இனப்படுகொலைக்கு உள்ளான நாம்    நீதியினை கோராமல் விட முடியுமா? – நேர்காணல்

நேர்காணல் – யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றிய செயலாளர் பபிலராஜ்

யாழ்ப்பாணப்  பல்கலைக்கழகத்தில்  அன்றாட செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன ?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த பதற்றமான சூழல் மெல்லத் தணிந்து விட்ட நிலையிலும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் இன்றும் பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தினரை நிறுத்தி வைத்திருப்பதானது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக சூழல் வழமைக்கு திரும்ப தடையாகவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அன்றாட செயற்பாடுகள் வழமை போன்று சுமூகமான முறையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இருந்த போதிலும் இன்றும் பல்கலைக்கழகத்திற்குள் உட்பிரவேசிக்கும் அனைவரும் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திவிட்டுச் செல்லும் வகையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்கலைக்கழக அடையாள அட்டையினை நுழைவாயிலில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பரிசீலித்து உள்ளே அனுமதிப்பதுடன் புத்தகப்பைகளும் சோதனையிடப்படுகின்றன .

நாட்டில் ஏற்பட்டிருக்கக் கூடிய அசாதாரண சூழ்நிலையில் பல்கலைக்கழத்தின் பாதுகாப்பினை உறுதிப் படுத்துவது அவசியம் ஆனாலும் பாடசாலை மாணவர்களின் அன்றாட சுமூகமான செயற்பாடுகளுக்கு இச் செயற்பாடானது இடையூறாக உள்ளது போன்றே எம்மால் உணர முடிகின்றது .

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் நீங்கள் உட்பட சிற்றுண்டிச்சாலை  ஊழியரின் கைது விடுதலையின்  தற்போதைய  நிலைமைகள்  என்ன ?

நாட்டில் ஏற்பட்டிருக்கக் கூடிய அசாதாரண சூழ்நிலையினை தமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு நன்கு திட்டமிட்ட வகையில் மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரினை கைது செய்யும் நோக்குடனே இராணுவம் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது என்றே எம்மால் ஊகிக்க முடிகின்றது. ஏனெனில் பொது வெளியில் மாவீரர் நாள் அனுஷ்டிக்க அனுமதியளிக்கப்பட்ட நிலையிலும் இனப்படுகொலை நினைவு நாளினை நினைவு கூர அனுமதியளிக்கப்பட்ட நிலையிலும் எம்மை இனப்படுகொலைகள் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட ‘பதாதைகள்’ அரசுக்கு எதிரானவை என்று குற்றம் சாட்டப்பட்டும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவை மாணவர் ஒன்றிய தலைவரின் அலுவலக அறையிலும் மற்றும் மாணவர் ஒன்றிய செயலாளரின் அலுவலக அறையிலும் இருந்மையினால் மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் நானும் கைது செய்யப்பட்டோம் .

மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலையில் தொங்கவிடப்பட்டிருந்த தியாகி திலீபனின் புகைப்படத்தினை காரணம் காட்டி சிற்றுண்டிச் சாலை நடத்துனரும் கைது செய்யப்பட்டார் .

மேலும் மாணவர் ஒன்றிய அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட்ட ‘பதாதைகள்’ இனப்படுகொலைக்கு நீதி கோருவதாக அமைவதனால் அவை அரசுக்கு எதிரானவை நாட்டில் இனங்களுக்கிடையிலான பிளவினை ஏற்படுத்தப் போகின்றோம் என்ற வகையில்  குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்கள். இத்தனைக்கும் பொது வெளியில் பல்வேறு அமைப்புக்களும் இனப்படுகொலைக்கு நீதி கோரி போராட்டங்களை மேற்கொண்டுள்ளன .

இனப்படுகொலைக்கு உள்ளான நாம் அதற்கு நீதி கோருவது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்பதற்காக நாம் நீதியினை கோராமல் விட முடியுமா? அப்படியானால் காவியுடை தரித்த பிக்குகள் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அட்டூழியங்கள் மட்டும் என்ன இன ஐக்கியத்தினை ஏற்படுத்துகின்றது .

எமது கைது நன்கு திட்டமிடப்பட்ட ஒன்றுதான் என்பதற்கான ஆதாரங்களையும் வெகு விரைவில் அம்பலப்படுத்துவோம் .

விடுதலையின் பின்னரான நிலை என்னும் போது இதனை நாம் முழுமையான விடுதலையாக கருதவில்லை. தற்சமயம் பிணையிலேயே விடுவிக்கப்பட்டுள்ளோம். வழக்கிலிருந்து விடுபட்டு முழுமையான விடுதலையினைப் பெற்றுக் கொள்வதே எமது நோக்கம். அதற்கான முன்னகர்வுகளினை மேற்கொள்ள பல்கலைக்கழகம் எமக்கு என்றும் பக்கபலமாக இருக்கும் என்று நம்புகின்றோம் .

அவசரகாலச் சட்டமும்  பயங்கரவாதச் சட்டமும் நடைமுறையில்  இருக்கின்றமை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினை  பதற்றத்திற்குள்  அல்லது கட்டுப்பாட்டிற்குள்  வைத்திருப்பதாக  உணர்கின்றீர்களா ?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான சூழ்நிலையில் அக்குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய தரப்புக்களினை கைது செய்ய வேண்டிய சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை அடக்கு முறைக்குள் வைத்திருக்க முனையும் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் விம்பமாக யாழ் பல்கலைக்கழகமோ அல்லது மாணவர் ஒன்றியமோ செயற்படுவதனை விரும்பவில்லை என்பதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்காலத்தில் தமிழின அடக்கு முறைகளுக்கு எதிராக நீதி கோரி குரல் எழுப்புவதினை தடுக்கும் வகையில் அல்லது இவ்வாறு குரல் எழுப்ப முடியாத சூழலிற்குள் பல்கலைக்கழக மாணவர்களினை கட்டுப்படுத்தி இன்றைய சூழ்நிலையினை சரியாக கையாள்கின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது .DSC 0141 1080 இனப்படுகொலைக்கு உள்ளான நாம்    நீதியினை கோராமல் விட முடியுமா? - நேர்காணல்

பல்கலைக்கழக மாணவர் தலைவர்களினை கைது செய்வதன் மூலமாக ஒட்டுமொத்த மாணவ சமூகத்தினையும் அடக்க முடியும் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள். மாணவர் சக்தியின் மகத்துவத்தினை அறியாது மாணவர்கள் மீது அடக்கு முறையினை ஏவ முற்படும் ஆட்சியாளர்கள் அதற்கான பிரதி பலன்களை நிச்சயமாக அனுபவிப்பார்கள்

யாழ் பல்கலைக்கழகம் மீது கழுகுப் பார்வை தொடரும் அதே நேரம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் படை முகாம் காணப்படுவதாக கூறப்படுவது பற்றி உங்களது நிலைப்பாடு?

யாழ் பல்கலைக்கழகத்தின் மீதான கழுகுப் பார்வையானது இன்று நேற்றல்ல அது காலாகாலமாக இருந்து வருகின்ற ஒன்றாக உள்ள போதும் மீண்டும் தற்போது அத்தகைய கழுகுப் பார்வை உச்சம் பெற்றுள்ளது என்றே கூற முடியும். தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்திலும் சரி தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் சரி மாணவர் ஒன்றியம் கணிசமான பங்கினை வகித்து வருவதால் எம் மீது அரச புலனாய்வுத் துறையின் கழுகுப் பார்வை தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

மாணவர் ஒன்றியத்திற்கு நெருக்கடிகளைக் கொடுப்பதன் மூலமாக அடக்கு முறைக ளுக்கு எதிரான மாணவர்களின் சனநாயகப் போராட்டங்களினை மழுங்கடித்துவிட முடியாது. எத்தகைய அடக்கு முறைகள் தொடர்ந்தாலும் மாணவர் சக்தி அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராட என்றுமே தயங்கப் போவதில்லை.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பாக அதன் உண்மைத் தன்மைகளினை அறியாமல் அது தொடர்பில் கருத்துக் கூற விரும்பவில்லை. இருந்தாலும் அவ்வாறு படை முகாம் அமைக்கப்பட்டிருந்தால் அது  கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும் .

யாழ் பல்கலைக்கழகம் உட்பட வட கிழக்கு தமிழர் தாயகத்தில்  சுமூகமான  நிலைமைகள்  ஏற்படுவதற்கு மாணவர்களின்  வகிபாகம் எவ்வாறாக உள்ளது ?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான பதற்றமான சூழ்நிலையில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களினை மீளத் தொடங்குவதற்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது பல்கலைக்கழக நிர்வாகம் இராணுவம்   பல்கலைக்கழகத்தினை முழுமையாக சோதனையிட அனுமதியளித்தது. சுமூகமான முறையில் கல்விச் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவும் மாணவர்கள் நம்பிக்கையுடன் மீண்டும் கல்வி கற்பதற்கான சூழல் உள்ளது என்பதனையும் உறுதிப்படுத்துவதில் மாணவர் ஒன்றியம் கரிசனை கொண்டிருந்தமையால் அத்தகைய சோதனை நடவடிக்கையினை மாணவர் ஒன்றியம் ஆட்சேபிக்கவில்லை.

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மூவின மாணவர்களும் சுமூகமான கல்வி நடவடிக்கைகளினை தொடர்கின்றார்கள். எனவே மாணவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினை இனவாத நோக்கில் பார்க்கவில்லை. இது  நன்கு திட்டமிடப்பட்ட வகையில் ஒரு சில அடிப்படைவாதிகளின் நலன்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது என்பதால் மாணவர் சமூகத்தில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் சுமூகமான நிலையே காணப்படுவதால் அம் மாணவர்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம் இவர்களை முன்மாதிரியாகக் கொள்ளும் என நம்புகின்றோம்.

மக்கள்பிரதிநிதிகள் இவ்விடயத்தில் செயற்படுவது பற்றி எவ்விதம்  பார்க்கின்றீர்கள் ?

மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதங்களினை கடந்து எமது விடுதலைக்காக உழைத்தார்கள் என்பதால் அவர்களுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம். மக்கள் பிரதி நிதிகள் தாம் சார்ந்த ஒரு சமூகத்தின் ஓர் அங்கமான யாழ் பல்பலைக்கழக மாணவர்கள் கைதாகியதுமே அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று ஒற்றுமையாகச் செயற்படுவது போல் மக்கள் நலன் சார்ந்த விடயங்களிலும் இன விடுதலை சார்ந்தும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.  அவ் விடயத்தில் அரசியல்வாதிகளின் செயற்பாடு அல்லது தலையீடு இருக்கக்கூடாது என நாம் எதிர்பார்க்க முடியாது. இக் கைது விவகாரம் ஒரு அரசியல் சார்ந்த பிரச்சினையாக நோக்கப்பட்டதனால்தான் எம்மால் வெகு விரைவில் பிணையில் வெளிவர முடிந்தது. அரசியல் பிரச்சினையில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்பதோடு அதை நாம் தவிர்க்கவோ புறக்கணிக்கவோ முடியாது.