Home Blog Page 3065

ரணில் இந்தியாவில் ஹோம வழிபாடு

மனைவியுடன் இந்தியாவில் தல யாத்திரையை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்தியா கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில், இலங்கை மக்களின் நலனுக்காக நவசண்டிகா ஹோமம் நடத்தினார்.

ரணிலின் வருகையை முன்னிட்டு கொல்லூரில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சீரற்ற காலநிலை காரணமாக ஹெலிகொப்டரில் அழைத்து வராது தரைவழியாக பாதுகாப்பு அதிகாரிகள் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்றனர்.

பிரபாகரன் காலத்தில் மக்களிடம் அச்சம் இல்லை ராஜபக்ச

பிரபாகரன் காலத்தில் மக்கள் அச்சமின்றி மத வழிபாடுகளை மேற்கொண்டதாக    ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலுக்காக பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்தா , தற்போது நாட்டில் கோவில், பள்ளிகள், தேவாலயங்களுக்குக் கூட மக்கள் அச்சமின்றி செல்ல முடியாத நிலைமை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆயுத போராட்டம் உச்சத்தில் இருந்த போதும், பிரபாகரன் இருந்த போதும் கூட மக்களிடம் இந்த பயம் இருக்கவில்லை என்றும், தற்போதைய அரசாங்கத்திடம் எதை கூறினாலும் அதை கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்தது போர்குற்றம் மட்டும் அல்ல திட்டமிட்ட இனபடுகொலை.   ஒவ்வொரு சிங்கள தலைமைகளும்  தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை நிகழ்த்துகிறார்கள் ,

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கான ஆயுதங்கள் மே மாதம் 2009 இல் மௌனிக்கப்பட்டது. இந்நிலையில் ஜ.நா. பிரதிநிகள், மற்றும் அமெரிக்கா, இந்தியா, நோர்வே போன்ற பல சர்வதேச நாடுகள் கொடுத்த வாக்குகளிற்கமைய பல்லாயிரக்கணக்கான போராளிகளும் பொதுமக்களும் சிங்கள இனவாத அரசின் படுகொலை இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களில் 146679 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இதற்க்கு  ராஜபக்ச  தான் முழு பொறுப்பாளி என்பது  நிதர்சனம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மற்றுமொரு சாட்சியையும் இழந்து நிற்கின்றது தமிழினம்!

இது வரை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி வீதி வீதியாக அலைந்து சிங்கள அரசினால் ஏமாற்றப்பட்டு, தமிழ் பிரதிநிதிகள் மீது நம்பிக்கையிழந்து எந்த வித அடிப்படை தீர்வுகளையும் பார்க்காமலே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 38 பேர் உயிரிழந்துள்ளதாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

புதுக்குடியிருப்பு, இரணைபாலையை சேர்ந்த திருமதி செபமாலைமுத்து திரேசம்மா 24.07.2019 அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவரது மகனான செபமாலைமுத்து ஜெபபிரகாஸ் என்பவர் 01.07.2008 அன்று இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டார், இந்நிலையில் கடந்த 11 வருடங்களாக தனது மகனை தேடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டு 24.07.2019 அன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்திற்கும் அவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் வடக்கு கிழக்கு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் அவரது மகனை எமது உறவாகக்கொண்டு அவருக்கான நீதியை பெற்றுக்கொடுக்க உத்வேகத்துடன் போராடுவோம் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கனகரத்தினம் காந்தமலர், சபாரத்தினம் மனோன்மணி, தெய்வேந்திரன் இந்திரா, நாகராசா சிவமணி, சாமிதம்பி திரவியம் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சுந்தரம்பிள்ளை அருந்தவம், தவரட்ணம் பத்மாவதி, ராமன் கமலம், வீரகத்தி அமிர்தலிங்கம், சொக்கன் பரமேஸ்வரி, சுந்தரம் லெட்சுமிப்பிள்ளை, நாகராசா சிவசோதி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பரமசிவம் தெய்வஈஸ்வரி, மகேந்திரன் உதயராணி, லவநீதன் இளவரசி, தம்பிமுத்து அமரசிங்கம், அழகிப்போடி சந்திரசேகரம், சந்திரசேகரம் ஞானசௌந்தரி, யாழ் மாவட்டத்தை சேர்ந்த மாசிலாமணி புஸ்பராணி கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த கனகரத்தினம் மகேஸ்வரி, பாவிலு சந்தியோகு, மரியான் சரோரூபன் குருஸ், கனகரத்தினம் மகேஸ்வரி, வைத்தியலிங்கம் யோகரட்ணம், ஈஸ்வரன் உருத்திராதேவி, துரைசிங்கம் ஈஸ்வரி, சிதம்பரப்பிள்ளை யோகராசா மற்றும் அரசியல் கைதியான தனது கணவனை விடுதலை செய்யக்கோரி எம்முடன் இணைந்து போராடிய ஆனந்தசுதாகர் யோகராணி மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஜசிந்தா பீரிஸ், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கந்தையா அரியரத்தினம், அரியதாஸ் புவனேஸ்வரி முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த அன்ரன் அல்பிரட், செபநாயகம் மரியமலர், செபஸ்ரியான்பிள்ளை ஆரோக்கியநாதன், ச.விஜயலட்சுமி, கோணமலை பொன்னம்பலம், வேலு சரஸ்வதி, செபமாலைமுத்து திரேசம்மா ஆகியோரின் (இங்கு வழங்கப்பட்ட மரணமானவர்களின் விபரமானது எமது அமைப்பில் பதிவு செய்யப்பட்ட தரவுகள் மட்டுமே. எமது பதிவுகளுக்குட்படாதவர்களின் எண்ணிக்கை இங்கு சுட்டிக்காட்டியதை விட அதிகமாக இருக்குமென கணிப்பிடுகின்றோம்) மரணத்துடன், எமது உறவுகளை மீட்பதற்காக போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ள நிலையிலும் இலங்கை சிங்கள அரசாங்கமோ சர்வதேச சமூகமோ எமக்கான நீதியை விரைவில் பெற்றுத்தருவதற்கு முயலாமையினையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது போராட்டமானது எமது உறவுகளை மீட்டல், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிதல், நீதியை பெறல் என்பவற்றுடன் இனிவரும் காலங்களில் எமது சமூகத்திற்கு மட்டுமல்லாமல் மனித குலத்திற்கே இவ்வாறான பிரச்சனைகள் நிகழாதிருக்கவுமேயாகும். ஆயினும் எமது போராட்டமானது மிக கடினமானது ஏனெனில் எமக்கான நீதியை பக்கச்சார்பற்று வழங்கக்கூடிய சர்வதேச பொறிமுறையை கட்டமைக்கவும் , நீதியை பெற்றுக்கொள்ளவும் கடுமையாக போராடவேண்டிய நிலை காணப்படுகின்றது.

மனித குலத்திற்கான நீதியானது நபர்களின் எண்ணிக்கை சார்ந்தோ (பெரும்பான்மை) பாதிக்கப்பட்டவர்களிடமுள்ள வளங்கள் சார்ந்தோ அல்லது நீதி வழங்குனர்கள் மற்றும் நீதி வழங்குனர்களின் பங்காளிகளின் தேவையின் அடிப்படையிலோ அமையுமெனின் அதன் பெயர் நீதியன்று. ஆயினும் இன்றைய காலத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிப்பொறிமுறைகள் மேற்கூறப்பட்டதன் அடிப்படையில் இடம்பெறுவதாக நாம் உணர்ந்ததன் விளைவாக உளச்சோர்வுக்கும் நோய்களுக்கும் உள்ளாகி மரணத்தை தழுவிக்கொண்டிருக்கின்றோம்.

2004-இல் சந்திரிக்கா அம்மையாரால் உருவாக்கப்பட்ட அதிபர் செயலக ஆணைக்குழுக்களாளோ 2013-இல் மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவினாலோ தற்போதைய ரணில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல்போனோருக்கான அலுவலகம் , சிங்கள சார்பு நிலை உள்ளக நீதி நிறுவனங்கள் ஆகியன எமக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை , பெற்றுக்கொடுக்கப்போவதுமில்லை என்பதுடன் கால தாமதங்கள் ஊடாக உறவுகளை தேடுபவர்களை உடல் உள ரீதியாக பலவீனப்படுத்தி உயிரிழக்கவும் காரணமாக உள்ளன. அரசியல் பிரதிநிதிகளின் செயற்பாடுகளானது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யும் வகையில்லல்லாது அரசியல் நலன்களுக்காக எமது பிரச்சனைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன, மாறாக அவர்கள் பாரிய அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது பிரயோகித்து சர்வதேசத்தின் பங்களிப்புடனான நீதிப்பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

மேலும் உள்ளூர் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் போன்று குறைகள் நிறைந்த காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு எம்மீது அழுத்தம் வழங்குவதணை நிறுத்தி எமக்கான நீதி விரைவில் கிடைக்கப்பெறுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தமும் ஆலோசனையும் வழங்கவேண்டும்.

இவற்றில் ஏற்படும் தாமதங்களால், நாம் நேரடியாக சர்வதேச விசாரணையினைக்கோருக்கின்றோம் ஆயினும் சர்வதேச நிறுவனங்கள் மீதான நம்பிக்கைகளை குறைக்கும் வகையில் அவர்களாலும் காலதாமதம் செய்யப்படுவதோடு நீதி வழங்களில் அவர்களின் பங்களிப்பு மற்றும் இலங்கை சிங்கள அரசாங்கம் மீதான அழுத்தம் போதாதுள்ளதாக கருதுகின்றோம். ஆயினும் மக்கள் மயப்படுத்தப்படலூடாக எமது போராட்டம் வலுப்பெறுவதற்கும் அதனூடாக உறவுகளை மீட்கவும் விரைவாக நீதியை பெறவும் முடியுமென கருதுகின்றோம்.

நீதி வழங்களில் ஏற்படும் தாமதங்கள் மேலும் உறவுகளை தேடும் உறவுகளின் மரணத்திற்கு அடிப்படையாக அமையும். அதன் விளைவுகளும் புறக்கணிப்பும் எமது இனத்தின் எதிர்கால சந்ததியின் அகிம்சை மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலை உருவாகாதிருக்க சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்தினுடனான விரைவான நீதிப்பொறிமுறை அமைக்கப்பட்டு எமக்கான நீதி வழக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். என வடக்கு கிழக்கு மாகாணத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கடைசி முயற்சியாக, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் மாநாட்டை கூட்டுங்கள் – சம்பந்தனுக்கு மனோ தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பு கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும், அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற ததேகூ தலைவர் சம்பந்தனின் கருத்துகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சிகளான ஐதேக, ஸ்ரீலசுக ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்த பின்னடைவுக்கு பிரதான காரணங்கள் ஆகும்.

ஆனால் இந்த பின்னடைவுகளையிட்டு நான் ஆச்சரியப்படவில்லை. தென்னிங்கை பெரும்பான்மை கட்சி தலைமைகளிடம் அரசியல் தீர்வுக்கான மனோதிடம் இல்லை என நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பேயே அறிவித்திருந்தேன்.

இதை அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவிலேயே நான் பகிரங்கமாக கூறியிருந்தேன். இதை நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் சென்று தமிழ் மக்கள் மத்தியிலும் கூறியிருந்தேன்.

நான் அன்று சொன்னது, இன்று சரியானதையிட்டு நான் மிகவும் கவலையே அடைகிறேன்.

1972ம், 1978ம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள் தமிழ் மக்களின் ஒப்புதல் ஆணைகளை பெறாமல் கொண்டுவரப்பட்டவை என சம்பந்தன் கூறுவது முற்றிலும் உண்மை.

எனவே அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியலமைப்பை தமிழர் கோருவதில் மிக வலுவான அரசியல் நியாயம் இருக்கின்றது.

இந்நாட்டு அரசியலமைப்புகள், இந்நாட்டில் வாழும் தமிழர்களின் ஆட்சியுரிமையையும், இறைமையையும் அங்கீகரிப்பனவையாக அமைய வேண்டும்.

எனவே இன்றைய நிலையில்
புதிய அரசியலமைப்பு ஒன்றை நோக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நியாயமான முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராகவே இருக்கின்றது.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர், இது தொடர்பான கடைசி முயற்சியாக, புதிய அரசியலமைப்பு தொடர்பில் அனைத்து தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை கூட்ட வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் யோசனையாகும்.

அமெரிக்க கடற்படை – சிறீலங்கா கடற்படை கிழக்கில் சந்திப்பு

அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய பிரிவைச் சேர்ந்த சிறப்புப்புப் படை அதிகாரிகளுக்கும் சிறீலங்கா கடற்படையின் கிழக்கு பிராந்திய அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று கிழக்கு பிராந்திய கடற்படை தளத்தில் கடந்த புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

சிறீலங்கா கடற்படையின் பிரதி அதிகாரி ஜெயந்த குலரத்னாவை சந்தித்த இந்த குழுவில் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி இஸ்ரேல் றோசா பங்கு பற்றியதுடன். சிறீலங்காத் தரப்பில் சிறீலங்கா கடற்படையின் சிறப்பு படையணியின் இந்திகா விஜயரத்தினா, மற்றும் சிறப்பு படையணியின் முதலாவது பற்றலியன் கட்டளை அதிகாரி காயங்கா கரியவாசம் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

சிறீலங்கா கடற்படையினருக்கும் அமெரிக்க கடற்படையினருக்கும் இடையில் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள கூட்டு படைநடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் மீதான அழுத்தங்கள் அதிகரிப்பு – ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட்

குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் குழப்பம் என்பனவும், அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதும், மக்களுக்கான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளதாக ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்தார்.

இலங்கையில் ஆய்வுப் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.“இலங்கையில் மேலும் ஜனநாயகத்தை முன்னேற்ற வேண்டுமெனில், அது மக்களது ஐக்கியத்தின் ஊடாகவே சாத்தியப்படும் . எனினும், இலங்கை தனது கடப்பாடுகளை நிறைவேற்ற சமூகங்களில் காணப்படும் பிரிவினைகள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மக்களின் அபிலாசைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் அரசியல் தலைவர்கள் நிராகரிக்கக் கூடாது என்பது மிக முக்கியமானது. போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் தொடர்பான முன்னேற்றத்தைக் குறைத்து மதிப்பிடுதல் போன்ற விடயங்களை எதிர்வரும் தேர்தல்களின்போது அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளக்கூடாது.

அமைதியாக ஒன்றுகூடல், சங்கங்களை அமைக்கும் சுதந்திரம் என்பன இலங்கை அரசியல் அமைப்பில் பேணிப் பாதுகாக்கப்படுகின்ற போதிலும், தண்டனைச் சட்டக் கோவை, பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன இந்த உரிமைகளை இல்லாதொழிக்கும் வகையில் காணப்படுகிறது.

காணாமல் ஆக்கப்படுதல், காணி உரிமைகள், வாழ்வாதாரம், வளங்களையும் அபிவிருத்தித் திட்டங்களையும் அணுகுதல் என்பவை தொடர்பாக பாரபட்சமான முறையில் இச்சட்டங்கள் பிரயோகிக்கப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றம் என்பவற்றோடு, தற்போது நீடிக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டமும் மக்களுக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையிலேயே காணப்படுகிறது.

அத்தோடு, யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் கூட பாதுகாப்புத் துறையில் சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாதமையானது, சிவில் சமூக இயக்கத்தில் தடையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

ஏப்ரல் தாக்குதல்களின் பின்னர் நாட்டில் பரவலாகக் காணப்படும் பகைமை உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உரைகளின் வளர்ச்சி குறித்தும் விசேட நிபுணர் எடுத்துரைத்தார்.

அதேநேரம், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து பல்வேறு விடயங்களை ஆராய்ந்துள்ள இவர், இது தொடர்பான தனது விசேட அறிக்கையினையும், பரிந்துரைகளையும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வில் சமர்ப்பிப்பார் .

 ‘தமிழ் பெண் பொதுவெளி :தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ (‘TAMIL FEMALE CIVIL SPACE: Its Evolution and Decline in Tamil Eelam’)- ஆங்கில நூல் வெளியீடு

ஈழத்தமிழர் போராட்டம் வரலாறு அல்ல. அது ஒரு நீண்ட தொடர். அதன் அதிசயிக்க வைத்த ஒரு கட்டம் 2009 மே மாதத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த அதிசயத்தில் ஒரு அதிசயம் தான் அதில் பெண்களின் பங்கு.  ஒரு சுருங்கிய குடும்பவட்டத்திற்குள் அடக்கப்பட்டு இருந்த ஈழத்தமிழ் பெண்கள், இப்புரட்சியின் போது,  1980களிலிருந்து 2009 வரையான ஒரு குறுகிய காலத்துக்கு, பொதுவெளிக்கு திரண்டு வெளிவந்தார்கள். இன்று வரை இதுபற்றி எழுதப்பட்டவை பெண்களின் போர்த்திறனையே பேசியது. இந்நூல் பெண்கள் தமக்கென உருவாக்கிய சமூக பொதுவெளியைப் பற்றி பேசுகிறது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒரு குறிப்பிட்ட பொருளாதார வளமிக்க சமூகம் மேற்குலகத்தின் வாழ்க்கைத்தரத்தைக் கொண்டநிலைய எட்டும்போது மேற்கூறப்பட்ட நவீன பெண்ணியல்வாதம் அங்கு கூர்ப்படைந்துள்ளது.

ஆனால் ஒரு இனஅழிப்பின் மூலம் 2009 ஆம் அழிக்கப்பட்ட தமிழீழ நிழல் அரசில் உருவாகிய பெண்ணியல் கோட்பாடுகள் வேறுபட்ட வடிவத்தில் இருந்து உருவாகியதாகும். அது உழைக்கும் வர்க்க பெண்களில் இருந்து உருவாகியதாகும். இந்த வகையான பெண்ணியல் கோட்பாடுகளே இந்த உலகத்திற்கு தேவையானது.இந்த பெண்ணியல் கோட்பாடுகள் எவ்வாறு உருவாகியது என்பதை கலாநிதி என். மாலதி அவர்கள் எழுதிய இந்த நூல் தெளிவாக விளக்குகின்றது.

இந்த ஆங்கில நூல் தமிழிலும் விரைவில் வெளியிடப்படவிருப்பது தமிழ் வாசகர்களுக்கு ஒரு நிறைவான செய்தியாகும்.

கணணித்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற நூலாசிரியர் நியூசிலாந்தில் பல காலம் வாழ்வதுடன், 2005 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையில் தமிழீழ நடைமுறை அரசில் பணியாற்றியிருந்தார்.mala b  ‘தமிழ் பெண் பொதுவெளி :தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ (‘TAMIL FEMALE CIVIL SPACE: Its Evolution and Decline in Tamil Eelam’)- ஆங்கில நூல் வெளியீடு

தமிழீழ நடைமுறை அரசுபற்றி A FLEETING MOMENT IN  MY COUNTRY  என்ற நூலை  ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.பின்னர் அது தமிழிலும் வெளிவந்திருந்தது. கப்டன் மலரவனின் ‘போருலா  ‘ என்ற கள காவியத்தை WAR JOURNEY – Diary of a Tamil Tiger என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தந்திருந்தார்.பெண்போராளிகளின் பெண்போராளிகளின் எழுத்துருவாக்கங்களை ‘விடிவிற்காய்’ என்ற  நூலாகத்  தொகுத்துள்ளார்.

அவரின் TAMIL FEMALE CIVIL SPACE: Its Evolution and Decline in Tamil Eelam – Author(s) :N Malathy ,  நூலை பின்வரும் இணைத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்.

http://www.aakarbooks.com/details.php?bid=901

பிரபாகரனின் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியற்றவர்கள் நீங்கள் – டக்ளஸ்

மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு நேர பிரேரணை மீதான விவாதத்தின்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

இதே நாடாளுமன்ற சபையில் புலிகளை வெற்றி கொண்ட மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றி கூறி நீங்கள் உரையாற்றியிருந்தீர்களா இல்லையா? அதைவிடவும், புலிகளின் தலைமை இல்லாதொழிந்த போது மனிதநாகரீக பண்புகளை அடகு வைத்து நீங்கள் விருந்து படைத்து வெற்றி விழா கொண்டாடியது உண்மையா இல்லையா என்று கேட்கிறேன்.

புலிகளின் தலைமையை அரசியல் ரீதியாக மட்டும் விமர்சித்து வந்த நாங்கள் கூட நீங்கள் செய்தது போல் ஒரு அசிங்கமான, அநாகரீகமான இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. நீங்கள் நினைத்திருந்தால் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றியிருக்கலாம்.

ஆனாலும் அதை நீங்கள் விரும்பியிருக்கவில்லை. வன்னியை நோக்கிய படை நகர்வு நடந்த போது பணப்பெட்டி அரசியலும், சவப்பெட்டி அரசியலும் சேர்ந்து உங்களில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தீர்கள்.

அழிவு யுத்தத்தை நிறுத்தி மக்களை காப்போம் வாருங்கள் என்று நான் உங்களிடம் தனித்தனியாகவும், பகிரங்கமாகவும் கேட்டிருந்தேன்.

நீங்கள் வரவில்லை. எனது அழைப்பை ஏற்று நீங்கள் வந்திருந்தால் அன்று முள்ளிவாய்க்காலில் புலி சிங்க யுத்தத்தின் நடுவே அகப்பட்டு எமது மக்கள் குருதியில் சரிந்து மடிந்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் உங்கள் சுலாபங்களுக்காக அடிக்கடி உச்சரிக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட இன்று உயிருடன் இருந்திருப்பார்.

முள்ளி வாய்க்கால் அழிவுகள் நடந்த போது உங்களிடமிருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவராவது உங்கள் நாடாளுமன்ற பதவிகளை துறந்து எதிர்ப்பை தெரிவித்தீர்களா? இல்லை.

அவ்வாறு நீங்கள் உங்கள் பதவிகளை துறந்திருந்தால் 23 வது நாடாளுமன்ற உறுப்பினராக நானும் ஒருவனாக எனது பதவியை துறந்திருப்பேன்.

ஆகவே புலிகளின் தலைவர் பிரபாகரனின் இழப்பிற்கு மட்டுமன்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது மக்களின் இழப்பிற்கும் பொறுப்பு கூற வேண்டியவர்கள். சவப்பெட்டி அரசியல் வாதிகளும். பணப்பெட்டி அரசியல் வாதிகளுமே.

கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போக நினைப்பது போல், ஒரு கல்முனை விவகாரத்திற்கு கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்பு குறித்து இந்த சபையில் பேச விளைந்திருப்பது தமிழ் மக்களையும் ஏமாற்றி உங்களையே நீங்களும் ஏமாற்றும் செயல் என்றே தமிழ் மக்கள் இன்று பேச தொடங்கியுள்ளார்கள்.

முப்பது வருடங்களாக போராடி எதை சாதித்தீர்கள் என்று கேட்டு எமது விடுதலை இயக்கங்களின் களமுனை தியாகங்களை கொசைப்படுத்தினார் உங்கள் தலைவர்களில் ஒருவர்.

அப்போதாவது நீங்கள் அது குறித்து உங்கள் தலமையை நோக்கி ஒரு கேள்வி எழுப்பியிருந்தால் அந்த முப்பது வருட போராட்டத்தில் ஈடுப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை நீங்கள் உச்சரிப்பதற்கு தகுதியானவர்கள் என்று அர்த்தப்படும்.

சிறிலங்காவிற்கான இலவச விசா திட்டத்தில் சீனாவும், இந்தியாவும் இணைக்கப்பட்டன

இலங்கைக்கு வந்து இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் இந்தியாவையும், சீனாவையும் சேர்த்துக் கொண்டது.

இதுவரை தாய்லாந்து ஐரோப்பிய êனியன் நாடுகள் உட்பட 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை சென்ற பின்னர் விமான நிலையத்தில் வைத்து இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தை செயற்படுத்தி வந்தது. ஆனால் ஈஸ்டர் தின குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமானளவு குறைந்திருந்தது. தற்போது சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இந்தியாவும் சீனாவும் இணைத்துக் கொள்ளப்பட்டன.

இரு அமைச்சுக்களில் மாற்றம்

அமைச்சர் ரஞ்சித்மத்தும பண்டார, அமைச்சர் பீ.ஹரிஸன் ஆகியோரின் அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வகித்த பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுப் பதவியில், கிராமிய பொருளாதார அலுவல்கள் நீக்கப்பட்டு, கால்நடைவள அபிவிருத்தி பதவி இணைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவருக்கு பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பீ.ஹரிஸன் வகித்த விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சுப் பதவியில், கால்நடைவள அபிவிருத்தி நீக்கப்பட்டு கிராமிய பொருளாதாரம் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்படி அவருக்கு விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி நீரியல் வளம் என அவரது அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதியே இவர்களுக்குரிய அமைச்சுப் பதவியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இப்போது மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கான அமைச்சுப் பொறுப்பிற்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவும் கலந்து கொண்டார்.