“உலகுக்கான உங்களின் சாளரம்” – கேளொலிக் காணொளிப் பாரம்பரிய அனைத்துலக நாட்சிந்தனை – மூத்த ஊடகவியலாளர் சூ.யோ. பற்றிமாகரன்

 

Capture 1 “உலகுக்கான உங்களின் சாளரம்” - கேளொலிக் காணொளிப் பாரம்பரிய அனைத்துலக நாட்சிந்தனை - மூத்த ஊடகவியலாளர் சூ.யோ. பற்றிமாகரன்

ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலகக் கேளொலிக் காணொளிப் பாரம்பரிய அனைத்துலக தினமாக, ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மக்கள் இனத்தின் விலைமதிப்பற்ற கூட்டு நினைவுகளைப் பாதுகாத்து அந்த மக்களின் அடையாளத்தை உலகில் பேணுகின்ற அறிவியல் தொழில்நுட்ப ஆற்றலாக கேளொலிக் காணொளிப் பதிவுகளும் அவற்றின் பாரம்பரியமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இத்தினத்தை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்தமைக்கான முக்கிய விளக்கமாக அமைகிறது. இவ்வாண்டு “உலகுக்கான உங்களின் சாளரம்” என்னும் மையக்கருத்தை ஐக்கிய நாடுகள் இத்தினத்திற்காகக் கட்டமைத்திருப்பது, ஒவ்வொரு மக்களினத்திற்கும் இந்தக் கேளொளிக் காணொளிப் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியாக உள்ளது.

அத்துடன் கேளொலிக் காணொளிப் படைப்புக்களின் சேகரிப்புத் தளமொன்றின் முக்கியத்துவத்தையும் இந்நாள் உணர்த்துகிறது. கேளொலிக் காணொளிப் பாரம்பரியமே எங்களின் விலைமதிப்பற்ற கூட்டு நினைவுகளின்  சாளரமாக விளங்கி, எங்களை உலகுக்கு இனங்காட்டும் பேராற்றல் என்பதை ஒவ்வொருவரும் மனதிருத்தல் முக்கியம்.

உலகுக்கான உங்களின் சாளரம்ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் பிரித்தானிய காலனித்தவ ஆட்சியில் இருக்கும் பொழுது மார்க்கோனி கேளொலி ஒலிபரப்பைத் தொடங்கிய காலத்திலேயே அவர்களின் கேளொலிப் பாரம்பரியம் ஆங்கில மொழி ஒலிபரப்புக்கள் வழி ஆரம்பமாகியது. இலங்கை பிரித்தானியா வில் இருந்து சுதந்திரம் பெற்ற ஆரம்ப கால கட்டங்களில் கொழும்பில் இருந்து ஒலிபரப்பாகிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் வர்த்தக சேவை என்னும் கேளொலித்தளம் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, தென்னிந்தியத் தமிழர்களுக்கும் அவர்களுக்கான அறிவூட்டல், மகிழ்வூட்டல், தகவலளித்தல் தளமாகத் திகழ்ந்தது. இந்திய வானலைக்குள் இலங்கையிலிருந்து ஒலிபரப்பு செய்வதைத் தடுத்தாலே இந்திய வர்த்தகப் பொருளாதாரம் பலம்பெறுவதற்கு இவ்ஒலிபரப்புத் தடையாக உள்ளது என்னும் நோக்கில் இந்திய ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் சில உடன்படிக்கைகளைச் செய்து, இவ்ஒலிபரப்பைத் தென்னிந்திய வான்பரப்பில் பரவவிடாது தடுத்தது.

இதற்கு கையூட்டாக, மலையகத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் தொடர்பான விடயங்களில் இலங்கைச் சிங்கள பௌத்த பேரினவாதத் தலைமைகளுக்குச் சாதகமான முறையில் நடந்து, இந்த இரு மக்களினங்களுக்குமான நிலவுரிமை இழப்புக்குப் பக்கத்துணையாக இந்தியா அமைந்தது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. இதனால் தோற்றம் பெற்ற இலங்கையில் மலையகத் தமிழர்களதும், ஈழத்தமிழர்களதும் நிலவுரிமை இழப்பை மண்மீட்பு முயற்சிகள் வழியாக அவர்கள் பெற்றுக் கொள்ளாதவாறு சிறுபான்மையினங்களின் பிரச்சினை, மொழிப் பிரச்சினை, இனப்பிரச்சினை என்ற கருத்தியல்கள் தோன்றவும், இந்தக் கேளொலிப் பாரம்பரியம் அவ்வகையில் மனச்சாட்சிகளை உற்பத்தி செய்தன என்பது இலங்கையில் தமிழர்களின் ஊடக வரலாறாக உள்ளது.

இந்நிலையில் 1992இல் இலண்டனில் மீள் தோற்றம் பெற்று இருவாரத்திற்கொருமுறை வெளிவந்த ‘களத்தில்’ பத்திரிகையும் அதன் கேளொலி வளர்ச்சியான  இலண்டனில் தோற்றம் பெற்ற ‘அனைத்துலக கூட்டுத்தாபனம் தமிழ்’ என்னும் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களின் 24 மணிநேர கேளொலியும் அதனைத் தொடர்ந்து புதிய மில்லேனியத்தின் தொடக்கத்துடனேயே தோற்றம் பெற்ற ‘தமிழர் காணொளி வலையமைப்பு’ என்னும் 24 மணிநேரக் காணொளியுமே  ஈழத்தமிழ் மக்களின் மண் மீட்புக்கான அனைத்துலக செவிப்புலனமாகவும், கட்புலனமாகவும்  உலகெங்கும் உள்ள தேசங்கடந்துறை ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, தாயகத், தமிழக மக்களுக்கும் தமிழ் மொழியின் அடையாளமாகவும், தமிழின இனத்துவ அடையாளமாகவும் 2009 வரை உலக வானலையில் வலம் வந்தன.

இவைகள் காலக்கெதியில் தங்களின் தமிழ்த் தேசியத் தன்மையை இழந்து, வர்த்தகமயப்பட்டதன் பின்னர் இன்று வரை ஊடக வெளி வெறுமை என்பது தமிழ் மக்களின் அரசியல் அடையாள இழப்பாக மட்டுமல்ல, அவர்களின் இருப்பின் குலைப்பாகவும் மாறும் நிலை World Day for Audiovisual Heritage October 27th “உலகுக்கான உங்களின் சாளரம்” - கேளொலிக் காணொளிப் பாரம்பரிய அனைத்துலக நாட்சிந்தனை - மூத்த ஊடகவியலாளர் சூ.யோ. பற்றிமாகரன்வேகமாகி வருகிறது. இந்நிலையில் தமிழர்களின் தாயகத்தை அவர்கள் இந்த மண் எங்களின் சொந்த மண் என்று எந்தத் தடையுமின்றிச் சொல்வதற்கு ஆற்றலளிக்கும் சாளரமாகத் தமிழர்கள் மாற்றியமைத்தாலே நாளைய உலகத் தமிழினத்தின் கோளொலிக் காணொளி வல்லமைகள் இனத்துவத்தையும், மொழித்துவத்தையும் அவர்கள் இழந்திடாது காக்கும் சத்தியை இளந்தமிழ்த் தலைமுறைக்கு உலகெங்கும் கொடுக்க இயலும்.

தமிழர்கள் இடை ஓருமைத்தன்மை

இதற்கு தமிழர்கள் இடை ஓருமைத்தன்மை மிக முக்கியம். ஒருமை என்றவுடன் தமிழக, ஈழ, மலேசிய, சிங்கப்பூர், ஆபிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய நாட்டுத் தமிழர்களை எல்லாம் ஒன்று என்று எண்ணிக்கை அடிப்படையிலான இணைப்பாக அதனைக் கருதுவது தவறு. அவரவர்கள் தங்கள் தங்கள் நாட்டுக் குடியுரிமைக்கும் சட்டதிட்டங்களுக்கும் உரிய கடமைகளில் வேறுபாடு உள்ளவர் களாகவும், தமிழரின் வறுமை, அறியாமை என்பதை அகற்றுவதில் ஒற்றுமை யுள்ளவர்களாகவும், உலகத் தமிழினமாக மேலெழுவதற்கு அதாவது உலகில் உள்ள எந்தத் தமிழனும் தங்கிவாழாத வாழ்வமைப்பைப் பெறுவதற்கு உலகக் கேளொலிக் காணொளி ஒரே நோக்கில் தமிழர்களுக்கான கேளொலியாகக் காணொளியாகக் கட்டமைக்கப்பட வேண்டும்.

இதற்குத் தலைசிறந்த உதாரணமாக இருப்பது பி.பி.சி என்னும் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். அமெரிக்கக, கனடிய, அவுஸ்திரேலிய, நியூசிலாந்திய, பிரித்தானிய ஆங்கிலமொழி பேசும் அனைவரையும் மொழியால் ஆங்கிலேயர் என்னும் தனித்துவ மொழித்துவ அடையாளக் கேளொலிக் காணொளிப் பாரம்பரியத்துள் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மிக வேறுபாடுகளைக் கடந்து இணைக்கிறது. அப்படியானால் உலகத் தமிழினமும் இந்த ஆற்றலை முன்னுதாரணமாகக் கொண்டு, தங்களின் சமூக மூலதனத்தையும், புத்திஜீவித் தன்மையையும், மனித வளத்தையும் ஒன்றாகக் கேளொலிக் காணொளிப் பராம்பரியத்தின் வழி இணைத்து வாழ முடியும் என்பதே இன்றைய அனைத்துலக கேளொலிக் காணொளிப் பாரம்பரிய நாளின் நம்பிக்கையாக உள்ளது.

 

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad “உலகுக்கான உங்களின் சாளரம்” - கேளொலிக் காணொளிப் பாரம்பரிய அனைத்துலக நாட்சிந்தனை - மூத்த ஊடகவியலாளர் சூ.யோ. பற்றிமாகரன்