பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சங்க நாயக்க தேரருக்கு எதிரான விசாரணையில் காவல்துறையினர் மீது சந்தேகம்

சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள எட்டு புண்ணியத்தலங்களின் பொறுப்பாளரும் நுவர கலாவிய பிரதேசத்தின் பிரதான சங்கநாயக்கருமான பல்லேகம சிறி சுமன ரதனபால ஹேமரதன நாயக்க தேரர் விடயத்தில் காவல்துறையினரின் செயற்பாட்டை மக்கள் போராட்ட முன்னணி கடுமையாக விமர்சித்துள்ளது.

குறித்த சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக கடந்த 10 ஏப்ரல் மாதம் ஆம் திகதியே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீண்டகாலமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு குற்றச்செயல் என்று சிறுமி அளித்த வாக்குமூலம் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.

இருப்பினும் குறித்த விடயம் தொடர்பாக காவல்துறை மெளனம் காத்து வந்ததாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கடுமையான அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளுக்கு பின்னரே காவல்துறையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் அமைந்துள்ள முன்னணி சோசலிச கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

சந்தேகநபரான தேரர் கைது செய்யப்படுவதையோ அல்லது சிறை வைக்கப்படுவதையோ தவிர்ப்பதற்காக திட்டமிட்ட அடிப்படையில் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அத்துடன் வெறும் 2 வாரங்களுக்குள் காவல்துறை அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டதாக நீதிமன்றத்துக்கு அவசர அவசரமாக அறிவித்த போதிலும், தேரரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட 84 அழைப்புகள் தொடர்பான தரவுகளோ அல்லது சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோரிய DNA பரிசோதனை அறிக்கைகளோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தேரருக்கு பிணை வழங்க இணக்கம் தெரிவித்தமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

காவல்துறையினரும், சட்டமா அதிபர் திணைக்களமும், பிணை வழங்குவதற்கு எவ்வித எதிர்ப்பையும் வெளியிடாமல், நீதிமன்றத்தில் அதற்கான பின்னணியை மிக நேர்த்தியாக அமைத்துக் கொடுத்துள்ளது என்று மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கிற்காக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சார்பில் நீதிமன்றத்தில் முன்னின்ற சட்டத்தரணி சஞ்சீவனிக்கு எதிராக, காவல்துறை மற்றும் புலனாய்வுத் துறையினரின் பின்னணியுடன் சமூக ஊடகங்களில் திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் இந்த தேரருக்கு இருக்கும் நெருங்கிய அரசியல் மற்றும் குடும்ப உறவுகளே சட்டத்தை வளைப்பதற்குக் காரணம் ஆகும்.

புதிய அரசியல் கலாசாரத்தை கொண்டு வருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் பழைய அரசியல் கலாசாரத்தையே தொடர்கிறது என்றும் மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ சாடினார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து ஒரு வார்த்தையேனும் பேசாமல் அச்சம் காட்டி மௌனமாக இருக்கின்றனர்.

இவ்வாறான குற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் பௌத்த பிக்கு அதிகாரம், மத செல்வாக்கு, அரசியல் மற்றும் அரச அதிகார பலத்திற்கு எதிராக ஒட்டுமொத்த சமூகமும் வீதிக்கு வந்து போராட வேண்டும்.

பிணை வழங்கப்பட்டதன் பின்னர் இந்த வழக்கினை 10 வருடங்கள் வரை இழுத்தடித்து காலம் தாழ்த்த திட்டமிடப்பட்டுள்ளதால், இதற்கு எதிராக சமூகம் ஒன்றிணைய வேண்டும் மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.