இலங்கையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: ஜெய்சங்கர்

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த ஆண்டில் இதுவரை 119 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களது 17 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 2025-ல் 526 பேரும், 2024-ல் 317 பேரும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு இந்திய அரசு மிக உயர்ந்த முன்னுரிமை அளிப்பதாகக் கூறிய டாக்டர் ஜெய்சங்கர், மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைவாக விடுவித்து தாயகம் திரும்பச் செய்வது உள்ளிட்ட விவகாரங்களை இலங்கை அரசிடம் இருதரப்பு வழிமுறைகள், தூதரக ரீதியான தொடர்புகள் மற்றும் பல்வேறு அதிகாரப்பூர்வ, உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

“எங்களது அனைத்து பேச்சுவார்த்தைகளிலும், இந்த விவகாரத்தை மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதார அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் தொடர்பான அனைத்து விவகாரங்களும், தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ள ‘மீன்பிடித் துறைக்கான கூட்டுப் பணிக்குழு’ (JWG) போன்ற இருதரப்பு நிறுவன வழிமுறைகள் மூலமாகவும் கையாளப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் துணைத் தூதரக அதிகாரிகள், இந்திய மீனவர்களின் நிலைமையை அறியவும், அவர்களின் நலனை உறுதி செய்யவும், தேவையான ஆதரவு மற்றும் சட்ட உதவிகளை வழங்கவும், அவர்களை விரைவாக விடுவித்து தாயகம் திரும்ப உதவவும் உள்ளூர் சிறைகள் மற்றும் தடுப்பு மையங்களுக்குத் தொடர்ந்து நேரில் சென்று வருவதாகவும் டாக்டர் ஜெய்சங்கர் தெரிவித்தார.