இடப்பெயர்வு நினைவு தினம் 25 இல் இருந்து 26 ஆண்டாக மாறியது, ஆனால் நாம்? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

155 Views

 

இடப்பெயர்வு நினைவு தினம்

யாழ். குடாநாட்டு இடப்பெயர்வு இடம்பெற்று இந்த வருடத்துடன் 26 ஆண்டுகள் ஆகின்றன. இடப்பெயர்வு நினைவு தினம் ஒரு இனப்படுகொலை அரசிடம் இருந்து தப்பிப்பதற்காக இலட்சக் கணக்கான மக்கள் தமது வாழ்நிலங்களையும், உடைமைகளையும் கைவிட்டு ஒரே இரவில் இடம் பெயர்ந்த அவல தினம் அது.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அனைத்துலக சமூகமே அல்லது  மிகப்பெரும் ஜனநாயக நாடு எனத் தன்னை கூறிக்கொள்ளும் அருகில் உள்ள இந்தியாவோ அந்த மக்களை காப்பாற்றத் தவறின.

தொடர் படை  நடைவடிக்கையில் பெருமளவான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டதுடன், நடவடிக்கைக்கு முகம்கொடுக்க முடியாது இடம்பெயர்ந்த மக்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் பலவந்தமாக செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட னர்.

அவ்வாறு சென்றவர்களில் பல நூறு பேர் காணாமலும் போயிருந்தனர். ஏனையோர் திறந்தவெளி இராணுவச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டனர்.

இடப்பெயர்வு நினைவு தினம்னது இனச்சுத்திகரிப்பை இலங்கை அரசு எவ்வாறு உலகின் கண்களில் இருந்து மறைத்தது என்பதையும், உலக நாடுகள் எவ்வாறு தமிழ் மக்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தன என்பதையும் கடந்த வருடம் இது தொடர்பில் எழுதிய பத்தியில் தெரிவித்திருந்தேன்.  (இலக்கு 102 ஆவது இதழைப் பார்க்கவும்).

அது மட்டுமல்லாது, பல நாடுகளில்  இடம்பெற்ற இடப்பெயர்வுகளையும், போர்க் குற்றங்களையும், தமது பூகோள அரசியல் முக்கியத்துவம் மூலம் அந்த இன மக்கள் எவ்வாறு உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர் என்பதையும் பார்ந்திருந்தோம்.

மியான்மரின் இனஅழிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பல இலட்சம் ரோகிங்கியா இன முஸ்லீம் மக்கள் பங்களாதேசத்திற்கு சென்ற சம்பவம் மியான்மர் மீதான போர்க்குற்ற விசாரணை ஒன்றை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யும் வரை சென்றதுடன், அங்கு ஏற்பட்ட அரசியல் பதற்றம் அந்த நாட்டில் ஒரு இராணுவப் புரட்சியையும் இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் ஏற்படுத்தியிருந்தது.

இன்று மியான்மர் அனைத்துலக சமூகத்தில் இருந்து புறந்தள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற தென்னாசியப் பிராந்திய நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் (ASEAN) இருந்தும் மியான்மார் வெளியேற்றப்பட்டடிருந்தது.

எனவே நாம் வரலாறுகளை வெறுமனவே கடந்து செல்லாது, அது எற்பட்டதன் காரணம், அது ஏன் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை, இலங்கை அரசு அதனை எவ்வாறு கையாண்டது?. இன்று பூகோள அரசியலில் எமது முக்கியத்துவம் என்ன? என்பது குறித்தான தெளிவும், அதற்கான செயற்பாடுகளும் எமக்கு முக்கியமானது என்பதைக் கடந்த வருடம் பார்ந்திருந்தோம்.

இடப்பெயர்வு நினைவு தினம்அது மட்டுமல்லாது, எமது வரலாறும், அடுத்த கட்டப் போராட்ட நகர்வும் அடுத்த தலை முறையினரிடம் தெளிவாகக் கடத்தப்பட வேண்டும் என்பதும் முக்கியமானது. அதற்கு ஒரு சிறு உதாரணமாக இஸ்ரேலினால் இடிக்கப்பட்ட வீடுகளின் சாவிகளை அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்கும் நடவடிக்கை ஒன்றை பாலஸ்தீன மக்கள் மேற் கொண்டு வருகின்றர். அதாவது தமக்கு நேர்ந்த அவலத்தை அவர்கள் அடுத்த தலைமுறையினரிடம் சொல்வதுடன், போராட்டத்திற்கு அவர்களைத் தயார்படுத்தவும் செய்கின்றனர்.

ஆனால் கடந்த வருடம்  இடப்பெயர்வை நினைவுகூரும் போது, இருந்த நிலைக்கும் இந்த வருடம் உள்ள நிலைக்கும் இடையில் எம்மிடம் ஏதேனும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆய்வு செய்வதே பொருத்தமானது.

எந்த அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் இளைய சமூகத்திற்கான தெளிவான இயங்குதளத்தை அமைத்துக் கொடுக்கவில்லை என்பதுடன், அவர்களை தமது நடவடிக்கைகளில் அதிகம் உள்வாங்கியதாகவும் தகவல்கள் இல்லை. ஒரு இரு சம்பவங்கள் அங்கும் இங்கும் நடைபெற்றபோதும், தெளிவான ஒருங்கிணைவும் அதில் காணப்படவில்லை.

எமது தேசியத் தலைவர் கடைப்பிடித்த தமிழ்த் தேசியம் என்றால் என்ன?

தமிழர் ஆண்ட மண்ணை அதாவது நாம் இழந்த மண்ணை எல்லோரும் இணைந்து மீட்பது.

இதில் மத வேறுபாடுகளோ, சமூக வேறுபாடுகளோ, அல்லது கட்சி வேறுபாடுகளோ இல்லை. அதாவது ஒரு பொதுக் கொள்கையின் அடிப்டையில் கட்சி மற்றும் அமைப்பு வேறுபாடுகளைக் களைந்து நாம் அனைவரும் செயற்பட வேண்டும். அதனையாவது நாம் கடந்த ஒருவருடத்தில் எட்டினோமா?

ஒரே ஒரு நம்பிக்கை என்னவெனில், அதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுத் தற்போதும் நடைபெற்று வருகின்றன. அதாவது இழந்த மண்ணை மீட்பது என்ற பொதுக்கொள்கையைக் கூட ஏற்றுக்கொண்டு ஒன்றாக செயற்படுவதற்கு தமிழ் அமைப்புக்களும், கட்சிகளும் விரும்பவில்லை என்பது தான் ஒரு வரிச் செய்தி.

கடந்த ஒருவருடத்தில் அனைத்துலக மட்டத்தில் எமது செயற்பாடுகள் எவ்வாறு இருந்தன.

எமது அரசியல் கட்சிகள் உலகில் உள்ள வல்லரசுகளுடன் தமது அணிசேரா நலன்சார் நல்லுறவை வளர்த்துக் கொண்டார்களா? புலம்பெயர் அமைப்புக்களும், செயற்பாட்டாளர்களும் தாம் வாழும் நாடுகளுக்கு அப்பால் ஒரு உலகம் உள்ளது என்பதை அறிந்து, உறவை விருத்திசெய்ய முனைந்தார்களா?

விடுதலைப் புலிகளைத் தடை செய்து, அவர்களின் ஆயுதக்கப்பல்களை அழித்து, தமிழர்களை நிராயுதபாணிகளாக்கிச் சிங்கள அரசின் முன் மண்டியிட வைத்த அமெரிக்கா, எமக்கான தீர்வைப் பெற்றுத்தரும் என நம்பும் ஒரு தரப்பினரும், தனது பிராந்தியம் பறிபோனலும் பரவாயில்லை தமிழர்களைப் பழிவாங்க வேண்டும் என இன அழிப்பில் துணை நின்ற இந்தியா தீர்வைத்தரும் என நம்பும் ஒரு தரப்பினரும் இன்றும் வலுவாக உள்ளனர்.

ஆனால் பொருளாதார ரீதியாகவும், படைத்துறை ரீதியாகவும் அசுரவேகத்தில் வளர்ந்து வரும் சீனா தான் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்றது என்பதை மட்டும் நாம் உள்வாங்க மறுக்கிறோம். அது மட்டுமல்லாது, உலகில் உள்ள ஏனைய நாடுகளுடனும் எமக்கான உறவுகள் என்பது கிடையாது.

நாம் ஒரு நாடற்றவர்களாக இருக்கலாம். ஆனால் தமிழ் இனம் என்ற ரீதியில் நாம் எமக்குள்ள முக்கியத்துவத்தை நம்ப மறுக்கிறோம்.

மேற்குலகம் தனது நலன்சார்ந்து கொண்டுவரும் தீர்மானங்களையும், வெளியிடும் அறிக்கைகளையும் போற்றிப் புகழ்பாடுவதும், சில அமைப்புக்களும் கட்சிகளும் மேற்கொள்ளும் நடைமுறைச்சாத்தியமற்ற விடயங்களை நம்புவதும், இலங்கையின் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றம் சென்று அங்கு இலங்கை அரசை விமர்சித்துப் பேச்சை மட்டும் நிகழ்த்திவிட்டு உறங்குநிலைக்கு செல்லும் தமிழ் அரசியல்வாதிகளை கொண்டாடுவதும் எமது அரசியல் அறிவீனத்தின் வெளிப்பாடு மட்டுமல்லாது, காலத்தைக் கடத்தும் செயலுமாகவே பார்க்கப்பட வேண்டும். கடந்த ஒரு வருடத்தில் நாம் மேற்கொண்ட செயற்பாடுகளில் இவை தான் அதிகம்.

ஆனால் இலங்கை அரசைப் பொறுத்தவரையில் கடந்த ஒரு வருடத்தில் பல முன்நகர்வகளை சாதித்துள்ளது. ஆளுமையுள்ள புதிய வெளிவிவகார அமைச்சரை நியமித்தது. சீனாவுக்கும், இந்தியாவுக்கும் ஆளுமையுள்ள தூதுவர்களை நியமித்து காய்களை நகர்த்தியது. அதன் மூலம் சீனாவைப் பகைக்காது தனது பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க இந்தியாவை களமிறக்கியது.

இந்துவும் பௌத்தமும் ஒன்று

இந்துவும் பௌத்தமும் ஒன்று என்ற புதிய தத்துவத்தை குஷிநகர விமான நிலையத்தின் திறப்புவிழாவில் நிறுவியது. இலங்கையில் கூட பிரபலம் பெறாத சிங்களப் பாடலுக்கு இந்தியாவில் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது. ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையில் பகையை வளர்த்தது. அமெரிக்காவை எரிசக்தித் திட்டத்தில் இணைத்ததுடன், தனது இராணுவத்தளபதியை ரஸ்யாவுக்கும் அனுப்பி கெளரவித்தது. ஈரானையும் அரவணைத்தது. அதேசமயம் இஸ்ரேலையும் அரவணைத்தது.

தனது அறிவையும், ஆற்றலையும் உலகிற்கு வழங்கியவன் தமிழன் என்று சிலர் கூறுகின்றார்கள். அது உண்மையோ பொய்யோ எனக்கு தெரியாது. ஆனால் நடைமுறைச் சாத்தியமான அரசியல் இராஜதந்திர பாடத்தையாவது நாம் எமது வெட்கத்தை விட்டு எதிரியிடம் இருந்தாவது கற்றுக்கொள்ள வேண்டும். அது எம்மை முன்நகர்த்தும்.

 

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad இடப்பெயர்வு நினைவு தினம் 25 இல் இருந்து 26 ஆண்டாக மாறியது, ஆனால் நாம்? - வேல்ஸ் இல் இருந்து அருஸ்

1 COMMENT

  1. […] யாழ். குடாநாட்டு இடப்பெயர்வு இடம்பெற்று இந்த வருடத்துடன் 26 ஆண்டுகள் ஆகின்றன. இடப்பெயர்வு நினைவு தினம் ஒரு இனப்படுகொலை அரசிடம் இருந்து தப்பிப்பதற்காக இலட்சக் கணக்கான மக்கள் தமது வாழ்நிலங்களையும், உடைமைகளையும் கைவிட்டு ஒரே இரவில் இடம் பெயர்ந்த அவல தினம் அது.  […]

Leave a Reply