13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அரசியல் தீா்வு – விரைவில் கிடைக்கும் என்கிறாா் சொல்ஹெய்ம்

13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களின் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என தான் நம்புவதாக முன்னாள் நோா்வே அமைச்சரும் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான விசேட தூதுவரும் தற்போதைய இலங்கை ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் அல்லைப்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள தப்ரபேன் கடல் உணவு தொழிற்சாலையைப் பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். பதிமூன்றாவது திருத்தம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களை அடைவதற்கான ஏற்பாடு என நான் கருதுகின்ற நிலையில் குறுகிய காலத்தில் அது நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் நம்புகிறேன்.

13 வது திருத்தம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் ஒரு முறையாக காணப்படுகின்ற நிலையில் அந்த மாகாணங்களில் வாழுகின்ற மக்கள் தமக்கான அதிகாரங்களை தாமே நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றார்.

இதன்போது கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை தொடர்பான ஆலோசகராக நீங்கள் இருக்கின்ற நிலையில் இலங்கையின் கடல் வளம் பல்வேறு வழிகளில் அழிக்கப்பட்டு வருகின்றமை எவ்வாறு பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதன் போது பதில் அளித்த சொல்ஹெய்ம், கடல் வளம் அழிக்கப்படுவது தொடர்பான பிரச்சனை எமது நாட்டிலும் ஏற்பட்டது. கடலில் உள்ள மீன்வளங்களை தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனால் மீன் உற்பத்தி கடலில் குறைகிறது. அதன் காரணமாக எமது நாட்டில் சில காலங்களுக்கு ஏற்றுமதிகளை குறைத்தோம் கடலில் மீன் வளங்களை அதிகரிக்க உதவியது. இதேபோன்று இலங்கையிலும் நீண்ட கால திட்டங்களுடன் கூடிய மீன்பிடி முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த நடைமுறை மீனவர்களுக்கு ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் காலப்போக்கில் அதன் பலாபலன்களை அவர்களை உணர்ந்து கொள்வார்கள்.

ஆகவே இலங்கைக்கு முதலீட்டாளர்களை அழைத்து வந்து முதல் வீடுகளை ஊக்குவிப்பதற்கான வேலைத் திட்டங்களை நாம் கொண்டு வருகிற நிலையில் தொடர்ந்து முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் கூடிய கவனம் செலுத்துவோம்” எனவும் அவர் தெரிவித்தார்.