மேற்குலகின் அழுத்தம் தணிகின்றதா? அகிலன்

மேற்குலகைத் திருப்திப்படுத்தும் பேரங்கள்
அகிலன்

பொறுப்புக் கூறல் விவகாரத்தில் அரசாங்கம் எதனையும் செய்யப்போவதில்லை என்பதைத்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நியூயோர்க்கில் வெளியிட்ட அறிவிப்புக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. ஜெனிவாவில் உருவாகியிருந்த அழுத்தங்களைத் தணிப்பதற்கான சில உபாயங்களை ஜனாதிபதி பயன்படுத்தியிருக்கின்றார். மேற்குலகைத் திருப்திப்படுத்தும் பேரங்கள் சிலவற்றை – அதாவது சில பேரங்களை முடிவுறுத்தியிருப்பதும், அழுத்தங்கள் குறைவடைவதற்குக் காரணமாக இருக்கலாம். அந்தப் பேரங்கள் என்ன என்பதை இறுதியாகப் பார்ப்போம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரை, அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் செல்வது இதுதான் முதல்முறை. அத்துடன், ஐ.நா. பொதுச் சபையில் அவர் உரையாற்றுவதும் இதுதான் முதல்தடவை. ஆனால், இவற்றால் மட்டும் அவரது விஜயம் முக்கியத்துவம் பெறவில்லை. போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு அழுத்தங்கள் ஜெனிவாவில் உருவாகியிருந்தது. முன்னர் ஒருபோதும் இல்லாதளவுக்கு பொருளாதார நெருக்கடி ஒன்றுக்கு இலங்கை முகங்கொடுக்கின்றது. இவற்றைவிட எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான போராட்டங்கள். இவை குறித்து எவ்வாறான பிரதிபலிப்பை நியூயோர்க்கில் ஜனாதிபதி வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்புத்தான் அவரது விஜயத்தின் முக்கியத்துவததை அதிகரித்திருந்தது.

நியூயோர்க்கில் ஜனாதிபதிக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸுக்கும் இடையிலான சந்திப்பில் பல கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்தன. குறிப்பாக ஜெனிவாவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நியூயோர்க்கில் ஜனாதிபதி பதிலளித்தார். நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகத்தில், இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் முக்கியமான விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. பொருளாதாரப் பிரச்சினை, கோவிட் தடுப்பு, எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் என்பவற்றுக்கு அப்பால், ஜெனிவாவில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு ஜனாதிபதி இங்கு பதிலளித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷகாணாமற்போனோர் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாகவும், அவர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும், பொதுச் செயலாளரிளிடம், ஜனாதிபதி தெரிவித்தார். தமிழர் தரப்பில் இது பெருமளவு உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பலர் அவர்களுடைய உறவுகளால், படையினரிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டவர்கள். அல்லது சரணடைந்தவர்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்குத்தான் பொறுப்புக் கூறப்பட வேண்டும் எனக் கோரப்படுகின்றது. இவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்படும் எனக் கூறுவதன் மூலம், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியும் என்ற அர்த்தத்திலேயே ஜனாதிபதி கருத்துவெளியிட்டிருந்தார். அப்படியானால், அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதைத்தான் ஜனாதிபதி சொல்கின்றாரா?

இரண்டாவதாக, பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்களில் பலரை, விடுவித்துள்ளதாக கூறிய ஜனாதிபதி, அவ்வாறு விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும், நீண்ட காலமாகத் தடுப்பிலுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்டச் செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர், நீண்ட காலம் தடுப்பில் இருந்ததைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அவர்களை விடுவிப்பதற்குத் தான் தயங்கப் போவதில்லை என்றார். விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தண்டனைக்காலம் முடிந்துதான் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். தற்போதும் தடுப்புக்காவலில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அல்லது வழக்கை முன்னெடுக்காமல் காலம் தாழ்த்தப்படுகின்றது. காரணம், அவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு தேவையான ஆதாரங்கள் இல்லை. அவர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள். இதற்கு பொது மன்னிப்பு எனக் கூறி சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான மற்றொரு முயற்சியைத்தான் ஜனாதிபதி மேற்கொண்டிருக்கின்றார்.

இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகள், நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டுமென்றும் அதற்காக, புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்குத் தான் அழைப்பு விடுப்பதாகவும், ஜனாதிபதி தெரிவித்தார். இதுவும் சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு முயற்சிதான். ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருடங்களாகப் போகின்றது. இதுவரையில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தியதில்லை. கடந்த ஜூனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர் பேச்சுக்கு அழைத்திருந்தார். ஆனால், இறுதிநேரத்தில் சிங்களக் கடும் போக்காளர்களின் சீற்றத்துக்கு அஞ்சி பேச்சு ரத்துச்செய்யப்பட்டது. இதுவரையில், பேச்சுக்கான எந்த ஏற்பாடும் இல்லை. மக்கள் பிரதிநிதிகளுடனேயே பேச்சுக்களை நடத்தாத ஜனாதிபதி புலம்பெயர் அமைப்புக்களுடன் பேசப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் சொல்வதை எவ்வாறு நம்பமுடியும்? அதுவும் பெரும்பாலான புலம்பெயர் அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டவையாக உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையுடன், எப்போதும் மிக நெருக்கமாகப் பணியாற்றத் தயார் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதன்போது உறுதியளித்தார். ஐ.நா. குறிப்பிட்ட சர்வதேச விசாரணையையோ அல்லது சாட்சியங்களைச் சேகரிப்பதற்கான பொறிமுறையையோ ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லாத ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையுடன், எப்போதும் மிக நெருக்கமாகப் பணியாற்றத் தயார் எனக் கூறுவதை எப்படி நம்ப முடியும்?

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்சலெட்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்சலெட்

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்சலெட் வெளியிட்ட அறிக்கைக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கொடுத்த பதிலை பெருமளவுக்கு ஒத்ததாகவே ஜனாதிபதியின் கருத்துக்களும் அமைந்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியாமல், மரணச் சான்றிதழ் வழங்கி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுவதுதான் ஜனாதிபதியின் தீர்வு என்றால், உள்நாட்டுப் பொறிமுறைகூட அவசியமாக இருக்காது.

கைது செய்யப்பட்டு அல்லது சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கும், அதற்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்குமாகத்தான் தமிழ்த் தரப்பினர் சர்வதேச விசாரணையைக் கோருகின்றார்கள். ஆனால், உள்நாட்டுப் பொறிமுறைதான் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை திட்டவட்டமாகக் கூறும் ஜனாதிபதி, அந்தப் பிரச்சினைக்கான தீர்வாக, “மரணச் சான்றிதழ் வழங்கப்படும்” எனக் கூறுகின்றார். “மரணச் சான்றிதழ் வழங்கப்படாதுதான் பிரச்சினை, அதனை வழங்க தான் தயார்” என்ற ஒரு தோற்றப்பாட்டை ஐ.நா. செயலாளர் நாயகத்துக்குக் காட்ட ஜனாதிபதி முற்படுகின்றார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தை சமாதானப்படுத்துவதற்காக ஜனாதிபதி சொன்ன கதைகளாகத்தான் இவை உள்ளனவே தவிர, தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனான கருத்துக்களாக அவை இல்லை. இதனைக் கேட்டு தமிழ் மக்கள்தான் கொந்தளிக்கின்றார்கள். ஆனால், இந்தக் கருத்துக்களை மேற்கு நாடுகள் வரவேற்கின்றன. ஐ.நா. செயலாளர் நாயகமும் வரவேற்றதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம் உள்ளது.

ஜனாதிபதி கொழும்பிலிருந்து நியூயோர்க் புறப்படுவதற்கு சில மணிநேரத்துக்கு முன்னதாக முக்கிய உடன்படிக்கை ஒன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் 40 வீதமான பங்குகளை அமெரிக்காவுக்கு வழங்குவதுதான் இந்த உடன்படிக்கை. அமைச்சரவையின் அங்கீகாரத்தைக் கூடப்பெற்றுக்கொள்ளாமல், இரகசியமாகச் செய்யப்பட்டதாக ஆளும் கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சிகள் குற்றஞ்சாட்டியிருப்பதுடன் இவ்விடயத்தில் ராஜபக்‌ஷக்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக சந்திப்பு ஒன்றுக்கு அழைத்திருந்த போதிலும், பங்காளிக் கட்சிகள் திருப்தியடையவில்லை. ஜனாதிபதியின் வருகைக்காக அவர்கள் இப்போது காத்திருக்கின்றார்கள்.

திருகோணமலையில் 33000 ஏக்கர் நிலத்தை அமெரிக்காவுக்கு நீண்டகால குத்தகைக்குக் கொடுக்க இலங்கை முன்வந்திருப்பதாக கடந்த மாதம் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. இப்போது கெரவலப்பிட்டிய. இந்த இரண்டையும் பெற்றுக்கொண்டதன் மூலம் அமெரிக்காவின் கடும் போக்கு தணிந்திருப்பதாகவே தெரிகின்றது. அதனால்தான் நியூயோக்கில் கோட்டாபயவினால் துணிச்சலாகக் கதைக்கமுடிகின்றது என்ற கருத்தையும் புறக்கணிக்க முடியாமல் உள்ளது. வழமைபோல, மீண்டும் ஒருமுறை தமது நலன்களைப் பெறுவதற்காக ஈழத் தமிழரை மேற்குலகும் பகடைக்காய்களாகப் பயன்படுத்திக்கொண்டார்களா?