தமிழக மீனவர்கள் மீது சமீப காலமாக நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் கடலோர பகுதியில் இருந்து நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனது.
இவர்கள் வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக 20-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் படகில் ரோந்து பணியில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது, மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
இதன் காரணமாக 50-க்கும் மேற்பட்ட படகுகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. ஒரு இலட்சம் வரை மீன்பிடி வலைகள் மற்றும் சாதனங்கள் சேதமடைந்ததாகவும், இதனால் பல இலட்ச ரூபாய் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.