Home Blog Page 3085

சுற்றுலா தளமாகின்றது யாழ். மண்டைதீவு

யாழ்ப்பாணம், மண்டைதீவில் ஒரு பகுதி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு வலயமாக்கப்படவுள்ளது. இதன்படி இங்குள்ள கரையோரத்தை அபிவிருத்தி செய்து, படகு சவாரி போன்றவற்றை ஒழுங்குபடுத்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

முதலில் உள்ளுர் சுற்றுலாதாரிகளை அனுமதித்து, எதிர்காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாதாரிகள் இங்கு அனுமதிக்கப்படுவர். இதனால் ஆழம் குறைந்த யாழ்ப்பாணக் கடலநீரேரியிலுள்ள பவளப் பாறைகள், கடற்தாவரங்கள் மற்றும் மீனினங்கள் போன்றவற்றையும், குடாநாட்டின் இயற்கை வனப்பையும் கண்டு ரசிக்க முடியும் என சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

வை.கோ சிறை செல்ல வேண்டியிருப்பதால், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 2009இல் சென்னையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதால், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டு சென்னை பொலிஸ் நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை அமர்வு நீதிமன்றில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றிற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெ.சாந்தி முன்பாக விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஒரு வருட சிறைத் தண்டனையையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் தீர்ப்பாக வழங்கப்பட்டது. அபராத தொகையை உடனே செலுத்திய வைகோ மேல்முறையீடு செய்வதற்கு 1மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

எதிர்வரும் 18ஆம் திகதி நடக்கவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக தரப்பில் மதிமுகவிற்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் வைகோ போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மக்களவை சட்டத்தின்படி ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டவர் தண்டனைக்காலம் முடிந்து மேலும் 6ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே வைகோ போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

 ஈழ அன்னையர்கள்தான் உலகின் பிக்பாஸ்கள் – தீபச்செல்வன்

இந்தியா மற்றும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இங்கே தொலைக் காட் சிகள்தான் மக்களை கட்டிப் போடுகின்றன என்று தமிழக இதழியல் துறை பேராசிரியர் கோ. ரவீந்திரன் கூறுகிறார். ஒரு செய்தியை ஒரு தேவைக்காக உருவாக்கும் இந்த தொலைக் காட்சிகள், இன்னொரு செய்தியை உருவாக்கி, முதல் செய்தியை மறக்கடிக்கச் செய்கின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் தொண்ணூறுகளின் இறுதிவரை முழுக்க முழுக்க சினிமாதான் ஆட்சி செய்து வந்தது. இப்போது தொலைக்காட்சிகள் மக்களை கட்டி ஆழ்கின்றன.   ஊடகத்துறை சார்ந்த வல்லுநர்கள் சுமார் அறுபது வருடங்களுக்கு முன் எச்சரித்த விடயங்கள் இன்றைக்கு தமிழகத்தில் நடந்தேறி வருவதுதான் இங்கே முக்கியமானது.

அமெரிக்கப் பேராசிரியரான வில்பர் ஸ்ராம், 1960களில் தன்னுடைய ஆய்வு ஒன்றில் தொலைக்காட்சி ஊடகத்தின் தாக்கம் குறித்து எச்சரித்திருந்தார். தொலைக்காட்சிகள் குழந்தைகளையும் இளைஞர்களையும் மிகவும் பாதிப்பதாகவும் அது அவர்களை முழுமையாக சீர்குலைக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இவை மனித தொடர்பாடலை பாதிக்கும் என்றும் ஊடகங்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகுகின்ற கல்வி பள்ளிகளில் சிறு வயதிலிருந்தே தேவை என்றும் வில்பர் ஸ்ராம் போன்றவர்கள் அக்காலத்தில் பரிந்துரைத்தார்கள்.

சினிமா, ஊடகம், ஊடக கல்வி என பல்வேறு கற்கைகளும் உரையாடல்களும் நடக்கக்கூடிய தமிழகத்தில் இன்றைக்கு தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் தலை தூக்கியுள்ளது. ஆதிக்கம் செய்கின்ற இந்த தொலைக்காட்சிகள்தான் தமிழக மக்களின் எளிய பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புகின்றன. தமிழகத்தின் எத்தனையோ பிரச்சினைகள் வெளித் தெரியாமல் அடிபட்டுப் போகின்றன. இரகசியங்களாக இருளில் மறைந்து போகின்றன. இத்தகைய ஊடக ஆதிக்கத்திற்கு மத்தியில்தான் அங்கு கடுமையான பாலியல் வன்புணர்வுகளும் நடக்கின்றன.

ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் நெடுங்காலத் தொடர்புண்டு. ஈழத்தைப் பொறுத்த வரையில், தமிழகத்தின் நிலவரங்களை செய்தியாக வெளியிடுவதில் ஈழப் பத்திரிகைகள் மிக முக்கிய இடத்தை வழங்குகின்றன. தமிழக செய்திகள் என்றும் இந்திய செய்திகள் என்றும் தனியான பக்கங்களே ஒதுக்கப்படுகின்றன.

இந்தியாவிலும் தமிழகத்திலும் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் ஈழ ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக அமைகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒளிபரப்பிய தமிழீழ தேசியத் தொலைக்காட்சி மற்றும் புலிகளின் குரல் வானொலி ஆகியற்றிலும் இந்திய, தமிழக செய்திகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இப்போதும் இலங்கையின் தமிழ் தேசிய நாளிதழ்களில் வாரம் தோறும் இந்திய நிலவரங்களின் மதிப்பீடுகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

அத்துடன் இலங்கையின் இன்றைய தொலைக்காட்சிகள்கூட அவ்வாறே செயற்படுகின்றன. ஆசியாவில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட வானொலிச் சேவை இலங்கை வானொலி. ஊடகத்தில் ஈழம் எப்போதும் முன் உதாரணமான நாடுதான். ஆனால் இன்றைக்கு ஊடகம், சினிமா குறித்த தொழில் நகரமான சென்னையைக் கொண்டுள்ள தமிழகத்தின் ஊடக நிலைமைகள் பெரும் கவலை அளிப்பதாகவே உள்ளது. அதாவது மக்கள் ஊடகங்கள் என்பதிலிருந்து அவை விலகுகின்றன.hh  ஈழ அன்னையர்கள்தான் உலகின் பிக்பாஸ்கள் - தீபச்செல்வன்

அண்மைய காலத்தில் பிக்பாஸ் என்ற மெய்மை நிகழ்ச்சி ஒன்று பிரபல இந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் ஈழம் வரை பரவியிருக்கிறது. கடந்த காலத்தில் இந்த நிகழ்ச்சி முழு தமிழ் நாட்டையும் முழு உலக தமிழர்களையும் ஆக்கிரமித்திருந்தது. இம்முறை குறித்த தொலைக்காட்சி ஈழத் தமிழர்களையும் புலம்பெயர் தமிழர்களையும் தெளிவாக இலக்கு வைத்திருக்கிறது. கிளிநொச்சியில் பிறந்து திருகோணமலையில் படித்து, கொழும்பில் வளர்ந்த என்ற அடைமொழிகளுடன் சில போட்டியாளர்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

கிளிநொச்சிக்கும் திருகோணமலைக்கும் ஒரு அடையாளமும் வரலாறும் இருக்கிறது. இப்போது இந்த நிகழ்ச்சிக்காக போட்டியாளர்களுக்கு இந்த மண்ணின் போரை வைத்து சமூக வலைத்தளங்களில் கவனங்களை கோரும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. உண்மையில் தமிழ் ஈழத்தைப் பொறுத்தவரையில் இங்கு எத்தனையோ பிரச்சினைகள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் விடும் கண்ணீர் ஒருபுறம். அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடும் குடும்பங்கள் மறுபுறம். நிலங்கள் ஆக்கிரமிப்பு, இராணுவ மயம். அரசியல் தீர்வின்மை என்று ஈழம் கொந்தளிப்போடு போராடிக் கொண்டிருக்கின்றது.

தமிழகத்தில் உள்ள சில அச்சு ஊடகங்கள் ஈழத்தின் இந்த நிலவரங்களைப் பற்றி பேசுகின்றன. சில தொலைக்காட்சிகள் அவ்வப்போது இந்த விடயங்கள் குறித்து சில விவாதங்களை நடத்தியுள்ளன. ஆனால், ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு, பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் இந்த தேசத்திற்கான மதிப்பு அவ்வளவுதானா? ஈழத்தில் நடந்தவைகள், இனி உலகத்தில் நடக்கக் கூடாதவைகள்.

எனவே இவற்றை உலக அளவில் எடுத்துச் செல்ல தமிழக ஊடகங்கள் பங்களிக்க வேண்டுமல்லவா? குறிப்பாக தொலைக்காட்சிகள் இந்தப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமல்லவா? ஈழத்தில் லட்சம் பேர் கொல்லப்பட்டபோதும், தமிழக தொலைக்காட்சிகள் மானாட மயிலாட நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தன. அன்றைக்கு இனப்படுகொலை குறித்த செய்தியை தமிழக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க தவறியது. இப்போதும், ஈழ மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகளை 24 மணி நேர ஒளிபரப்பில் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியாதா? ஈழம் என்ற ஒரு நாடு இருக்கிறது. அங்கு எப்படியான பிரச்சினைகள் இருக்கின்றன? மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? எப்படி போராடுகிறார்கள்? என்ற நிலவரத்தை பேசினால், ஈழம் குறித்த தமிழக மக்களின் புரிதல் அதிகரிக்குமல்லவா?

இந்தப் பெரிய தமிழகம் இருந்த போதுதான் ஈழ இனப்படுகொலை நடத்தப் பட்டது. இன்றைக்கும் தமிழக மக்கள் அந்த குற்ற உணர்வுடன்தான் எங்களுடன் பேசுகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை நடாத்துகின்ற குறித்த தொலைக்காட்சி, பாடல் போட்டி ஒன்றின்போது, விடை கொடு எங்கள் நாடே பாடலை பாட செய்கிறது. ஈழம் குறித்த கழிவிரக்கத்தை தேடி, தொலைக்காட்சி ஊடகப் போட்டியில் வெல்வதும், வர்த்தக ரீதியில் முன்னேறுவதும்தான் அதன் நோக்கம். இது குறித்து ஈழத் தமிழர்கள் மாத்திரமல்ல, தமிழக தமிழ்மக்களும் சமூக வலைத்தளங்கள் எங்கும் விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சி ஊடகங்கள் மாய சன்னங்களை உடம்பில் ஏற்றுபவை, ஊசி மருந்து குருதியுடன் கலப்பதைப்போல ஆக்கிரமிப்பவை என தொடர்பியல் கோட்பாட்டாளர்கள் சொன்னது தமிழக ஊடகங்களுக்கு நன்றாகவே பொருந்திப் போகின்றன. இன்றைக்கு அங்கிருக்கும் பிரேக்கிங் நியூஸே தமிழக மக்களை நோயாளிகள் ஆக்கக்கூடியவை. இதுபோன்ற மெய்மை நிகழ்ச்சிகளே மக்களை தனிமைப்படுத்தி சமூகயமாக்கலையும் வாழ்வு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் முடக்குபவை.

ஊடகம் எதற்காக உருவாக்கப்பட்டதோ, அவைகளுக்கு எதிரானவையாக மாறிவிட்டன இந்த ஊடகச் சூழல். பிக்பாஸை பற்றிப் பேச வேண்டும் என்பதை ஒரு நிர்ப்பந்தமாக்குகிறது குறித்த நிகழ்ச்சியை நடத்தும் வணிகத் தொலைக்காட்சி. அது ஈழத்தின் கோடிவரை இன்று வருகின்றது. தமிழீழ மக்கள் ஒன்றைத்தான் வேதனையுடன் சொல்ல விரும்புகின்றனர். கமராக்கள் சூழ்ந்த ஒரு வீட்டில், நூறு நாட்கள் நடக்கிற பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதைவிட திரும்பி ஈழத்தைப் பாருங்கள். ஆயிரம் நாட்களாக வெயிலிலும், மழையிலும் பனியிலும் இருந்து போராடுகின்ற எங்கள் அன்னையர்கள்தான் இந்த உலகின் பிக்பாஸ்கள். சுற்றிச் சுற்றி சிங்கள இராணுவக் கமராக்களின் மத்தியில் வாழ்வை போராட்டமாக்கியவர்கள்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் சூழ்ச்சிக்குள் தமிழினம் சிக்கக்கூடாது தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த. வசந்தராஜா

தமிழர் தாயகத்தில் சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்பை திட்டமிட்டு முன்னெடுத்துக் கொண்டிருக் கும் பேரினவாதம், முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு தமிழினத்தை பயன்படுத்த விளைகின்றது. இந்த சூழ்ச்சி மாயைக்குள் தமிழினம் சிக்கிவிடக்கூடாது என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா இலக்குமின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேள்வி:- கல்முனை உபபிரிவு தரமுயர்த்தப்படுத்துவதில் இவ்வளவு காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

பதில்:- 1989ஆம் ஆண்டு கல்முனை வடக்கு உபபிரிவு உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னதாக கல்முனை மாநகரசபை பிரதேசசெயலகம் அனைத்து அதிகாரங்களையும் வளங்களையும் கொண்டு தரமுயர்த்தப்பட்டிருந்தது. இந்த மாநகரசபை நிருவாகத்தின் கீழ் தமிழர்கள், முஸ்லிம்கள் என கிட்டத்தட்ட 70ஆயிரம் பேர் இருந்தனர்.

இக்காலப்பகுதியில் இலங்கை முழுவதிலும் 28 உபபிரிவுகளை உருவாக்கும் செயற்றிட்ட மொன்று முன்னெடுக்கப்பட்டது. இதிலொன்றாக கல்முனை வடக்கு உபபிரிவும் உருவாக்கப்பட்டது. எனினும் இந்த உபபிரிவு முழுமையாக தமிழர்களை மையப்படுத்தி யிருந்ததாலோ என்னமோ அதற்கான காணி மற்றும் நிதி கையாளுகைக்கான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தமிழர்கள் அன்றிலிருந்து இந்த உபபிரிவினை தரமுயர்த்தவேண்டும் என்று தொடர்ச்சியாக கோர ஆரம்பித்தார்கள். 1993ஆம் ஆண்டு மட்டக்களப்பினை சேர்ந்த கே.டபிள்யு. தேவநாயகம் என்பவர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்தார். அவரின் அழுத்தம் காரணமாக உருவாக்கப்பட்ட 28 உபபிரிவுகளில் 27 இற்கு சகல அதிகாரங்களும் அளிக்கப்பட்டபோதும், கல்முனை வடக்கு உபபிரிவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

குறிப்பாக, சகோதர முஸ்லிம் இனத்தலைவர்கள் தமக்கிருந்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி கல்முனை வடக்கு உபபிரிவு தரமுயர்த்தப்பட்டாலும் அதற்கான நிதி, காணி அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு இடமளித்திருக்கவில்லை.
முஸ்லிம் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக அனைத்து அரசாங்கத்திலும் அங்கம்வகித்து வந்திருந்த மையால் இந்த விடயத்திற்கு உரிய அழுத்தங்களை பிரயோகிக்க முடியாதவாறு மூன்று தசாப்தகாலமாக கல்முனை வடக்கு உபபிரிவு விவகாரம் நீடித்து வந்தது.

தமிழ் மக்கள் இந்தப்பிரிவினை தரமுயர்த்துவதற்காக எத்தனையோ முயற்சிகளை எடுத்திருந்தபோதும், எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்மக்களை வழிநடத்திவருகின்ற தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தில் கூடிய அக்கறை காட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் போதிய அக்கறை காட்டியதாக தெரியவில்லை.

கேள்வி:- கல்முனை வடக்கு விவகாரத்தில் தமிழர்கள் எவ்வாறு பௌத்த தேரர்களின் ஆதரவினை பெறும் தீர்மானத்திற்கு வந்தார்கள்?

பதில்:- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையொன்று உருவெடுத்திருந்தது. அத்துடன் முஸ்லிம்களை விடவும் சிங்கள மக்களுடன் வாழமுடியும் என்ற மனநிலைத் தோற்றம் சதாரண மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. இது உண்மையான நிலைமை என்று கொள்ள முடியாது விட்டாலும் சதாரண மக்கள் அவ்வாறான சிந்தனைக்குள் தள்ளப்பட்டிருகின்றார்கள்.

அத்துடன் தலதா மாளிகைக்கு முன்னால் அத்துரலிய தேரரின் உண்ணாவிரதம் முஸ்லிம் பிரதிநிதிகளை பதவிகளிலிருந்து இறக்கி வெற்றிகண்டிருந்தது. இத்தகைய பிரதிபலிப்புக்கள் எல்லாம் ஒன்றிணைந்ததன் காரணத்தால் தான் தமிழ் மக்கள் கல்முனை வடக்கு விடயத்தில், தேரர்களை நாடினார்கள்.

கல்முனை விகாரதிபதி ரன்முத்துகலவுடன் தமிழ் தரப்பினரும் ஏனைய மதத்தலைவர்களும் இணைந்து உண்ணாவிரதப்போராட்டத்தினை மேற்கொண்டார்கள். இதற்கு மட்டக்களப்பு உட்பட தமிழர் தாயகத்தின் அனைத்து பகுதிகளும் பூரணமான ஆதரவினையும் அளித்திருந்தன. தற்போது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டிருக்கின்றது.

தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தினை முறையான அணுகுமுறை ஊடாக கையாண்டிருந்தால் எப்போதோ இப்பிரச்சினைக்கு தீர்வினைக் கண்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

குறிப்பாக, 2015 இற்கு பின்னரான காலத்தில் தமிழ்த் தரப்புக்கள் அரசாங்கத்துடன் பேசி இந்த சிறிய விடயத்திற்கு கூட சரியான தீர்வு அளிக்கவில்லையே என்ற மனவேதனை கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
அத்துடன் இத்தகைய மனவிரக்தியும், நம்பிக்கையீனமும் தான் பௌத்த தேரர்களை பயன்படுத்தியாவது தமது கோரிக்கையை சாதித்துக்கொள்வோம் என்ற மனநிலையை உருவாக்கியிருக்கின்றது.

கேள்வி:- கல்முனை தமிழ் பிரிவு விடயத்தில் தீர்வு பெறுவதற்காக தமிழ் மக்கள் பௌத்த தேரர்களை நோக்கிச் சென்றிருக்கின்றமையானது, தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும், பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அல்லது அதற்கு எதிராக போராடுவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடாதா?

பதில்:- இந்த விடயத்தில் யதார்த்தமான கருத்துக்கள் இல்லாமலில்லை. கல்முனை விடயத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக பௌத்த தேரர்கள் செயற்படுகின்றார்கள். அப்படியிருக்கையில், தமிழ் மக்கள் சொல்லொண்ணாத்துன்பங்களையும், வலிகளையும் அனுபவித்து பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருந்த தருணத்தில் அன்பு, இரக்கம், அமைதி போன்ற கோட்பாடுகளைக் கொண்டிருக்கும் பௌத்த தேரர்கள் இந்த நாட்டின் பிறிதொரு இனமும் சமத்துவமாக இருக்க வேண்டும் என்று கருதி நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.

அமெரிக்கப் படைகளை நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம்: சிறீலங்கா

அமெரிக்கப் படைகளை நாம் சிறீலங்காவுக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்பதுடன், சிறீலங்காவில் அவர்கள் தளம் அமைக்கவும் முடியாது என சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தனா இன்று (05) தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாம் அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளவில்லை, எனவே அமெரிக்கப் படைகளை நாட்டுக்குள் அனுமதிக்கப்போவதில்லை, அதுமட்டுமல்லாது அவர்கள் இங்கு தளம் அமைக்கவும் முடியாது.

அமெரிக்கா தளம் அமைக்கப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை. நாம் எந்த உடன்பாட்டிலும் கையெழுத்திடவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமத்தில் நடப்பதென்ன – இஸ்லாமிய அரபுக் கொடி பறக்கின்றது

கதிர்காமத்தில் பாரம்பரியமாக ஏற்றப்படும் முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்குப் பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக் கொடி ஏற்றப்படுவதாக பக்தர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த நடைமுறை எவ்வாறு தோன்றியது. பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தை மாற்றியது யார் என பலரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

நேற்று கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்ற போது, அங்குள்ள இஸ்லாமியப் பள்ளிவாசலிலேயே கொடி ஏற்றப்பட்டது. அதுவும் அரபு எழுத்துக்களால் ஆன பச்சை நிறக் கொடியே ஏற்றப்படுகின்றது.

கதிர்காம வரலாறுகளின்படி முருகன் கோவிலில் முருகனின் சேவல் கொடி ஏற்றப்பட்டு, அங்கிருந்து தெய்வானை அம்மன் கோவிலுக்கு கொடி எடுத்து வரப்பட்டு, கொடி புஜை வழிபாடுகள் நடத்தப்பட்ட பின் பக்கீர் மடத்திற்கு (இப்போதைய பள்ளிவாசலின் முன்பக்கம்)  கொண்டு வரப்பட்டு அங்குள்ள கொடிக் கம்பத்தில் கட்டப்படும்.

Kathiskamam 2 கதிர்காமத்தில் நடப்பதென்ன - இஸ்லாமிய அரபுக் கொடி பறக்கின்றதுஇந்த முறை இப்போது மாற்றப்பட்டு, முஸ்லிம்களின் அரபு எழுத்தினாலான கொடி ஏற்றப்படுவதை கவனத்தில் கொள்வதுடன், இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, மீண்டும் சேவல் கொடி ஏற்றுவதற்கு உரியவர்கள் கவனம் எடுக்க வேண்டும் என பக்தர்கள் உரியவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். கோவில் நிர்வாகத்தினர் இதனை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மன்னார் புதைகுழி அறிக்கை சர்ச்சைக்குரியதாகின்றது

மன்னார் சதொச பகுதியில் மீட்கப்பட்ட மனித புதைகுழியின் எச்சங்களின் மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடாவில் காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதன் அறிக்கை தொடர்பாக களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

புளோரிடா காபன் அறிக்கையின் பிரகாரம் குறித்த மனித எச்சங்கள், கி.பி.1404 முதல் 1635 வரையான காலத்திற்குரியவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் 231 ஆண்டு இடைவெளியுள்ளதை சுட்டிக்காட்டிய ராஜ் சோமதேவ, இது தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பிக்க எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் மரபுவழித் தாயகத்தைத் துண்டடுவதற்கான நுட்பமான காரியங்கள் நடைபெறுகின்றன – தியாகராஜா நிரோஷ்

தமிழ் மக்களின் மரபுவழித்தாயகமான வடக்கினையும் , கிழக்கினையும் துண்டடுவதற்கான நுட்பமான காரியங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு இடம்பெறும் கீழ்த்தரமான காரியங்களை நோக்குகையில் போருக்குப் பின்பான நிலைமாறு கால நீதிக்குரிய காலப்பகுதியாக உயர் மட்டங்களில் கூறி வரப்படும் கருத்துக்களின் அடிப்படை என்ன எனக் கேட்கத்தோன்றுகின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நேற்று  ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கும் முல்லைத்தீவு நிராவியடி பிள்ளையார் கோவில் மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஆக்கிரமிப்புக்களுக்கு உள்ளாகிவரும் தமிழரின் பூர்வீகக் கிராமமான தென்னைமரவாடி பகுதிகளுக்குச் சென்று அங்கு மக்கள் சந்திப்புக்களில் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துரைக்கையில்இ தமிழ் மக்களின் வரலாற்று ரீதியிலான நிலங்கள்இ பண்பாடுகள்இ கலாச்சாரம்இ இன ரீதியிலான இருப்புப் போன்றவை வெளித்தொடர்புகள் அற்ற பிரதேசங்களில் சாதாரணமாக அழித்துவிடுவதற்கான உத்திகள் இன்றும் தொடர்கின்றன.

கடந்த காலத்தில் இராணுவம் கைப்பற்றி வைத்திருந்த நிலத்தினை உரியவர்களிடம் கையளிப்பதே நிலைமாறு காலநீதிக்குப் பொருத்தம். எனினும் இங்கிருக்கக் கூடிய இனவிரோத என்னப்பாடுடைய பௌத்த துறவிகள் முல்லைத்தீவு மற்றும் நாம் தற்போது வருகை தந்துள்ள தென்னைமரவாடி பிரதேசங்களில் கச்சிதமாக சிங்கள மயமாக்கத்தினையும் தமிழரின் வரலாற்று அழிப்பினையும் மேற்கொள்கின்றனர்.

மக்களைப்பொருத்தளவில் எமது நிலம் எமக்கே என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.

தமிழ் மக்களின் மரபுவழித்தாயகமான வடக்கினையும் , கிழக்கினையும் துண்டடுவதற்கான நுட்பமான காரியங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு இடம்பெறும் கீழ்த்தரமான காரியங்களை நோக்குகையில் போருக்குப் பின்பான நிலைமாறு கால நீதிக்குரிய காலப்பகுதியாக உயர் மட்டங்களில் கூறி வரப்படும் கருத்துக்களின் அடிப்படை என்ன எனக் கேட்கத்தோன்றுகின்றது.

தமிழரின் வரலாற்று பூர்வீக நிலத்தில் அமையப்பெற்ற நிராவியடி பிள்ளையார் கோவிலின் வளாகத்தினை பௌத்த வளாகமாக மாற்ற முயற்சிக்கப்படுகின்றது. இந்நிலையில் நீதித்துறையின் தீர்ப்பின் வாயிலாக மக்கள் தீர்ப்பினைப் பெறவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. இவற்றுக்கு மேலாக தென்னைமரவாடி பகுதியில் வரலாற்று ரீதியில் பரம்பரை பரம்பரையாக எம்மவர்கள் கந்தசாமி மலையில் வழிபட்டு வந்த வழிபாட்டுத்தலம் தொல்லியல் திணைக்கள ஆதிக்கத்தின் ஊடாக திரைமறைவில் சிங்கள பௌத்த மயமாக்கத்திற்கான கைங்காரியங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

தமிழ் மக்களின் இவ்வாறான வரலாற்றுக் கிராமங்களில் நிலங்கள் பொளத்த விகாரைகளுக்கும் சிங்களக்குடியேற்றத்திற்கும் புடுங்கி அல்லது அதிகாரத்தினைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றது.

இதுதான் தொடர்கதையாகியுள்ள சூழ்நிலையில் நிலைமாறு காலம் எனவும் நல்லிணக்கம் எனவும் நாட்டில் கூறப்படுவதன் அடிப்படை எவருக்குமே புரியாத சூனியமாகக் காணப்படுவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

விவசாய காணிகளை கையகப்படுத்தும் வர்த்தகமானி அறிவித்தலை உடன் இரத்த்துச் செய்யவும் – இரா.துரைரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மக்கள் விவசாயம் செய்கின்ற 1750ஏக்கர் ஒப்பக்காணிகளை கையகப்படுத்தும்  நடவடிக்கையை இரத்துச் செய்யுமாறு கூறி, ஜனாதிபதி, பிரதமர், வலுமீள் புதுப்பித்தல் வலு அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் குறிப்பிட்டார்,

இக்கடிதத்தில்,

மேற்குறிப்பிட்ட காணிகளைப் பொறுத்தவரையில் 1980ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையும் இப்பகுதியில் பல நூற்றக்கணக்கான குடும்பங்கள் நிரந்தரமாக குடியிருந்து மேட்டுநிலப் பயிர்செய்கை, வேளாண்மைச் செய்கை, ஏனைய இயற்கையோடு ஒத்த தொழில்களைச் செய்தது மட்டுமல்லாமல் கால்நடை,மீன்பிடி
தொழில்களையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இம் மக்களைப் பொறுத்தவரையில் யுத்தம் காரணமாக பல தடவைகள் இடம் பெயர்ந்து வருடாவருடம் நீர் உள்ள காலத்தில் தொழில் செய்து வருவது வழக்கமாகும். நிரந்தரமாக கால்நடை,மீன்பிடி,விவசாயத் தொழிலையே செய்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் உறுதி, ஒப்பம், ஒப்பத்திற்கு விண்ணப்பித்த ஆதாரங்கள், இன்னும் ஒருசிலர் சேனைப்பயிர் செய்து கொண்டும் வருகின்றனர் இத்தோடு இப்பகுதியில் நிரந்தரமாக வீட்டுத்திட்டங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக 300ற்குமேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டு காலமாக நிரந்தரத் தொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் பிரதேசமாக உள்ளதால் மக்கள் பிரதிநிதிகள்,திணைக்களத்தலைவர்கள்,காணிதொடர்பான குழுக்கள் ஒருவருக்கும் தெரியாமல் இக்காணிகளை வர்த்தமானி பிரகடனப்படுத்தியது கவலைக்குரிய விடயமாகும். உள்நோக்கம் கொண்டதாக அமைகின்றன.

இவைமட்டுமின்றி பன்சேனைப்பகுதியில் இரும்பன்ட குளத்திற்கு அருகிலுள்ள
548அரைஏக்கர் காணியில் 50ஏக்கர் காணியை சூரிய மின்சக்தி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு 30வருடத்திற்கு குத்தகைக்கு வழங்கி உள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது. இக்காணிகளை நீண்டகாலமாக 300ற்கு மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து பராமரித்து ஓப்பங்கள் வழங்கி, ஒப்பத்திற்கு விண்ணப்பித்து ஆளுகைப்படுத்தி வருகின்ற போது இக்காணிகளை வர்த்தமானி பிரகடனப்படுத்தி சூரிய மின்சக்தி திட்டத்திற்கு இக்காணிகளை வழங்குவது
பொருத்தமானதாக இருக்காது என்பதனால் வர்த்தமானி பிரகடனப்படுத்தப் பட்டதையும், காணி வழங்கியதையும் நிறுத்தி அக் காணியைப் பயன்படுத்துகின்ற மக்களுக்கு கிடைக்கக் கூடியவாறு ஒழுங்குகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் விரிவான கடிதங்களை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேசசபை தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

வடமாகாண நிலைமை குறித்து ஜேர்மன் தூதுவருக்கு ஆளுநர் விளக்கம்

ஜேர்மன் நாட்டு தூதுவர் ஜோன் ரொட் அவர்களை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (04) அன்று சந்தித்துப் பேசிய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வடமாகாண நிலைமைகள் குறித்து கலந்துரையாடினார்.

29 வருடங்களுக்குப் பின்னர் காங்கேசன்துறை, கீரிமலை மக்கள் தற்போது தமது பிரதேசங்களை பார்வையிட சென்றுள்ளனர்.  இவர்களின் காணிகளை அவர்களிடமே கையளிக்கும் நிகழ்வுகள் ஏப்ரல் 21இன் பின்னர் தற்போது சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்டு வருவதை தூதுவருக்கு தெரிவித்தார்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக விளக்கமளித்த ஆளுநர், வடக்கு மாகாண அபிவிருத்திக்கு உதவ முடியுமான வழிகளில் உதவும்படி கேட்டுக் கொண்டார். வடமாகாணம் எதிர்காலத்தில் முகம்கொடுக்கவுள்ள நீர்ப் பிரச்சினை தொடர்பாக விளக்கமளித்ததுடன் ஐந்து திட்டங்கள் குறித்து விளக்கமளித்து, முதல் திட்டமாக வடமராட்சி களப்பு திட்டம் குறித்து விளக்கமளித்தார், அத்துடன் வடமாகாண பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.