சிறீலங்காவில் உண்மையில் நடந்தது என்ன? – பல்கி ஷர்மா | தமிழில்: ஜெயந்திரன்

உண்மையில் நடந்தது என்னதமிழில்: ஜெயந்திரன்

சிறீலங்காவில் உண்மையில் நடந்தது என்ன?

ஒட்டுமொத்தமாக வங்குரோத்து நிலையை அடைந்துவிட்ட சிறீலங்கா, தனது நாட்டுக்கு பணம் அனுப்புமாறு வெளிநாடுகளில் வாழுகின்ற தமது குடிமக்களைக் கேட்டிருக்கிறது. இலங்கையில் உள்ள 13 வங்கிகள் தற்போது உலக தரப்படுத்தும் நிறுவனங்களால் எதிர்மறையான நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. சிறீலங்கா தற்போது 51 பில்லியன் டொலர்கள் கடனை வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. சொர்க்க பூமி என்று அழைக்கப்பட்ட இந்த தீவில் இன்று மிகவும் குழப்பமான சூழல் நிலவுகிறது.

கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 5 இலட்சம் மக்கள் சிறீலங்காவில் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அங்கே எரிபொருள் இல்லை. மருந்துகள் இல்லை. அவசரமாகச் செய்யப்பட வேண்டிய அறுவைச் சிகிச்சைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன. கோவிட் பெருந்தொற்றினால் இறந்தவர்களைவிட அதிகமானோர் தற்போதைய பொருண்மிய நெருக்கடியால் இறக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அங்கே மின்தடை நாளாந்தம் அமுல்நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டின் வீதிகளில் மிகப் பரந்த அளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தினமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

உண்மையில் தற்போது சிறீலங்காவில் ஏற்பட்டிருப்பது தனியே பொருண்மிய நெருக்கடி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. தற்போது அங்கே ஒரு ‘மனிதாய நெருக்கடி’ உருவாகியிருக்கின்றது. இந்த நெருக்கடி நிலை எப்படி உருவாகியது என்பதே தற்போது எல்லோரும் கேட்கின்ற கேள்வியாகும். கொழும்பு தனது அத்தனை வருமானத்தையும் ஒரேயடியாக இழந்தது எப்படி? இவ்வாறான கேள்விகளுக்கான விடைகளை இன்று நாங்கள் தேடுகிறோம்.

கிராவிற்றாஸ் பிளஸ் என்ற இந்த நிகழ்ச்சிக்கு உங்கள் எல்லோரையும் நான், பல்க்கி ஷர்மா வரவேற்றுக் கொள்கிறேன். உண்மையில் சிறீலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கான விளக்கத்தை பல்வேறு விதமாக வடிவமைக்கலாம். அந்த நாடு தனக்கென வகுத்திருக்கின்ற கொள்கைகளில் அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதுமட்டுமன்றி இலங்கையரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட அரசியலும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இதனை மக்கள் கர்மவினை அல்லது விதி என்று சொல்கிறார்கள். சிறிலங்காவிலும் வேறு பல நாடுகளிலும் நிலவுகின்ற அநேக பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணமாக சீனா விளங்குகிறது.

முதலிலே அந்த நாட்டின் கொள்கைகளைச் சற்றுப் பார்ப்போம். சிறீலங்காவில் இன்று ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு மிக நீண்ட காலமாக அங்கு கையாளப்பட்ட தவறான நிர்வாகம் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அங்குள்ள அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால், தமது ஏற்றுமதியை விட அதிகமான இறக்குமதியை சிறீலங்கா மேற்கொள்ளுகிறது. தனது வருமானத்தை விட அதிகமாக அந்த நாடு செலவு செய்கிறது. வியாபாரத்திலும் துண்டு விழுகிறது. வரவுசெலவுத் திட்டத்திலும் துண்டுவிழுகிறது. இப்படியாக இரண்டு முக்கிய துறைகளில் துண்டுவிழுமானால் பேரிடர் ஏற்படுவது இயற்கையானது. இந்த பேரிடரை சிறீலங்கா கையாளும் விதம் அதைவிட மோசமானது. துண்டுவிழும் தொகையைக் குறைப்பதற்குப் பதிலாக தனது கடனை அது மேலும் அதிகரித்தது.

உலகின் பல நாடுகளில் இருந்தும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் மிக அதிமான கடனை சிறிலங்கா பெற்றுக் கொண்டிருக்கிறது. மொத்த தேசிய உற்பத்தியின் 111 வீதத்தை சிறீலங்கா கடனாகப் பெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் உண்மையான பொருள் என்னவென்றால் தனது உற்பத்தியை விட மிக அதிகமான கடனை சிறீலங்கா வெளிநாடுகளிலிருந்து பெற்றிருக்கிறது. ஏற்கனவே 2019ம் ஆண்டில் ஆசிய அபிவிருத்தி வங்கி இப்பிரச்சினை தொடர்பாக எச்சரிக்கையை விடுத்திருந்தது. சிறீலங்காவின் மொத்த தேசிய செலவு அதன் மொத்த தேசிய வருமானத்தை விட அதிகமாக இருப்பதாகவும் வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான அதன் உற்பத்தி போதாமல் இருக்கின்றது என்றும் அந்த வங்கி சுட்டிக்காட்டியது.

உண்மையில் நடந்தது என்னஅதே 2019ம் ஆண்டிலே தான் கோட்டாபய அதிபர் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தான் பதவிக்கு வந்தால் மக்கள் செலுத்த வேண்டிய வரிகளை கணிசமான அளவு குறைப்பதாக அவர் வாக்குறுதி அளித்தார். “நீங்கள் என்னைத் தெரிவு செய்யுங்கள். அப்போது நீங்கள் செலுத்த வேண்டிய வரிகளை நான் குறைத்து விடுகிறேன்;” என்று அவர் தேர்தல் பரப்புரையில் மக்களுக்கு வாக்குக் கொடுத்தார். அப்படியென்றால் நாட்டுக்கு வருமானம் எவ்வாறு கிடைக்கும்? இந்தக் கேள்வியை வாக்காளரும் கேட்கவில்லை. கோட்டாபயவும் அதற்கான பதிலை வழங்கவும் இல்லை. 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 52 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளால் கோட்டாபய வெற்றிபெற்று நாட்டின் அதிபரானார்.

தான் வாக்களித்தது போல் ஒன்றன்பின் ஒன்றாக வரிகளை அவர் மிக அதிகமாகக் குறைத்துக்கொண்டு வந்தார். மதிப்பீடு செய்யும் உலக நிறுவனங்கள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்தன. சிறீலங்காவின் திறைசேரி விரைவிலே வெறுமையாகும் என்பதையும் மிக விரைவில் அந்த நாட்டிலே ஒட்டுமொத்தமாகப் பணம் இல்லாமல் போகும் என்பதையும் இந்த நிறுவனங்கள் எதிர்வுகூறின. விரைவிலே சிறீலங்கா வங்குரோத்து நிலையை அடையும் என்பதை அந்த நிறுவனங்களால் இனங்கண்டு கொள்ள முடிந்தது. இந்தச் சூழ்நிலையின் காரணமாக முதலீட்டாளர்கள் சிறீலங்காவை விட்டு வெளியேறத் தொடங்கியது மட்டுமன்றி சிறிலங்காவினால் பன்னாட்டுச் சந்தைகளையும் அணுக முடியவில்லை.

இத்தோடு கோட்டாபய நிறுத்திக் கொள்ளவில்லை. இன்னும் ஒரு பெரிய தவறை அவர் இழைத்தார். ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்று கூறி இரசாயன உர வகைகளை அவர் தடை செய்தார். ஆரோக்கியம் அதற்கான உண்மையான காரணமாக இருக்கவில்லை. அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையே அதற்கான உண்மையான காரணமாக இருந்தது. இறக்குமதி செய்யப்படும் உரவகைகளைத் தடைசெய்வதன் மூலம் அந்நியச் செலாவணியைச் சேமிக்க சிறீலங்கா விரும்பியது. இந்த முடிவினால் விவசாய உற்பத்திகளில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. வெள்ளை அரிசி சிறீலங்காவில் முக்கிய உணவாக உண்ணப்படுகிறது. அந்த அரிசியின் உற்பத்தி 50 வீதத்தால் குறைய, அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அந்த நாட்டுக்கு ஏற்பட்டது. பல வருடங்களுக்குப் பிறகு இவ்வாறான ஒரு சூழல் சிறீலங்காவில் ஏற்பட்டது.

கடந்த வருடம் யூலை மாதம் மேலும் ஒரு செய்தி வந்தது. ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை சிறீலங்கா தடை செய்தது. அதே நேரம் தன்னிடம் இருக்கின்ற டொலர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை சிறீலங்காவுக்கு ஏற்பட்டது. இவ்வாறான தலைப்புகள் நாளிதழ்களில் வெளிவரத் தொடங்கவே அங்குள்ள மக்கள் தாம் ஒரு புயலுக்கு முகங்கொடுக்கப் போகின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள்.

நெருக்கடி நிலையை சிறீலங்கா தானாகவே தேடிக்கொண்டது என்பதே உண்மையாகும். கோட்டாபயவும் அவரது சகாக்களும் வகுத்த அரசியல் கொள்கையின் எதிர்விளைவுகளையே அந்த நாடு இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. சிங்கள பௌத்தர்களின் உதவியுடன் தான்  ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள். கடந்த மூன்று வருடங்களாக அவர்களது ஆதரவை இழக்காமல் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய ராஜபக்ச குடும்பத்தினர் தயாராகவே இருந்தார்கள். உள்நாடு தொடர்பான முடிவுகளாக இருந்தாலும் சரி பன்னாட்டுச் சமூகம் தொடர்பான முடிவுகளாக இருந்தாலும் சரி சிங்கள பௌத்த மக்களைத் திருப்திப்படுத்துவதே ராஜபக்சக்களின் முக்கிய இலக்காக இருந்தது.

சந்தை சார்ந்த பொருண்மியத்திலிருந்து நலன்புரிப் பொருண்மியத்துக்கு அவர்களது பொருண்மிய அணுகுமுறை மாற்றம் பெற்றது. உட்கட்டமைப்புகளை விருத்தி செய்வதில் மட்டுமே அவர்கள் அதிக அக்கறை செலுத்தினார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால் புத்த பிக்குகள் அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையையே ஆதரித்தார்கள். அது மட்டுமன்றி இந்தியாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவதை சிறிலங்கா நீண்ட காலமாகத் தவிர்த்தே வந்தது. இந்தியாவை விடுத்து சீனாவுடனேயே நெருங்கிய உறவை ராஜபக்சக்கள் ஏற்படுத்தினார்கள். உட்கட்டமைப்பை விருத்தி செய்யவும் தமது இராணுவத்தை விரிவாக்கவுமே சீனாவிடமிருந்த பெற்ற கடனை அவர்கள் பயன்படுத்தினார்கள். சிறீலங்காவின் பொருண்மியத்தை நகர்த்த கொழும்பு முற்றுமுழுதாகச் சீனாவிலே தான் தங்கியிருந்தது.

 உண்மையில் நடந்தது என்னசிறீலங்காவுக்கு சீனா பணஉதவி செய்தது என்பது உண்மை தான். ஆனால் வூஹான் வைரசையும் கூடவே சீனா சிறிலங்காவுக்கு அனுப்பியது. சிறீலங்கா தனது பொருண்மியத்தை சரியாகக் கையாளவில்லை. கொழும்பு வங்குரோத்து நிலையை அடைவதற்கு சீனா முக்கிய காரணம். ஏற்கனவே 2019ம் ஆண்டிலேயே சிறீலங்காவில் உல்லாசப் பயணத்துறை நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கியது. உயிர்ப்பு ஞாயிறு அன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலின் காரணமாக சிறீலங்காவில் வழமையாகத் தமது விடுமுறையைக் கழிக்கின்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகள் சிறீலங்காவைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் கொரோனா வைரசும் நாட்டை ஆட்டிப்படைக்கத் தொடங்கியது. கொரோனாப் பெருந் தொற்றின் காரணமாக நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன. உல்லாசப் பயணிகளின் வருகை ஒட்டுமொத்தமாக ஒரு முடிவுக்கு வந்தது. உல்லாசப்பயணிகளின் வருகை முடிவுக்கு வர, சிறீலங்காவின் வருமானமும் முடிவுக்கு வந்தது.

சிறீலங்கா தனது மொத்த தேசிய வருமானத்தின் 13 வீதத்தை உல்லாசப் பயணத் துறையிலிருந்தே பெற்றுக்கொள்கிறது. தனது நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணியின் கணிசமான பகுதியையும் சிறீலங்கா உல்லாசப் பயணத் துறையிலிருந்தே பெற்றுக்கொள்கின்றது. 2020ம் ஆண்டில் 173,000 உல்லாசப் பயணிகளை மட்டும் சிறீலங்காவால் வரவேற்க முடிந்தது. 2018ம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது உல்லாசப் பயணிகளின் தொகை 2.3 மில்லியன்களாக இருந்தது. 2019இல் 7.5 பில்லியன் டொலர்களாக இருந்த உல்லாசப்பயணத்துறை வருமானம் 2021 இல் 2.8 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்தது.

அத்தோடு வைரஸ் பெருந்தொற்றும் நாட்டின் வருமானத்தை அதிகமாகப் பாதித்தது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் நாட்டுக்குப் பணம் அனுப்புவதை நிறுத்தினார்கள். 2021இன் இறுதிப்பகுதியில் வரியினால் பெறப்படும் வருமானம் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்தது. மொத்த தேசிய வருமானத்தின் 8 வீதப் பங்கைக் கொண்டிருக்கின்ற விவசாய உற்பத்தியும் வீழ்ச்சியடைந்தது. உல்லாசப் பயணத் துறையினால் பெறப்படும் வருமானம் வீழ்ச்சியடைய, அறவிடப்படும் கட்டணங்களினால் பெறப்படும் வருமானமும் வீழ்ச்சியடைந்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக பெருந்தொற்றின் பாதிப்பு அதிகமாக, வெளிநாட்டு நிறுவனங்கள் சிறீலங்காவுக்குக் கடன் வழங்குவதை முற்றாக நிறுத்திக்கொண்டன.

இப்படிப்பட்ட சூழலில் கொழும்பு என்ன செய்தது? கொழும்பு தனது அயல்நாடுகளிடம் உதவி கேட்டது. 2021ம் ஆண்டு ஜூன் மாதம் பங்களாதேஷ் நாடு 200 மில்லியன் டொலர்களை சிறீலங்காவுக்கு கடனாக வழங்கியது. 2022 பெப்பிரவரி மாதம் இந்தியா 500 மில்லியன் டொலர்களை சிறீலங்காவுக்குக் கடனாக வழங்கியது. அப்படியிருந்தும் சிறீலங்காவால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கட்டணங்கள் மூலம் பெறுப்படும் வருமானத்தை அதிகரித்து பன்னாட்டு நாணய நிதியத்தின் கடனைப் பெறுவதற்குத் தகுதி பெறுவதற்காக இவ்வாண்டு மார்ச் மாதம் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை ரூபாவின் பெறுமதியைக் குறைத்தார். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்றால் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணத்தினால் பொருட்களை வாங்கும் மக்களது சக்தியும் வீழ்ச்சியடைந்தது. இன்று ஒரு டொலரின் பெறுமதி 326 சிறீலங்கா ரூபாவாக இருக்கிறது.

இந்த வருடத்தின் தொடக்கத்துடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி 32 வீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. நாட்டில் பொருட்களின் விலை மலைபோல் உயர, பணவீக்கம் 30.2 வீதத்தை எட்டியது. உணவுப் பொருட்களின் விலை 30 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. முன்னர் 50 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 91 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. வெங்காயத்தின் விலை 80 ரூபாவிலிருந்து 158 ரூபாவாக அதிகரித்திருக்கிறது. ஒரு கிலோ அரிசியின் விலை 93 வீதம் அதிகரித்திருக்கிறது. கோழி இறைச்சியின் விலை 55 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. பருப்பின் விலை 117 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. பணவீக்கம் இவ்வாறு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மலைபோல் உயர்ந்துவிட்ட கடன்கள் நாட்டின் திறைசேரியை வெறுமையாக்கிவிட்டதோடு நாணயத்தின் பெறுமதியையும் குறைத்துவிட்டது.

ஒரு நாட்டின் பொருண்மியத்தில் எவ்வாறான பாதிப்புகள் எல்லாம் ஏற்பட முடியுமோ, அவை அத்தனையுமே சிறீலங்காவின் பொருண்மியத்தில் ஏற்பட்டிருக்கின்றன. இவ்வாறே நாட்டின் அரசியலையும் இந்த நிலை பாதித்திருக்கிறது.

இன்று சிறீலங்காவின் அனைத்து இனமக்களும் ஒன்றிணைந்து ‘போ கோட்டா போ’ என்ற கோஷத்தை நாளாந்தம் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். புத்த பிக்குகள் கூட ராஜபக்சவின் குடும்பத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். சிறீலங்கா விடம் தற்போது எவ்வளவு பணம் கையிருப்பில் இருக்கிறது என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம். 1.94 பில்லியன் டொலர்கள் மாத்திரமே சிறீலங்காவின் கையிருப்பில் தற்போது இருக்கிறது. 24 வயது நிரம்பிய அமெரிக்க மாடல் அழகியான கைலி ஜெனரிடம் இருக்கும் பணத்தை விட இது சற்று அதிகமானது.

ஆனால் சிறீலங்காவோ இந்த தொகையை வைத்து 22 மில்லியன்கள் எண்ணிக்கையிலான மக்களுக்கு உணவு, உடை, பாதுகாப்பு என்பவற்றை வழங்க வேண்டும். அது மட்டுமன்றி அது தான் பெற்ற கடன்களையும் மீளச்செலுத்த வேண்டும். சிறீலங்கா இந்த ஆண்டில் 8.6 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடன்களை மீளச்செலுத்த வேண்டும். இம்மாதத்தில் பெறப்பட்ட கடன்களுக்கு வட்டியாக 78.2 மில்லியன் டொலர்களை சிறீலங்கா செலுத்தவேண்டும். தாம் பெற்ற கடன்களை தற்போது தம்மால் மீளச்செலுத்த முடியாது என்று சிறீலங்கா அறிவித்திருக்கிறது. அதே நேரம் தற்போது சிறீலங்கா நாடு தழுவிய அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.

அதே நேரம் இலங்கை மக்கள் பலர் இந்தியாவுக்குத் தப்பிச்சென்று கொண்டிருக்கிறார்கள். 20 பில்லியன் டொலர்கள் தற்போது சிறீலங்காவுக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகிறது. உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்யவும் ஏற்றுமதியை மீள ஆரம்பிக்கவும் சிறீலங்காவுக்கு இந்தத் தொகை அவசியமாக இருக்கிறது. இந்தப் பணத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்வது என்பது தான் தற்போது சிறீலங்காவுக்கு இருக்கின்ற கேள்வியாகும். பன்னாட்டு நாணய நிதியம் இந்தப் பொருண்மிய நெருக்கடியிலிருந்து தம்மை மீட்கும் என்று சிறீலங்கா நம்புகிறது. ஆனால் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. என்ன நடந்தாலும் சிறீலங்காவில் வாழும் மக்களுக்கு துன்பமயமான நாட்கள் காத்திருக்கின்றன என்பது மட்டும் உண்மையாகும்.

நன்றி:  WION – GRAVITAS PLUS

Tamil News