நிதானமாக வகுக்கப்படும் உத்திகளில் தான் போரின் போக்கு தங்கியுள்ளது – உக்ரைன் உணர்த்தும் செய்தி இது | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

336 Views

உக்ரைன் போரின் போக்குவேல்ஸ் இல் இருந்து அருஸ்

உக்ரைன் போரின் போக்கு

எனது 10 டொலர்கள் செலவானாலும் பரவாயில்லை; ரஸ்யாவின் ஒரு டொலராவது செலவாக வேண்டும் என்பதே மேற்குலகத்தின் கொள்கையாக உள்ளது. உக்ரைன் போரை காரணம் காட்டி ரஸ்யாவின் பொருளாதாரத்தை அழித்து விடலாம் என 6000 இற்கு மேற்பட்ட தடைகளை போட்ட அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள், தற்போது அதன் வலியை உணர ஆரம்பித்துள்ளன.

உக்ரைன் போரின் போக்குமேற்குலகத்தின் தாளத்திற்கு ஆடிய அதன் நிறுவனங்களும் அதற்கான பலனை அனுபவிக்க ஆரம்பித்துள்ளன. ரஸ்யாவின் தனது சேவையை நிறுத்திய நெற்பிளிக்ஸ் நிறுவனம் 7 இலட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதுடன், 40 பில்லியன் டொலர்களையும் சில மாதங்களில் இழந்துள்ளது. விசா கார்ட் நிறுவனம் 60 மில்லியன் டொலர்களை இழந்துள்ளது, அதேபோல ரஸ்யாவின் சரக்கு கப்பலை தடுத்து வைத்த பிரான்ஸ் அரசுக்கு, கப்பல் நின்ற காலத்துக்கான வாடகை பணத்துக்கான பற்றுச்சீட்டை அனுப்பியுள்ளது தனியார் துறைமுக நிறுவனம்.

ஸ்லோவாக்கியா வழங்கிய எஸ்-300 ஏவுகணை உக்ரைனை சென்றடைந்ததுமே ரஸ்யா அதனை தனது கலிபர் ஏவுகணை மூலம் அழித்துவிட்டது. இப்போது அதற்கான இழப்பீடாக 62 மில்லியன் டொலர்களை ஐரோப்பிய ஒன்றியம் தரவேண்டும் என தெரிவித்துள்ளது ஸ்லோவாக்கியா, உக்ரைனுக்கு தான் அனுப்பிய ஆயுதங்களுக்கான பணத்தை ஐரோப்பிய ஒன்றியம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது சுவீடன். இதில் தலைக்கவசங்களுக்கு மட்டும் 10 மில்லியன் டொலர்களை கணக்காக காட்டியுள்ளது சுவீடன். இவை சிறு உதாரணங்கள். ஆனால் இந்த பட்டியல் மிகவும் நீளமானது.

பொருளாதார தடைகளை போடும் போது ரஸ்ய நாணயமான ரூபிள் பெறுமதியற்ற வெறும் குப்பையாகவே மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதனை முறியடித்து எதிரிகளை திணறடித்துள்ளது ரஸ்யா, ரஸ்யாவிடம் எரிபொருள் வாங்குபவர்கள் தாம் விரும்பிய பணத்தை ரஸ்யாவின் எரிபொருள் நிறுவனங்களுக்கு செலுத்தலாம். ஆனால் அந்த நிறுவனங்கள் ரூபிளில் தான் பணத்தை செலுத்த வேண்டும் என்ற தந்திரம் மிக நன்றாக வேலை செய்கின்றது. வீழ்ந்த ரூபிள் இரண்டு வருடம் காணாத உயர்வை எட்டியுள்ளது, தடைபோட்ட யூரோ ஐந்து வருடம் காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது.

பணத்தை செலுத்த மறுத்த போலந்துக்கும், பல்கேரியாவுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது, அதனை தொடர்ந்து 10 இற்கு மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் தடைசெய்யப்பட்ட ரஸ்ய வங்கிகளில் கணக்குகளை திறந்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் முரண்பாடுகள் வெடித்துள்ளன. 40 இற்கு மேற்பட்ட நாடுகள் இணைந்து மேற்கொண்ட பொருளாதார தடையை அவர்களுக்கு எதிராக திருப்பிவிட்ட ரஸ்ய களமுனையையும் அவர்கள் எதிர்பாராத திசைக்கு நகர்த்தியுள்ளது.

மரியப்போலில் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் உக்ரைனின் முக்கிய படைபிரிவையும், அதன் அதிகாரிகளையும் அவர்களுடன் இணைந்து போர் புரிந்த முக்கிய வெளிநாட்டு படை அதிகாரிகளையும் முடக்கிய ரஸ்ய படையினர், அவர்களுக்கான தொடர்புகளை துண்டித்துவிட்டு தெற்கில் இருந்து வடக்காக நகர்கின்றன.

இந்த வாரம் தென்களமுனையில் கிழக்கில் இருந்து மேற்காகவும், மேற்கில் இருந்து கிழக்காகவும் நகரும் லுகான்ஸ் மக்கள் குடியரசுப்படையினர் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ள உக்ரைன் படையினரை ஒரு முற்றுகைக்குள் சிக்க வைக்க முற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (படையினரின் நகர்வை படத்தில் பார்க்கலாம்). பல கிராமங்களையும், நகரங்களையும் கைப்பற்றியவாறு நகரும் படையினரின் நோக்கம் நிறைவேறினால் ஏறத்தாழ 30,000 உக்ரைன் படையினர் இந்த முற்றுகைக்குள் சிக்குவார்கள் என கணிப்பிடப்படுகின்றது.

உக்ரைன் போரின் போக்குநகர்ப்புறச் சமர் திறந்த வெளிச்சமராக மாற்றம் பெற்றுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு உக்ரைன் படையினர் திணறி வருகின்றனர். ரஸ்ய படையினரின் 122மி.மீ தொடக்கம் 152 மி.மீ வரையிலான நீண்டதூர பீரங்கிகள் உக்ரைன் படையினருக்கு மிகப்பெரும் சவாலாக மாற்றம் பெற்றுள்ளது. ஆளில்லாத உளவு விமானங்கள் மற்றும் செய்மதிகள் துல்லியமாக தகவல்களை வழங்க அவற்றை பீரங்கிகள் மூலம் இலகுவாக தகர்த்து விடுகின்றனர் ரஸ்ய படையினர். மேலும் களமுனைகளுக்கு படையினரை அனுப்புவதிலும், காயமடைந்தவர்களை வெளியேற்றுவதிலும் உக்ரைன் படையினர் கடும் நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளனர்.

அவர்கள் வசம் இருந்த பெருமளவான கவச வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நேட்டோ கூட்டணி நாடுகளிடம் திறந்தவெளிச் சமருக்கு தேவையான பீரங்கிகளையும், கவசவாகனங்களையும் உக்ரைன் படையினர் எதிர்பார்த்து நிற்கின்றனர். இந்த நிலையில் மேலும் 800 மில்லியன் டொலர்களை உக்ரைனின் தரைப்படையினருக்கான ஆயுத விநியோகத்திற்கு ஒதுக்கியுள்ளது அமெரிக்கா.

அதன் பிரகாரம் 155 மி.மீ ரக பீரங்கிகள் 72 மற்றும் அதற்கான எறிகணைகள் 140000 என்பவற்றை அமெரிக்கா வழங்குகின்றபோதும், அவுஸ்திரேலியா, பிரித்தானியா, போலந்து உட்பட பல நாடுகள் தம் வசம் உள்ள கனரக பீரங்கிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளன. அவுஸ்திரேலியா வழங்கிய 155 மி.மீ  M777 Howitzers பீரங்கியை படத்தில் காணலாம்.

உக்ரைன் போரின் போக்குபல நாடுகள் கவசவாகனங்கள் மற்றும் டாங்கிகளையும் வழங்கும் அதேசமயம், விமான எதிர்ப்பு கனரக வாகனங்களையும் ஜேர்மன் வழங்க முன்வந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் Bushmaster கவச வாகனங்கள்  உக்ரைனுக்கு வழங்கப்படுவதற்காக போலந்தின் விமான நிலையத்தில் இறக்கப்படுவதை நீங்கள் படத்தில் காணலாம்.

உக்ரைன் போரின் போக்குஆனால் இந்த ஆயுதங்களை உக்ரைனில் வைத்து தனது உயர்தொழில்நுட்ப கலிபர் மற்றும் KH29 ASM போன்ற ஏவுகணைகளால் அழித்துவரும் ரஸ்யா, தற்போது ஆயுதவிநியோக வழிகளையும் தகர்த்து வருகின்றது. இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை மற்றும் வான் தாக்குதல்களில் மேற்கு உக்ரைன் மற்றும் மத்திய உக்ரைன் பகுதிகளில் உள்ள 7 தொடருந்து நிலையங்கள் தகர்க்கப்பட்டுள்ளதுடன், ஒடிசா பகுதியின் மிக முக்கிய இணைப்பு பாலமும் கலிபர் ரக ஏவுகணை மூலம் தகர்க்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது, மேற்குலகம் வழங்கிய ஆயுதங்களை ஏற்றிவந்த அன்ரனோவ்-26 ரக விமானமும் இந்த வாரம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன், ஆயுதங்களை சேமித்த பல இடங்களும் தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டு வருகின்றன. உக்ரைனின் வான்பரப்பை ரஸ்யா தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதால், மேற்குலகத்தின் ஆயுத விநியோகம் களமுனையில் அதிக நன்மைகளை உக்ரைனுக்கு வழங்கவில்லை.

மேலும் ஒரு நாளைக்கு சராசரியாக 30 கவசவாகனங்களை ரஸ்ய படையினர் அழித்து வருவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே களத்தில் அழிக்கப்படும் கவச வாகனங்கள் மற்றும் அவற்றை விநியோப்பதில் உள்ள சிக்கல்கள் என்பன உக்ரைன் படையினரின் போரிடும் வலுவை கடுமையாக பாதிப்பதுடன், அவர்கள் ஒரு சோர்வு நிலைக்கு சென்றுள்ளதையும் காண முடிகின்றது. இதனால் பெருமளவான படையினர் சரணடைந்து வருகின்றனர். உக்ரைனின் சைபர் படைப்பிரிவை சேர்ந்த 79 வீரர்கள் இந்த வாரம் சரணடைந்ததை படத்தில் காணலாம்.

உக்ரைன் போரின் போக்குவான் ஆதிக்கத்தையும், நவீன குரூஸ் ஏவுகணைகளையும் கொண்ட படையினருடன் நாம் தக்குப்பிடிக்க முடியாது என தெரிவித்துள்ளார் கார்கிவ் பகுதியில் சண்டையில் ஈடுபட்ட உக்ரைன் லெப்ரினன்ட் ஒருவர்.

அதாவது இந்த பத்தி எழுதப்படும் வரையில் களமுனையையும், பொருளாதார முனையையும் ரஸ்யா இழக்கவில்லை என்பது தெளிவாகின்றது. போரின் போக்கு என்பது பிரச்சாரங்களிலும், பொய்யான தகவல்களிலும் தங்கியிருப்பதில்லை. மாறாக நிதானமாக வகுக்கப்படும் உத்திகளில் தான் தங்கியுள்ளது. அதனை தான் உக்ரைன் களமுனை எமக்கு உணர்த்துகின்றது.

Tamil News

Leave a Reply