Home Blog Page 3086

சஜித் பிரேமதாசாவை களமிறக்க ஐ.தே.க முடிவு – தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் மக்கள் முடிவு

எதிர்வரும் சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசா போட்டியிட உள்ளதாகவும், அது தொடர்பில் கட்சி திட்டமிட்டுவருவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் தேர்தலில் கடந்த பல வருடங்களாக ஐ.தே.கா தோல்வியடைந்து வருகின்றது. எனவே நாம் ஒரு பிரபலமான போட்டியாளரை நிறுத்த வேண்டிய கட்டயத்தில் உள்ளோம் என சமரவீரா தெரிவித்துள்ளதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெக்டர் அப்புகாமி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் தொடர்பில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன, அதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐ.தே.கட்சியோ அல்லது சுதந்திரக் கட்சியோ தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யவில்லை என்பதுடன், தொடர்ந்து நில ஆக்கிரமிப்பையும், திட்டமிட்ட இன அழிப்பையும் முன்னெடுத்து வருவதால் தமிழ் மக்கள் சிங்கள அரச தலைவருக்கான தேர்தலில் பங்கெடுப்பதை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டு நிறைவுடன் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசமும் முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் எண்ணுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

சிறிலங்கா பிரதமர் ரணிலின் பாதுகாப்பு அதிகாரி பலி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு  அதிகாரியான பெர்னான்டோ என்பவர் வியாங்கொட ரயில்வே நிலையத்தில் ரயிலின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ரம்புக்கனையைச் சேர்ந்த இவர் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இவரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியப்படவில்லை.

அரச தலைவருக்கான போட்டியில் இருந்து விலகமாட்டேன் – சிங்கப்பூரில் இருந்து கோத்தா

மக்கள் தனக்கு வழங்கிய ஆணைக்கு ஏற்ப தான் செயலாற்றப் போவதாகவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தான் அரச தலைவருக்கான போட்டியில் இருந்து விலகப்போவதில்லை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

நேற்று (3) அவரை பார்வையிடுவதற்காக சிங்கப்பூர் சென்ற ஒரு தொகுதி சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருதைய அறுவைச் சிக்சைக்கு பின்னர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் கோத்பாயா ஒய்வெடுத்து வருகின்றார்.

சிகிச்சைக்கு பின்னர் தான் விரைவாக நலமடைந்து வருவதாகவும், அரச தலைவருக்கான போட்டிகளில் இருந்து தான் ஒருபோதும் விலகப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் தேர்தலுக்கு ஐந்து மாதங்களே உள்ள நிலையில் அதற்கான தயாரிப்பு வேலைகளை தான் எவ்வாறு மேற்கொண்டு வருகின்றார் என்ற விளக்கத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்னா ரணதுங்கா அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முன்னர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் கோத்தபாய தற்போது அவருக்கு எதிராக அமெரிக்கா வழக்குகளை முன்னெடுத்து வரும் நிலையில் சிங்கப்பூர் வைத்தியசாலையை நாடியுள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவின் அரச தலைவருக்கான தேர்தலில் தாம் எவரையும் ஆதரிக்கப்போவதில்லை என தமிழ் மக்கள் முடிவெடுத்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது? – கணிதன்      

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதீத நம்பிக்கை வைத்து தமது நாளாந்த பிரச்சினை முதல் அரசியல்தீர்வுவரை அனைத்தையும் அடைய எதிர்பார்த்திருந்தனர். யார் கண் பட்டதோ கூட்டமைப்பின் ஒற்றுமை அன்றிலிருந்தே சிதைய ஆரம்பித்து விட்டது.

ஒற்றுமை சிதைவடைவதை அறிந்த பின்னரும் எந்தவொரு தனிநபரோ அல்லது கட்சியோ தமக்கான விடிவைக் கொண்டுவராது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருந்தனர். அதன் விளைவாகவே கூட்டமைப்பைப் பயன்படுத்தி தமிழரசுக் கட்சி தன்னை வளர்த்துக்கொண்டபோதிலும், இதனை நன்குணர்ந்த நிலையிலும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே தமது முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தனர். அதனால்தான் 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் கூட்டமைப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்றிருந்தது.

ஆயுதப்போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில், அனைவரும் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்திய வேளையில், தற்பொழுது யுத்தநிறுத்தம் மேற்கொண்டால் அது புலிகளுக்கு ஒட்சிசன் வழங்கியதுபோல் ஆகிவிடும் என்று கூறிய புளொட்டையும் கூட அது கூட்டமைப்பில் இணைந்துகொண்ட ஒரே காரணத்திற்காக தமிழ் மக்கள் தற்காலிகமாக அதன் தவறை மறந்து அதற்கும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

புளொட் கூட்டமைப்பில் இணைந்த உடன் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களின் பரப்புரையின்போது அதன் தலைவர் திரு.சித்தார்த்தன், “அரசியல் கட்சிகள் இணைந்துவிட்டோம். இனி மக்கள் தாங்கள் ஐக்கியமாக இருக்கிறோம் என்பதையும் எங்களது ஐக்கியத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்பதையும் அனைவருக்கும் தெரிவிப்பது, தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோகமாக வெற்றியடையச் செய்வதிலேயே தங்கியுள்ளது” என்றும் கேட்டுக்கொண்டார். மக்களும் தாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்குத் தயாராக இருப்பதை தேர்தல்களின் மூலம் தெளிவாகவே வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்ட உடன் நடைபெற்ற 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இலங்கை தமிழரசுக் கட்சி தனது மக்கள் விரோதக் கொள்கையை ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் உட்கட்சி சனநாயகப் போராட்டத்தினூடாக தமிழரசுக் கட்சியை வழிக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்று அப்போது அங்கத்துவக் கட்சிகள் நம்பின.

பின்னர் சில அங்கத்துவக் கட்சிகள் என்ன காரணத்திற்காகவோ தமிழரசுக் கட்சி கிழித்த கோட்டைத் தாண்ட மறுக்கின்றன. இதுவே தமிழரசுக் கட்சி இன்று தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்து, மக்கள் வழங்கிய ஆணைகளுக்கு மாறாக, எதேச்சாதிகாரமாகச் செயற்படுவதற்கும் அங்கத்துவக் கட்சிகள் கையறு நிலைக்குச் சென்றிருப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் காரணமாக 2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கையின்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதன்போது 2010ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னிக்கு நேரடியாகச் சென்று மீள்குடியேறிய மக்களைச் சந்தித்து இறுதி யுத்தத்தின்போது அவர்களது அனுபவங்களையும் இழப்புக்களையும் குறித்து தாம் சேகரித்திருந்த சாட்சியங்களை ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்தில் கையளிக்க முடிவு செய்திருந்தனர்.

ஆனால் பின்னர் அமெரிக்கா அதனை விரும்பவில்லை என்று காரணம்கூறி தமிழ் மக்கள் வழங்கிய ஏகோபித்த ஆதரவின் காரணமாக தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த சுமந்திரன் தெரிவித்தார். இதிலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் விரோதச் செயற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன.f3 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது? - கணிதன்      

2012ஆம் ஆண்டு பிரேரணையை அன்றைய மகிந்தராஜபக்ச அரசாங்கம் நிராகரித்திருந்தது. அதன் பின்னர் அமெரிக்கா  மீண்டும் 2013ஆம் ஆண்டு ஒரு பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இந்தக் கூட்டத்தொடரில் அரசாங்கத்துடன் எதிர்க்கட்சியிலிருந்த மங்கள சமரவீரவும் பங்குபற்றியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இதிலும் இலங்கை அரசாங்கம் ஏராளமான விடயங்களை ஏற்க மறுத்திருந்தது. இந்த நிலையில்தான் சுமந்திரன், மங்களசமரவீர, ரணில், சந்திரிகா அம்மையார் போன்றவர்கள் அவ்வப்போது சிங்கப்பூர் சென்றுவந்தனர்.

இலங்கை அரசாங்கத்தின் மெத்தனப்போக்கு சர்வதேச சமூகத்தினருக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்தது. இதன் பயனாகவே அவர்களின் முயற்சியால் 2015ஆம் ஆண்டு சனாதிபதியாக மைத்திரிபால சிறீசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்பொழுதிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து தமிழ் மக்களின் நலன்களைப் புறந்தள்ளிச் செயற்படத் தொடங்கிவிட்டது.

சனாதிபதித் தேர்தல் நேரத்தில் எந்த மைத்திரிக்காக வக்காளத்து வாங்கி தமிழரசுக் கட்சி செயற்பட்டதோ அதே கட்சி பின்னர் அவருக்கு எதிராக மட்டுமே செயற்பட ஆரம்பித்தது. 2015ஆம் ஆண்டு மார்ச்மாத ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நடக்கவிருந்த விவாதத்தை திருவாளர் சுமந்திரனும் மங்கள சமரவீரவும் அவசர அவசரமாக அமெரிக்காவிற்கும் ஜெனீவாவிற்கும் பறந்தோடி அதனை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடத்துவதற்கு வேண்டுகோள் விடுத்தனர்.EC21D243 A0C4 4EE4 82ED CB5EF70D1273 1 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது? - கணிதன்      

இந்த நேரத்தில் இலங்கைக்கு நேரடியாக விஜயம் செய்து கள ஆய்வுகளை மேற்கொண்டு மக்களிடமிருந்து நேரடியாக வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொண்டு தமது அறிக்கையை சமர்ப்பிக்கவிருந்த அன்றைய மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் திருமதி நவீப்பிள்ளை தனது பதவிக்காலம் முடிவடைந்து விடைபெறுகிறார். அவர் சமர்ப்பித்திருந்த இடைக்கால அறிக்கையிலேயே இலங்கை குறித்து காட்டமான கருத்துக்களை முன்வைத்திருந்தார். அவர் பதவியில் இருந்தபோது இந்த விவாதம் நடைபெற்றிருந்தால் இலங்கை பாரிய அழுத்தத்திற்கு முகங்கொடுத்திருக்கும். இதிலிருந்து இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றியவர்கள் தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அன்றைய வெளிவிவகார அமைச்சருமே.

இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அன்றைய மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் திரு.சையத் றாட் அல் ஹசைன் நவீப்பிள்ளையின் அறிக்கையை மையப்படுத்தி தனது காட்டமான விமர்சனங்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்திருந்தார். இலங்கை இனியும் தனது நாட்டில் நடைபெற்ற விடயங்கள் குறித்து விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல முன்மொழிவுகளைச் செய்திருந்தார்.

இதன்போது மீண்டும் திருவாளர் சுமந்திரன் அமெரிக்காவிற்கும் ஜெனீவாவிற்கும் பறந்து அதனை நீர்த்துப் போகச் செய்து இலங்கையில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஒரு கலப்பு விசாரணைப் பொறிமுறையினை மேற்கொள்வதற்கான திருத்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றி இலங்கை அரசாங்கத்தையும் அதற்கு இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொள்ளச் செய்திருந்தார். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. இதுவே 30/1 தீர்மானம் என்று அழைக்கப்படுகிறது.INDIA SRI LANKA F Cadaveri tamil தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது? - கணிதன்      

தமிழரசுக் கட்சியின் அன்றைய தலைவரான திரு.சம்பந்தரினால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு வடக்கு மாகாண முதலமைச்சாராக முடிசூட்டி வைக்கப்பட்ட திருவாளர் விக்கினேஸ்வரன் அவர்கள் இதிலிருந்துதான் தனது தலைவர்களுடன் முரண்பட ஆரம்பித்தார். இதனாலேயே அவர் அன்றைய நாடாளுமன்றத் தேர்தலின்போது இரட்டைப்பொருள்பட தமிழர்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 நடைமுறைப்படுத்தாத நிலையில், அதில் எத்தகைய மாற்றமுமின்றி 34/1 தீர்மானத்தின் மூலம் மேலும் இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டிருந்த போதிலும், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான போராட்டம் சர்வதேசமயப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கம் யுத்தம் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றுள்ளது. அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. மனிதகுலமே வெட்கித் தலைகுனியும் செயல்கள் இடம்பெற்றுள்ளன என்று சர்வதேச நாடுகள் தெரிவிக்கும் அளவிற்கும் அதனோடு மட்டுமல்லாமல் இத்தகைய செயற்பாடுகள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சர்வதேச சமூகம் கருத்துரைக்கும் அளவிற்கு ஆயுதப் போராட்டம் பல கதவுகளைத் திறந்திருந்தது.

அரசியல் தீர்வு இதோ வரப்போகிறது. பொங்கலுக்குள் வந்துவிடும் தீபாவளிக்குள் வந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திருவாளர் சம்பந்தன் திருவாய் மலர்ந்திருந்தார். அதற்கான எத்தகைய முன்முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஐ.நாவில் இலங்கைக்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுத்து சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெற்றிருந்த தேசிய இன விடுதலைப் போராட்டத்தை அரசாங்கத்துடன் இணைந்து நீர்த்துப் போகச் செய்வதில் முனைப்புடன் செயற்பட்ட பெருமை இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் அதன் சிரேஸ்ட தலைவர் திருவாளர் சம்பந்தரையும் அவரது கைப்பாவையும் ரணிலின் செல்லப்பிள்ளையுமான சுமந்திரனையுமே சாரும்.

அரசியல் தீர்வு ஒருபுறம் இருக்கட்டும். இவர்களது இவ்வளவு விட்டுக்கொடுப்புகளும் முண்டுகொடுப்பும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ததா? காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுத்ததா? இராணுவத்தினரும் அரசாங்கத்தின் திணைக்களத்தினரும் அடாத்தாகக் கபளீகரம் செய்துள்ள தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டதா?

அரசியல் தீர்விற்காக அனைத்தையும் ஒத்திவைத்திருப்பதாக திருவாளர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். அதற்காகவே முன்னர் மைத்திரி – ரணில் அரசாங்கம் கொண்டுவந்த அனைத்து விடயங்களையும் கேட்டுகேள்வி இன்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறுவதற்கு உதவினார். இன்று வடக்கு-கிழக்கில் குவிந்துள்ள இராணுவத்தினரை வெளியேற்றக்கோரி நீலிக்கண்ணீர் வடிக்கும் கூட்டமைப்பின் எம்பிக்கள், கடந்த நான்கு வருடங்களாக பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அதிகளவு நிதியை எதிர்த்து ஒரு வசனம் கூட பேசாமல் அல்லது நாடாளுமன்றத்தில் வாய்கிழிய கத்திவிட்டு பின்னர் அதற்கு ஆதரவாகத்தானே வாக்களித்துள்ளனர்.

சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ரணிலால் வெற்றிபெற முடியாது என்பதால்தானே பத்தொன்பதாவது திருத்தத்தின் மூலம் சனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைத்து அதனை பாராளுமன்றத்தினூடாக பிரதமருக்கு வழங்கும் 19ஆவது திருத்தத்தை ஐ.தே.கவுடன் இணைந்து சுமந்திரன் தயாரித்தார். அதற்கு தனது சகாக்கள் அனைவரையும் ஆதரவளிக்கச் செய்தார். நூறுநாள் வேலைத்திட்டத்தில் இதனை நிறைவேற்ற முடிந்த சம்பந்தர் கூட்டத்திற்கு நான்கு ஆண்டுகளில் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையே.

ஒவ்வொருமுறை வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்கும் அரசாங்கத்தை நெருக்கடியிலிருந்து காப்பதற்கும் ஏதோவொரு வெகுமதியைக் கூட்டமைப்பினர் பெற்றுக்கொண்டுள்ளனர். முதலில் நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு புதிதாக வந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே தீர்வையற்ற வாகனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. இதுவும் கூட்டமைப்பினரை மையப்படுத்தியே வழங்கப்பட்டது.

அரசியல் நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை ஆமோதித்ததற்காகவும் 2018ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்ததற்காகவும் அவசர அவசரமாக உருவாக்கபப்ட்ட உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்த சட்டத்திற்கு கண்மூடி ஆதரவு வழங்கியதற்காகவும் கூட்டமைப்பின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி நிதியாக தலா இரண்டரை கோடி ரூபாய் பெற்றுக்கொண்டனர்.

2018ஆம் ஆண்டில் எமது பிரச்சினைகளை திட்டமிட்டு திசை திருப்புவதற்காகவே மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தில் வேண்டுமென்றே சனாதிபதிக்கு எதிரான நிலையெடுத்து, ரணிலைக் காப்பாற்றி தனியாக ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க வழிசெய்தமைக்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரும் அபிவிருத்தி என்னும் போர்வையில் பெற்றுக்கொண்ட தொகை நாற்பது கோடி.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரம் உயர்த்தித் தருவதிலோ தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதிலோ அக்கறையின்றி இருப்பதுடன் அவற்றிற்கு சாட்சிகளாக நின்று காணி உறுதி வழங்குவதும் எதனடிப்படையில்? தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தி அதில் பௌத்தவிகாரைகள் அமைப்பதை தடுக்க முடியாமலிருப்பதன் காரணம் என்ன? தலைவரின் சொந்தத் தொகுதியிலேயே வரலாற்றுச் சிறப்பு மிக்க வெந்நீரூற்றைக் காக்க முடியாமல் போனது ஏன்?B562AF08 6B8A 4260 8779 E2C87B01BD78 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது? - கணிதன்      

தமிழ் மக்களின் நலன்களை வென்றெடுத்து தருவோம் எங்களை நம்புங்கள் நான் இருக்கிறேன் என்று சொல்லி நம்பிக்கையூட்டி அவர்களை நடுத்தெருவில் விட்டதற்கான சன்மானங்களா அவை? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த செயலை எப்படி அழைப்பது?

ஆங்கிலத்தில் என்றால் நெகோசியேட்டர், பார்கைனர், பெசிலிடேட்டர், புரோக்கர், கமிசன் ஏஜென்ட் என்று சூழலுக்கேற்ப அவர்களை அழைப்பதற்குப் பலவகையான சொற்கள் உள்ளன. ஆனால் இவைகளுக்கு தமிழில் தரகர் என்ற சொல்லே பாவனையில் உள்ளது.  வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மக்களின் மன ஓட்டத்தை தனக்குத் தெரிந்த சொல்லில்  அதனைக் கூறியுள்ளார்.

இனப்படுகொலைக்கு உள்ளான நாம்    நீதியினை கோராமல் விட முடியுமா? – நேர்காணல்

நேர்காணல் – யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றிய செயலாளர் பபிலராஜ்

யாழ்ப்பாணப்  பல்கலைக்கழகத்தில்  அன்றாட செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன ?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த பதற்றமான சூழல் மெல்லத் தணிந்து விட்ட நிலையிலும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் இன்றும் பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தினரை நிறுத்தி வைத்திருப்பதானது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக சூழல் வழமைக்கு திரும்ப தடையாகவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அன்றாட செயற்பாடுகள் வழமை போன்று சுமூகமான முறையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இருந்த போதிலும் இன்றும் பல்கலைக்கழகத்திற்குள் உட்பிரவேசிக்கும் அனைவரும் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திவிட்டுச் செல்லும் வகையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்கலைக்கழக அடையாள அட்டையினை நுழைவாயிலில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பரிசீலித்து உள்ளே அனுமதிப்பதுடன் புத்தகப்பைகளும் சோதனையிடப்படுகின்றன .

நாட்டில் ஏற்பட்டிருக்கக் கூடிய அசாதாரண சூழ்நிலையில் பல்கலைக்கழத்தின் பாதுகாப்பினை உறுதிப் படுத்துவது அவசியம் ஆனாலும் பாடசாலை மாணவர்களின் அன்றாட சுமூகமான செயற்பாடுகளுக்கு இச் செயற்பாடானது இடையூறாக உள்ளது போன்றே எம்மால் உணர முடிகின்றது .

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் நீங்கள் உட்பட சிற்றுண்டிச்சாலை  ஊழியரின் கைது விடுதலையின்  தற்போதைய  நிலைமைகள்  என்ன ?

நாட்டில் ஏற்பட்டிருக்கக் கூடிய அசாதாரண சூழ்நிலையினை தமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு நன்கு திட்டமிட்ட வகையில் மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரினை கைது செய்யும் நோக்குடனே இராணுவம் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது என்றே எம்மால் ஊகிக்க முடிகின்றது. ஏனெனில் பொது வெளியில் மாவீரர் நாள் அனுஷ்டிக்க அனுமதியளிக்கப்பட்ட நிலையிலும் இனப்படுகொலை நினைவு நாளினை நினைவு கூர அனுமதியளிக்கப்பட்ட நிலையிலும் எம்மை இனப்படுகொலைகள் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட ‘பதாதைகள்’ அரசுக்கு எதிரானவை என்று குற்றம் சாட்டப்பட்டும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவை மாணவர் ஒன்றிய தலைவரின் அலுவலக அறையிலும் மற்றும் மாணவர் ஒன்றிய செயலாளரின் அலுவலக அறையிலும் இருந்மையினால் மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் நானும் கைது செய்யப்பட்டோம் .

மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலையில் தொங்கவிடப்பட்டிருந்த தியாகி திலீபனின் புகைப்படத்தினை காரணம் காட்டி சிற்றுண்டிச் சாலை நடத்துனரும் கைது செய்யப்பட்டார் .

மேலும் மாணவர் ஒன்றிய அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட்ட ‘பதாதைகள்’ இனப்படுகொலைக்கு நீதி கோருவதாக அமைவதனால் அவை அரசுக்கு எதிரானவை நாட்டில் இனங்களுக்கிடையிலான பிளவினை ஏற்படுத்தப் போகின்றோம் என்ற வகையில்  குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்கள். இத்தனைக்கும் பொது வெளியில் பல்வேறு அமைப்புக்களும் இனப்படுகொலைக்கு நீதி கோரி போராட்டங்களை மேற்கொண்டுள்ளன .

இனப்படுகொலைக்கு உள்ளான நாம் அதற்கு நீதி கோருவது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்பதற்காக நாம் நீதியினை கோராமல் விட முடியுமா? அப்படியானால் காவியுடை தரித்த பிக்குகள் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அட்டூழியங்கள் மட்டும் என்ன இன ஐக்கியத்தினை ஏற்படுத்துகின்றது .

எமது கைது நன்கு திட்டமிடப்பட்ட ஒன்றுதான் என்பதற்கான ஆதாரங்களையும் வெகு விரைவில் அம்பலப்படுத்துவோம் .

விடுதலையின் பின்னரான நிலை என்னும் போது இதனை நாம் முழுமையான விடுதலையாக கருதவில்லை. தற்சமயம் பிணையிலேயே விடுவிக்கப்பட்டுள்ளோம். வழக்கிலிருந்து விடுபட்டு முழுமையான விடுதலையினைப் பெற்றுக் கொள்வதே எமது நோக்கம். அதற்கான முன்னகர்வுகளினை மேற்கொள்ள பல்கலைக்கழகம் எமக்கு என்றும் பக்கபலமாக இருக்கும் என்று நம்புகின்றோம் .

அவசரகாலச் சட்டமும்  பயங்கரவாதச் சட்டமும் நடைமுறையில்  இருக்கின்றமை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினை  பதற்றத்திற்குள்  அல்லது கட்டுப்பாட்டிற்குள்  வைத்திருப்பதாக  உணர்கின்றீர்களா ?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான சூழ்நிலையில் அக்குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய தரப்புக்களினை கைது செய்ய வேண்டிய சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை அடக்கு முறைக்குள் வைத்திருக்க முனையும் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் விம்பமாக யாழ் பல்கலைக்கழகமோ அல்லது மாணவர் ஒன்றியமோ செயற்படுவதனை விரும்பவில்லை என்பதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்காலத்தில் தமிழின அடக்கு முறைகளுக்கு எதிராக நீதி கோரி குரல் எழுப்புவதினை தடுக்கும் வகையில் அல்லது இவ்வாறு குரல் எழுப்ப முடியாத சூழலிற்குள் பல்கலைக்கழக மாணவர்களினை கட்டுப்படுத்தி இன்றைய சூழ்நிலையினை சரியாக கையாள்கின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது .DSC 0141 1080 இனப்படுகொலைக்கு உள்ளான நாம்    நீதியினை கோராமல் விட முடியுமா? - நேர்காணல்

பல்கலைக்கழக மாணவர் தலைவர்களினை கைது செய்வதன் மூலமாக ஒட்டுமொத்த மாணவ சமூகத்தினையும் அடக்க முடியும் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள். மாணவர் சக்தியின் மகத்துவத்தினை அறியாது மாணவர்கள் மீது அடக்கு முறையினை ஏவ முற்படும் ஆட்சியாளர்கள் அதற்கான பிரதி பலன்களை நிச்சயமாக அனுபவிப்பார்கள்

யாழ் பல்கலைக்கழகம் மீது கழுகுப் பார்வை தொடரும் அதே நேரம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் படை முகாம் காணப்படுவதாக கூறப்படுவது பற்றி உங்களது நிலைப்பாடு?

யாழ் பல்கலைக்கழகத்தின் மீதான கழுகுப் பார்வையானது இன்று நேற்றல்ல அது காலாகாலமாக இருந்து வருகின்ற ஒன்றாக உள்ள போதும் மீண்டும் தற்போது அத்தகைய கழுகுப் பார்வை உச்சம் பெற்றுள்ளது என்றே கூற முடியும். தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்திலும் சரி தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் சரி மாணவர் ஒன்றியம் கணிசமான பங்கினை வகித்து வருவதால் எம் மீது அரச புலனாய்வுத் துறையின் கழுகுப் பார்வை தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

மாணவர் ஒன்றியத்திற்கு நெருக்கடிகளைக் கொடுப்பதன் மூலமாக அடக்கு முறைக ளுக்கு எதிரான மாணவர்களின் சனநாயகப் போராட்டங்களினை மழுங்கடித்துவிட முடியாது. எத்தகைய அடக்கு முறைகள் தொடர்ந்தாலும் மாணவர் சக்தி அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராட என்றுமே தயங்கப் போவதில்லை.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பாக அதன் உண்மைத் தன்மைகளினை அறியாமல் அது தொடர்பில் கருத்துக் கூற விரும்பவில்லை. இருந்தாலும் அவ்வாறு படை முகாம் அமைக்கப்பட்டிருந்தால் அது  கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும் .

யாழ் பல்கலைக்கழகம் உட்பட வட கிழக்கு தமிழர் தாயகத்தில்  சுமூகமான  நிலைமைகள்  ஏற்படுவதற்கு மாணவர்களின்  வகிபாகம் எவ்வாறாக உள்ளது ?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான பதற்றமான சூழ்நிலையில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களினை மீளத் தொடங்குவதற்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது பல்கலைக்கழக நிர்வாகம் இராணுவம்   பல்கலைக்கழகத்தினை முழுமையாக சோதனையிட அனுமதியளித்தது. சுமூகமான முறையில் கல்விச் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவும் மாணவர்கள் நம்பிக்கையுடன் மீண்டும் கல்வி கற்பதற்கான சூழல் உள்ளது என்பதனையும் உறுதிப்படுத்துவதில் மாணவர் ஒன்றியம் கரிசனை கொண்டிருந்தமையால் அத்தகைய சோதனை நடவடிக்கையினை மாணவர் ஒன்றியம் ஆட்சேபிக்கவில்லை.

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மூவின மாணவர்களும் சுமூகமான கல்வி நடவடிக்கைகளினை தொடர்கின்றார்கள். எனவே மாணவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினை இனவாத நோக்கில் பார்க்கவில்லை. இது  நன்கு திட்டமிடப்பட்ட வகையில் ஒரு சில அடிப்படைவாதிகளின் நலன்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது என்பதால் மாணவர் சமூகத்தில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் சுமூகமான நிலையே காணப்படுவதால் அம் மாணவர்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம் இவர்களை முன்மாதிரியாகக் கொள்ளும் என நம்புகின்றோம்.

மக்கள்பிரதிநிதிகள் இவ்விடயத்தில் செயற்படுவது பற்றி எவ்விதம்  பார்க்கின்றீர்கள் ?

மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதங்களினை கடந்து எமது விடுதலைக்காக உழைத்தார்கள் என்பதால் அவர்களுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம். மக்கள் பிரதி நிதிகள் தாம் சார்ந்த ஒரு சமூகத்தின் ஓர் அங்கமான யாழ் பல்பலைக்கழக மாணவர்கள் கைதாகியதுமே அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று ஒற்றுமையாகச் செயற்படுவது போல் மக்கள் நலன் சார்ந்த விடயங்களிலும் இன விடுதலை சார்ந்தும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.  அவ் விடயத்தில் அரசியல்வாதிகளின் செயற்பாடு அல்லது தலையீடு இருக்கக்கூடாது என நாம் எதிர்பார்க்க முடியாது. இக் கைது விவகாரம் ஒரு அரசியல் சார்ந்த பிரச்சினையாக நோக்கப்பட்டதனால்தான் எம்மால் வெகு விரைவில் பிணையில் வெளிவர முடிந்தது. அரசியல் பிரச்சினையில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்பதோடு அதை நாம் தவிர்க்கவோ புறக்கணிக்கவோ முடியாது.

 

மாணவர்களை கொடூரமாகக் கொன்ற படையினர் விடுதலை ; தமிழருக்கு சிறிலங்காவில் நீதி கிட்டாது என்பது மீண்டும் நிரூபணம்

திருகோணமலையில் 2006 இல் ஐந்து அப்பாவி மாணவர்களை சுட்டு கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த படையினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சாட்சிகள் தொடர்ந்து சமூகமளித்த காரணத்தகால் குறித்த கொலையாளிகளை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

திருகோணமலை நகரில் கடற்கரை பிரதேசத்தில் காந்தி சிலை அருகில் 2006.01.02 ஆம் திகதி மாலை 7 மணி அளவில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோக த்தில் 5 மாணவர்கள் உயிரிழந்ததுடன் 2 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 12 விஷேட அதிரடிப்படையினரும் 1 பொலிஸ் அதிகாரியும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதிமன்றத்தில் சாட்சிகள் தொடர்ந்து வருகைதராததன் காரணத்தால் சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு நீதிவான் முகம்மது ஹம்சா உத்தரவிட்டார்.

சாட்சிகளுக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில்
பலர் நாட்டைவிட்டு வெளியேறியமை தொடர்பில் நீதிமன்றம் எந்தவித கரிசனையும் காட்டாமல் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளமை சிறிலங்காவில் தமிழருக்கு என்றும் நீதி வழங்கப்படாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துநிற்கிறது.

போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள்

சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற பொறிமுறை ஒன்று விரைவில் உருவாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்காவிற்கு வரவழைக்கும் உடன்படிக்கையில் ரணில் அரசாங்கம் கையெழுத்திட்டது. இந்த உடன்படிக்கை அப்போதைய அரசிற்கோ, ஜனாதிபதிக்கோ தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த நீதிப் பொறிமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை.

அவ்வாறான ஒரு நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்க முடியுமென அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்துவர முடியுமென்பதே அதன் அர்த்தம். வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்து வந்து வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு முழுமையான இணக்கத்தை ஏற்கனவே சர்வதேச சமூகத்திடம் தெரிவித்து விட்டது.

அமெரிக்காவுடன் சிறிலங்கா மேற்கொள்ளவுள்ள சோபா மிலேனியம் உட்பட 3 பாதுகாப்பு ஒப்பந்தங்களால் நாட்டின் இறைமையும், சுதந்திரமும் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும் சுதந்திரக்கட்சி பொதுச் செயலாளர் எச்சரிக்கின்றார்.

எனவே அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வது பற்றி சற்று சிந்திக்குமாறு ரணில் அரசாங்கத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

கோத்தபயாவை சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர்

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருக்கும் கோதபயா ராஜபக்ஸவை  அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் பார்வையிட்டுள்ளார்.

கோதபயாவை சந்திக்க சிறிலங்காவிலிருந்து பொதுஜன பெரமுனவைச் சோ்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, தேனுக விதானகமகே, இந்திக அனுருதத, பிரியங்கார ஆகியோர் நேற்று சிங்கப்பூர் சென்றிருந்தனர். இவர்களைச் சந்தித்த கோதபயா சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் தன்னை சந்தித்ததாக எடுத்துக் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவும் உடன் இருந்தார்.

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் பரப்புரை செயற்பாடுகள் குறித்து கோதபயா ராஜபக்ஸவுடன் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான குழுவினர் கலந்துரையாடினர்.

நல்லிணக்கத்தை அழித்தவருக்கு நல்லிணக்கத்திற்கான விருது

சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு 2019ஆம் ஆண்டிற்கான பொதுத் தள விருது 9Common ground award0 என்ற விருது வழங்கப்பட்டது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னெடுதத பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1995 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலும் சிறீலங்காவின் அரச தலைவராக பதவி வகித்த சந்திரிக்கா, பௌத்த பேரிளவாத சிந்தனைக்கு வழிவிட்டு சிறுபான்மை தமிழ் மக்கள் மீது மிகப்பெரும் இனப்படுகொலையை மேற்கொண்ட சிங்களத் தலைவர்களில் ஒருவர்.

சமானதானத்திற்கான கதவுகளை மூடி போரை முன்னெடுத்த அவர், நவாலி சென் பீற்றேஸ் தேவாயைப் படுகொலை, மடுத் தேவாலையப் படுகொலை என பெருமளவான தமிழ் மக்களை படுகொலை செய்திருந்தார். ஒரு இனப்படுகொலையாளருக்கு வழங்கப்படும் இந்த விருது தமிழ் மக்களின் மனங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

ஈரான் மீது நடவடிக்கை இல்லை – ஐரோப்பிய ஒன்றியம்

அணுப் பொருட்கள் சேமிப்பு அளவு உடன்படிக்கையை ஈரான் மீறி இருந்தாலும் அதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என ஐரேப்பிய ஒன்றியம் நேற்று (03) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

2015 ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அணுஆயுதப் பொருட்களின் சேமிப்பு அளவு தொடர்பான உடன்பாட்டை ஈரான் மீறியுள்ளதாக அணுவாயுத கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஒருதலைப்ட்சமாக உடன்பாட்டில் இருந்து வெளியேறியதுடன், இரு நாடுகளுக்குமிடையில் போர்ப் பதற்றமும் ஏற்பட்டிருந்ததுடன், ஈரான் அமெரிக்காவின் உளவு விமானத்தையும் சுட்டு வீழ்த்தியிருந்தது.

அதனைத் தொடர்ந்து ஈரானின் தலைவர் மற்றும் படை அதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளை மேற்கொண்டிருந்தது. எனினும் தாம் ஈரான் மீது தடை எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.