மௌனித்துப் போயுள்ள மலையக அரசியல் – துரைசாமி நடராஜா

மலையக அரசியல் களம்

இலங்கையில், மலையக அரசியல் களம் இப்போது மௌனித்திருக்கின்றது. இம்மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் அரங்கேறுகின்றபோதும், அதனை தட்டிக் கேட்க திராணியற்ற நிலையில் சமகால மலையக அரசியலின் செல்நெறிகள் காணப்படுகின்றன. இந்நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் மலையக மக்களின் இருப்பு மற்றும் அடையாளம் என்பன கேள்விக்குறியாவதுடன், ஒரு திராணியற்ற சமூகமாக இச்சமூகம் மேலெழும்பும் அபாய நிலையே காணப்படுகின்றது.

சமூக அபிவிருத்தியில் அரசியல் பிரதிநிதித்துவத்தின் வகிபாகம் என்பது மிகவும் அவசியமாகும். அர்த்தமுள்ள அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஆதிக்க நிலை காரணமாக பல பின்தங்கிய சமூகங்கள் மேல் நிலையை எட்டிப் பிடித்துள்ளன. இதேவேளை அரசியல் ஆதிக்க நிலை மழுங்கடிக்கப்படும் நிலையில் அச்சமூகம் பல்வேறு சவால்களையும் சந்திக்க வேண்டிய நிலை மேலெழும்பும் என்பதனை மறுப்பதற்கில்லை. இந்த வகையில் மலையக அரசியல் நிலவரம் குறித்து நோக்குகையில், ஒரு காலத்தில் மலையக அரசியல், ஆட்சியில் அமரப்போகும் அரசினை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது. மலையகக் கட்சிகள் அதிகமாக இல்லாத நிலையில், மக்களின் பலம் அதிகமாகக் காணப்பட்டது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்மக்கள் ஒரு கட்டுக்கோப்புடன் இயங்கிய நிலையில், இந்த கட்டுக்கோப்பினையும், ஒற்றுமையையும் மையப்படுத்தி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் உரிமைகளையும் சலுகைகளையும் மலையக மக்களின் நலன்கருதி பெற்றுக் கொடுத்தார். அத்தோடு மலையகம்  மேலும் பல அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்ள உந்துசக்தியாக இருந்தார். எனினும் இந்த நிலைமையில் இப்போது தொய்வு ஏற்பட்டிருக்கின்றது.

ஐக்கியமற்ற செயற்பாடுகள்

மலையகக் கட்சிகளின் அதிகரித்த நிலை, மக்களை பிரித்தாளும் நிலைமைகள், இனவாத மேலெழும்புகை போன்ற காரணிகள் பலவும் இன்று ஒரு விரிசல் நிலையினை மலையகத்தில் ஏற்படுத்தி இருக்கின்றன. மலையகக் கட்சிகளின் பேரம்பேசும் நிலை இப்போது மழுங்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இனவாதக் கட்சிகளும் இதற்கு காரணமாகி இருக்கின்றன. அத்தோடு மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகளிடையே காணப்படுகின்ற முரண்பாடுகள், புரிந்துணர்வின்மை, விட்டுக் கொடுப்பின்மை எனப் பலவும் தேசிய அரங்கில் மலையகக் கட்சிகளை செல்லாக்காசாக்கி இருக்கின்றன. பொது மேடைகளில் மலையகக் கட்சிகள் ஒன்றின் மீது மற்றொன்று சேறு பூசிக் கொள்கின்றன.

இது நமக்கு நாமே தலையில் மண்ணைவாரிப் போட்டுக் கொள்ளும் ஒரு நிலைமையைப் போன்றதாகும். இத்தகைய நிலைமைகள் அசிங்கத்தை அரங்கேற்றுவதாக உள்ளதுடன் மூன்றாவது சக்திக்கும் இது வாய்ப்பாகி விடுகின்றது. இந்நிலையில் மூன்றாவது சக்தியினர் மலையக மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்து செயற்படுகின்றனர். உரிமைகளை மறுக்கின்றனர். சமகாலத்தில் பொதுஜன பெரமுன அரசு ஆட்சியில் உள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசுடன் இணைந்து செயற்படுகின்றது.

கடந்த நல்லாட்சி காலத்தில் அரசுடன் இணைந்து செயற்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போது எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சகதியுடன் கை கோர்த்துள்ளது. தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி என்ற மூன்று கட்சிகளின் கூட்டே தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பதும் நீங்கள் அறிந்த விடயமாகும். அதாவது பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பி.திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டணியின் பிரதானிகளாக விளங்குகின்றனர். தமிழ் முற்போக்கு கூட்டணி நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து மலையக மக்களின் உரிமை சார்ந்த விடயங்கள் சிலவற்றை பெற்றுக் கொடுத்திருந்தது என்பதும் பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்.

மலையக அரசியல் களம்

இந்நிலையில் மலையகக் கட்சிகளின் சமகால போக்கினை நோக்குகையில்,  ஒரு வீரியமில்லாத போக்கினையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மலையகக் கட்சிகளின் கோசங்கள் மற்றும் கோரிக்கைகள் என்பன முடங்கிப் போயுள்ள நிலையில், ஒரு மௌனித்த போக்கில் மலையகக் கட்சிகள் இயங்கி வருகின்றன. ஆறுமுகன் தொண்டமானின் இறப்பினைத் தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செல்வாக்கிழந்த நிலையில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இளவயதினர் என்ற ரீதியில் அரசியலில் இன்னும் பல்வேறு அனுபவங்களையும் அவர் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலேயே காணப்படுகின்றார். ஆறுமுகனின் திடீர் மறைவே ஜீவன் தொண்டமானை அரசியலில் நுழைத்திருக்கின்றது. இந்நிலையில் அவரின் அரசியல் ஆதிக்கம் வலுப்பெற இன்னும் சிலகாலம் பொறுத்திருக்க வேண்டியுள்ளது.

மலையக மக்கள் எதிர்நோக்கும் சவால்கள்

மலையக மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படாத நிலையிலேயே இம்மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பெருந்தோட்ட நிலங்களை பல்வேறு தேவைகளுக்காக சுவீகரிக்கும் நடவடிக்கைகள் இப்போது முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. அபிவிருத்தி என்னும் போர்வையில் பெருந்தோட்ட தேயிலை விளை நிலங்கள் சுவீகரிக்கப்படும் நிலை மலையகத்தில் இன்று நேற்று ஆரம்பமானதல்ல.

இது தொடர்ச்சியான  நடவடிக்கையின் ஒரு பகுதியேயாகும். இதனால் தேயிலை விளை நிலங்களின் பரப்பு மலையகத்தில் படிப்படியாக குறைவடைந்து வருகின்ற நிலையில், தொழிலாளர்களின் இருப்பும் கேள்விக்குறியாகி வருகின்றது. இந்நிலை தொடருமிடத்து மலையக சமூகம் பெரும் சறுக்கல் நிலையினை சந்திக்க வேண்டியேற்படும் என்று புத்திஜீவிகள் விசனம்  தெரிவித்து வருகின்றனர்.

இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன 1948ஆம் ஆண்டு பறிக்கப்பட்டதன் வடுக்கள் இன்னும் மாறவில்லை. இதனால் ஏனைய சமூகங்களுக்கும் மலையக சமூகத்திற்கும் இடையிலான விரிசல் நிலை அதிகமாக இருந்து வருகின்றது. இவ்விரிசல் நிலையை குறைப்பதற்கான விசேட உதவிகளை யாரும் பெற்றுக் கொடுப்பதாக இல்லை.

நிலைமை இவ்வாறாக தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், மலையக மக்களின் சகலதுறை சார்ந்த அபிவிருத்தி கருதி அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டிய ஒரு நிலை காணப்படுகின்றது. எனினும் இது எந்தளவுக்கு சாத்தியமாகி இருக்கின்றது என்பது குறித்து நோக்குகையில் திருப்தியான வெளிப்பாடுகள் இல்லாதுள்ளது. அவ்வப்போது யானைப் பசிக்கு சோளப் பொறியைப் போன்று. ஒருசில நன்மைகள் கிடைக்கின்ற போதும் அது போதுமானதாகவோ அன்றேல் முழுமையானதாகவோ இல்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும்.

சமகால கொரோனா சூழ்நிலைக்கு மத்தியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எவ்விதமான உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். கிராமப்புற மக்களுக்கு கிடைக்கின்ற நன்மைகள் இம்மக்களுக்குக் கிடைப்பதில்லை. கொரோனா பேரிடரின் காரணமாக கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் தொழில் புரிந்த இளைஞர் யுவதிகள் தற்போது தொழிலின்றி பெற்றோரில் தங்கி வாழுகின்றனர். இதனால் பெற்றோர்களின் பொருளாதாரச் சுமை அதிகரித்துக் காணப்படுகின்றது. எனினும் அதற்கேற்ற வருமானமோ அல்லது வேறு சில உதவிகளோ மலையக மக்களுக்கு உரியவாறு கிடைப்பதாக இல்லை.

போயுள்ள மலையக அரசியல்2 மௌனித்துப் போயுள்ள மலையக அரசியல் - துரைசாமி நடராஜாமலையக மக்களின் தேவைகளும் பிரச்சினைகளும் இவ்வாறாக நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் இவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதில் மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் எந்தளவுக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருகின்றார்கள் என்பதில் திருப்தியற்ற வெளிப்பாடுகளையே பலரும் கொண்டுள்ளதனை அறியக் கூடியதாக உள்ளது. ஊடகங்களில் மட்டுமே உயிர் வாழ நினைக்கும் சில அரசியல்வாதிகள் மலையக மக்களின் பிரச்சனைகளைுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதாக இல்லை. சாண் ஏறினால் முழம் சறுக்கும் நிலைமையில் மலையக மக்களின் போக்குகள் அமைந்திருக்கின்றன.

இதனை மாறாறியமைக்க வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. மலையக அரசியல் தொழிற்சங்கங்கவாதிகள் அர்ப்பணிப்புடனும் இதய சுத்தியுடனும்  செயற்பட்டு மலையகத்தினதும், மலையக மக்களினதும் தலையெழுத்தை நல்லபடியாக மாற்றியமைக்க முற்பட வேண்டும். இதைவிடுத்து சுயநலவாத செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி குழம்பிய  குட்டையில் யாரும் மீன்பிடிக்க முற்படுதல் கூடாது. அவ்வாறு செய்வார்களானால், அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிக்க வேண்டியே நேரிடும் என்பதனை மறந்துவிடலாகாது.

கல்வி மையச் சமூகம்

மலையக சமூகம் தற்போது கல்வி மையச் சமூகமாக உருவெடுத்து வருகின்றது. அறிவுப் புரட்சியை ஏற்படுத்துவதன் மூலமாகவே சமூக மாற்றத்தையும், சமூக அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியும் என்பதனை மலையக சமூகம் நன்றாக விளங்கிக் கொண்டு கல்வி மேலெழும்புகைக்கு வலுசேர்த்து வருகின்றது. இன்றைய இளைஞர்களிடையே  கல்வி குறித்த சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் அதிகமாகவே காணமுடிகின்றது. இந்நிலையில் மலையக அரசியல்வாதிகள் ஆழமாக தூர நோக்குடன் சிந்தித்து இம்மக்களுக்கு வழிகாட்டுபவர்களாக இருக்க வேண்டும். தம்முடைய எழுச்சிக்கு உண்மையாகவே அரசியல்வாதிகள் தோள் கொடுக்கின்றார்கள் என்ற சிந்தனையை மலையக மக்களின் மனதில் ஏற்படுத்துவதோடு அதற்குரிய செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

அதைவிடுத்து மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் மலையக மக்களை ஏமாற்றும் நோக்கில் செயற்படுவார்களானால், இறுதியில் மலையக அரசியல்வாதிகளே ஏமாந்து போவார்கள் என்பதனை மறந்து விடுதல் கூடாது. கல்வி கற்ற சமூகத்தின் எழுச்சி அரசியல்வாதிகளின் பிழையான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, அரசியலில் இருந்தும் அவர்களை ஓரம் கட்டி விடும் என்பதனை ஒவ்வொருவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். மேலும் திராணியுடனும் சமூகப் பற்றுடனும் குரல் கொடுத்து சமூக மேம்பாட்டுக்கு வித்திடுவதற்கு அனைவரும் உறுதி பூணவும் வேண்டும்.