வழி மொழிதலா? வழி மாற்றமா?

வழி மொழிதலா வழி மாற்றமா
வழி மொழிதலா? வழி மாற்றமா? சூ.யோ. பற்றிமாகரன்

வட்டுக்கோட்டைத் தீர்மானம்

முன்னுரை

சென்னையில் நடைபெற்ற 2ஆவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்னும் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தலைமையிலான மாநாடு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வழி மொழிதலா? வழி மாற்றமா? என்ற கேள்வியை உலகெங்கும் ஈழத்தமிழர்களிடை தோற்றுவித்துள்ளது.

வழி மொழிதலா வழி மாற்றமா
கவிஞர் காசியானந்தன்

இதற்கான தெளிவை ஈழமக்களே பெற்றுக் கொள்வதற்கு, 1975ஆம் ஆண்டின் காங்கேசன்துறை மக்கள் ஆணை, 1976ஆம் ஆண்டின் தமிழர் ஒற்றுமை முன்னணியின் வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை, 1987ஆம் ஆண்டின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சுதுமலைப் பிரகடனம் என்னும் ஈழத் தமிழினித்தின் வரலாற்றுத் திருப்புமுனைகள் நான்கும் குறித்த மிகச் சுருக்கமான பார்வை ஒன்று இக்காலத்தின் தேவையாகிறது.

ஈழத்தமிழரின் இறைமை அவர்களிடமே மீண்டுவிட்டதை நிரூபித்த மக்களாணை

22.05. 1972இல் நாடற்ற தேச இனமாக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள், சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் தன்னிச்சையாகப் பிரகடனப்படுத்திய சிறீலங்கா பௌத்த சிங்களக் குடியரசை ஏற்கவில்லை என்பதை உலகுக்கு அறிவிக்கும், அடையாளக் குடியொப்பத்தை (Plebiscite)  நடாத்துமாறு, தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழரசுக் கட்சியையும் உள்ளடக்கி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழர் ஒற்றுமை முன்னணி, தமிழ் இளைஞர் அமைப்புக்கள் ஆகியன இணைந்து, 14.05. 1972இல் திருகோணமலையில் உருவாக்கிய தமிழர் ஒற்றுமை முன்னணியின் தலைவருமான,  எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்கள், தனது காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து டிசம்பர் 1972இல் அனைத்துலக சட்ட ஒழுங்கு முறைகளுக்கு ஏற்ப சுயநிர்ணய உரிமையை ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக முன்னெடுப்பதற்காக கோரினார்.

இந்தத் தேர்தலை மூன்று வருடங்களாக நடாத்தாது இழுத்தடித்து 07.02.1975இல் சிறீலங்கா நடத்திய போது 16000 மேலதிக வாக்குகளால் திரு. எஸ்.ஜே.வி. செல்வாநாயகம் அவர்கள் வெற்றி பெற்று, ஈழத்தமிழர்கள் 1972ஆம் ஆண்டு சிங்கள பௌத்த குடியரசை ஏற்கவில்லை என்பதையும் ஈழத்தமிழரின் பிரித்தானியக் காலனித்துவத்திடம் இருந்த இறைமை அவர்களிடமே மீண்டு விட்டது என்பதையும் உலகுக்கு அறிவித்தார்.

காங்கேசன்துறை அடையாள சுயநிர்ணய உரிமைப் பிரகடனம்

வழி மொழிதலா வழி மாற்றமாகாங்கேசன்துறை அடையாள சுயநிர்ணய உரிமைப் பிரகடனம் என்பது, ஈழத்தமிழ் மக்கள் தாங்கள் நாடற்ற தேச இனமாக்கப்பட்டுள்ளோம் என்ற வரலாற்று மாற்றத்தை உலகுக்கு தங்கள் விருப்பு வாக்குகள் மூலம் காங்கேசன்துறையில் அடையாளக் குடியொப்பம் மூலம் உறுதிப்படுத்திய உடனேயே திரு. எஸ் ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் பிரகடனத்தைச் சிறீலங்காப் பாராளுமன்றத்தில், காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் செய்து, ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சி முறையை நிராகரித்து, வெளியேறினார்.  அது வருமாறு:-

“வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் வெளி நாட்டவர் ஆட்சி உருவாகும் காலம் வரை சிங்களவர்களும், தமிழர்களும் இந்நாட்டில் தனியான இறைமையுள்ள மக்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இவ்விடத்தில் தமிழர்கள் சுதந்திரப் போராட்டங்களில் தங்கள் விடுதலையையும் தாங்கள் மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றே முன்னணியில் போராடினார்கள் என்பதை நினைவுறுத்த விரும்புகின்றேன். கடந்த 25 ஆண்டுகளாக சிங்களவர்களுடன் ஒன்றுபட்ட அரசில் நாங்கள் அவர்களுக்குச் சமத்துவமான நிலையில் எங்கள் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கான ஒவ்வொரு முயற்சி களையும் செய்தோம்.

கவலைக்குரிய உண்மை என்னவென்றால், தொடர்ந்து வந்த ஒவ்வொரு சிங்கள அரசாங்கங்களும் பிரித்தானியா அளித்த சுதந்திரத்தின் வழி அவர்களிடம் பெருகிய அதிகாரங்களைக் கொண்டு எங்களுடைய அடிப்படை உரிமைகளை எல்லாம் மறுத்து, எங்களை இரண்டாந்தரக் குடிகளாக்கினர். தமிழர்களுடைய இறைமையைச் சிங்களவர்களுடைய இறைமையுடன் பொதுமைப் படுத்தப்பட்டதாலேயே இந்த அரசாங்கங்கள் இப்படிச் செய்ய முடிந்தது. நான் இந்தத் தேர்தலில் மக்கள் தந்த மக்களாணையின் அடிப்படையில் ஈழநாட்டினம் ஏற்கனவே தன்னில் நிலைபெற்றுள்ள இறைமையினைப் பயன்படுத்தி, தன்னை விடுவிக்கப்பட்ட சுதந்திர தேசமாக்கிடுமென எனது  மக்களுக்கும், உலகுக்கும் அறிவிக்க விரும்புகின்றேன். தமிழர் ஒற்றுமைக் கூட்டணியினர் இந்த மக்கள் ஆணையை முன்னெடுக்க முழு அளவில் உறுதியுடன் செயல்படுவரென நான் தமிழ் மக்கள் சார்பில் உறுதியளிக்கிறேன்.”

ஈழத்தமிழர் அரசை மறுசீரமைத்து மீளநிறுவுதல்  என்பதே வட்டுக்கோட்டைத் தீர்மானம்

வழி மொழிதலா வழி மாற்றமா14.05.1976ஆம் திகதி அன்று பண்ணாகம் என்ற வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் கூட்டமைப்பின் மாநாட்டில் “தமிழ் நாட்டினத்தை இந்த நாட்டில் பாதுகாப்பதற்காக அவர்களது பிரிக்கப்பட முடியாத உரிமையாகிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்களது சுதந்திரமான இறைமையுள்ள மதசார்பற்ற சோசலிச அரசை மறுசீரமைத்து, மீளநிறுவ முடிவெடுக்கிறது” என்ற அறிவிப்பே வட்டுக்கோட்டைத் தீர்மானம்.

1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வழியான மக்களாணை

“தமிழ்தேச இனம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தங்களுடைய தாயகத்தில் தனது இறைமையை நிறுவுதற்கான முடிவினை எடுத்துள்ளது. உலகுக்கும் சிங்கள மக்களுக்கும் இதனைத் தெரிவிப்பதற்கான ஒரேவழியாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகின்றோம். அளிக்கப்படும் வாக்குகள் மூலம் தெரிவாகும் பிரதிநிதிகள் இலங்கையின் தேசிய சபையின் உறுப்பினர்களாக தெரிவாகும் அதே நேரத்தில், அவர்கள் தமிழீழத் தேசசபையின் உறுப்பினர்களாகவும் தம்மை நிலைநிறுத்தி, தமிழீழ அரசின் அரசியலமைப்பையும் உருவாக்குவார்கள். இந்த அரசியலமைப்பை அமைதியான வழிகளிலோ அல்லது நேரடிச் செயற்பாடுகள் வழியாகவோ அல்லது போராட்டத்தாலோ செயற்படுத்துவதன் மூலம் தமிழீழத்தின் சுதந்திரத்தை நிறுவுவார்கள்.” என்ற தேர்தல் வாக்குறுதி தமிழர் விடுதலைக் கூட்டணியால் தமிழீழ மக்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த தேர்தல் வாக்குறுதியைச் செயற்படுத்துமாறு ஈழமக்கள் வாக்களித்து உறுதி செய்தனர். இதுவே தமிழ் இளைஞர்கள் போராட்ட வழிகள் மூலம் தங்கள் தாயகத்தையும், மக்களையும் பாதுகாப்பதற்கான சட்டவலுவினைப் பெறச் செய்தது.

ஈழத்தமிழ் மக்களின் வெளியகத் தன்னாட்சியை நிலைநிறுத்திய சுதுமலைப் பிரகடனம்

வழி மொழிதலா வழி மாற்றமா
சுதுமலைப் பிரகடனம்

தமிழீழத் தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு இந்திய பிராந்திய வல்லாண்மையுடன் ஓத்துழைக்க வேண்டிய அரசியல் சூழ்நிலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தோன்றிய நிலையில் 04.08.1987இல் சுதுமலைப் பொதுக்கூட்டத்தில் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் தோன்றியுள்ளமையை உணர்த்தும் வகையிலும், இந்தியாவின் பொறுப்பைச் சுட்டிக்காட்டும் வகையிலும் செய்த பிரகடனமே சுதுமலைப் பிரகடனம் எனப்படுகிறது.

“நாம் எமது மக்களின் பாதுகாப்பிற்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை. எமது இலட்சியப் பற்றும் தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்பிற்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விமோசனத்திற்காக, நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கின்றோம்.

நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கின்றோம். ஈழத்தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைத்தான் குறிக்கிறது”  என்பதே அப்பிரகடனம்.

இந்தப் பிரகடனம் ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சியின் அடிப்படையில் இலங்கைத் தீவுக்கு வெளியேயுள்ள இறைமையாளரான இந்தியா இலங்கைத் தீவின் இறைமைக்குள் தலையீட்டை மேற்கொண்டு தீர்வுகாண முயற்சித்த முதல் உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையின் பின்னர் இன்றுவரை ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை அனைத்துலகப் பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டிய அரசியல் எதார்த்தத்தைக் கொண்டுள்ளது.

முடிவுரை

எனவே பிராந்திய மேலாண்மையான இந்தியாவாக இருந்தாலும்சரி, உலக வல்லாண்மைகளாக இருந்தாலும் ஈழத்தமிழர்களின் இந்த நான்கு முக்கிய மக்களாணைகளின் அடிப்படையில் ஈழத்தமிழரின் வெளியக தன்னாட்சி உரிமைகளை ஏற்று, இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையென ஈழத்தமிழர் பிரச்சினையைப் பார்க்காது, அனைத்துலகப் பிரச்சினையாகவே பார்த்து, நீதியான நியாயமான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தக் கூடிய முறையில் ஈழத் தமிழர்கள் உலக நாடுகளையும், அமைப்புக்களையும் எங்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் செயற்படுங்கள் எனத் தெளிவாக அழைக்க வேண்டும். அப்படி அழைத்தால் அச்செயற்பாடு இவற்றுக்கான வழி மொழிதலாகும். இல்லையேல் வழிமாற்றமாகி ஈழத் தமிழர்களால் என்றுமே நிராகரிக்கப்படும்

ilakku-weekly-epaper-141-august-01-2021