வென்று காட்டிய உழவர்களின் உரிமைப் போர்-பிரபாகரன் சக்திவேல்

மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியை முற்றுகையிட்டு ஓராண்டாக உழவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி அடைந்திருக்கிறது.

வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட இருக்கின்றன. இச்சட்டம் திரும்ப பெறப்படுவது மட்டுமின்றி, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து உழவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

‘மின்சார திருத்தச்சட்ட மசோதா’வை திரும்பப் பெறுவது.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வது.

‘தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் அருகில் உள்ள பகுதிகள் சட்டம் 2021’ல் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிப்பது.

போராட்டத்தில் உயிரிழந்த உழவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது.

போராட்டக்காரர்கள் மீது இதுவரை போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் தன் மகனை விட்டு உழவர்களை கார் ஏற்றிக் கொலை செய்த, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து கைது செய்வது.

ஆகிய ஆறு கோரிக்கைகளில் முதல் மூன்று கோரிக்கைகள் உழவர்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தப்பட்டன. அவற்றை நிறைவேற்றுவதாக மத்திய அரசும் அப்போது வாக்குறுதி அளித்திருந்தது.

இந்தியாவும் விவசாயமும்

இந்திய துணைக்கண்டம் சுயதேவை விவசாய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மன்னராட்சி நாடுகளாக இருந்து வந்தது. வியாபாரத்திற்காக இங்கு வந்த ஐரோப்பியர்கள் நாளடைவில் இந்தியாவை வென்று அடிமைப்படுத்தினர். தங்களின் தொழிற்சாலைக்குத் தேவையான கச்சாப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான பின்நிலமாக இந்தியாவை மாற்றி அமைத்தனர். ரயத்துவாரி, மகல்வாரி, ஜமீன்தாரி போன்ற நில உறவுகளையும் புகுத்தினர். அப்போது முதல் இந்திய விவசாயத் துறையில் முதலாளித்துவ தலையீடு தொடங்கியது. பின்னர் 1947 ல் இந்திய அதிகார மாற்றம் அடைந்த பிறகு,  விவசாயத் துறையில் இருந்த சுயச்சார்பை அழிக்க ‘பசுமைப் புரட்சி திட்டம்’ கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் உரம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விளைபொருட்களின் கொள்முதல் உள்ளிட்ட தேவைகளுக்காக அரசையும், பன்னாட்டுக் நிறுவனங்களையும் சார்ந்திருக்க உழவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

தற்போது இந்துமதவெறியை அடிப்படையாகக் கொண்ட பாசிச பாஜக அரசானது உழவர்கள் மீதான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் இப்பிடியை மேலும் இறுகச் செய்வதற்காகவும், இந்தியத் துணைக்கண்டத்தின் உழவர்களை ஒடுக்கி சுரண்டுவதற்காகவும் 3 வேளாண் விரோத சட்டங்களை கொண்டு வந்தது.

1.அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) சட்டம்

இடைத்தரகர்களும், வியாபாரிகளும், பெரு நிறுவனங்களும்  அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து, செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை ஏற்றுகின்றனர். இதனைத் தடுப்பதற்காக முன்பு ‘அத்தியாவசிய பொருட்கள் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. இப்போது இச்சட்டம் திருத்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட இச்சட்டத்தின் படி அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களோ வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளோ பருப்பு வகைகளோ எண்ணெய் வித்துக்களோ இனி அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் வைக்கப்படாது. அதாவது இனி உணவுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எதுவும் அத்தியாவசிய பொருட்களே இல்லை என இச்சட்டம் கூறுகிறது.

விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்த சட்டம்

இச்சட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயம் தொடர்பாக சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டங்களை செயலிழக்கச் செய்யுமாறு அமைந்தது. உதாரணமாக ‘தமிழ்நாடு விளை பொருட்கள் விற்பனைச் சட்டம் 1987’ போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டங்கள் செயல்படாமல் ஆக்கப்படும். மாநில அரசுகளால் கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள், உழவர் சந்தைகள்,  சேமிப்புக் கிடங்குகள் இனி படிப்படியாக மூடப்படும்.

விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் சட்டம்

இச்சட்டம் உழவர்களும் பெரு நிறுவனங்களும் ஒரு பொருளை விளை விற்பதற்கான ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் சட்டமாகும். சமமற்ற இவர்கள் செய்துகொள்ளும் இந்த ஒப்பந்தத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு நீதிமன்றத்திற்கு சென்று தீர்வு காண முடியாது. இச்சட்டம் உழவர்களை அவர்களது நிலத்திலேயே அடிமையாக்கும், உழவர்களிடம் இருந்து நிலத்தை பிடுங்கி முதலாளித்துவ பெரும் பண்ணைகளை உருவாக்குவதற்கான சட்டமாகும்.

மேற்கண்ட மூன்று சட்டங்களும் உழவர்களின் உரிமையையும், விவசாயத் துறையின் மீது தேசிய இன அரசுகளுக்கு இருந்த உரிமையும் பறித்தது. பொது விநியோகத் திட்டத்தை அழித்து, ஒட்டுமொத்த உணவு மற்றும் கச்சாப் பொருட்கள் உற்பத்தி யையும் விநியோகத்தையும் பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு பங்கு போட்டு அளிக்க தயாரானது.

இதைப் புரிந்து கொண்ட உழவர்கள் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட போது தங்களது போராட்டத்தை தொடங்கினர். பஞ்சாப், ஹரியானா, பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உழவர்கள் உழவு இயந்திரப் பேரணிகள் மற்றும் சாலை மறியல்கள் மூலமாக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். உழவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் கடந்து சட்டம் நிறைவேற்றப் பட்டதானது, உழவர்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. எனவே மத்திய அரசின் அலுவலகங்களையும் ரயில் பாதைகளையும் உழவர்கள் முற்றுகையிட்டனர்.  அப்போதும் இச்சட்டங்கள் திரும்ப பெறப்படுவதற்கான அறிகுறிகள் தென்படாததால் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த உழவர்கள் டெல்லியை நோக்கிப் புறப்பட்டனர்.

அவர்கள் டெல்லியின் எல்லையிலேயே துணை ராணுவப் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.  எல்லைப் பகுதிகளான முக்கிய நெடுஞ் சாலைகளை முற்றுகையிட்ட உழவர்கள் பொதுக்கூட்ட மேடைகள் மற்றும் கூடாரங்களை சாலைகளிலேயே அமைத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதுவரை துணை ராணுவப் படையினரால் தாக்கப்பட்டும், குளிராலும் 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். ஆனால் பாஜக அரசு இவர்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் என பிரச்சாரம், போராட்ட பகுதிகளில் அருகில் வசிக்கும் மக்களை போராட்டக்காரர்களுக்கு எதிராக திசை திருப்ப சதி செய்தது. இவற்றையெல்லாம்   தங்களது ஒற்றுமையின் மூலம் உழவர்கள் வெற்றிகரமாக  முறியடித்தனர். இன்று இச்சட்டத்தை திரும்பப் பெறவும் வைத்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த விவசாயிகளையும் ஒடுக்கி சுரண்டவே சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. என்றாலும், பஞ்சாப், ஹரியானா, பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே இப்போராட்டத்தில் அதிகம் ஈடுபட்டனர். அதிலும் பஞ்சாப் விவசாயிகளே இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய 35 சங்கங்களின் 32 சங்கங்கள் பஞ்சாப்பை சேர்ந்தவையாகும்.

பஞ்சாப் உழவர்கள் உறுதியாக போராடியதற்கும் தமிழர்கள் உள்ளிட்ட சில மாநில உழவர்கள் போராடாமல் போராடாமல் இருந்ததற்கும் காரணங்கள் உண்டு.

1.பஞ்சாப் என்ற சொல்லுக்கு ஐந்து நதிகளின் தேசம் என்று பொருள். பஞ்சாப் பெரும்பாலும் ஆற்று நீர் பாசனத்தை அடிப்படையாகக் கொண்ட செழுமையான பகுதியாகும். இந்தியாவின் மற்ற பகுதிகள் அவ்வளவு நீர் வளம் கொண்டவை அல்ல.

2.பஞ்சாப் விவசாய உற்பத்தியை பிரதானமாகக் கொண்டது. தொழில்துறை வளர்ச்சி பெருமளவில் இல்லை. அதனால்தான் அப்பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக  இராணுவத்திற்கும், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் தமிழ்நாடு தொழில்துறை உற்பத்தியில் வளர்ந்த பகுதியாகும். இங்கு  விவசாயம் இரண்டாம் பட்சமானதகவே இருக்கிறது.

3.பஞ்சாபில் உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை மாநில அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்யப்படுகின்றன. இவை ஹரியானாவில் இந்த சதவீதத்திற்கும் சற்று குறைவு உத்திர பிரதேசத்தில் இன்னும் சற்று குறைவு. ஆனால் தமிழ்நாட்டில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்திய துணைக்கண்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை பயன்படுத்துவதில் பஞ்சாப் விவசாயிகளே முதன்மையானவர்களாக உள்ளனர்.

4.பஞ்சாபில் அதிக அளவில் விவசாய உற்பத்தி கருவிகள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. பிற மாநிலங்களைப் போல ஏர் பூட்டி உழவு செய்யும் அவசியம் இங்கில்லை. விவசாய உற்பத்தி கருவிகளை அதிகம் நுகர்வு செய்யும் பகுதியாகவும் பஞ்சாப் உள்ளது.

5.ஒப்பந்த விவசாயத்தை அதிகம் செய்யும் ஒரு மாநிலமாக பஞ்சாப் உள்ளது. மற்ற மாநில உழவர்களுக்கு ஒப்பந்த விவசாயம் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லை.

6.பல்வேறு தேசிய இனங்களின் சிறைக் கூடமான இந்தியாவில் விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை ஆகியவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு சட்டங்கள் மூலமாக வெவ்வேறு வகையிலான வளர்ச்சிகளை அடைந்துள்ளன.

7.’தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் அருகில் உள்ள பகுதிகள் சட்டம்’ ஆகியவற்றின் மூலமாக ஹரியானாவிலும்  பஞ்சாபிலும் “விவசாயிகள் தங்கள் நிலத்தில் வைக்கோலை எரித்தால் கூட, டெல்லியில் காற்று மாசுபடுகிறது” என்று கூறி  அபராதங்கள் விதித்ததும் விவசாயிகளை ஆத்திரமூட்டும் விஷயங்களாக இருந்தன.

8.பஞ்சாப் விவசாயிகள் இதுவரை தங்களது மாநில அரசை எதிர்த்த தொடர் போராட்டங்களின் விளைவாக தங்களை ஒரு வர்க்கமாக அணி திரட்டி அமைப்பாக்கிக் கொண்டனர். அமைப்பாக்கப்பட்ட போராட்டங்கள் வழியாகவே அவர்கள் விவசாய விளை பொருட்களின் கொள்முதல், கூட்டுறவு கடன்கள், குறைந்த பட்ச ஆதார விலை ஆகியவற்றை சாதித்துக் கொண்டனர். தற்போது பஞ்சாப் மாநிலம் காங்கிரசால் ஆளப்பட்டதும், காங்கிரஸ் கட்சி இச்சட்டங்களுக்கு எதிராக முழுமையான ஆதரவு வழங்கியதும் பஞ்சாப் விவசாயிகளுக்கு கூடுதல் பலத்தை சேர்த்தன.

மேற்கண்டவையே பஞ்சாப் விவசாயிகள் போராடுவதற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த உழவர்கள் வேடிக்கை பார்ப்பதற்கும் முக்கிய காரணங்களாகும்.

பாசிசத்தின் தொடர் தோல்விகள்:

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பாஜக  ஆதரவளித்த டிரம்ப் தோல்வி அடைந்ததும், ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தக்க வைப்பதில் குவாட் முகாமின் தோல்வியும் சீன ரஷ்ய முகாமின் வெற்றியும் சர்வதேச அளவில் பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன.

இந்திய இராணுவத்தில் பெருமளவில் நிறைந்திருக்கும் பஞ்சாப் இராணுவ வீரர்களிடையே இப்போராட்டத்திற்கு ஆதரவு குரல்கள் தொடக்கத்திலிருந்து எழுவதும் லகிம்பூர் கெரி சம்பவத்திற்குப் பிறகு அவரை அதிகமாக இருப்பதும் இராணுவத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் மாநில சட்டமன்றங்களை கைப்பற்ற முடியாமல் போனதும், இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட மோசமான தோல்விகளும் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் விரைவில் வர இருப்பதும், அதன் பிறகு குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடக்க இருப்பதும் பாசிச பாஜக அரசை பின் வாங்க வைத்துள்ளன. வேறு வழியில்லாத காரணத்தால் மோடி அரசு மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக ஒப்புக்கொண்டுள்ளது.

விவசாயிகள் உறுதியான போராட்டத்தின் மூலமாக அவர்களுக்கான உரிமையை மட்டுமின்றி இந்திய துணைக்கண்டத்தின் அனைத்து மக்களுக்குமான உணவுப் பாதுகாப்புக்கான உரிமையையும் போராடி பெற்றுத் தந்துள்ளனர்.

இந்திய துணைக் கண்டத்தின் உழவர் புரட்சி நிலப் பிரபுத்துவத்தை மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்தையும் எதிர்க்க வேண்டிய இந்த சூழலில், இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் உழவர்களும் வீரம் செறிந்த இப்போராட்டத்தின் அனுபவத்தையும், உறுதித் தன்மையையும் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு போராட முன்வர வேண்டும்