சரணடைந்தவர்கள் காணாமல் போவது எப்படி? – தீபச்செல்வன்

ஈழத்தின் இறுதிப் போரில், பல ஆயிரக் கணக்கானவர்கள், சிங்கள அரச படைகளிடம் சரணடைந்தார்கள். சிங்கள அரச படைகளிடம் யுத்த களத்தில் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அத்துடன் சிங்கள அரச படைகளிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள் குறித்தும் கை விரிக்கிறது சிங்கள அரசு.

இப்படியான அரசுதான் இனப்படுகொலை குறித்து உள்ளக விசாரணை ஒன்றை நடாத்த இருப்பதாகவும் சொல்கிறது. இறுதிப் போரின் சரணடைதல் படலம், என்பது ஈழத்து மக்களின் வாழ்வையும் வரலாற்றையும் இன்றுவரை உலுக்கி வருகின்றது. இந்த விடயம் வெளிச்சத்திற்கு வரும் வரை ஈழ மக்களை அது உளவியல் ரீதியாக ஒரு பெயரிடப்படாத இன அழிப்பு யுத்தமாய் அழித்துக் கொண்டிருக்கும்.

போரின் இறுதியில், போராளிகள் கையளிப்பு ஏராளமான சாட்சியங்கள் சிங்கள அரசுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்திலும், சிங்கள அரசின் ஆணைக் குழு முன்பாகவும் இவை எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன.image aa6bb03263 1 சரணடைந்தவர்கள் காணாமல் போவது எப்படி? - தீபச்செல்வன்

விடுதலைப் புலிகளின் கடற் புலிகளின் நிதிப் பிரிவில் பொறுப்பாளராக இருந்த வைரமுத்து ரதீஸ்வரன் எனப்படும் சுமன் என்பவரின் மனைவி சபிதா, சிங்கள அரசின் காணாமற் போனோரை கண்டுபிடிக்கும் சனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அளித்த சாட்சியம் முக்கியத்துவமானது.

அதில், விடுதலைப் புலிகளின் தளபதிகளான எழிலன், விமல் மாஸ்ரர், நரேன், மேனன், ஆகியோரை இராணுவத்தினர் வட்டுவாகலில் இருந்து பேருந்தில் கொண்டு செல்வதை தாம் நேரில் கண்டதாக கூறினார்.
போரின் இறுதியில் வட்டுவாகல் பகுதியில் 3 பஸ்கள் தரித்து நின்றன. அந்த பஸ்களில் பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்த சுமார் 40 விடுதலைப் புலிகளின் தளபதிகள் ஏற்றப்பட்டதாகவும் தன்னை ஓமந்தைக்குச் செல்லுமாறு கூறிய கணவர், தங்களையும் அங்கு தான் கொண்டு வருவார்கள் என்றும் தன்னிடம் தெரிவித்ததாகவும் இதன்போது, முக்கிய தளபதிகள் பலரையும் அங்குதாம் கண்டிருந்ததாகவும் அவர்கள் எங்கு கொண்டுசெல்லப்பட்டனரென தெரியவில்லை எனவும் அவர் தனது சாட்சியத்தை பதிவு செய்துள்ளார்.

அத்துடன் கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான திருஞானசுந்தரம் ஜனார்த்தனன் என அழைக்கப்படும் நரேன் என்பவரும் அவரது மனைவியும்வட்டுவாகல் கையளிப்பு தொடர்பில் சாட்சியம் அளித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி பாதிரியார் பிரான்ஸிஸ் தலைமையில் சரணடைந்தமை பற்றி தளபதி நரேனின் பெற்றோரும் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களை அனைவரையும் இராணுவத்தினர் பஸ்ஸில் ஏற்றியதுடன், மனைவிக்கு பஸ்ஸில் இடமில்லையெனக் கூறப்பட்டு, அவர் ஓமந்தையில் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்துள்ளார். ஆனால், நரேன் இன்னமும் விடுவிக்கப்படவில்லை அவரது தாயார் சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை மாதவன் மாஸ்டர் எனப் படும் விடுதலைப் புலிகளின் தளபதியும் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்ததாகவும் அவரது மனைவி சாட்சியமளித்திருந்தார். ‘கதிர்காமத்தம்பி தர்மலிங்கம்’ எனப்படும் விடுதலைப் புலிகளின் தளபதியருவரும் இவ்வாறு சரணடைந்ததாக அவரது தாயார் கூறியமை மற்றுமொரு ஆதாரமாகும்.

நடேசன், புலித்தேவன், இரமேஷ் மற்றும் சுமார் 300 போராளிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அதே நேரத்தில் (மே 18, 2009) விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் வட்டு வாகலில் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.

இதில் சிலர் தங்களது குடும்பத்தோடு சரணடைந்தார்கள். வட்டுவாகல் பாலத்தினை மக்கள் கடந்து சென்ற போது இராணுவத்தினர் மக்களிலிருந்து போராளிகளைப் பிரித்தெடுத்தனர்.1 281 சரணடைந்தவர்கள் காணாமல் போவது எப்படி? - தீபச்செல்வன்

மே 18 ஆம் நாள் காலையில் சரணடைந்த புலிகளின் தலைவர்களான யோகி, புதுவை இரத்தினதுரை, பாலகுமாரன், லோறன்ஸ் திலகர், குட்டி, எழிலன், கரிகாலன் போன்ற சுமார் 50 பேரை வட்டுவாகலில் வைத்துப் பேருந்து ஒன்றில் படையினர் ஏற்றிச் சென்றதாக லங்கா வெப் நியூஸ் தகவல்களை வெளியிட்டிருந்தது.

அத்துடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளின் விபரங்களும் வெளியாகியிருந்தது. குறிப்பாக சரணடைந்தவர்கள் பொதுமக்கள் மற்றும் போராளிகள் முன் நிலையிலேயே சரணடைந்துள்ளார்கள். இதனால் பல சரணடைவுகளை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குச் சென்ற இச்சாட்சிகள், பின்னர் விடுதலையாகி வெளியே வந்து தாம் நேரில் கண்டதை கூறியுள்ளார்கள். இதனை நேரடிச் சாட்சியங்களுக்கு அமைய சிறப்புத்தளபதி வேலன், புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் உள்ளிட்ட சுமார் 41 முக்கிய நபர்கள் சரணடைந்திருப்பதாகவும் லங்கா வெப் நியூஸ் ஊடகமும் தனது செய்தியில் ஆதாரபூர்வமாக வெளியிட்டிருந்தது.

சிங்கள அரசினால் நடாத்தப்படும் எந்தவொரு விசாரணையும் நீதியை பெற்றுத் தராது என்பதற்கும் அது சிங்களப் பேரினவாத இன அழிப்பை மறைத்து வெள்ளையடிக்கும் என்பதற்கும் வட்டுவாகல் சரணடைவு தொடர்பான வழக்குகள் தக்க எடுத்துக்காட்டுக்கள் ஆகும். முல்லைத்தீவு நீதிமன்றத்திலும், வவுனியா நீதிமன்றத்திலும் பல ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 58ஆவது கட்டளைப் பிரவுக்கு பொறுப்பு வகித்த சவேந்திர சில்வா வட்டுவாகலில் போராளிகளை தனது கைகளில் பெற்றுக் கொண்டமையை ஆதாரமாக காட்டி வழக்குகள் தொடரப்பட்டன. அவை யாவும் நீதியின்றி தூக்கி வீசப்பட்டன. சிங்கள அரசு சொல்லும் பதில்கள்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பாகின.

சரணடைந்தவர்கள் எப்படி காணாமல் போக முடியும்? அவர்களை சிங்கள அரசும் படைகளும் எப்படி காணாமல் ஆக்கியது, அதை குறித்து வாய் திறக்காமல், கள்ளமாக இருக்கும் இந்த அரசை எப்படி மன்னிப்பது? ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும்? இதெல்லாம் ஈழ மக்களை மெல்ல மெல்ல கொல்லும் நிகழ்வுகளல்லவா?

கையளிக்கப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று சொல்லுகிற அரசு உலகில் எத்தகைய கொடிய அரசு? சரணடைந்தவர்கள் எவரும் இல்லை என்று சொல்லும் சிங்கள அரசிடம் அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை நீதிமன்றங்களும் கேட்பதில்லை. சிங்கள அரசின் நீதி என்பது, சிங்கள இனப்படுகொலையின் அநீதியே.

அது சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கானது. எனவே சர்வதேச விசாரணையே எமக்கு நீதியைப் பெற்றுத் தரும். அதற்கான அர்ப்பணிப்பு மிக்க போராட்டமே எமக்கு இல்லாமல் இருக்கிறது. அதுவே அவசியமாக இருக்கிறது.

சிங்கள அரசின் உயிர்களை மையமாக கொண்ட இந்த இனப் படுகொலை ஆட்டத்திற்கு, கால அவகாசத்தை பெற்றுக் கொடுத்தல் என்பது, சிங்கள அரசின் அநீதிக்கு துணைபோதலாகும். சர்வதேசம் இன்று இலங்கையின் ஆட்சி தமக்கு சாதகமாகியதை அடுத்து, இந்த விடயங்களை நீர்த்துப் போகும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற கொடூரச் செயல்களுக்கு ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகம் காட்டும் மௌனமும் எமது தலைமை கொடுக்கும் விட்டுக் கொடுப்புமே, சிங்கள அரசின் பெயரிடப்படாத தொடரும் இன அழிப்புக்கு வழி வகுக்கிறது. இனப்படு கொலைக்கான நீதியில் இருந்து சிங்கள அரசை தப்பவைக்கும் ஓட்டையை ஏற்படுத்துகின்றது.