அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு-ஐ.நா செயலாளர் நாயகத்திடம் ஜனாதிபதி தெரிவிப்பு

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

காணாமற் போனோர் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாக  ஐ.நாபொதுச் செயலாளரிடம், தெரிவித்த ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச,  சிறையில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க தான் தயங்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகத்தில், நேற்றைய தினம் (19)  ஐ.நா பொதுச் செயலாளர் குட்டரெஸ் (Antonio Guterres) மற்றும் சிறீலங்கா ஜானாதிபதி கோட்டாபயவுக்கும்  இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

மேலும் இந்த சந்திப்பில்,

அரசியல் கைதிகளின் வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் நீண்ட காலமாகத் தடுப்பிலுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்டச் செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர், நீண்ட காலம் தடுப்பில் இருந்ததைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அவர்களை விடுவிப்பதற்குத் தான் தயங்கப் போவதில்லை என்றும், ஐநா பொதுச் செயலாளரிடம் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

மேலும் காணாமற்போனோர் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாகவும் மரணச் சான்றுதல் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகள், நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டுமென்றும் அதற்காக, புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்குத் தான் அழைப்பு விடுப்பதாகவும்,  ஐக்கிய நாடுகள் சபையுடன், எப்போதும் மிக நெருக்கமாகப் பணியாற்றத் தயாரென்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021