தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் நிரூபிக்கின்றார்கள் – பகுதி 1

456 Views

1 2 தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் நிரூபிக்கின்றார்கள் - பகுதி 1தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை

கேள்வி?
வெளிவிவகார அமைச்சர் ஜீஎல். பீரிஸினால் 13 பக்க அறிக்கை ஒன்று ஆணையாளருக்கும், பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்ப ட்டிருக்கின்றது. இந்த அறிக்கை குறித்த உங்கள் பார்வை என்ன?

பதில்!
இந்த அறிக்கை ஏற்கனவே 30/1 தீர்மானத்தின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க அரசால் உருவாக்கப்பட்ட அலுவலகங்கள் இதுவரை என்ன செய்திருக்கின்றன என்று பட்டியலிடுகின்றன. நல்லிணக்கத்திற்கும், தேசிய ஒருங்கிணைப்பிற்குமான காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டு நீதிக்கான அலுவலகம், சாட்சிகளையும், சான்றுகளையும் பாதுகாப்பதற்கான அலுவலகம் போன்றவை என்னென்ன செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. முன்னெடுக்க இருக்கின்றன போன்ற விபரங்கள் இந்த அறிக்கை முழுவதும் உண்டு. குறிப்பாக இழப்பீட்டு அலுவலகத்திற்காகக் கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரித்த நிதி ஒதுக்கப்பட்டதை குவிமையப்படுத்தியிருக்கிறர்கள்.

3 2 தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் நிரூபிக்கின்றார்கள் - பகுதி 1

அதோடு காணாமல் போனோர் தொடர்பாக இதுவரையிலும் எத்தனை பதிவுகள் உண்டு. ஏறக்குறைய இருபதாயிரத்திற்கும் குறையாத பதிவுகள் உண்டு. எத்தனை விசாரிக்கப்பட வேண்டும். விசாரிக்கப்பட்டவை எத்தனை போன்ற எல்லா விபரங்களையும் அந்த அறிக்கை கொண்டிருக்கிறது. ஜெனீவாவிற்கு தாம் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதனை அரசாங்கம் முன்வைக்கிறது. அரசாங்கம் செய்ததோ செய்யவில்லையோ செய்தது போன்றதொரு தோற்றத்தைக் காட்டுகின்றது. இது ரணில் விக்கிரமசிங்க காலத்திலும் நடந்தது தான். அங்கேயும் இப்படி கட்டமைப்புகளை உருவாக்கி விட்டு, அடுத்த கட்டத்திற்கு அவர்கள் பெரிதாக ஒன்றையும் செய்யவில்லை.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் காணாமல் போனோருக்கான அலுவலகம், சாட்சிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதற்கான அலுவலகம், இழப்பீட்டு நீதிக்கான அலுவலகம், சந்திரிகா தலைமை தாங்கிய நல்லிணக்க அலுவலகம்; இந்த அலுவலகங்கள், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் பெருமளவிற்கு இயங்கவில்லை. குறிப்பாக காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டு நீதிக்கான அலுவலகங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாகனங்கள் குறைக்கப்பட்டன. கடந்த ஆண்டு இறுதி வரையிலும் ஐ.நாவின் நிபுணத்துவ ஆலோசனை இருந்தது. அது நிறுத்தப்பட்டு விட்டது. அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. தவிர, இந்த அலுவலகங்களுக்கு ஓய்வுபெற்ற படைப் பிரதானிகளே நியமிக்கப்பட்டார்கள்.

4 1 தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் நிரூபிக்கின்றார்கள் - பகுதி 1குறிப்பாக, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இருபது மாத காலம் ஆகிறது. இந்த இருபது மாத காலப் பகுதிக்குள் பல சிவில் அலுவலகங்களை படைமயப்படுத்தியிருக்கிறார்கள். பல சிவில் துறைகளை படை மயப்படுத்தியிருக்கிறார்கள். இதில் நிலைமாறு கால நீதிக்கான பொறுப்புக்கூறல் அலுவலகங்களில்கூட படைத்தரப்பு வந்து விட்டது. இவ்வாறு அலுவலகங்களுக்கு நியமிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய முன்னாள் பொலிஸ்மா அதிபர் கடந்த மாதம் சுகயீனம் காரணமாக இறந்து விட்டார். ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய அந்த கட்டமைப்புகள் தொடர்ந்தும் இயங்குகின்றன. அந்தக் கட்டமைப்புக்கு கீழே வேலைகள் செய்யப்பட்டிருக்கின்றது என்று அறிக்கையிடுவதாகத்தான் அந்த 13 பக்க அறிக்கை சொல்கிறது.

கேள்வி?
பேரவையின் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே முரண்பாடு உருவாகியிருக்கின்றது. இந்த முரண்பாட்டை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்!
ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும்  தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை நிரூபிக்கின்றார்கள். இது வழமையான முரண்பாடு. இது இன்று நேற்றையது அல்ல. ஒரு கட்சிக்குள் இருந்து கொண்டே இரண்டு கடிதம் அனுப்புவது, மூன்று கடிதம் அனுப்புவது. கடந்த 12 ஆண்டுகளாக ஒரு யதார்த்தம். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை என்று ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் நிரூபிக்கின்றார்கள். ஒவ்வொரு நெருக்கடியான தருணங்களிலும் நிரூபிக்கிறார்கள். இந்த முறையும் நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த முன்னெடுப்பு ரெலோவாலே தான் தொடக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி மூன்று பெரும் கூட்டுக் கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டுக் கடிதத்தை ஜெனிவாவிற்கு அனுப்பின. அது ஒரு அற்புதமான நகர்வு. கடந்த 12 ஆண்டுகளில் மூன்று கட்சிகளும், மூன்று கூட்டுக் கட்சிகளும், தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய அத்தனைத் தரப்புகளும் ஒன்றாகத் திரண்டது என்பது, அதுதான் ஒரு அபூர்வமான நடவடிக்கை. அதற்காக 3 சந்திப்புக்கள் வவுனியா விலும், கிளிநொச்சியிலும் நடைபெற்றன. இறுதியாக கிளிநொச்சி சென்.திரேசாவில் நடைபெற்ற சந்திப்பின் போது, 4 சிவில் அனுசரணையாளர்கள், மன்னாரைச் சேர்ந்த ஒரு குடிமக்கள் சமூகத்தால் அந்தக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. அந்த 4 அனுசரணையாளர்கள் மூன்று கட்சிகளையும் ஒரு கோட்டிற்குள் கொண்டு வந்து, மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் ஒரு கூட் டுக் கடிதத்தை உருவாக்கினார்கள்.

அந்தக் கூட்டுக் கடிதம் இலங்கை விவகாரத்தை, தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஜெனிவாவிற்கு வெளியே கொண்டு போய், அதாவது மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே பொதுச்சபை, பாதுகாப்புச் சபைக்கு கொண்டு போக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. விசாரணைக்கான ஒரு பொறிமுறையை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. அது ஒரு முக்கியமான கடிதம்.

அந்த முயற்சிக்குப் பின்னர் மாவை.சேனாதிராசா தலைமையில், தமிழ்த் தேசியப் பேரவை என்று சொல்லி, ஒரு ஒருங்கிணைப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அதிலே அவர், வவுனியாவில் ஒரு ஐக்கிய முயற்சியை முன்னெடுத்தார். தமிழ்க் கட்சிகள் இணைந்து ஒரு பேரவையை உருவாக்கலாம். தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கலாம் என்ற கதை வந்தது. அதை கூட்டமைப்பின் தலைமைப்பீடம் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்களின் அழுத்தம் காரணமாக மாவை. அந்த முயற்சியைக் கைவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதற்குப் பிறகு இந்த முயற்சிகளை ரெலோ முன்னெடுக்கின்றது. அதையும் கூட்ட மைப்பின் தலைமைப்பீடம் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்தில் சம்பந்தருக்கு மிக நெருக்கமாகக் காணப்படும் அந்தக் கட்சியின் பேச்சாளர் முன்னைய மாவை. சேனாதிராசாவின் ஒழுங்கமைப்பின் பொழுதும் அதிலிருந்தார். இப்போது ரெலோ எடுக்கும் முயற்சிகளின் போதும் இருக்கிறார். அவரை ரெலோ அழைக்காவிட்டாலும் கூட வருகிறார். பங்குபற்றுகிறார். அவர் ஒன்றுக்கும் எதிர்மறையாக நடந்து கொள்ளுவதில்லை.

எல்லாவற்றிலும் பங்குபற்றுகிறார். ஜனவரி 21ஆம் திகதி 3 கட்சிகள் கூட்டத்தில் அவர் இருந்தார். ஏனைய கட்சிகள் மோதும் போது, அவர் கூலாக இருந்து அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவர்கள் எல்லோரும் கையெழுத்திட்டு அந்தக் கடிதத்தை அனுப்பியதில், எல்லாக்கூட்டத் தொடரின் பொழுதும் Zero Draft வந்த போது, அவர் அந்தக் கூட்டு ஒப்பந்தத்தை மீறி அந்த Zero Draft இன் பக்கம் போனார். பின்னர் ஜெனிவா தீர்மான விடயத்திலும் அவர்கள் அந்தக் கூட்டுக் கடிதத்தை மீறி விட்டார்கள்.

இங்கேயும் அப்படித்தான். மாவையின் கூட்டத்திலும் அவர் இருந்தார். பிறகு அதை ஒரு கட்டத்தில் நிற்பாட்டினார்கள். பிறகு ரெலோ கூட்டிய கூட்டத்திலும் அவர் இருந்தார். அவர் ரெலோவிற்கு வாக்களித்திருக்கிறார் என்று ரெலோ சொல்கிறது. தான் ஒரு வரைபை போட்டிருப்பதாயும், அது தென்னிலங்கையில் உள்ள ஒரு புத்தி ஜீவிகள் குழுவுடன் சேர்ந்து உருவாக்கப்பட்ட வரைபு என்றும், நான் அதை உங்களுக்கு அனுப்புகிறேன். பார்த்து கலந்து பேசி முடிவெடுப்போம் என்றும் சொல்லியிருக்கிறார். சொன்னது கடந்த மாதம் 21ஆம் திகதி. அதன்பிறகு அவர் அனுப்பப் போவதாக சொன்ன வரைபு கடந்த வெள்ளிக்கிழமை (3) வரையிலும் அனுப்பப்படவில்லை. ஆகவே இந்தக் கட்சிகள் இந்த வரைபு வருமென்று முடியாத கட்டத்தில், தாங்கள் ஒரு வரைபை போட்டு, இந்த ஐந்து கட்சிகளும் திருத்தங்களை மேற்கொண்டு ஒப்புக்கொண்ட பின்னணியில் வெள்ளிக்கிழமை வரையில் மாவை. சேனாதிராசாவை கையொப்பமிடும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழரசுக் கட்சியை முடிவெடுக்கச் சொல்லி. அதற்கு மாவை. சேனாதிராசா, சுமந்திரன், சம்பந்தனிடம் இருந்தும் சம்மதம் வரவேண்டும் என்றும், அவர்கள் சொன்னால் தான் கையொப்பமிடலாம் என்றவாறான ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார்.

சுமந்திரன்
சுமந்திரன்

சுமந்திரனின் வரைபு வர இரண்டையும் ஒப்பிட்டு நாங்கள் ஒரு புது ஆவணத்தை உருவாக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தி, அதிலும் அதைச் சொல்லியிருக்கிறார். இரண்டு ஆவணம் போகக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ரெலோவின் தகவலின்படி கடந்த வெள்ளிக்கிழமை வரையிலும் சுமந்திரன் அந்த வரைபை அனுப்பவில்லை. வெள்ளிக்கிழமை இரவு தான் சுமந்திரன் தனது வரைபை அனுப்பி யிருக்கின்றார். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அம்சங்கள் இதில் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

இரண்டு கிழமைகளுக்கு மேலே இழுபட்டாச்சு. இப்படி இழுபட்டுக் கொண்டு போக முடியாது என்று முடிவெடுத்த கட்சிகள், தமிழரசுக் கட்சியை விட்டுவிட்டு, ஆவணத்தில் கையொப்பமிட்டு 4ஆம் திகதி காலையில் அனுப்பி விட்டார்கள். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தமிழ்த் தேசிய முன்னணிக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், அதற்கு அவர்கள் பதில் சொல்லவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் குடும்பமாக பெருந்தொற்றிற்கு உள்ளாகியிருக்கிறார். அவரின் தாயாருக்கு உடல் நலம் நன்றாக இல்லை என்று கூறப்படுகின்றது. அவர் அதிலிருந்து மீண்டு இந்த விடயத்தில் தலையிடுவதில் தனிப்பட்ட காரணங்கள் தடைகளாக இருந்திருக்கலாம். ஆனால் அவர்களது கையெழுத்தும் இல்லாமல்தான் இந்த ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் அதிகரித்த கட்சிகள் இதில் கையொப்பமிட்டுள்ளன.

மேலும் ஒரு கடிதம் கூட்டமைப்பிற்குள் இருக்கும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து அனுப்பியதாக நம்பப்படுகின்றது. உத்தியோக பூர்வமாக அனுப்பப்பட்டதாக சொல்லப்படவில்லை. இப்படிப் பார்த்தால், ஒன்றுக்கு மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளது. இறுதியில் சுமந்திரன் போட்ட அந்த வரைபை கூட்டமைப்பின் கடிதமாக அனுப்பியதாக கூறப்படுகின்றது. அதில் என்ன இருந்தது என்றது உத்தியோக பூர்வமாக இதுவரையில் வெளிவரவில்லை.

ஒரு வரைபை கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள் விக்னேஸ்வரனின் கட்சியோடு சேர்ந்து அனுப்பியது குறித்து சம்பந்தன் கூட்டமைப்பைப்பிளக்கும் ஒரு நிலைப்பாட்டிற்குப் போகக் கூடாது என்ற ஒரு நிலைப்பாட்டில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆகவே இது விடயத்தில் கட்சிகளை பகையாக அணுகத் தேவையில்லை. நாங்கள் இதை ஒரு பிளவாக மாற்றத் தேவையில்லை. உண்மையில் அவர்களை விடவும் தமிழரசுக் கட்சிதான் இதை ஒரு பிளவாக மாற்றப் பார்க்கிறது என்ற ஒரு கருத்து சம்பந்தனிடம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்படியான ஒரு பின்னணியில் அந்தக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி என்று பெயர் வைத்தால், அல்லது தமிழரசுக் கட்சி என்று கையெழுத்துப் போட்டால் அது திட்டவட்டமான ஒரு பிரிவினையைக் காட்டும் என்று சம்பந்தர் கருதியதாகவும், அதனால் அதை கூட்டமைப்பு என்று கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் உண்மையில் அது கூட்டமைப்பின் கடிதம் அல்ல. அது தமிழரசுக் கட்சியின் கடிதம் தான். ஏனென்றால், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் வெளியில் வந்து ஒவ்வொரு கடிதம் அனுப்பியிருக்கின்றன. எதுவானாலும் இப்போது 2 கடிதங்கள் போயுள்ளதாகத் தெரிகிறது. தமிழ்த் தேசிய முன்னணியும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. ஏனென்றால், ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள கடிதங்கள் ஜெனிவாவிலிருந்து பிரச்சினையை வெளியில் எடு என்று திட்டவட்டமாகச் சொல்ல வில்லை என்று தெரிகின்றது.

அவர்கள் மேலும் ஒரு கடிதத்தை அனுப்புவார்களாக இருந்தால், கிட்டத்தட்ட 3இற்கு மேற்பட்ட கடிதங்களுக்கு வாய்ப்புள்ளது. இருப்பது 13 பாராளுமன்ற உறுப்பினர்கள். பத்திற்கும் குறையாத கட்சிகள். ஏற்கனவே 10 இலட்சம் மக்கள் வெளிநாடுசென்று விட்டனர். ஒரு தொகுதி இந்தியாவில். ஒரு தொகுதி ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும். எமது சனத் தொகையின் மூன்றில் ஒரு பகுதி வெளியில் நிற்கிறது. கிட்டத்தட்ட மூன்று இலட்சத்திற்கும் குறையாத மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். காணாமல் போய்விட்டார்கள். இதற்குள் பத்திற்கும் மேற்பட்ட கட்சிகள், பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள். நாங்கள் சிதறிக் கொண்டே போகின்றோம். ஆனால் தொடர்ந்தும் சிதறிக் கொண்டே போகின்றோம் என்பதைத் தான் இந்த பல்வேறு கடிதங்கள் எங்களுக்குக் காட்டியுள்ளது.

பகுதி 2

Leave a Reply