Home Blog Page 3072

ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது எப்படி?

ஈரானின் ஆளில்லா விமானத்தினை ஹர்மோஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்துவதற்கு நவீன ஆயுதம் ஒன்றை பயன்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்டிரம்ட் தெரிவித்துள்ளார்.

L M A D I S என்ற ஆயுதமே அமெரிக்க கடற்படைக் கப்பலிற்கு அருகில் சென்ற ஈரானின் ஆளில்லா விமானத்தை செயலிழக்கச் செய்வதற்கு பயன்படுத்தியதாக அறிய முடிகின்றது.  இது அனைத்து வகையான வாகனங்களிலும் பொருத்தி பயன்படுத்தக்கூடிய அமெரிக்கக் கப்பல்களிலிருந்து எதிரி விமானங்களின் நடமாடடத்தை கண்காணிக்கக்கூடிய மரைன் படையணியின் புதிய ஆளில்லா விமான எதிர்ப்பு ஆயுதத்தையே அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த மரைன் படைப்பிரிவின் விசேட படையணியொன்று இந்த வகை ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ளது என்று அறிய முடிகின்றது.

இந்த வகை ஆயுதங்களை நிலத்திலேயே பயன்படுத்துவது வழமை. எனினும் தற்போது பல ப்பல்களில் பொருத்தி அமெரிக்கா பரிசோதனை செய்கின்றது.

குறிப்பிட்ட ஆயுதத்தினால் ராடர்கள் மற்றும் கமராக்களை பயன்படுத்தி வான்வெளியில் பறக்கும் விமானங்களை கண்காணிக்க முடியும். எதிரி விமானங்களை தனியாக அடையாளம் காணும் திறனும் இந்த வகை ஆயுதங்களுக்கு உள்ளது.

2200 பேரைக் கொண்ட இந்த மரைன் படையணி தற்போது அமெரிக்காவின் கடற்படைக் கப்பலான U S பொக்ஸரில் உள்ள விசேட படையணி ஒன்றுடன் இணைந்து செயற்படுகின்றது.

சிறிலங்காவில் இராணுவ சீருடைகளுக்கு தடை

சிறிலங்காவில் இராணுவச் சீருடைக்கு ஒத்த சீருடைகளை அணியவோ, விற்பனை செய்யவோ முடியாது என்ற சட்டத்திருத்தத்தை, சிறிலங்கா ஜனாதிபதியும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீருடை கட்டளைச் சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராணுவச் சீருடைக்கு ஒத்த சீருடைகளை வைத்திருப்பதோ, விற்பனை செய்வதோ, அணிவதோ தடை செய்யப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் 300 கிராமங்கள் பறிபோனதாக கூறுகிறார் விக்கி

கிழக்கு மாகாணத்தில் 300 தமிழ்க் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றம் பெற்றுள்ளதாக, வடமாகாண முன்னாள் ஆளுநர் சி.வி.விக்னேஸ்வரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட விக்னேஸ்வரன், இன்று மகிழுர் கண்ணகிபுரம் கிராம மக்களை சந்தித்தார்.

தமிழ் மக்களின் காணிகள் பறிபோவதுடன், தமிழ் பெண்கள் முஸ்லிம்களாக மாறும் அவலநிலை இங்கு தோன்றியிருப்பதாகவும், இதற்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்றும் தகவல் தெரிவித்தார்.

வவுனியா ஊடக அமைப்பின் ஆரம்பம்

வவுனியா ஊடகவியலாளர்கள் நலன் காக்கும் ஊடக அமையம் Press Club நேற்று (20) காலை ஐ.சி.சி தனியார் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஊடக அமையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. தலைவர், செயலாளர், பொருளாளர், உபதலைவர், உபசெயலாளர், உப பொருளாளர் என நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் விடயங்களில் கவனம் எடுத்து செயற்படவும், பயிற்சிகள் பெற்று பணியாற்றவும், ஊடகவியலாளர்கள் தமது பொறுப்புக்களை சரியான முறையில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வலுவடைந்து வரும் ரஷ்ய – அமெரிக்க பனிப்போர்

ரஷ்யாவிடமிருந்து S 400 ஏவுகணை தடுப்பு அமைப்புக்களை வாங்கக்கூடாது என அமெரிக்கா துருக்கி உள்ளிட்ட நாடுகளை எச்சரித்திருந்தது. அத்துடன் F – 35 அதி நவீன போர் விமானங்களை துருக்கிக்கு வழங்க மறுத்தும் வந்தது. இந்நிலையில் துருக்கிக்கு சுகோய் SU – 35 போர் விமானங்களை வழங்கத் தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும் துருக்கி ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை தடுப்பு அமைப்பையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஈரான் – அமெரிக்காவிடையே பனிப்போர் நிகழ்ந்து வரும் நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு சர்வதேச ரீதியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் கருவை ஆதரிக்கும் அமெரிக்கா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய சபாநாயகர் கரு ஜெயசூரியா பங்குபற்றினால், அவருக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் அமெரிக்காவின் இரண்டாம் நிலை அதிகாரி சபாநாயகரை நாடாளுமன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் இவரின் மருமகனான நவீன் திஸநாயக்கவை அமெரிக்க உயர் ஸ்தானிகர் சந்தித்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது. இவரின் சர்வதேச ஆலோசகரான பிரசாத் காரியவசம் என்பவர் அமெரிக்க சார்பானவர்.

இவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நெருக்கமானவர். அத்துடன் அரசியலுக்கு வர முன்னர் இவர் இராணுவத்தில் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். மானிப்பாயில் சிறீலங்கா காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி

மானிப்பாய் பகுதியில் இன்று (20) இரவு உந்துருளிகளில் சென்றவர்கள் மீது சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தூப்பாக்கிப் பிரயோகத்தில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மானிப்பாய் தகவலக்கள் தெரிவிக்கின்றன.

மானிப்பாய் கார்கில்ஸ் பல்பொருள் அங்காடிக்கு அருகாமையில் உள்ள இணுவிலுக்கு செல்லும் வீதியால் வாள் போன்ற ஆயுதங்களுடன் மூன்று உந்துருளிகளில் சென்ற 6 பேர் கொண்ட குழுவினரை சிறீலங்கா காவல்துறையினர் நிறுத்த முற்பட்டபோது அவர்கள் நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

manipay 2019 யாழ். மானிப்பாயில் சிறீலங்கா காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் - ஒருவர் பலி

கடந்த 5 வருடங்களாக கூட்டமைப்பு அனைத்து விடயங்களிலும் துரோகமிழைத்து வருகிறது – காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதங்கம்

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

நேற்று இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர் குறித்த ஊடக சந்திப்பு  நேற்று பிற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த லீலாதேவி ஆனந்தநடராஜா கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று 879 நாளாக எமது தொடர் போராட்டம் இடம்பெற்ற வருகின்றது. இன்றுவரை எமது நிலை தொடர்பில் தீர்வு வஙழகுவதற்கு எவரும் முன்வரவில்லை. இதுவரை 30 பேர்வரை தமது பிள்ளைகளை காணாதவர்களாக உயிரை மாய்த்துள்ளனர் என தெரிவித்தார்.

இந்த நிலையில் எமது அமைதிவழி போராட்டங்களை குழப்பும் வகையில் எமது கோவில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்து வருகின்றது. இவை திட்டமிட்டு எம்மீது திணிக்கப்படுகின்றமையை உணர்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார் எமது அரசியல் தலைமைகள் அரசாங்கத்துடன் ஒத்து செயற்படுவதனாலேயே அவர்கள் மனோகணேசன் அவர்கள் அழைத்தபோது சென்றிருக்கவில்லை.

உண்மையில் அவர்கள் அங்கு  சென்றிருந்தால் அவர்களிற்கு சங்கடமான நிலை ஏற்பட்டிருக்கும் எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படுகின்றமை தொடர்பிலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கில் உள்ள தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரே அணியாக தேர்தலில் களம் இறங்க வேண்டும் எனவும், விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை ஏமாற்றிவிட்டது  அவர்கள் தமது சுயநலம் சார்ந்து செயற்படுகின்றனர். இந்த நிலையில் எமது பிள்ளைகளின் விடிவிற்காகவு்ம, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசுவதற்கு ஓர் பொது அணி தேவைப்படுகின்றது அவ்வாறு அனைத்து தரப்பும் ஓரணியில் திரண்டு செயற்படுவதே பொருத்தமானது எனவும் அவர் தெரிவித்தார்.

எமது அரசியல் தலைமைகள் சொத்துக்களை சேர்கின்றார்களோ தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திற்கும், காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்படுவதற்கும் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தனர்.

அவ்வாறு அவர்கள் தமது சுயநலத்தினை கருத்தில்கொண்டு செயற்பட்டமையால் அவர்களிற்கு வரபிரசாதங்கள் பல வழங்கப்பட்டிருக்கும். ஆகவே அவ்வாறு கிடைத்த அனைத்தையும் அவர்கள் சொத்தாக்கியிருப்பார்கள்.

அவர்கள் மக்கள் நலன் சார்ந்து செயற்படவில்லை எனவும் தெரிவித்தார். அவர்கள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

பிரித்தானியாவின் எண்ணைக் கப்பலை ஈரான் சிறைப்பிடித்துள்ளது

தமது படையினர் கொமூஸ் நீரிணையின் ஊடாக அனைத்துலக சட்டவிதிகளுக்கு புறம்பாக பயணம் செய்த பிரித்தானியாவின் எண்ணைத்தாங்கி கப்பலை சிறைப் பிடித்துள்ளதாக ஈரானின் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்பாதுகாப்பு பிரிவு மற்றும் கொர்மோகன் துறைமுக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே அனைத்துலக கடல்சார் விதிகளை மீறிப் பயணம் மேற்கொண்ட பிரித்தானியாக் கப்பல் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்ட எண்ணைக்கப்பல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஈரான் கடற்படையினரின் சிறிய ரக கடற்படைக் கப்பல்களும், உலங்குவானூர்தியும் இந்த நடவக்கையில் ஈடுபடிருந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஸ்ரேனா இம்பிரோ என்ற தமது கப்பலுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது உள்ளதாக சுவிற்சலாந்தைச் சேர்ந்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமது கப்பல் பிரித்தானியாக் கொடியுடன் பயணம் செய்தபோது காணாமல்போயுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இந்த கப்பலில் 23 மாலுமிகளும் பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் தற்போது தோன்றியுள்ள இந்த பதற்றத்தால் எண்ணியின் விலை உலகில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சரணடைந்தவர்கள் காணாமல் போவது எப்படி? – தீபச்செல்வன்

ஈழத்தின் இறுதிப் போரில், பல ஆயிரக் கணக்கானவர்கள், சிங்கள அரச படைகளிடம் சரணடைந்தார்கள். சிங்கள அரச படைகளிடம் யுத்த களத்தில் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அத்துடன் சிங்கள அரச படைகளிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள் குறித்தும் கை விரிக்கிறது சிங்கள அரசு.

இப்படியான அரசுதான் இனப்படுகொலை குறித்து உள்ளக விசாரணை ஒன்றை நடாத்த இருப்பதாகவும் சொல்கிறது. இறுதிப் போரின் சரணடைதல் படலம், என்பது ஈழத்து மக்களின் வாழ்வையும் வரலாற்றையும் இன்றுவரை உலுக்கி வருகின்றது. இந்த விடயம் வெளிச்சத்திற்கு வரும் வரை ஈழ மக்களை அது உளவியல் ரீதியாக ஒரு பெயரிடப்படாத இன அழிப்பு யுத்தமாய் அழித்துக் கொண்டிருக்கும்.

போரின் இறுதியில், போராளிகள் கையளிப்பு ஏராளமான சாட்சியங்கள் சிங்கள அரசுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்திலும், சிங்கள அரசின் ஆணைக் குழு முன்பாகவும் இவை எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன.image aa6bb03263 1 சரணடைந்தவர்கள் காணாமல் போவது எப்படி? - தீபச்செல்வன்

விடுதலைப் புலிகளின் கடற் புலிகளின் நிதிப் பிரிவில் பொறுப்பாளராக இருந்த வைரமுத்து ரதீஸ்வரன் எனப்படும் சுமன் என்பவரின் மனைவி சபிதா, சிங்கள அரசின் காணாமற் போனோரை கண்டுபிடிக்கும் சனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அளித்த சாட்சியம் முக்கியத்துவமானது.

அதில், விடுதலைப் புலிகளின் தளபதிகளான எழிலன், விமல் மாஸ்ரர், நரேன், மேனன், ஆகியோரை இராணுவத்தினர் வட்டுவாகலில் இருந்து பேருந்தில் கொண்டு செல்வதை தாம் நேரில் கண்டதாக கூறினார்.
போரின் இறுதியில் வட்டுவாகல் பகுதியில் 3 பஸ்கள் தரித்து நின்றன. அந்த பஸ்களில் பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்த சுமார் 40 விடுதலைப் புலிகளின் தளபதிகள் ஏற்றப்பட்டதாகவும் தன்னை ஓமந்தைக்குச் செல்லுமாறு கூறிய கணவர், தங்களையும் அங்கு தான் கொண்டு வருவார்கள் என்றும் தன்னிடம் தெரிவித்ததாகவும் இதன்போது, முக்கிய தளபதிகள் பலரையும் அங்குதாம் கண்டிருந்ததாகவும் அவர்கள் எங்கு கொண்டுசெல்லப்பட்டனரென தெரியவில்லை எனவும் அவர் தனது சாட்சியத்தை பதிவு செய்துள்ளார்.

அத்துடன் கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான திருஞானசுந்தரம் ஜனார்த்தனன் என அழைக்கப்படும் நரேன் என்பவரும் அவரது மனைவியும்வட்டுவாகல் கையளிப்பு தொடர்பில் சாட்சியம் அளித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி பாதிரியார் பிரான்ஸிஸ் தலைமையில் சரணடைந்தமை பற்றி தளபதி நரேனின் பெற்றோரும் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களை அனைவரையும் இராணுவத்தினர் பஸ்ஸில் ஏற்றியதுடன், மனைவிக்கு பஸ்ஸில் இடமில்லையெனக் கூறப்பட்டு, அவர் ஓமந்தையில் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்துள்ளார். ஆனால், நரேன் இன்னமும் விடுவிக்கப்படவில்லை அவரது தாயார் சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை மாதவன் மாஸ்டர் எனப் படும் விடுதலைப் புலிகளின் தளபதியும் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்ததாகவும் அவரது மனைவி சாட்சியமளித்திருந்தார். ‘கதிர்காமத்தம்பி தர்மலிங்கம்’ எனப்படும் விடுதலைப் புலிகளின் தளபதியருவரும் இவ்வாறு சரணடைந்ததாக அவரது தாயார் கூறியமை மற்றுமொரு ஆதாரமாகும்.

நடேசன், புலித்தேவன், இரமேஷ் மற்றும் சுமார் 300 போராளிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அதே நேரத்தில் (மே 18, 2009) விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் வட்டு வாகலில் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.

இதில் சிலர் தங்களது குடும்பத்தோடு சரணடைந்தார்கள். வட்டுவாகல் பாலத்தினை மக்கள் கடந்து சென்ற போது இராணுவத்தினர் மக்களிலிருந்து போராளிகளைப் பிரித்தெடுத்தனர்.1 281 சரணடைந்தவர்கள் காணாமல் போவது எப்படி? - தீபச்செல்வன்

மே 18 ஆம் நாள் காலையில் சரணடைந்த புலிகளின் தலைவர்களான யோகி, புதுவை இரத்தினதுரை, பாலகுமாரன், லோறன்ஸ் திலகர், குட்டி, எழிலன், கரிகாலன் போன்ற சுமார் 50 பேரை வட்டுவாகலில் வைத்துப் பேருந்து ஒன்றில் படையினர் ஏற்றிச் சென்றதாக லங்கா வெப் நியூஸ் தகவல்களை வெளியிட்டிருந்தது.

அத்துடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளின் விபரங்களும் வெளியாகியிருந்தது. குறிப்பாக சரணடைந்தவர்கள் பொதுமக்கள் மற்றும் போராளிகள் முன் நிலையிலேயே சரணடைந்துள்ளார்கள். இதனால் பல சரணடைவுகளை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குச் சென்ற இச்சாட்சிகள், பின்னர் விடுதலையாகி வெளியே வந்து தாம் நேரில் கண்டதை கூறியுள்ளார்கள். இதனை நேரடிச் சாட்சியங்களுக்கு அமைய சிறப்புத்தளபதி வேலன், புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் உள்ளிட்ட சுமார் 41 முக்கிய நபர்கள் சரணடைந்திருப்பதாகவும் லங்கா வெப் நியூஸ் ஊடகமும் தனது செய்தியில் ஆதாரபூர்வமாக வெளியிட்டிருந்தது.

சிங்கள அரசினால் நடாத்தப்படும் எந்தவொரு விசாரணையும் நீதியை பெற்றுத் தராது என்பதற்கும் அது சிங்களப் பேரினவாத இன அழிப்பை மறைத்து வெள்ளையடிக்கும் என்பதற்கும் வட்டுவாகல் சரணடைவு தொடர்பான வழக்குகள் தக்க எடுத்துக்காட்டுக்கள் ஆகும். முல்லைத்தீவு நீதிமன்றத்திலும், வவுனியா நீதிமன்றத்திலும் பல ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 58ஆவது கட்டளைப் பிரவுக்கு பொறுப்பு வகித்த சவேந்திர சில்வா வட்டுவாகலில் போராளிகளை தனது கைகளில் பெற்றுக் கொண்டமையை ஆதாரமாக காட்டி வழக்குகள் தொடரப்பட்டன. அவை யாவும் நீதியின்றி தூக்கி வீசப்பட்டன. சிங்கள அரசு சொல்லும் பதில்கள்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பாகின.

சரணடைந்தவர்கள் எப்படி காணாமல் போக முடியும்? அவர்களை சிங்கள அரசும் படைகளும் எப்படி காணாமல் ஆக்கியது, அதை குறித்து வாய் திறக்காமல், கள்ளமாக இருக்கும் இந்த அரசை எப்படி மன்னிப்பது? ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும்? இதெல்லாம் ஈழ மக்களை மெல்ல மெல்ல கொல்லும் நிகழ்வுகளல்லவா?

கையளிக்கப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று சொல்லுகிற அரசு உலகில் எத்தகைய கொடிய அரசு? சரணடைந்தவர்கள் எவரும் இல்லை என்று சொல்லும் சிங்கள அரசிடம் அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை நீதிமன்றங்களும் கேட்பதில்லை. சிங்கள அரசின் நீதி என்பது, சிங்கள இனப்படுகொலையின் அநீதியே.

அது சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கானது. எனவே சர்வதேச விசாரணையே எமக்கு நீதியைப் பெற்றுத் தரும். அதற்கான அர்ப்பணிப்பு மிக்க போராட்டமே எமக்கு இல்லாமல் இருக்கிறது. அதுவே அவசியமாக இருக்கிறது.

சிங்கள அரசின் உயிர்களை மையமாக கொண்ட இந்த இனப் படுகொலை ஆட்டத்திற்கு, கால அவகாசத்தை பெற்றுக் கொடுத்தல் என்பது, சிங்கள அரசின் அநீதிக்கு துணைபோதலாகும். சர்வதேசம் இன்று இலங்கையின் ஆட்சி தமக்கு சாதகமாகியதை அடுத்து, இந்த விடயங்களை நீர்த்துப் போகும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற கொடூரச் செயல்களுக்கு ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகம் காட்டும் மௌனமும் எமது தலைமை கொடுக்கும் விட்டுக் கொடுப்புமே, சிங்கள அரசின் பெயரிடப்படாத தொடரும் இன அழிப்புக்கு வழி வகுக்கிறது. இனப்படு கொலைக்கான நீதியில் இருந்து சிங்கள அரசை தப்பவைக்கும் ஓட்டையை ஏற்படுத்துகின்றது.