எதிரான கவன ஈர்ப்புப் போராட்டங்களை தமிழ் மக்கள் செய்வதும் தவறில்லை.

கேள்வி:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையின்மை, தமிழ் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமையின்மை போன்ற பிரச்சினைகளால் வடகிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறான உணர்வுகள் ஏற்பட்டுள்ளன?

பதில்:
இராஜதந்திர செயற்பாடுதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை இல்லை என்பது இன்று நேற்றல்ல. 2001,ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் தலைவர்கள் எல்லோரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தனர். அதனால் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளராக ஆனந்தசங்கரி இருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து 2001இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகி, முதலாவது தேர்தலில் ஒற்றுமையாகப் போட்டியிட்ட பின்னர் 20004இல் இடம்பெற்ற தேர்தலில் ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தமதாக்கிப்  பிரிந்தார்.

இதுதான் முதலாவது பிரிவு.  அதன் பின்னர் 2009,மே,18, வரை ஒற்றுமையாகச் செயற்பட்ட அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 2010, தேர்தலில் பிரிந்தது. இது இரண்டாவது பிரிவு. (பிரிந்த கட்சி) அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் மௌனம் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகளின் பினாமி என கோஷமிட்ட தமிழ் மக்கள் விடுதலை இயக்கம்(புளொட்) 2011, உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தது.

2015, பொதுத் தேர்லின் போது ஈபீஆர்எல்எவ் பிரிந்தது. இது மூன்றாவது பிரிவு (மூன்றாவதாக பிரிந்த கட்சி) அதன் பின்னர் இன்றுவரையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய மூன்று கட்சிகளும் பிரியாமல் ஒற்றுமையாகத் தொடர்கிறன. ஆனால் கருத்து வேறுபாடுகள் செயற்பாட்டு வேறுபாடுகள் உள்ளன என்பது உண்மை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒருமித்து தீர்மானம் எடுத்தால், சரியோ பிழையோ அதில் உள்ள மூன்று கட்சிகளும் அதற்கு உடன்பட்டு, ஒற்றுமையாகச் சகல விடயங்களிலும் செயற்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் தற்போது இல்லை என்பதைக் காணலாம்.

உதாரணமாக ஜனாதிபதி சந்திப்புக்கு இரண்டு கட்சிகள் சென்றன. ஒரு கட்சி செல்லவில்லை, ஆனால் இந்த சந்திப்பு முடிந்து இரண்டு நாட்களால் இந்திய வெளிவிவகார அமைச்சுச் சந்திப்புக்கு மூன்று கட்சிகளும் ஒற்றுமையாகச் சென்றன. இதுதான் பிரச்சினை.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு என்பதை ஒரு சந்திப்பு காட்டியது. இல்லை என்பதை மறு சந்திப்பு நிரூபித்தது. இது யாரின் தவறு? உண்மையில் எந்தத் தீர்மானங்கள் ஆனாலும் மூன்று கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், இதன் எதிரொலி மக்கள்  மத்தியில் பிளவாக சித்தரிக்கப்படும்.  அதுதான் நடந்தது.

என்னைப் பொறுத்தவரை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் மூன்று கட்சிகளும் எந்த முடிவானாலும் ஒருமித்த ஒரு முடிவாக எடுக்க வேண்டும்.  அப்படி எடுக்காமல் சிலதை ஒற்றுமையாகவும், சிலதை தனித்தும் முடிவு எடுத்து செயற்படுவதானால் அது மக்களை குழப்பும் செயலாகவே மாறும். முதலில் ஊடகங்களுக்குக் கருத்துக்களை வழங்கும் முன் மூன்று கட்சிகளும் தமது பிரச்சினைகளைக் கையாள்வது பற்றி மூன்று கட்சி தலைவர்களும் பேசி தீர்க்க வேண்டும். இவைகளையும் செய்யாது தாம் தாம் சொல்வதுதான் சரி என வாதாடினால் பெயரளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருபதால் என்னபயன்.

கேள்வி:
சுமந்திரன் எம்.பி.யின் செயற்பாடுகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அண்மைக் காலமாக ஏற்பட்டுவரும் நெருக்கடிகளை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்:
நெருக்கடி என்பது பலரால் உண்டு. நான் தனிநபர் பெயர்களை பொறுப்பு வாய்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகச் செயலாளர் என்ற வகையில் தவிர்த்துக் கொள்கிறேன். இலங்கைத் தமிழரசுக் கட்சியிலும் சில கருத்து முரண்பாடுகள் எழுவதும், தீர்வு காண்பதும் உண்டு.

இதுபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் அதில் உள்ள பங்காளிக் கட்சிகளிடையே கருத்து முரண்பாடுகள் எழுவதும் உண்டு. ஜனநாயக அரசியல் கட்சிகளிடையே கருத்து முரண்பாடுகள் எழாவிட்டால், அது ஜனநாயகமாக இராது.  சர்வாதிகாரமாவே மாறும்.

கட்சிகளுக்கு மட்டுமல்ல கடவுள் இடத்திலும் முரண்பாடு.  கருத்தொற்றுமை இருந்தது இல்லை. இந்து மதத்தில் பிள்ளையாரையும், முருகப்பெருமானையும், சிவபெருமானும் உமையம்மையும் அழைத்து உலகத்தை சுற்றிவரச் சொன்னபோது பிள்ளையார் தாய் தந்தையரை சுற்றியதும், முருகன் மயிலேறி உலகத்தைச் சுற்றியதும் எதை காட்டுகிறது? பிள்ளையாருக்கும், முருகனுக்கும் ஒற்றுமை இல்லை என்பதையும், கருத்து முரண்பாடு இருந்ததையும் எமக்கு வெளிக்காட்டியது.

கடவுள் இடத்தில் கருத்தொற்றுமை, செயல் ஒற்றுமை, முரண்பாடு என்பது இருக்கும் போது, மனிதர்களுக்கு வருவது இயல்புதானே! இதில் தனிநபர் செயற்பாடுகள் சிலவேளை முழு இன முரண்பாட்டையும், எதிர்பார்த்த முடிவுகளையும் பின்னோக்கி நகர்தாலாம் என்பது உண்மை. என்னைப் பொறுத்தவரை யாரின் செயற்பாடுகளும் தமிழ்த் தேசியக் கொள்கைக்கு மாறாக இருக்கக் கூடாது என்பதை எப்பவும் விரும்புகின்ற ஒருவன் நான்.

கேள்வி:
சிங்களக் கட்சிகளுடன் இணைந்து தெற்கில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வது சரியான தீர்மானம் என நினைக்கிறீர்களா?

பதில்:
தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரவர்கள் விரும்பியபடி தன்னிச்சையாக கலந்து கொள்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களையும் தனிப்பட்ட முறையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைத்து செல்கின்றனர்.

இந்த விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் ஐயா தான் பதில் கூற வேண்டும்.

கேள்வி:
கடந்த காலத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவாக தெற்கில் நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்துகொள்ளாத சிங்கள அரசியல்வாதி களுடன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைகோர்த்துள்ளதை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்:
தமிழர்களின் பிரச்சினை என்பது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் 74, வருட உரிமைக்கான அரசியல் பிரச்சினை. இது அகிம்சை, ஆயுதம் என பல வடிவங்களை எடுத்து தற்போது இராஜதந்திர செயற்பாட்டு அரசியல் பயணமாகச் செல்கிறது,

இதில் தென்பகுதியில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளின் மனோநிலை இனவாத சிந்தனை என்பது பிறப்புரிமையாக அவர்களின் அடிமனதில் ஆழமாக வேர் ஊன்றி விட்டது.

இது மாறாதவரை அவர்கள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று எம்முடன் இணைந்து போராட்டங்களில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பது மடமை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு தேவை உள்ளது. தமிழ் மக்களுக்கான உரிமைக்காவே தமிழர்கள் 73 வருடங்களாகப் போராடுகிறோம். சிங்கள மக்கள் எமக்கு எதிரிகள் இல்லை. சிங்கள ஆட்சியாளர்கள் விட்ட தவறுதான் ஈழமக்கள் இன்றும் அடிமைகளாக உள்ளனர். சிங்கள மக்களிடம் காட்டும் பொருட்டு அவ்வாறான போராட்டங்களில் கலந்து கொள்வது தப்பில்லை.

கேள்வி:
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான நெருக்கடி நிலைக்கு மத்தியில் தமிழ் மக்களின் தீர்வு தொடர்பான விடயங்கள் குறித்தான அழுத்தங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லை?

பதில்:
இன்று ஏற்பட்டுள்ள இலங்கையின் அரசியல் நெருக்கடி விடயத்தை தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடாக சர்வதேச அரங்கில் கொண்டு செல்ல வேண்டும் என்பது உண்மை. அந்தப் பணிகளைச் செய்ய வேண்டும் என்பது காலத்தின் தேவை. அது நடைபெறும் என நினைக்கிறேன்.

கேள்வி:
இன்றைய காலத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்:
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சர்வதேசத்திடம் அழுத்தம் கொடுத்து எமக்கான உரிமையைப் பெற்றெடுக்கக் கூடியதான இராஜதந்திர செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும்.

Tamil News

1 COMMENT

  1. […] இராஜதந்திர செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும்: தற்போதுள்ள சூழ்நிலையினைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சர்வதேசத்திடம் அழுத்தம் கொடுத்து,மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-177-april-10/ மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org  […]

Leave a Reply