தமிழ் மக்கள் சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு தற்போதும் அச்சுறுத்தல் உள்ளது – பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கருத்து

தற்போது சிறீலங்காவில் தங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான அதிகாரி கிளெமென்ட் நயாலெட்சோசி வூல் அவர்களை போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் சிங்கள அரசின் நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தமிழ் அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும் என சிறீலங்கா அரசின் இனஅழிப்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இலக்கு இணையத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஜுலை 18 ஆம் நாள் முதல் 26 ஆம் நாள் வரையில் சிறீலங்காவில் தங்கியிருக்கும் கிளெமென்ட் அவர்கள் தனது அறிக்கையை எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவுள்ளார்.

எனவே சிறீலங்காவில் தமது உரிமைகளுக்காக சிறுபான்மை இனம் அமைதியாக ஒன்று கூடுவதற்குரிய சுதந்திரம் உள்ளதா என்பதை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் ஊடாக அவருக்கு அறிக்கை மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

அமைதியாக தமிழ் மக்கள் கூடும் இடங்களில் ஆயுதம் தரித்த சிங்கள இராணுவம் குவிக்கப்படுவதும், தமிழ் மக்களை அச்சுறுத்துவதும் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

அமைதியாக ஒன்று கூடிய தமிழ் மக்கள் மீது சிங்கள மதகுருக்களும், சிங்களவர்களும் கொதிநீரை ஊற்றுக்கிறனர், தமிழ் மக்கள் செல்லும் பேரூந்துகளின் சக்கரங்களில் இருந்து காற்று பிடுங்கப்படுகின்றது, தமிழ் மக்கள் கூடுவதை தடை செய்யும் சிங்கள நீதி மன்றங்கள் அதே இடத்தில் சிங்களவர்கள் கூடுவதை அனுமதிக்கின்றது.

இவ்வாறான சம்பவங்களை அறிக்கை மூலமாக தயார் செய்து ஐ.நா அதிகாரியிடம் கையழிக்க வேண்டியது இன்றைய தேவையாக உள்ளது. சிறீலங்காவுக்கு பயணம் செய்யும் ஐ.நா அதிகாரிகளை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக தரப்பினரை சந்திக்க வைப்பதும், தனக்கு சாதகமான அறிக்கைகளை அவர்களிடம் கையளிப்பதும் காலம் காலமாக நடந்தேறி வருகின்றது.

எனவே அமைதியாக தமிழ் மக்கள் முன்னெடுக்கும் ஒன்று கூடல்களை சிறீலங்கா அரசு எவ்வாறு தனது படையினர் மூலம் அச்சுறுத்தி வருகின்றது என்பது தொடர்பான அறிக்கை ஒன்று பாதிக்கப்பட்ட மக்களின் ஊடாக ஆதாரங்களுடன் அவரிடம் சமர்ப்பிக்கும் பணிகளை தாயகத்தில் உள்ள தேசிய நலன் சார்ந்த அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.