தேர்தல் லாப நோக்கம் கொண்ட கட்சிகளால் முழுமையான ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது-பகுதி 2 – நிலாந்தன்

803 Views

ஈழத்தின் பிரபல அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்கள் உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் இறுதிப் பகுதி

கேள்வி?
3 இற்கும் மேற்பட்ட கடிதங்கள் தமிழத் தரப்பினரால் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறுகின்றீர்கள்.  இந்தக் கடிதங்கள் ஆணையாளரின் வாய்மூலமான அறிக்கையிலோ அல்லது ஜெனிவாவில் இடம்பெறக் கூடிய நிகழ்வுகளிலோ எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கின்றீர்கள்?

பதில்!
உண்மையில் உரிய காலத்தில் இப்படிப்பட்ட கடிதங்கள் போனால், அந்த அறிக்கைகள் மீது செல்வாக்குச் செலுத்த முடியும். ஆனால் முன்பிருந்தே சுமந்திரன் சொல்லி வருகின்றார், வருகின்ற கூட்டத்தொடர் ஒரு முக்கியமான கூட்டத் தொடர் அல்ல என்று. ஆனால் போன கூட்டத் தொடரின் போது தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது, சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதுகூட ஒரு செயலகம் என்று தான் அழைக்கப்படும் என்று தெரிகின்றது. சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான ஒரு செயலகம் என்று. அந்த செயலகத்திற்கான நிதி உதவிகளை பிரித்தானியாவும், அவுஸ்திரேலியாவும் வழங்கும் என்று கூறப்பட்டது. அந்த நிதி உதவி கடந்த மாதம் வழங்கப்பட்டு விட்டது.

சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கலாம்

அந்த நிதியை இரண்டு நாடுகளும் பங்களிப்பு செய்தது என்பதும், அப்படி ஒரு அலுவலகத்திற்கு ஒப்புக் கொண்டது என்பதும், ஒரு பெரிய அடைவு என அந்த நேரம் கூட்டமைப்பால் சுட்டிக் காட்டப்பட்டது மட்டுமல்ல, புலம்பெயர்ந்த அமைப்புகள் சிலவற்றாலும் அது கொண்டாடப்பட்டது. ஆனால் உண்மையில், ஐ.நா.வின் நிகழ்ச்சி நிரலின்படி வருகின்ற கூட்டத்தொடரிலிருந்து அது இயங்க வைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. அதில் 13 நிபுணர்கள் இருப்பார்கள் என்றும் கருதப்படுகின்றது. ஆனால் இவற்றை இவர்கள் தற்போது முக்கியத்துவம் அற்றது எனக் கூறுகின்றார்கள். ஐ.நாவில் பெரிதாக ஒன்றும் இருக்காது என்று அவர் சொல்லத் தொடங்கி விட்டார்.

அண்மையில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்விகளின் போது, தற்போதைய கூட்டத்தொடரில் ஒன்றும் இல்லை என்று சொல்லுகின்றார். தற்போதைய கூட்டத்தொடர் அல்ல, எந்தக் கூட்டத்தொடரிலும் தமிழ் மக்களுக்கு திருப்தியான அடைவுகள் கிடைக்கவில்லை என்பது தான் எங்களின் வாதம். ஆனாலும் தமிழ் மக்களின் விவகாரத்தை ஒரு பேசுபொருளாக அது வைத்திருக்கின்றது என்ற ஒரு முக்கியத்துவத்திற்கும் அப்பால், மனித உரிமைகள் பேரவைக்குள் முடங்கியிருந்து, இனப்படுகொலைக்கான நீதியைப் பெறலாம் என்று நாங்கள் நம்பவில்லை. அந்த நம்பிக்கையை கூட்டமைப்புத் தான் கொடுத்தது. அந்த நம்பிக்கைகூட கடந்த ஜனவரி 21ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தில் உடைக்கப்பட்டு விட்டது. தற்போது அது ஒன்றும் நடக்காது என்று சொல்கிறார்கள்.

ஆனால் இந்தக் கடிதம் உரிய நேரங்களில் போய், அது அவர்களின் கவனத்தை ஈர்க்குமாக இருந்தால், சிலநேரங்களில் அறிக்கைகளில் மாற்றம் வரும். ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அதன் பிரதிநிதிகளாலும், பாதிக்கப்பட்ட மக்களாலும் வழங்கப்படும் தகவல்களை அவர்கள் கட்டாயம் கவனத்தில் எடுப்பார்கள்.

கேள்வி?
ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ள பொறுப்புக்கூறல், பரிகார நீதி, அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் ஜெனிவா பொறிமுறையின் மூலமாக  தீர்வை நாங்கள் எதிர்பார்க்க முடியும் என நினைக்கின்றீர்கள்?

பதில்!
இது நாங்கள் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். ஜெனிவா ஒரு வரையறுக்கப்பட்ட அரங்கு. அது தமிழர் பிரச்சினையை ஒரு பேசுபொருளாக வைத்திருக்கும் என்பதற்கு மாறாக, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் ஒரு நீதியைத் தருவதில் வரையறைகள் உண்டு. குறிப்பாக மனித உரிமைகள் பேரவைக்கு வரையறைகள் உண்டு.

பொதுவாக பாதுகாப்புச் சபை, பொதுச் சபையோடு ஒப்பிடும் போது, மனித உரிமைகள் பேரவைக்கு அடிப்படையான வரையறைகள் உண்டு. இது ஒரு நாட்டிற்கு எதிரான தடைகளை ஏற்படுத்தவோ, நிர்ப்பந்தங்களைப் பிரயோகிக்கவோ முடியாது. அந்த நாடு கேட்டுக் கொண்டால் தான் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றலாம். அது தான் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் நடந்தது. அந்த நாடு கேட்டுக் கொண்டால் தான் சர்வதேச பிரதிநிதிகளை நாட்டிற்குள் அனுப்பலாம். எனவே ஒரு நாட்டின் அரசாங்கம் அனுமதித்தால் மட்டுமே இது இயங்கும். தற்போது வரப்போகின்ற கட்டமைப்பும்கூட அரசாங்கம் நிராகரித்தால், நாட்டிற்கு வெளியே இருந்து இயங்கும் என்ற பிரச்சினை இருக்கின்றது.

அரசாங்கம் அனுப்பிய கடிதத்திலே உள்நாட்டு பொறிமுறையை வலியுறுத்தும் வாசகங்கள் உண்டு. அனைத்துலகப் பொறிமுறைகளை நிராகரிக்கும் வாசகங்களும் உண்டு. இந்தப் பிரச்சினை என்னவென்றால், ஜெனிவாவிற்குள் முடங்கியிருக்கக்கூடாது. ஆனால் ஜெனிவாவிற்கு வெளியில் தமிழர் விவகாரத்தைக் கொண்டு போவதென்பது ஜனவரி 21ஆம் திகதி எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் விளக்கமாக முன்வைக்கப்பட்டிருந்தாலும்கூட, அது தமிழ்க் கட்சிகளின் விருப்பமாக மட்டும் இருக்க முடியாது. அது ஒரு அரசியல் நடைமுறை. அரசியல் நடைமுறை என்பது, ஜெனிவா ஒரு அரசியல் அரங்கம். அரசுகள் அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் நீதியைப் பெறுவதற்கான அரசியல் செயற்பாடுகளில் நாங்கள் ஈடுபடுகின்றோமா? என்ற கேள்வி இங்கு முக்கியம். நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து 20 மாதங்கள் ஆகி விட்டது. கட்சிகள் கடிதத்தை அனுப்பியது ஜனவரி மாதம். ஆனால், நாங்கள் எப்படிப்பட்ட கட்டமைப்புக்களை உருவாக்கியிருக்கின்றோம் என்பது இங்கு முக்கியம். நாங்கள் விசுவாசமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு போகப்போகின்றோமா? பாதுகாப்புச் சபைக்கு விவகாரத்தைக் கொண்டு போகப் போகின்றோமா? அதற்கான கட்டமைப்புக்கள் எங்களிடம் இருக்கின்றதா எனப் பார்க்க வேண்டும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அரசு சாரா நிறுவனங்கள், சில முக்கிய ஆளுமைகள், சில மனிதநேய அமைப்புக்கள் போன்ற சில மட்டங்களில் தான் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ஐ.நா. இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஒரு அரசியல் தீர்மானமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உலகத்தின் அரசுகள் நடந்தது ஒரு இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளும் நிலைமை இன்னும் வரவில்லை. நாங்கள் லொபி செய்ய வேண்டிய இடம் அரசுகளை நோக்கி. கடந்த 12 ஆண்டுகளில் ஜஸ்மின் சூக்கா, பிரான்ஸிஸ் ஹரிசன் போன்ற அற்புதமான நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள்.  ஐரோப்பிய, அமெரிக்க மனித உரிமைக கட்டமைப்புகளுக்குள் நாங்கள் நியாயமாக லொபி செய்திருக்கின்றோம்.

சுமந்திரன் உத்தியோகப்பற்றற்ற முறையில் முதலில் அனுப்பிய அந்தக் கடிதத்தின் ஒரு நகல்சுமந்திரன் உத்தியோகப்பற்றற்ற முறையில் முதலில் அனுப்பிய அந்தக் கடிதத்தின் ஒரு நகல் எனக்குக் கிடைத்தது. அதன் தொடக்கத்தில் இருப்பது என்னவென்றால், பாராளுமன்றத்தில் அதிகளவு பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் கட்சியாக இருக்கும் நாம் என்று தான் தொடங்குகின்றது. அதில் உண்மையும் உண்டு. ஆகவே நாடாளுமன்றத்தில் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெறுவது என்பதும், பிரதிநிதித்துவம் பெற்ற கட்சிகள் தங்களுக்கிடையில் ஒரு ஐக்கியத்திற்குப் போவது என்பதும் முக்கியமான ஒரு நிபந்தனை. அப்படிப் போனால் தான் அடுத்த கட்டத்திற்குப் போகலாம்.

முதலில் நாங்கள் உள்நாட்டில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும். பின்னர் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். பின்னர் அந்த பொறிமுறையை அனைத்துலக சமூகத்திற்குப் பரவலாக்க வேண்டும். அப்படி பொறிமுறையை உருவாக்கினால் தான் நாங்கள் ஐசிசியை நோக்கியும் போகலாம். நாடுகளிடமும் உதவி பெறலாம். பிரச்சினை என்னவென்றால், நாங்கள் இலட்சியவாதிகளாகவும், அடைவுகளை வைத்துக் கொண்டு கதைக்கிறவர்களாகவும் இருக்கின்றோம். திட்டவட்டமாக, பௌவீகமாகவும் சில திட்டங்களை நாங்கள் செய்ய வேண்டும்.

முதலாவது ஒரு ஐக்கியத்திற்கு போக வேண்டும். அடுத்ததாக நாங்கள் அதற்குரிய பொறிமுறைகளை உருவாக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக கடந்த 20 மாதங்களாக அந்தக் கட்சிகள் என்ன செய்திருக்கின்றன என்பதை அந்தக் கட்சிகளிடமே கேட்க வேண்டும்.

கேள்வி?
தமிழ்க் கட்சிகளிடையே பொதுவான விடயங்களில் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் நேரடியாகப் பங்குகொண்டவர் என்ற முறையில், இந்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைவது ஏன்?

பதில்!
பன்னிரண்டு ஆண்டுகளில் இந்த முயற்சிகளை பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்திருக்கிறார்கள். மதத் தலைவர்கள் எடுத்திருக்கிறார்கள். இதில் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி தேர்தலையொட்டி எடுத்த ஒரு முயற்சி. அது உண்மையில் தமிழ் மக்கள் பேரவை தொடங்கிய ஜனாதிபதி தேர்தலுக்குரிய தமிழ் சுயாதீனக் குழுவின் முயற்சிகளை இடை மறிக்கும் முயற்சியாக இருந்தாலும்கூட அந்த முயற்சி ஒரு கட்டம் வரையிலும் முன்னேறியது. 13 அம்ச ஆவணம் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் அதற்குள் தமிழ்த் தேசிய முன்னணியை இணைக்க முடியவில்லை. காரணம் பல்கலைக்கழகம் அந்த நேரத்தில் ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்தக்கூடியதான வளங்களை உருவாக்கிக் கொடுத்ததே தவிர, பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அதற்குரிய நிபுணத்துவ அறிவு மிக்க, முதிர்ச்சியான அனுசரணையாளர்கள் இருக்கவில்லை.

இந்த முக்கிய முன்னணி உருவாக்கப்பட்ட பின் ஒருவர் சொல்லியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். இப்போது துப்பாக்கியோ எந்த ஆயுதமோ இல்லாமல் நீங்கள் எங்களை ஒருங்கிணைத்திருக்கிறீர்கள் என்று சொல்லி எல்லோரும் கைதட்டி இருக்கிறார்கள். ஆனால் அந்த ஒருங்கிணைப்பை குறுகிய காலத்திலேயே கூட்டமைப்பு உடைத்தது. பின்னர் எல்லாக் கட்சிகளும் உடைத்தது. அந்த ஒருங்கிணைப்பு தோல்வியடைந்தது. அவர்கள் சொன்னது போல பல பலப் பிரயோகம் அங்கு இருக்கவில்லை. இன்னுமொரு காரணம் மாணவர்களிடம் அந்த அனுபவம் இருக்கவில்லை. அதை அந்த வயதில்  எதிர்பார்க்க முடியாது.

இதன் பின்னர் சிவில் சமூகம் மன்னாரைச் சேர்ந்த வாழ்வுரிமை இயக்கத்தின் தொடக்க முயற்சி. அது தான் தொடர்ச்சிய அந்த 3 சந்திப்புக்களையும் ஏற்படுத்தியது. சில சிவில் சமூக அனுசரணையாளர்கள் அந்த முயற்சியை முன்னெடுத்தார்கள். அது கஜேந்திரகுமாரின் கட்சியையும், விக்னேஸ்வரனின் கட்சியையும் உள்ளே கொண்டு வந்தது.  முடிவில் அவர்கள் சரியாகவோ, பிழையாகவோ ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள்.

அதிலே ஈடுபட்ட அனுசரணையாளர்களில் ஒருவன் என்ற வகையில் எனது அனுபவத்தைச் சொன்னால், தேர்தல் லாப நோக்கம் கொண்ட கட்சிகளால் முழுமையான ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது. அப்படி ஏற்படுத்த முயற்சித்தால் ஒரு கட்சியை இன்னொரு கட்சி சந்தேகத்துன் பார்க்கும். உதாரணமாக ரெலோவின் இந்த முயற்சியால் பலவிதமான சந்தேகங்கள் இருந்தன.

surenthiran kurusamy 221220 seithy தேர்தல் லாப நோக்கம் கொண்ட கட்சிகளால் முழுமையான ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது-பகுதி 2 - நிலாந்தன்ரெலோ தனக்குக் கிடைத்த 3 பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும். அது கூட்டமைப்பின் வாக்குகளே தவிர தனியே ரெலோவின் வாக்குகள் அல்ல. இதன் காரணமாக ரெலோ இந்த முயற்சிகளில் ஈடுபடுகின்றது என்ற ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. தவிர, தமிழரசுக் கட்சியின் வட்டாரங்களில் சொல்லப்பட்டது. ஒரு ஆயுதம் ஏந்திய இயக்கத்திற்குப் பின்னால், ஒரு மிதவாதக் கட்சி போக முடியாது. அப்படியும் ஒரு அபிப்பிராயம் இருந்தது. அந்தக் கட்சிகளில் ஒன்றே அதை முன்னெடுக்கும் போது இந்தப் பிரச்சினை வருகின்றது. மாறாக தேர்தல் லாப நோக்கு இல்லாத, அரசியல் சன்னியாசிகள் போன்ற நம்பத்தக்க ஆளுமைகள் இணைந்து இந்த முயற்சிகளில் ஈடுபட்டால், ஓரளவிற்கு இந்தக் கட்சிகளை ஒருகோட்டின் கீழ் கொண்டு வரலாம் என்பது தான் ஜனவரி மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற கூட்டுக் கடிதம் நிரூபிக்கின்றது. இனிமேலும் அதற்கான வாய்ப்புக்கள் தான் அதிகம் உண்டு.

தேர்தலில் இறங்கும் அபிலாசைகள் அற்ற சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கலாம். சிவில் சமூக பிரதிநிதிகள் இறங்கி, இதற்கு முயற்சித்தால்,  இந்தக் கட்சிகளை ஒரு கட்டமைப்பின்கீழ் கொண்டு வரலாம். தேர்தல் சூழ்நிலைகள் வரும் போது இந்தக் கட்சிகள் இறங்கி வரும். ரெலோ, புளொட் போன்ற அமைப்புக்கள் இப்போது கூட தமிழரசுக் கட்சி நம்புகின்றது. இவர்கள் அடுத்த தேர்தலில் எங்களை விட்டுப் போனால், தோத்துப் போவார்கள் என்று பயந்தால், தங்களுடன் சமாதானப்படுத்துவினம் என்று. அப்படி தமிழரசுக் கட்சி நம்பும் வரையிலும் அது இந்தக் கட்சிகளை அவமதித்துக் கொண்டே இருக்கும்.

இந்தக் கட்சிகளும் அதை விட்டு வெளியில் போகத் தயாரில்லை என்றால், என்னதான் வீரம் காட்டினாலும் ஒரு கட்டத்தில் அடங்கிப் போகவேண்டி இருக்கும். கஜேந்திரகுமார் முதல் வெளியேறினார். பின்னர் சுரேஸ் வெளியேறினார். பின்னர் விக்கேஸ்வரன் வெளியில் வந்தார். கடைசியில் சிறீகாந்தா அணி வெளியில் வந்தது. இந்த வெளியேறதல்கள் எதைக் காட்டுகின்றது என்றால், ஒரு கட்டத்தில் தாங்க முடியவில்ல என்பதால் அவர்கள் வெளியில் வருகிறார்கள்.

இதற்குள் இருந்தால் தான் வெற்றி நிச்சயம் என்று நம்பினால் தான் அதற்குள்ளே இருந்து தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். தமிழரசுக் கட்சி தான் பிரச்சினைகளுக்குக் காரணம். தமிழரசுக் கட்சிக்கு வந்திருக்கும் இந்த சவால் என்பது, கூட்டமைப்பின் பல்வகைமையை ஏற்றுக் கொண்டு,  பங்காளிக் கட்சிகளுக்கு சம அந்தஸ்தைக் கொடுத்து, ஒரு ஜனநாயக ரீதியிலான கட்டமைப்பிற்குள் போக உதவுமாக இருந்தால், அது அடுத்த கட்டம். சிலபேர் இதை இன்னும் மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தால், மேலும் தமிழ் மக்களின் திரளாக்கம் கேள்விக்குள்ளாகும்.

எனவே இது விடயத்தில், கட்சிகளுக்குள் இருந்து எடுக்கப்படுகின்ற ஐக்கிய முயற்சிகள் ஒரு கட்டத்தின் மேல் முன்னேறாது என்பதை தான் கடந்த சனிக்கிழமை அனுப்பப்பட்ட 5 கட்சிகளின் கடிதம் காட்டுகின்றது.

எனவே மீள்சமூக அனுசரணையாளர்கள் குறிப்பாக தேர்தலில் பங்குபற்ற வேண்டும் என்ற அபிலாஷைகள் அற்ற அனுசரணையாளர்கள் முயன்றால், இந்தக் கட்சிகளை ஏதோ ஒரு கட்டத்தில் ஒருங்கிணைக்கலாம்.

1 COMMENT

Leave a Reply