தியாகங்கள் என்றைக்கும் உண்மை வரலாறாகப் போற்றப்பட வேண்டியவை – துவாரகா

608 Views

திலீபன் அண்ணா தொடர்பான நினைவு
திலீபன் அண்ணா தொடர்பான நினைவு

திலீபன் அண்ணா தொடர்பான நினைவுதியாகி திலீபனின் 34வது நிறைவாண்டையொட்டி அவர் வழிநடத்திய சுதந்திரப் பறவைகள் அமைப்பில் பணியாற்றிய ஒரு போராளி திலீபன் அண்ணா தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்

“அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு” என்று எண்ணிய நமது சமுதாயத்தின் சிந்தனைச் சங்கிலியை உடைத்து நாங்கள் வெளியில்வர திலீபன் அண்ணாவின் வார்த்தைகள் உந்துசக்தியாக இருந்தன. கூண்டுக்குள் சமுதாயம் முடக்கி வைத்திருந்த பெண்களைச் சிறகடித்துப் பறக்க வைத்த அமைப்பாக ‘சுதந்திரப் பறவைகள்’ என்ற அமைப்பை நிறுவ திலீபன் அண்ணா காரணமாக இருந்தார்.

இந்தப் பெண்கள் அமைப்பைச் சரியான பாதையில் நடத்திச் செல்லத் திலீபன் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். நான் அவருடன் பழகிய காலங்களில்   ஒருவரின் வார்த்தைகளுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை இருக்கின்றது என்பதை, நான் அவரிடம் கண்டிருந்தேன். எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும். அதுபோலத் திலீபன் அண்ணா தனது வாழ்நாளையே விடுதலைக்காக அர்ப்பணித்து, அயராது தன்னை வருத்தி உழைத்த ஒரு போராளி.

திலீபன் அண்ணா தொடர்பான நினைவு

நாங்கள் பள்ளியில் பயிலும் காலங்களில் சுதந்திரப்பறவை அமைப்பில் இயங்கிக் கொண்டிருந்தோம். 1984ஆம் ஆண்டு காலகட்டத்தில் முதலுதவி வழங்கும் பயிற்சி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் எமக்கு அளிக்கப்பட்டு வந்தது. அப்போது நாங்கள் தான் எல்லையில் முதலுதவி வழங்கிக் கொண்டிருந்தோம். அப்போது தான் நான் அந்த மனிதரைச் சந்தித்தேன். மிகவும் எளிமையான  தோற்றத்துடன் அங்கு வந்து போவார். 85, 86 காலப்பகுதியில் திலீபன் அண்ணாவின் பேச்சுக்களைக் கேட்டு நான் என்னை போராளியாக இரண்டாவது பயிற்சி முகாமில் இணைத்துக் கொள்கிறேன். திலீபன் அண்ணாவின் புன்னகையும், அவரது மென்மையான குணமுமே அவரை எப்போதும் தனித்துவமாக அடையாளம் காட்டியது. சிரித்துக் கொண்டிருக்கின்ற அவரது கண்களும் இன்றும் என் நினைவுகளில் மாறாது இருக்கின்றது.

நாங்கள் பயிற்சிக்குத் தயாராக இருக்கும் பொழுது, திலீபன் அண்ணா என்னை அழைக்கிறார் என்று ஒருவர் வந்து என்னை அழைத்துச் செல்ல, மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றேன். அது தான் நான் அவருடன் நேருக்குநேர் கதைத்த முதல் அனுபவம். இன்னொரு பெண் போராளிக்காக என்னை அடுத்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுக்கிறீர்களா எனக் கேட்டார். சற்று யோசித்தேன். பின்னர் சரி என்றேன். வாங்கோ தங்கைச்சி என்று அவர் என்னை அழைத்தது இன்றும் என் காதுகளில் ஒலிக்கின்றது. அவர் எப்போது என்னைச் சந்தித்தாலும், பெயர் சொல்லாது, தங்கைச்சி என்றே அழைத்ததை நினைக்கையில், இன்னும் எனது கண்கள் கலங்கும். என்னைப் படிக்கச் சொன்னார். நான் வீட்டை விட்டு வந்ததால், திரும்பிச் செல்ல விருப்பம் இல்லை என்றேன். கோண்டாவிலில் அமைந்திருந்த சுதந்திரப்பறவைகள் தலைமைச் செயலகத்தில் நிதிப் பொறுப்பை எனக்குத் தந்தார். அன்றிலிருந்து நான் அவரைத் தினமும் சந்திக்க நேர்ந்தது. எனக்கு ஒரு ஆசானாக அவர் நிறையக் கற்றுக் கொடுத்தார்.

திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதச் செய்தி எங்களைக் கலங்க வைத்தது. இருப்பினும் நாங்கள் ஊர் ஊராய்ச் சென்று மக்களைச் சந்தித்து, உண்ணாவிரதத்தின் நோக்கத்தை விளங்க வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். நாங்கள் திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதத்தின் இரண்டாவது நாள் கனத்த மனங்களுடன் அவரைச் சந்திக்கச் சென்றது இன்றும் நல்ல நினைவு இருக்கின்றது. நாங்கள் அனைவரும் சிவப்புநிறச் சேலை கட்டிச் சென்றிருந்தோம். எங்களைக் கண்டதும் திலீபன் அண்ணா மேடையை விட்டு இறங்கி எங்களிடம் வந்தார். வாடாத புன்னகையோடு அவர் சொன்ன முதல் விடயம், என்னுடைய பிள்ளைகள் சின்னப் பிள்ளைகள் என்று நினைச்சன். ஆனால் என்னுடைய பிள்ளைகள் எல்லாரும் பெரிய பொம்பிளைகளாய் இருக்கினம் என்று சொல்லிச் சிரித்தார்.

திலீபன் அண்ணாபின்னர் மூன்றாவது, நாலாவது நாட்களில் நாங்கள் அவரை மேடையில் சென்று கதைக்க நேரிட்டது. அதுதான் நான் அவருடன் இறுதியாகக் கதைத்தது. அவர் சொன்ன வார்த்தைகள் “அண்ணா நினைவிழந்து தண்ணீர் கேட்டாலும் தராதையுங்கோ. யோசிக்காதையுங்கோ. அண்ணா போனால் நீங்களும் வருவீங்கள் தானே” என்று புன்னகைத்தார்.

அண்ணா நினைவிழந்து தண்ணீர் கேட்டாலும் தராதையுங்கோ. யோசிக்காதையுங்கோ. அண்ணா போனால் நீங்களும் வருவீங்கள் தானே

ஒருநாள் நாங்கள் கைதடியில் பணியில் இருந்த போது, அவரின் வீரச்சாவுச் செய்தி எங்களின் காதுகளை எட்டியது. அவரின் வீரச்சாவில் கலந்து கொண்டோம். இறுதியாக  சுதுமலையில் வைத்து அவரின் உடல் யாழ். மருத்துவக் கல்லூரிக்காக ஒப்படைக்கப்பட்டது. அவருடனான நினைவுகளைக் காட்டிலும் என்னைத் தங்கைச்சி என அழைப்பதையும், அவரது புன்னகையையும் இன்றும் மறக்க முடியாதுள்ளது.

எங்களை எவரிடமும் விட்டுக் கொடுக்காத மனிதர் அவர். நம்பிக்கையோடு என்னைத் தேர்ந்தெடுத்ததே பிற்காலங்களில் என்னை ஒரு தளபதியாக அடையாளப்படுத்தியது என்பது எனக்குப் பெருமையையும், மகிழ்ச்சியையும் தந்தது.

அகிம்சையை நம்பி அவர் தன்னை வருத்தினார் என்பதைக் காட்டிலும், தனது மக்களுக்கு உணர்வூட்ட வேண்டும் என்பதற்காக அவர் தன்னை ஆகுதியாக்கினார் என்பதே சரியானதாகும்.

திலீபன் அண்ணாதனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் தலையீடுகளைச் செய்து நிர்ணயப்படுத்திய தலைமையின் கீழ் நாம் வாழவில்லை. தவறுகளில் மட்டுமே அவர்கள் தலையிட்டுக் கண்டிப்பார்கள். இப்படியிருக்க, இந்த உலகம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதப் போராட்டம் அவராலேயே தெரிவு செய்யப்பட்டது. தலைவரிடம் மிகவும் விரும்பி வேண்டி நின்று, அவரால் எடுக்கப்பட்ட ஒரு முடிவு. அவர் தலைவரிடம் உண்ணாவிரதத்தை எந்தச் சந்தர்ப்பத்திலும் இடைநிறுத்தக் கூடாது என்று சத்தியம்கூடப் பெற்றிருந்தார். எங்களிடமும் அவர் அதை அழுத்திக் கூறியிருந்தார். அப்படியிருக்க, இது ஒரு திட்டமிட்ட முடிவு என்று யாரும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. தியாகங்கள் என்றைக்கும் உண்மை வரலாறாகப் போற்றப்பட வேண்டியவை. திலீபன் அண்ணாவின் தியாகமும் அவ்வாறே போற்றப்பட வேண்டியதாக உள்ளது.

Leave a Reply