திலீப தத்துவம் ஏற்கப்படாததால் இந்திய ஈழத்தமிழர்கள் பாதுகாப்புப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்அரசியல் ஆய்வாளர் பற்றிமாகரன்

திலீபன்12 திலீப தத்துவம் ஏற்கப்படாததால் இந்திய ஈழத்தமிழர்கள் பாதுகாப்புப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றனமண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உண்ணாநிலை அறவழிப் போராட்டத்தை இந்தியப் பேரரசு இலங்கை இந்திய உடன்படிக்கை வழியாகக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவு செய்யுமாறு உறுதியுடன் நடாத்தி, “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்ற உயிராவண அழைப்புடன் இன்னுயிரைத் தியாகம் செய்த தியாகி திலீபனின் 34வது ஆண்டு நினைவேந்தல் நாள் 26.09.21.

இந்த 34 ஆண்டு காலத்திலும் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழ் மக்களதும், மண்ணினதும் பாதுகாப்புக்கு தாங்கள் இலங்கை இந்திய உடன்படிக்கையின்படி ஏற்றுக் கொண்ட தனது பொறுப்பில் தொடர்ந்து தவறிவருகிறது. திலீப தத்துவம் ஏற்கப்படாததால் இந்திய ஈழத்தமிழர்கள் பாதுகாப்புப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன “மக்கள் போராட்டம்” என்ற திலீபனின் உயிராவணத்தை ஏற்பதன் வழியாகவே தீர்வுகளை இலகாக்கலாம் அதே வேளை எந்தத் தலைமையை எந்த இயக்கத்தைத் திலீபன் ஈழத்தமிழ்மக்களின் தலைமையாகவும் ஈழத்தமிழ் மக்களினதும் மண்ணினதும் பாதுகாப்பு இயக்கமாகவும் தனது அறிவாலும், ஆற்றலாலும், உழைப்பாலும் முதன்மைப்படுத்தினானோ அந்த மக்கள் இயக்கத்தின் வேகத்தையும் செயற்பாட்டுத் திறனையும் பின்னடைய வைக்கச் சிறிலங்கா எடுத்த – எடுக்கும் அத்தனை வழிமுறைகளுக்கும் ஆதரவும் அனைத்துலகப் பாதுகாப்பும் அளிக்கும் நாடாகவும் தொடர்கிறது. இதனால் இந்தியா தனது பாதுகாப்பை முதன்மைப்படுத்தி சிறிலங்காவுடன் செய்த இலங்கை இந்திய உடன்படிக்கையை வெளிப்படையாகவே வன்முறைப்படுத்தி, அதனை நடைமுறைப் படுத்தவென சிறிலங்காவின் அரசியலமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்களையும் கூட மீளப்பெற்று நிற்கிறது.

எந்நேரத்திலும் பொருளாதார ரீதியாக வங்குரோத்து  அரசாகவும், தனது சீனக் கடன்களால் சீனாவின் புதிய காலனித்துவ நாடாக நாட்டையும் இழக்கும் சிறிலங்காவின் இந்த உடன்படிக்கை மீறலைத் தடுக்க இயலாத அரசாக இந்தியா நிற்பது அதன் துணைக் கண்டத்தின் பிராந்திய வல்லாண்மையென்ற நிலையை உலகநிலையில் கேள்விக்குள்ளாக்கி வருகிறது.

இதனால் இந்தியாவுடனான வல்லாண்மைகளின் உறவுகள் திசைமாற்றம் பெறத் தொடங் கியுள்ளன. அமெரிக்காவின் பாகிஸ்தானுடான புதிய உறவுக் கட்டமைப்புக்களும், அமெரிக்க – பிரித்தானிய – அவுஸ்திரேலிய ஆங்கில மொழிவழி நாடுகளின் இந்துமா கடல் அணு நீர்மூழ்கிக்கப்பல் வழங்கல் உட்பட்ட புதிய பாதுகாப்பு உடன்படிக்கை முயற்சிகளும், பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரின் பாகிஸ்தான் பயணமும் மேற்குலக இந்திய உறவில் திசை திரும்பல்கள் தொடங்கியுள்ளதை வெளிப்படுத்துகிறது.

அதே வேளை ஈரான் – ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் கூட்டு வழியான இஸ்லாமிய பேரர சாக்க முயற்சிகளும், இதன் வழி காஸ்மீர் பிரச்சினையை இந்நாடுகள் மீள்விக்கும் அபாயமும் தென்படுகிறது.

2 3 திலீப தத்துவம் ஏற்கப்படாததால் இந்திய ஈழத்தமிழர்கள் பாதுகாப்புப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன

அத்துடன் இஸ்லாமுக்கு முதன்மை கொடுக்கும் பாகிஸ்தான் புத்த மதத்திற்கு ஊக்கமளித்து சிறிலங்காப் பிக்குக்களைப் பாகிஸ்தானின் புத்த தொன்மங்களைப் பார்வையிடவும், சிறிலங்காச் சிங்களவர்களுக்கு நூறுக்கு மேலான பாகிஸ்தான் பல்கலைகழகப் புலமைப்பரிசில்கள் கொடுத்து அழைப்பதும் சிறிலங்கா இந்தியாவுக்கு எதிராகத் தன்னை வளர்ப்பதைத் தெளிவாக்குகிறது. சிறிலங்காவே தெற்காசிய வர்த்தகத்திற்கான தலைவாயில் என இந்த விடயத்தில் இந்தியாவின் இடத்தைத் தனது நாடு அடைந்து விட்டது எனக் கோத்தபாயா வெளிப்படையாகவே உலகுக்குத் தெரிவித்தும் உள்ளார். இதனை உறுதிப்படுத்தக் கூடிய முறையில் பங்களாதேசு, நேபாளம் எல்லாமே சிறிலங்காவுடனான புதிய உறவாடல்களை அதிகரித்து வருவதும் சிறிலங்காவின் இந்தியத் தனிமைப்படுத்தல் முயற்சிக்குச் சிறிலங்காவுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது.

இந்தியாவால் தங்களை எதுவும் செய்ய முடியாதென ஊக்கமடைந்து வரும்  சிறிலங்காவின் கோத்தபாய ராசபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் சிறிலங்காவை சீனாவின் புதிய குடியேற்றவாத நாடாக மேலும் மேலும்  மாற்றுவதன் மூலம் தமிழீழ இந்துமா கடல் பகுதிகளால் இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறைமைக்கும் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் வளரச் செய்து வருகின்றனர்.

3 3 திலீப தத்துவம் ஏற்கப்படாததால் இந்திய ஈழத்தமிழர்கள் பாதுகாப்புப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன

இதற்கு எதிர்வினையாற்றக் கூடிய, அமெரிக்க – இந்திய – அவுஸ்திரேலிய – யப்பான் நாற்சதுரக் கூட்டமைப்பின் வழியான இந்துமா கடல் பசுபிக் பெருங்கடல் பாதுகாப்பிலும் இந்தியாவைப் பலவீனப்படுத்தும் விதத்தில் அமெரிக்காவையும் சீனாவையும் சிறிலங்காவில் ஒரே காலத்தில் முதலிடக் கூடிய முதலீட்டு முயற்சிகளைச் சிறிலங்கா வேகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் திருகோணமலைத் துறைமுகத்தில் இந்தியா குத்தகைக்கு எடுத்து வைத்துள்ள எண்ணெய் தாங்கிகளின் வருமானத்தை வீழ்ச்சி அடையச் செய்து திருகோணமலையில் இருந்து இந்தியாவை வெளியேற்றுவது சிறிலங்காவின் மிக நுட்பமான செயற்பாடுகளாக உள்ளது. இதன் வெளிப்பாடாகவே இந்தியன் ஒயில் கம்பெனியின் சிறிலங்கா வழங்கலை மட்டுப்படுத்தும் வகையில் சீனப்பின்னணி முதலீடுடைய சிங்கப்பூர் கம்பெனி ஒன்றுக்கு சிறிலங்காவுக்கான எண்ணெய் வழங்கல் உரிமையைச் சிறிலங்கா அரசாங்கம் கொடுத்துள்ளது.

தமிழ் நாட்டின் ஆளுநராக புலனாய்வுத் துறை தலைமைகளில் அனுபவம் பெற்றவரையே நியமித்து இந்தியா தமிழீழக் கடற்கரையோரங்களைக் கண்காணிக்க வேண்டிய நிலையில் இந்தியா இன்று உள்ளது.

தியாகி திலீபனின் நியாயமானதும் நேர்மை யானதுமான ஐந்து கோரிக்கைகளுக்கும் அன்று இந்தியா தக்க பதிலை அளித்திருந்தால் இன்று 34ஆண்டுகளின் பின்னர் இந்தியா சந்திக்கும் இந்தச் சிக்கல் நிலைகள் தோன்றியிராது.

ஈழத்தமிழர்களும் திலீபனின் தத்துவங்களை நெஞ்சிருத்திச் செயற்படாததன் விளைவாக துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டு பன்னிரு ஆண்டுகள் மக்களாட்சி முறை மைகள் வழி தங்கள் உரிமைகளை மீளப்பெறும் அரசியல் பயணத்தில் பலத்த பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றனர்

 “ஒரு மாபெரும் சதி வலைக்குள் சிக்கி வரும் எம் மக்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும்” என்பதே தியாகி திலீபன் சிந்தனையாக இருந்தது. ஆனால் இன்றுள்ள ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் சதிவலைகளைச் சமாதானத்திற்கான முயற்சிகள் எனத் தாமாகவே அந்தச் சதிவலைகளுக்குள் போய் மாட்டிக் கொள்கின்றனர்.

 “எமது உரிமைகளை நாமே வென்றெடுக்க வேண்டும்” என்னும் தியாகி திலீபனின் அனுபவ மொழியை மறந்தவர்களாய் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் அழுதும் தொழுதும் அடிகழுவியும் உரிமைகளைப் பெறுவதாகக் காட்டித் தங்கள் பதவிகளைத் தக்கவைத்து தங்களின் வாழ்வை வளப்படுத்திக் கொள்கின்றனர்.

“எம் எதிர்கால சந்ததிவாழ நிச்சயமாக எமக்கோர்நாடு அவசியம்” என்னும் திலீபனின் முன் னெதிர்வு கூறும் மொழியானது, நிலத்தின் உரிமையும் மக்களின் இறைமையும் உறுதிப்படுத்தப்பட்டாலே எதிர்கால சந்ததி வாழும் என்பதை மிகத் தெளிவாக்கியது. “எமது நாட்டில் நாம் நிலை பெறும்வரை, எமது சுதந்திரத்தை எவரும் உறுதி கூற முடியாது” என்ற தியாகி திலீபனின் கூற்று சுதந்திரம் என்பது சொந்த மண்ணில் தன்னைத் தவிர தனக்கு இன்னோர் எசமான் இல்லாது வாழும் நிலை என்பதை மனதிருத்துகிறது.

மண்ணின் இறைமையையும் மக்களின் ஒருமைப்பாட்டையும் உறுதி செய்யும் வகையிலேயே எந்த அரசியல் அணுகுமுறையும் அமைய வேண்டுமென்பதை இன்றைய ஈழத்  தமிழ் அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ளல் முக்கியம். “எமது மண்ணின் விடுதலைக்காக யார் பேராடுகிறார்களோ அவர்களே இந்த மண்ணின் மைந்தர்கள்” என்ற தியாகி திலீபனின் அடையாளப்படுத்தலை ஒவ்வொரு தமிழனும் தன் நெஞ்சிருத்திவாழ வேண்டும். இன்றைய காலகட்டத்தில் உலகெங்கும் ஈழத் தமிழர்கள் புலம்பதிந்து வாழும் நிலையில் தாங்கள் வாழும் நாடுகளில் இருந்த படியே மக்களாட்சித் தத்துவங்களுக்கும் வாழும் நாட்டின் சட்ட ஒழுங்கு முறைகளுக்கும் அமைய தமது தாய் மண்ணின் விடுதலைக்காகப் போராடுபவர்களும் ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற அடையாளப்படுத்தலுள் அடங்குவர். இதனைப் புரிந்து புலம்பதிந்த தமிழர்கள் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகத் தாயக விடுதலைக்கு உழைப்பதையும் வாழ்வாக்கிப் பழகுதல் முக்கியம்.

 “இன்றும் நாம் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எமது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதை தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இன்று எமக்கு ஏற்பட்டுள்ள அடக்குமுறையை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளத் தவறினால்நாளை வரலாறு மிகவும் பரிதாபத்திற்று உரியதாக இருக்கும்.” என்னும் திலீபனின் வார்த்தைகள் ஒவ்வொரு ஈழத் தமிழனும் சமகால அடக்குமுறையை அறியவும் புரியவும் அதனை மாற்ற உழைக்கவும் வேண்டும். இதற்கு மக்களுக்கு அறிவூட்டலை ஒருங்கிணைத்த முறையில் ஒரு நோக்கில் செய்யக் கூடிய ஊடகத் தலைமை மிக முக்கியமானதாகிறது. திலீபனின் பெயரால் ஈழத்தமிழ் மக்களுக்கான இலாப நோக்கற்ற தேசிய ஊடகம் ஒன்று பலமான முறையில் உருவாவதை உறுதி செய்ய வேண்டிய கடமையும் உரிமையும் உள்ளவர்களாகப் புலம் பதிந்து வாழும் தமிழர்கள் உள்ளனர்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் அது நிச்சயமாகத் தமிழீழத்தை எனது இறப்பின் மூலம் பெற்றுத் தரும்” என்ற மாறாத உறுதியுடன் கல்லறையில் கருவானவன் திலீபன். “மரணம் ஒரு தடவைதான் வரும். அதற்காக மானத்தை விற்றுச் சீவிக்க முடியுமா? இறப்புக்குப் பயந்து இனத்தை அழித்து விட அனுமதிக்க முடியுமா? என  ஒவ்வொரு தமிழரையும் நோக்கி இன்றும் திலீபன் குரல் எழுப்புகிறான் “நான் ஆத்ம ரீதியாக உணர்கிறேன். இன்றில்லாவிட்டாலும், என்றோ ஒருநாள் எனது மக்கள் நிச்சயமாக விடுதலையடைவார்கள்” என்ற திலீபனின் நல்லாக்கக் கனவை நனவாக்குவது ஒன்றே திலீபனின் தன்னிகரில்லாத தியாக வாழ்வுக்குத் தமிழர்கள் செய்யக் கூடிய ஒரேயொரு செய்நன்றியாக அமையும்.

விருப்புக்களைக் கடந்து ஒன்றிணைதலும் ‘புரட்சி’ என தலைகீழாக உள்ளதை நேராக்குவதற்காகச் செயற்படுவதும், ‘வெடிக்கட்டும்’ என ஒற்றுமையாக ஒருமித்து ஒரு கொள்கை என்ற பலத்துடன் தடைகளைத் தகர்த்தெழுதலும், என்னும் மூன்று ஆற்றல்களையும் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகெங்கும் தமக்குள் உருவாக்குதல் ஒன்றே திலீபனுடைய சமுதாயக் கனவுகளை சரித்திரப் பதிவுகளாக மாற்ற உதவும்.