மட்டக்களப்பில் தொடரும் மண் கடத்தல்கள்- ஆபத்தினை நோக்கியுள்ள கிராமங்கள் – மட்டு.நகரான்

717 Views

மட்டக்களப்பில் தொடரும் மண் கடத்தல்கள்

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் தொடரும் மண் கடத்தல்கள், வளச்சுரண்டல்கள் குறித்து பல தடவைகள் இலக்கு வார இதழில் எழுதிவந்திருக்கின்றோம். அதன் காரணமாக அந்த செயற்பாடுகளின் பிந்திய நிலவரங்களையும் எழுதவேண்டிய தேவையிருக்கின்றது.

குறிப்பாக யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடகிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணம் பெரும்பான்மை இனத்தவர்களினால் கடுமையான முறையில் இலக்கு வைக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பில் தொடரும் மண் கடத்தல்கள்மட்டக்களப்பில் தொடரும் மண் கடத்தல்கள்

குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளிலேயே கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான வளச்சுரண்டல்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. யுத்ததிற்கு பின்னரான காலப்பகுதியிலேயே இவ்வாறான வளச்சுரண்டல்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

கிழக்கு மாகாணத்தின் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வளச்சுரண்டல்களின் நிலையானது, மாவட்டத்தினை அழிவு நிலைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு சென்றுள்ளதை காணமுடிகின்றது.

வளச்சுரண்டல் என்னும்போது, மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் நிலச்சுரண்டல், மண் சுரண்டல் என்ற ரீதியில் அதிகளவில் நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மணல் கொள்ளை தொடர்பில் இலக்கு இதழ் ஊடாக பல தடவைகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வளங்கள் சுரண்டப்படுவது குறித்து பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டன.

தொடரும் மண் கடத்தல்கள்4 மட்டக்களப்பில் தொடரும் மண் கடத்தல்கள்- ஆபத்தினை நோக்கியுள்ள கிராமங்கள் - மட்டு.நகரான்மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மண் கொள்ளைகள் தொடர்பில் இன்று பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த மண்கொள்ளைகள் நடைபெற்று வரும் அதேநேரம், இந்த மண் கொள்ளை நடைபெறும் பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்கள் குறித்தும் இன்று கவலை தெரிவிக்கப்படுகின்றது.

மக்களின் வாழ்விடங்களுக்கு அருகில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகள் காரணமாக எதிர்காலத்தில் மழைகாலங்கள் ஆரம்பமாகும்போது, அது பாரியளவிலான சேதத்தினை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் அதிகளவில் காணப்படுகின்றன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மண் அகழ்வுகள் குறித்தும், அந்த மண்கள் ரயில்கள் மூலமாகவும் பாரிய வாகனங்கள் ஊடாகவும் வேறு மாவட்டங்களுக்கும் வேறு நாடுகளுக்கும் கடத்தப்படுவது குறித்து தொடர்ச்சியான செய்திகளும் தகவல்களும் வெளிவந்தவண்ணமுள்ளன. இந்த நிலையில் அண்மையில் பாராளுமன்றத்தில் இது தொடர்பான கவன ஈர்ப்பு பிரேரணையொன்றை கொண்டுவந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பிலிருந்து மண் கடத்தப்பட்டு மாலைதீவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவு ஒன்றை நிரப்பும்வேலை நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தொடரும் மண் கடத்தல்கள்3 மட்டக்களப்பில் தொடரும் மண் கடத்தல்கள்- ஆபத்தினை நோக்கியுள்ள கிராமங்கள் - மட்டு.நகரான்எனினும் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அரசாங்கம், இந்த குற்றச்சாட்டுகள் எந்தவித அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டு என தெரிவித்திருந்தார். அதற்கு ஓரு மேல்படியாக சென்று சுற்றாடல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன் இலங்கை சட்டத்தின்படி அவ்வாறான செயற்பாட்டினை மேற்கொள்ளமுடியாது எனவும் அவ்வாறு மண் கொண்டுசெல்வது என்றால் அதற்கு ஏற்ற சட்டம் கொண்டுவரப்பட்டே மேற்கொள்ளமுடியும் எனவும் இக்குற்றச்சாட்டினை நிரூபித்தால் தான் அமைச்சு பதவியிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுற்றாடல்துறை அமைச்சுக்கு கீழ் உள்ள கனிமவள, புவிச்சரிதவியல் திணைக்களம் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளது. இதன்போது மட்டக்களப்பிலிருந்து மண் மாலைதீவுக்கு கொண்டுசெல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அங்கு நீர்நிலைகளை பயன்படுத்துவதற்காக அந்த மணல்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலிருந்தே இந்த மண்கடத்தல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்துள்ளன. ஆனால் அரசாங்கம் அவற்றினை சட்டரீதியற்ற முறையில் முன்னெடுத்துவந்துள்ளதாகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

இவ்வாறான நிலையானது மட்டக்களப்பு மாவட்டத்தினை பாரிய அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலையினை தோற்றுவிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுவருகின்றன.

தொடரும் மண் கடத்தல்கள்5 மட்டக்களப்பில் தொடரும் மண் கடத்தல்கள்- ஆபத்தினை நோக்கியுள்ள கிராமங்கள் - மட்டு.நகரான்மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், சுமார் 30வீதமான பகுதியான நீர்நிலைகளினால் சூழப்பட்டதாக உள்ள காரணத்தினால், இந்த மண் அகழ்வு என்பது பாரியளவிலான தாக்கத்தினை இயற்கையில் செலுத்தக்கூடிய நிலையுள்ளதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஏறாவூர்ப்பற்று பகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த மண் அகழ்வுகள் எதிர்காலத்தில் ஏறாவூர்ப்பற்று பகுதியானது நீரில் மூழ்கும் நிலையினை ஏற்படுத்தக்கூடும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏறாவூர்ப்பற்றானது மீன்பிடியும் விவசாயமுமே பிரதான தொழிலாக உள்ள காரணத்தினால் முன்னெடுக்கப்படும். இந்த மண் அகழ்வுகள் எதிர்காலத்தில் பாரிய அழிவினை ஏற்படுத்தக்கூடிய நிலையுள்ளது. ஒரு நாட்டின் நீர்நிலைகளையே நிரப்புவதற்கு ஒரு சிறிய பகுதியிலிருந்து பெருந்தொகையான மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுமானால் அதன் தாக்கம் எவ்வாறு இருக்குமென்பு எதிர்காலத்திலேயே தெரியவரும்.

இதேபோன்று அபிவிருத்தி என்ற போர்வையிலும் மண் கொள்ளைகள் தொடர்ச்சியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி, வேப்பவெட்டுவான் போன்ற பகுதிகளில் இவ்வாறான பாரியளவிலான மண் கடத்தல்கள் இடம்பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சித்தாண்டியினை சூழவுள்ள சந்தனமடு ஆற்று பகுதியில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வினால் எதிர்காலத்தில் வெள்ள காலத்தில் பல கிராமங்களை அழிவு நிலைக்கு கொண்டுசெல்லும் நிலையுள்ளதாக சித்தாண்டியின் பிரதேசசபை உறுப்பினராகவுள்ள மு.முரளிதரன் என்பவர் தெரிவித்தார்.

மணல் அணைகளை தோண்டி மண் அகழ்வு

எழுவான்கரையினையும், படுவான்கரையினையும் வேறுபடுத்தும் சந்தனமடுஆறு மணல் அணைகளினால் பாதுகாக்கப்படுவதுடன் வெள்ளகாலங்களில் இந்த மணல் அணைகளைத்தாண்டி வெள்ள நீர் சித்தாண்டி உட்பட 08க்கும் மேற்பட்ட கிராமங்களை நீரில் மூழ்கச்செய்வதாகவும், ஆனால் குறித்த மணல் அணைகள் அகற்றப்படுமானால் பல கிராமங்களை நீர் அடித்துச்செல்லும் நிலையுருவாகும் எனவும் அவர் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு பல போராட்டங்கள் நடாத்தப்பட்டு குறித்த பகுதியில் மண் அகழ்வினை தடுத்து நிறுத்திய போதிலும், மீண்டும் தற்போது மணல் அணைகளை தோண்டி மண் அகழ்வு நடைபெறுவதாகவும் இது எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

வளச்சுரண்டல்கள் என்பது வெறுமனே ஒருகடத்தல் நடவடிக்கையாக மட்டும் நோக்காமல் ஒரு இனத்தின் மீது மறைமுகமாக தொடுக்கப்படும் போராகவே பார்க்கவேண்டியுள்ளது. இந்த நாட்டில் வளம் நிறைந்த, மண் நிறைந்த பல பகுதிகள் உள்ளபோதிலும், இன்று பெரும்பான்மை இனத்தவர்களினாலும், இந்த அரசாங்கத்தினாலும் மண் கொள்ளையில் ஈடுபடும் ஒரு பகுதியாக மட்டக்களப்பினை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக நோக்கமுடியாது.

இன்று மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மண்பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், இவ்வாற நிலையில் கொழும்பு உட்பட தென்பகுதிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தினமும் பெருமளவான மண் ஏற்றிச்செல்லப்படுகின்றது. இவற்றினை தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது மண் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கோ இதுவரையில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

மண் அகழ்வினை தடுத்து நிறுத்தி மாவட்டத்தினை பாதுகாக்க வேண்டுமானால், மணல் அகழ்வின் அதிகாரங்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த கோரிக்கையினை நடைமுறைப்படுத்துவதற்கோ சட்டமாக்குவதற்கோ அரசியல்வாதிகள் முன்வராத நிலையே காணப்படுகின்றது.

எதிர்காலத்தில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக இந்த மண் அகழ்வினை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இயற்கை சமநிலையினையும் அந்த வளங்களை பாதுகாக்ககூடிய நிலையும் இருக்கும்.இதனை சிந்தித்துத்து அரசியல்வாதிகள் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்பதே இந்த மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Leave a Reply