Home Blog Page 3064

முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளி ஜேர்மனியில் கைது.

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள நபர் பற்றி சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு குழப்பமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

2005ஆம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அறுவர் மீது வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச.பொட்டு அம்மான், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த சாள்ஸ் மாஸ்டர், மணிமேகலை, முத்தையா சகாதேவன், இசிதோர் ஆரோக்கியநாதன் ஆகியோரே இந்த அறுவருமாவார்.

இதில் இசிதோர் ஆரோக்கியநாதன் விடுவிக்கப்பட்டிருந்தார். சகாதேவன் கடந்த மாதம் சிறையில் உயிரிழந்து விட்டார். ஏனைய நான்கு சந்தேக நபர்களும் இறந்து விட்டதால், இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக மேல்நீதிமன்றம் கூறியிருந்தது.

இவர்கள் தவிர்ந்த (பட்டியலில் இல்லாத) ஒருவரே ஜேர்மனியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டவராவார். இவர் நவநீதன் என அழைக்கப்படும் 40 வயதுடைய நபர் என அறிய முடிகின்றது. எனினும் இவரின் சொந்தப் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.

இவர் சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலைக்கு உதவி செய்தவர்  என்றும், தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பில் 2000 தொடக்கம் 2009 வரை உறுப்பினராக இருந்தார் என்றும், இறுதிப் போரின் போது  விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெளியேறிச் செல்ல உதவினார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதேவேளை இந்த நபரின் வழக்கை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளது என்று தெரிவித்திருந்தது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இந்த வழக்கிற்கு தேவையான சான்றுகள், ஆதாரங்களை இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக வழங்கியுள்ளோம் என்றும் கூறினார்.

 

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அக்கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த வேட்பாளர் புகழ்பெற்ற அரச சேவை அதிகாரி ஒருவராக இருக்கலாம் என அவர்  தெரிவித்துள்ளார். அந்த வேட்பாளர் யார் என்பது குறித்து அடுத்த மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி முன்னணி என்னும் பெயரில் கூட்டணி சார்பிலேயே இந்த வேட்பாளர் நிறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த கூட்டணியில் புத்திஜீவிகள், கலைஞர்கள், சிவில் அமைப்புக்கள், பல்துறை அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள் உட்பட பல்வேறு அமைப்புக்கள் அங்கம் வகிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆளுநர் முடிவெடுக்கும் வரை ஏழு தமிழர்களையும் விடுப்பில் விட வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள்

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய அமைச்சரவை தீரமானம் போட்டது. ஆளுநர் இன்னும் முடிவெடுக்க மறுக்கிறது. ஆகவே, ஆளுநர் முடிவெடுக்கும் வரை ஏழு தமிழரகளையும் விடுப்பில் விட வேண்டும் “என்பது தான் விடுதலைச்சிறுத்தைகளின் நிலைப்பாடு அக்கட்சியின் உறுப்பினர் தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மெலும் தெரிவித்துள்ளதாவது:

நீதிமன்ற விடுப்பில் ஒரு மாத காலம் வெளியே வந்திருக்கும் சகோதரி நளினி முருகனை சந்திக்க அவர் தங்கியிருக்கும் சத்துவாச்சாரியில் உள்ள தோழர் சிங்கராயர் வீட்டுக்கு சென்றோம். நீதிமன்ற ஆணையை சொல்லி  அனுமதி மறுத்து விட்டது காவல்துறை.

விடுதலைச்சிறுத்தைகள் எப்போதும் நீதிமன்ற உத்தரவை ஏற்று நடப்பவர்கள் என்பதால், அமைதியாக திரும்பினோம்.

“தமிழக அரசு பேரறிவாளன், நளினி முருகன், சாந்தன், ஜெயக்குமார்,
ராபர்ட் பயாஸ்,ரவிச்சந்திரன், முருகன் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய அமைச்சரவை தீரமானம் போட்டது. ஆளுநர் இன்னும் முடிவெடுக்க மறுக்கிறது. ஆகவே, ஆளுநர் முடிவெடுக்கும் வரை ஏழு தமிழரகளையும் விடுப்பில் விட வேண்டும் “என்பது தான் விடுதலைச்சிறுத்தைகளின் நிலைப்பாடு.

 

இராணுவ தற்காப்பு கலைக்கிராமம் கிளிநொச்சியில் திறப்பு

இராவண தற்காப்பு கலைக்கிராமம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இக்கிராமம் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் என். யூ.எம்.டபிள்யூ. சேனநாயக்காவினால் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் குறித்த மாதிரி தற்காப்பு கலைக்கிராமம் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரியவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்காப்புக் கலையினை அழியவிடாது அதனைப் பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் படையினருக்கு தற்காப்புக் கலை முதற்கட்டமாக வழங்கப்பட்டது.

குறித்த பயிற்சியின் நிறைவாகவும், கலை பாரம்பரியத்தினை பேணிப் பாதுகாக்கும் நோக்குடனும் இரணைமடுவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் குறித்த தற்காப்புக் கலைக் கிராமம் படையினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் போது பண்டைக்கால அரசாட்சி முறையில் எவ்வாறு தற்காப்புக் கலை பேணப்பட்டமை என்பதை பிரதிபலிக்கும் வகையில் விசேட  நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா?

சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தனது சேவையை நீடிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு ஜனாதிபதி சரியான பதிலை அளிக்கவில்லை. இவரின் பதவி எதிர்வரும் ஓகஸ்ட் 18 அன்று நிறைவடைகின்றது.

இப்போதைய  இராணுவத் தளபதி ஓய்வு பெற்றால் அடுத்து மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா பதவியை பொறுப்பேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனியார் காணியில் மகாபோதி அமைக்க திட்டம்

யாழ். வலி வடக்கு தையிட்டிப் பகுதியிலுள்ள தனியாரிற்கு சொந்தமான காணியொன்றில் மகாபோதி அமைப்பதற்கான அனுமதியை பிக்கு ஒருவர் பிரதேச சபையிடம்  கோரியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை எதிர்த்து தாம் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஊடாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் கருத்துத் தெரிவிக்கையில், 1946ஆம் ஆண்டு காலப்பகுதியில், வலி.வடக்கில் பேக்கரிகளில் பணிபுரிந்த சிங்கள பௌத்தர்கள் தங்கள் வழிபாட்டிற்காக20 பரப்புக் காணியில்  பௌத்த விகாரை ஒன்றை அமைத்தனர். தற்போது அந்தக் காணியில் விகாரை அமைப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தனியார் காணியொன்றில் விகாரை அமைப்பதற்கான அனுமதியை பிக்கு ஒருவர் கோரியிருப்பது என்பது அனுமதிக்க முடியாதது.

இதனாலேயே நாம் நீதிமன்றம் செல்லவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மூதூரில் புதிய பிரதேச செயலகம்

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் துண்டாடப்பட்டு புதிய பிரதேச சபை அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், தோப்பூர் பிரதேச செயலகம் என்னும் பெயரில் புதிய பிரதேச செயலகம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கான அமைச்சரவை பத்திரமும் தயாராவதாகவும் அறியமுடிகின்றது.

இந்த தோப்பூர் பிரதேச செயலகத்தின் கீழ் இணைக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் பின்வருமாறு

கிளிவெட்டி, குமாரபுரம், பாரதிபுரம், புளியடிச்சோலை, விநாயகபுரம், கங்குவேலி, மேங்காமம், மருதநகர், பாலத்தடிச்சேனை, முன்னம்போடிவெட்டை, சிறிநாராயணபுரம் ஆகிய கிராமங்கள்  இணைக்கப்படும்.

இந்த வேலைகள் நடைபெற்று நிறைவடையும் தறுவாயில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறையில் பத்திற்கும் மேற்பட்ட தமிழ்க் கிராமங்கள் அழிவடைந்துள்ளன

அம்பாறை மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதே நிலைமை தொடர இடமளிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு 26.07இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே கவீந்திரன் கோடீஸ்வரன் மேற்படி கருத்தை தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்தப் பிரதேசம் தற்போது முன்னேற்றமடைந்து வருகின்றது.  அதற்குக் காரணம் இங்குள்ள புத்திஜீவிகளும், இந்த பிரதேசத்தின் தவிசாளருமேயாகும். இங்கு வாழும் முஸ்லிம் மக்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. ஆனால்  முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்கள் நலனுக்காக முஸ்லிம் மக்களுக்கு மட்டும் திட்டங்களை மேற்கொண்டு உதவி செய்து வருகின்றனர். இது கவலைக்குரியது. முஸ்லிம், சிங்கள அரசியல்வாதிகள் தங்கள் நிதி மூலம் தங்கள் இன மக்களுக்காக மட்டும் உதவி செய்து வருகின்றனர். இது இன பேதத்தை தூண்டும் செயலாக அமைகின்றது.

எப்போதும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. சில அற்ப சலுகைகளை கொடுத்து தமிழர்களை விலை கொடுத்து வாங்கலாம் என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் வடக்கில் பெருமளவு நிதியை கொட்டி தேர்தலில் போட்டியிடுவதற்கு செலவிட்டனர். ஆனால் அங்கு ஒரு உறுப்பினரைக்கூட பெற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழர்கள் ஒன்று சேர்ந்து தமிழ் தேசியத்தை பலப்படுத்தினார்கள். அதேபோல கிழக்கிலும் தமிழ் தேசியத்தை பலப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராலய செயலாளராக முன்னாள் அரசியல்வாதியின் மகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவின் மகள் துல்மினி அத்தநாயக்க அவுஸ்திரேலியாவிற்கான உயர்ஸ்தானிகராலய மூன்றாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு சம்பளம் மற்றும் பணியாளர் ஆணையத்தின் ஒப்புதல் பெறாததால் நிராகரிக்கப்பட்டது. இந்த நியமனத்திற்காக வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன கடந்த செவ்வாய்கிழமை அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருந்தார்.

இப்போது சம்பளம், பணியாளர் ஆணைய ஒப்புதல் பெற்றிருப்பதனால், அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் அமெரிக்கத் தூதுவரின் தற்போதைய பதவி

சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப் பிரதம பிரதி உதவி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் தனது பதவியை 27.07இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கிழக்காசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுகு்குப் பொறுப்பான பணியகத்தின் பிரதம பிரதி உதவி செயலாளராக அவர் பணியாற்றுவார்.

கெஷாப் தனது 25 வருட கால அமெரிக்க இராஜாங்க சேவையில் இந்தியா, மொரோக்கோ, கினியா மற்றும் இலங்கை, மாலைதீவிற்கான தூதுவராகப் பணியாற்றியிருக்கின்றார்.