சீனாவின் இடத்துக்கு இந்தியா? பஸில் டில்லி செல்வதன் பின்னணி! – அகிலன்

சீனாவின் இடத்துக்கு இந்தியா?

அகிலன்

சீனாவின் இடத்துக்கு இந்தியா? பஸில் டில்லி செல்வதன் பின்னணி! கடந்த ஒரு தசாப்த காலமாக சீனாவுடன் நெருங்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை, தற்போது அவ்விடயத்தில் தளம்புவது தெரிகின்றது. சீனாவிலிருந்து பெறப்பட்ட சேதனப் பசளை விவகாரத்தில் பீஜிங்கின் அணுகுமுறைதான் இதற்கு உடனடிக் காரணமாக சொல்லப்பட்டாலும், மேற்குலகின் அழுத்தங்களும் இதன் பின்னணியில் இருந்துள்ளன. சீனாவுக்குப் பதிலாக இந்தியாவுடன் நெருக்கமாகச் செல்வதற்கு இலங்கை முற்படுவதாகவும் தெரிகின்றது.

சேதனப் பசளைக் கப்பல் விவகாரத்தில் சீனாவின் கடும்போக்கான அணுகுமுறை நட்பு நாடு ஒன்று நடந்துகொள்வதைப் போன்றதாக இருக்கவில்லை. பகை நாடு ஒன்றின் செயற்பாடுகளை ஒத்ததாகவே இருந்தது. கொழும்புக்கு இது ஒரு எச்சரிக்கையைக் கொடுத்திருக்கும் நிலையில்தான் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ச அவசரமாகப் புதுடில்லிக்குப் பறக்கவிருக்கின்றார். டில்லியும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காய்களை நகர்த்துகின்றது. இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொடுத்தால், சீனாவின் ஆதிக்கத்திலிருந்து அதனை மீட்க முடியும் எனப் புதுடில்லி சிந்திப்பதாகத் தெரிகின்றது.

சீனாவுடன் நெருக்கமாகச் செல்வதற்கு இலங்கை தீர்மானித்தமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது: பொருளாதார ரீதியாக பாதாளத்தில் வீழ்ந்துள்ள இலங்கைக்கு சீனாவின் நிதி உதவி தேவையாக இருந்தது. முலீடுகள் அவசியமாக இருந்தது. இரண்டாவது: ஜெனிவா போன்ற சர்வதேச அரங்குகளில் மேற்கு நாடுகளால் இலங்கைக்கு வரக்கூடிய நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பிதற்கு சீனாவை இலங்கை நம்பியது. அதேவேளையில், சீனாவின் கடன் பொறியில் சிக்கிய இலங்கைக்கு அதிலிருந்து மீள்வதற்கு வேறு வழிகளும் இருக்கவில்லை.

சீனாவின் இடத்துக்கு இந்தியா?ஜெனீவாவில் மட்டுமன்றி, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கூட ‘வீட்டோ’ உரிமையைக் கொண்ட ஒரு நாடாக சீனா இருப்பது, இலங்கைக்குப் பலத்தைக் கொடுத்தது. சர்வதேசத் தளத்தில் உருவாகக்கூடிய எந்தப் பிரச்சினையிலிருந்தும் சீனா தம்மைப் பாதுகாக்கும் என கொழும்பு முழுமையாக நம்பியதற்கு சீனாவின் இந்த ‘வீட்டோ’ பலமும் ஒரு காரணம்.  ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டுவரப்படும் சந்தர்ப்பங்களில், சீனாவும், அதன் ஆதரவு நாடுகளுமே இலங்கைக்கு ஆதரவாக நின்றுள்ளன. அதாவது, சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பலமான ஒரு நாட்டின் ஆதரவு தேவையாக இருந்தது.

இந்த இரண்டு விடயங்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்த சீனா, அதனை நன்கு பயன்படுத்தியது. இந்து சமுத்தியப் பிராந்தியத்தில் தமது கால்களை ஆழமாகப் பதிப்பதற்கு இலங்கையின் அமைவிடம் கேந்திர ரீதியில் பலமானது என்பதை சீனா உணர்ந்திருந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுக நகர், துறைமுக கிழக்கு முனையம் என கால் பதித்துள்ள சீனா, கடன் பொறிக்குள்ளும் இலங்கையைச் சிக்க வைத்திருந்தது. ஆனால், சேதனப் பசளை விவகாரத்தில் இப்போது சிக்கலை சந்தித்துள்ளது.

இரசாயன உரங்களின் இறக்குமதியை அதிரடியாகத் தடை செய்த கோட்டாபய ராஜபக்‌ச அரசு, அதற்கு மாற்றீடாக தேவையான இயற்கை உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதில் தடுமாறியது. இறுதியாக சேதனப் பசளையையும் இறக்குமதி செய்யும் முடிவை கோட்டாபய அரசாங்கம் எடுத்த போது, அதிலும் சீனாவுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Qingdao Seawin Biotech Group Co Ltd என்ற நிறுவனத்துக்கு இந்தப் பசளையைக் கொண்டுவருவதற்கான கொள்வனவு ஒப்பந்தம் இலங்கை அரசால் வழங்கப்பட்டது. உரிய முறையில் கேள்விப் பத்திரங்கள் கோரப்படாத நிலையிலேயே இது வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் உள்ளது.

சீனாவின் இடத்துக்கு இந்தியா?இதன்படி, சீனாவிலிருந்து வந்த Hippo Spirit என்ற கப்பலில் கொண்டுவரப்பட்ட பசளை ஆபத்தான பற்றீரியாக்களைக் கொண்டிருப்பதாக அது குறித்த பரிசோதனைகளில் வெளிப்பட்டது. பசளை மாதிரியை விவசாயத் திணைக்களத்தின் தாவர சோதனைப் பிரிவு நடத்திய பரிசோதனையில் அர்வீனியா எனப்படும் பாதிப்புக்குரிய பக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. கிழங்கு, வெங்காயம், கரட் போன்ற மரக்கறிகளின் விளைச்சலை பாதிக்கச் செய்யும் தன்மை இந்த பக்டீரியாவுக்கு உள்ளது. இது ஆபத்தானது என்ற அறிக்கையையடுத்து, விவசாய அமைப்புக்களும் உசாரடைந்தன.

இதனைக் கொழும்புத் துறைமுகத்துக்குள் அனுமதிக்கத் துறைமுக அதிகார சபை மறுத்தது. அரசாங்கத்தின் உத்தரவையடுத்தே துறைமுக அதிகார சபை குறிப்பிட்ட கப்பலுக்கான கதவுகளை மூடியதாகச் சொல்லப்பட்டது. இது சீனாவுக்குக் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. சீனாவுக்கு இச்சம்பவம் அதிர்ச்சியைக் கொடுத்தமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

ஒன்று: தமது பொறியில் சிக்கியுள்ள இலங்கை, என்ன சொன்னாலும் கேட்கும் என சீனா எதிர்பார்த்தது. இலங்கையின் கதவடைப்பு சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியமைக்கு இது முதலாவது காரணம்.

இரண்டாவது: குறிப்பிட்ட சீன நிறுவனம் தமது சேதனப் பசளையை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. அதன் தரம் குறித்து கேள்வி எழுப்பி, இலங்கை அதனைத் தடை செய்வது, சர்வதேச ரீதியாக அதன் நற்பெயரைப் பாதிக்கக்கூடியது. அது வர்த்தக ரீதியாகப் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். மீண்டும், தரப்பரிசோதனை செய்து குறிப்பிட்ட பொருட்களை இலங்கையில் இறக்கிவிட வேண்டும் என்பதில் சீனா தீவிரமாக இருந்தமைக்கு காரணமும் அதுதான்.

இராஜதந்திர வழிகள்

இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் இந்த இடத்தில்தான் ஆரம்பமாகின. இந்த இடத்தில் ஒரு நட்பு நாட்டுடன் நடந்துகொள்வது போல சீனா செயற்படவில்லை. குறிப்பிட்ட சீன நிறுவனத்துக்கான கொடுப்பனவைச் செலுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டிருந்த இலங்கையின் மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியில் போட்டது. பெருமளவு நட்டஈட்டையும் கோரியது. இதனைவிட, இலங்கை மீது வேறு விதமான அழுத்தங்களும் மறைமுகமாக இராஜதந்திர வழிகள் மூலமாகக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

சீனாவுடனான நெருக்கத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தியா மற்றும் மேற்கு நாடுகள் கொடுக்கும் அழுத்தங்கள் ஒருபுறம். சீனாவின் உண்மை முகம் வெளிப்பட்டிருப்பது மறுபுறம் என சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் கோட்டாபய அரசுக்கு ஏற்பட்டது. விவசாயிகளின் போராட்டம், ’சீனாவின் சேதனப் பசளை’ விவகாரத்தினால் மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தி என்பன இந்த நிர்ப்பந்தத்துக்கு மேலும் பலத்தைக் கொடுத்தது. மாற்றுவழியில் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ராஜபக்‌சக்களுக்கு ஏற்பட்டது.

இலங்கைக்குத் தற்போதுள்ள பிரதான பிரச்சினை அதளபாதாளத்தில் விழுந்துள்ள பொருளாதாரம்தான். இந்தப் பொருளாதாரத்தை நிமித்துவதற்காகப் பெற்ற கடன்கள் மூலமாகத்தான், சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கவேண்டிய அவலம் இலங்கைக்கு ஏற்பட்டது. இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு, பொறுப்புக் கூறல் போன்றவற்றைத் தமது கேந்திர நலன்களுக்காகத்தான் இந்தியாவும் மேற்கு நாடுகளும் பயன்படுத்துகின்றன என்பது ராஜபக்‌சக்களுக்குத் தெரியாததல்ல. சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை வெளியே கொண்டு வருவதற்கான துரும்புச் சீட்டாகத்தான் அவற்றை இந்த நாடுகள் பயன்படுத்துகின்றன என்பதும் இரகசியமானதல்ல.

pasil சீனாவின் இடத்துக்கு இந்தியா? பஸில் டில்லி செல்வதன் பின்னணி! - அகிலன்இந்தப் பின்னணியில்தான் பஸில் ராஜபக்‌சவை இந்தியா இப்போது அழைத்திருக்கின்றது. அமெரிக்கப் பிரஜையான பஸில், இலங்கை அரசின் போக்கைத் தீர்மானிப்பதில் பிரதானமானவர். அத்துடன் நிதி அமைச்சர். அரசாங்கத்தின் சார்பில் எந்தவொரு பொருளாதாரத் தீர்மானங்களையும் எடுக்கக்கூடிய அதிகாரத்தைக் கொண்டவர். அதற்கும் மேலாக, அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுடனான பேரம்பேசல்களிலும் முக்கிய பங்காற்றக்கூடியவர்.

பொருளாதார விவகாரங்கள் மற்றும் இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் குறித்தே பஸில் ராஜபக்‌சவின் விஜயத்தின் போது, டில்லியில் முக்கியமாகப் பேசப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தியாவின் பிரதான தொழில் அதிபர்களில் ஒருவரான அதானியும் அவரது மகனும் சில வாரங்களுக்கு முன்னர்தான் இரண்டு தனி விமானங்களில் இலங்கை வந்து முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்து சென்றிருந்தார்கள். அதானி இந்தியப் பிரதமர் மோடியுடன் நெருக்கமான ஒருவர். கொழும்புத் துறைமுக மேற்கு முனையத்தில் அவர்தான் முதலீடு செய்யப்போகின்றார். அதனைவிட மேலும் பல திட்டங்களை அவர் ஆராய்ந்து சென்றிருக்கின்றார். மன்னார் காற்று மின் உற்பத்தி நிலையத்திலும் அவர்கள் முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பு, அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் சீனா பாரிய முதலீடுகளை செய்திருக்கும் நிலையில், மன்னாரில் தமது கட்டுப்பாடு இருப்பது தமது பாதுகாப்புக்கு அவசியம் என இந்தியா கருதலாம்.

இலங்கையின் பொருளார நெருக்கடிக்குத் தீர்வாக அமையக்கூடியவை முதலீடுகள்தான். அந்த முதலீடுகளை இந்தியா பெருமளவுக்குக் கொண்டுவருமாக இருந்தால், மேலும் மேலும் சீனாவின் பக்கம் சாய வேண்டிய அவசியம் இலங்கைக்கு வராது. அதேவேளையில், சேதன பசளை விவகாரத்தில் சீனாவின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ள நிலையில், மாற்று வழி ஒன்றைத் தேட வேண்டிய தேவையும் இலங்கைக்கு உள்ளது. அமெரிக்காவுக்கு ஏற்கனவே தென்பகுதியில் மின் உற்பத்தி நிலையம் ஒன்று பெரும் சர்ச்சைகள் மத்தியில் கொடுக்கப்பட்டு விட்டது. இப்போது இந்தியாவையும் சமாளித்தால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என கொழும்பு கணக்குப் போடுகின்றது. ஒன்று பெருமளவு முதலீடுகள் மூலம் தேவையான பணம் கிடைக்கும். இரண்டு, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் போன்றவற்றுக்கான அழுத்தங்கள் குறையும்!

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad சீனாவின் இடத்துக்கு இந்தியா? பஸில் டில்லி செல்வதன் பின்னணி! - அகிலன்