மலையக மக்களை விழுங்கும் விலைவாசி – துரைசாமி நடராஜா

மலையக மக்களை விழுங்கும் விலைவாசி

துரைசாமி நடராஜா

மலையக மக்களை விழுங்கும் விலைவாசி: அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. விலை அதிகரிப்பினால் மேலெழும்பும் வாழ்க்கைச் செலவினை சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடுகின்றார்கள். இதனால் பல்வேறு துறைகளும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளன.

இதனிடையே பொருட்களின் விலைகள் இன்னுமின்னும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் ஒரு வேளை உணவை மட்டுமே உண்ண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சி கருத்து வெளியிட்டுள்ளது.

பொருட்களின் விலை  அதிகரிப்பானது, மலையக மக்களில் சற்று அதிகமாகவே பாதக விளைவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனால் ஏற்படும் தழும்புகள் அதிகமாகவுள்ளன. இதனிடையே விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாதென அரசாங்கம் கையை விரித்துள்ளமையானது அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியினை மேலும் வலுவடையச் செய்துள்ளதோடு, நம்பகத்தன்மையினையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதன் விளைவுகள் எதிர்வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்று அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் சமகால போக்குகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக ஜே.வி.பி.குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் தொற்று நோய்கள் காரணமாகவும் பல பிரச்சினைகள் மேலெழுந்துள்ளன.

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, இறக்குமதிப் பொருட்களை தேவைக்கேற்ப இறக்குமதி செய்ய முடியாத நிதிப் பற்றாக்குறை, உரம் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை, தரமான பொருட்களுக்கு பதிலாக தரமற்ற மற்றும் நாட்டுக்கும், மக்களுக்கும் ஒவ்வாத பொருட்களை இறக்குமதி செய்யும் நிலை என்று பல்வேறுபட்ட சிக்கல்களும் இன்று மேலெழுந்துள்ளதாகவும் பாரதூரமான இராஜதந்திர நெருக்கடிக்குள் இலங்கை சிக்கிக் கொண்டுள்ளதாகவும் ஜே.வி.பி. தெரிவிக்கின்றது .சமகால நிலைமைகள் தொடருமானால் மக்கள் பஞ்சத்தில் உயிரிழப்பர் என்றும் எதிர்வு கூறல்கள் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பொருட்களின் விலை அதிகரிப்பு மக்களின் குரல்வளையை நசுக்கிவரும் நிலையில் அரசாங்கம் நிவாரணங்களை வழங்காதபோதும், ஆறுதல் வார்த்தைகளையேனும் கூறாமை பலரையும் விசனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. டொலர் உள்நாட்டில் அச்சிடப்படவில்லை. ஆகவே இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த முடியாது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருப்பது, பொறுப்பு வாய்ந்த அமைச்சரின் பதிலாகத் தெரியவில்லை.

எரியும் நெருப்பில் அவர்  எண்ணெயை ஊற்றி, மக்களை கடுப்பேத்தி இருக்கின்றார். அத்தோடு  கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளமையானது, நகைச்சுவைக்குரிய ஒரு விடயமாகும் என்பதோடு, மக்களின் வலிகளை எந்தளவு அரசியல்வாதிகள் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதையும் சிந்திக்கத் தூண்டுகின்றது.

மலையக மக்களை விழுங்கும் விலைவாசிஇதேவேளை பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் அமைச்சர் பந்துல பொறுப்பற்ற வகையில் குறிப்பிடும் கருத்துக்கள் கவலையளிப்பதாகவும், அவ்வாறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தும் என்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவும் கவலை தெரிவித்திருந்தார்.

நாட்டு மக்கள் உணவுப் பொருட்களையும், ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் பெற்றுக் கொள்ள முடியாமல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை மேலெழுந்துள்ளது. அவ்வாறு காத்திருந்தபோதும், இறுதித் தருணத்தில் பொருட்கள் இல்லை என்று வர்த்தகர்கள் கையை விரித்தும் விடுகின்றனர்.

விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளமை மற்றும் அரசாங்கத்தின் ஏனைய பிழையான அணுகுமுறைகள் என்பவற்றைக்  கண்டித்தும் மக்கள் நலனை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியும்  கடந்த 16 ம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. இவ்வார்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தமையும் தெரிந்த விடயமாகும்.

வறுமையின் கோரப்பிடி

வறுமையின் கோரப்பிடிமலையக மக்கள் வறுமையின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்பவர்கள். வறுமையின் கோரப்பிடி அவர்களைத் தொடர்ச்சியாகவே இறுக்கி வருகின்றது. சாண் ஏறினால் முழம் சறுக்கும் நிலையில் இம்மக்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. சகல துறைகளும் இதில் உள்ளடங்கும். இந்நிலையில் பொருட்களின் விலை அதிகரிப்பால் மிகவும் பாதிப்பிற்கு உள்ளானவர்களாக இம்மக்கள் விளங்குகின்றார்கள். ஒரு சமூகக் குழு என்ற வகையில் மலையக மக்களிடையே அதிகரித்த வறுமை காணப்படுகின்றது. இம்மக்களின் வறுமை குறித்து நோக்குகையில் 1990/91 இல் பெருந்தோட்ட வறுமை நிலை 20.5 வீதமாகவும், 1995/96 இல் 38.4 வீதமாகவும, 2002 இல் 30 வீதமாகவும் இது காணப்பட்டது.

இதேவேளை 2006/07 இல் 32 வீதமாகவும், 2009/10 இல் 9.2 வீதமாகவும் பெருந்தோட்ட வறுமை நிலை காணப்பட்டது. பெருந்தோட்ட வறுமை நிலையினால் மிகவும் மோசமாக பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை பெருந்தோட்ட மக்களிடையே வறுமை நிலை இன்னுமின்னும் அதிகரித்து வருகின்ற நிலையில் வெளிப்படுத்தப்படும் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை தொடர்பிலும் பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளமையும் நோக்கத்தக்கதாகும். மலையக மக்களின் வறுமை நிலை தொடர்பில் வெளிப்படுத்தப்படும் புள்ளி விவரங்களைக் காட்டிலும் இன்னும் அதிகமாக இருக்கக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும் புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

மக்களை விழுங்கும் விலைவாசி3 மலையக மக்களை விழுங்கும் விலைவாசி - துரைசாமி நடராஜாஇலங்கையில் சுமார் 80 வீதமான வறிய மக்கள் கிராமப் புறங்களிலேயே வாழ்வதால், வறுமையானது  ஒரு கிராமப்புற நிகழ்வாகக் கருதப்படுகின்றது. கிராமியத்துறையைச் சேர்ந்த சிறுநில விவசாயிகளும், காணியுரிமையற்ற விவசாயத் தொழிலாளர்களும், நகர்ப்புற சேரிவாழ் மக்களும், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த வேலையற்றோரும், தோட்டத்துறை சார்ந்த மக்களுமே இந்நாட்டில் வறிய மக்களாகக் கருதப்படுவதாக ஏற்கனவே புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர். ஏனைய துறைசார்ந்த மக்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்டத்துறை மக்களே குறைந்தளவு வருமானத்தைக் கொண்டுள்ளனர்.

இம்மக்கள் உணவிற்காக 58.3 வீதத்தைச் செலவிடுகின்றனர். நகர கிராமியத் துறைகளில் இது முறையே 36.9 வீதமாகவும், 46.2 வீதமாகவுமுள்ளது. உயர்ந்த வருமான மட்டங்களில் குறைந்த விகிதாசாரமே உணவிற்காக செலவிடப்படும். குறைந்தமட்ட வருமானம் காரணமாக தோட்டத்துறை சார்ந்த மக்கள் தமது மொத்த மாதாந்த செலவில் வீட்டுவசதி, குடியிருப்பு, கல்வி, போக்குவரத்து, மின்சாரம் என்பவற்றிற்கு குறைந்தளவையே செலவிடக்கூடிய நிலையில் உள்ளனர். இவையனைத்தும் தோட்டத்துறை மக்களே இலங்கையில் மிக மோசமான வறுமை நிலையில் உள்ளனர் என்பதனை எடுத்துக் காட்டுவதாக உள்ளன.

உற்பத்தி பாதிப்பு

இவ்வாறாக வறுமை நிலையில் உள்ள பெருந்தோட்ட மக்களை விலைவாசி அதிகரிப்பு மேலும் இறுக்கமடையச் செய்துள்ளது. இதேவேளை நாட்டில் மேலெழுந்துள்ள பசளைப் பிரச்சினை காரணமாக விவசாய உற்பத்தி பாதிப்படையும் கூடும் என்று கருதப்படுகின்றது. 1970  இல்  ஆட்சிபீடமேறிய சுதந்திரக்கட்சி இறக்குமதிச் செலவினைக்   கட்டுப்படுத்தி அதற்கான பதிலீட்டுப் பொருட்களை உள்ளூரில் உற்பத்தி செய்ய முடியும் என்ற நோக்கில்  செயற்பட்டது. எனினும் இந்தத் திட்டம் போதிய  முன்னாயத்தமில்லாது அறிமுகப்பட்டதன் காரணமாக சமூகப் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனைப் போன்றே சேதனப்பசளை விடயம் சிறப்பானதெனினும் முன்னாயத்தமற்ற உடனடிச் செயற்பாடுகள் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

இப்பசளை விவகாரம் தேயிலை உற்பத்தி மற்றும் தொழிலாளர் சார்ந்த விடயங்களிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது. இது பெருந்தோட்ட மக்களின் வேலை நாட்கள், வருமானம் என்பவற்றிலும் தாக்கம் விளைவிக்கவும்  வாய்ப்புள்ளது. 1995 இல் பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி 168.8 மில்லியன் கிலோ கிராமாகும். இது 2000 இல் 100.1, 2005 இல் 111.5, 2010 இல் 100.8, 2017 இல் 104 மில்லியன் கிலோ கிராமாக இருந்தது. பசளைப் பிரச்சினைகள் காரணமாக இந்த உற்பத்திப் போக்கில் வீழ்ச்சி நிலை ஏற்பட இடமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் தேயிலையின் உற்பத்தி வீழ்ச்சியானது பாதக விளைவுகளுக்கே இட்டுச் செல்வதாக அமையும்.

தேயிலையின் உற்பத்தி அதிகரித்த மற்றும் உயர்வான சந்தைவிலை கிடைத்த காலகட்டத்திலேயே தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தினை வழங்காது பஞ்சப்பாட்டு பாடிய நிறுவனங்கள் உற்பத்தி வீழ்ச்சியால் தொழிலாளர்களின் வறுமை நிலை மேலும் அதிகரிப்பதற்கே வித்திடும். இதனிடையே  இரசாயனப் பசளையினை தனியார் துறை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தற்போது அங்கீகாரமளித்துள்ள நிலையில், தனியாரின் ஆதிக்கம் காரணமாக இரசாயனப் பசளைகளின் விலைகள் மேலும் பன்மடங்கு அதிகரிக்கக்கூடுமென்றும், இது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதிக்கின்ற ஒரு நிலைமைக்கே விவசாயிகளை இட்டுச் செல்லுமென்றும் விசனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய போக்குகளால் நாட்டின் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் நிலையில் விலைவாசி அதிகரிப்பிற்கு இது மேலும் உந்துசக்தியாகுமென்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாற்று வருமானமில்லாது தேயிலைத் தொழில் ரீதியான வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் தொழிலாளர்கள், பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் நிலையில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும். இதேவேளை ஆயிரம் ரூபா சம்பள உயர்வின் பின்னரான நிலைமைகள் தோட்டங்களில் திருப்திகரமாக இல்லை. தொழிலாளர்களின் வருமானத்தில் முடக்கத்தை ஏற்படுத்தி உச்ச இலாபத்தைச் சுருட்டிக் கொள்வதே நிறுவனத்தினரின் நோக்கமாகவுள்ளது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 108 ஆவது ஜனன தினம் இன்று | Kuruviஇந்நிலையில் மலையக அரசியல்வாதிகள் குறிப்பாக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் அரசியல் சாணக்கியத்தைப் பின்பற்றி தொழிலாளர்களின் பொருளாதார அபிவிருத்தி கருதி பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வறுமை நிவாரணங்களை அரசாங்கத்தை வலியுறுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதால் மலையக மக்களின் நலன்களை  அதிகமாக உறுதிப்படுத்த முடியும் என்ற அமரர் தொண்டமானின் நிலைப்பாடு மெய்ப்பிக்கப்படுதல் வேண்டும். இதற்கு ஏனைய மலையக அரசியல்  மற்றும் தொழிற்சங்கவாதிகளும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டியதும் மிகவும் அவசியமாகும். வெறுமனே அரசுடன் ஒட்டிக் கொண்டு மௌனித்திருப்பதால் சாதக விளைவுகள் ஏற்பட மாட்டாது.

அரசாங்கம் அட்சயப் பாத்திரமாக இருந்து தமது தேவைகளை நிறைவேற்றி வைக்கும் என்ற கனவில், எதிர்பார்ப்பில் பலரும் அரசாங்கம் ஆட்சிபீடமேறுவதற்கு ஒத்துழைத்தனர். அந்த  எதிர்பார்ப்பு சகல துறைகளிலும் சகல இனத்தவருக்கும் சாத்தியமாக வேண்டும். குறிப்பாக பின்தங்கிய மக்களின் வரிசையில் மலையக மக்களுக்கு இது அதிகமாகவே சாத்தியப்பட வேண்டும் என்பது அநேகமானோரின் எதிர்பார்ப்பும்   நிதர்சனமுமாகும்..

அட்சயப் பாத்திர எதிர்பார்ப்பு மழுங்கடிக்கப்பட்டு மக்களின் கைகளில் பிச்சைப்பாத்திரம் ஏந்துவதற்கு யாரும் இடமளிக்கலாகாது. இது இடம்பெறாத விடத்து பின்விளைவுகள் மோசமானதாக அமையலாம்.