Home Blog Page 3054

கொக்குதொடுவாய் பிரதேசத்தில் புதிய சிங்கள குடியேற்றங்கள்

அரசாங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான கொக்குதொடுவாய் பிரதேசத்தில் புதிய சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி வருவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஏற்கனவே கொக்குதொடுவாய் பிரதேசத்தில் புதிய சிங்கள குடியேற்றங்களை அமைக்க தேவையான அடிப்படையாக வேலைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கில் புதிய சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தப்படுவதை வடபகுதி மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் தமிழ் மக்களின் பாரம்பரிய பயிர் நிலங்களாக இருந்த கோட்டைகேணி, குஞ்சிக்கால்வேலி, தீமுந்தல், வெள்ளைகல்லடி ஆகிய பிரதேசங்களை உள்ளிடக்கி, பாதுகாக்கப்பட்ட வானப்பகுதியாக அறிவித்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் இந்த நடவடிக்கை காரணமாக தமிழ் மக்கள் தமது காணிகளுக்கு சென்று பயிர் செய்கையில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பயிர்செய்கைக்காக பயன்படுத்திய பழைய கிணறுகளும் பிரதேசத்தில் காணப்படுகின்றன.

தமிழ் மக்களின் காணிகளில் புதிய சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கம், தமிழ் மக்களின் பயிர் நிலங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவித்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தமிழ் மக்களை அப்புறப்படுத்த முயற்சித்து வருகிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளதுடன் முல்லைத்தீவு மக்கள் கடும் வெறுப்பில் இருந்து வருவதாகவும் ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.

அம்பகாமத்தில் படையினர் துப்பாக்கிச்சூடு

முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவர்களை நோக்கி இன்று இரவு இராணுவத்தினர் துப்பாக்கி சூட்டு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அம்பகாமம் பகுதியில் தற்பொழுது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்தவுடன் டக்ளஸ்,வரதராஜ பெருமாள் சந்திப்பு

சந்திப்பில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் காங்கிரின் தலைவர் பிரபா கணேசனிடம் இது தொடர்பாக வினவியபோது அவர் கீழ்வருமாறு விபரமளித்தார்,

நிகழ்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுவதற்காக நடப்பு அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. இதுவரையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

அதனால் வெற்றி இலக்கினை மாத்திரம் இலக்காக கொண்டு தமிழ் மக்களிடம் போலியான வாக்குறுதிகளை வழங்குவதை அனைத்து அரசியல்வாதிகளும் முதலில் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.

டக்ளஸ் தேவானந்தா,வரதராஜ பெருமாள் , ,டியூ குணசேகர,திஸ்ஸ விதாரண,ராஜா கொல்லூரே , அருண் தம்பிமுத்து, ரி.சிறீதரன்,பி.உதயராசா,  உட்பட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

முன்னாள் இந்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மரணம் – வே.இராதாகிருஸ்ணன் இரங்கல்

முன்னாள் இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

சிறுநீரக நோயாளியான சுஷ்மாவிற்கு 2016இல் சிறுநீரகங்கள் செயலிழந்தன. டெல்கி “எயிம்ஸ்“ மருத்துவமனையில், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய்பட்டது. இதையடுத்து நடந்து முடிந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல்  அரசியலில் இருந்து விலகினார்.

இந்நிலையில் சுஷ்மாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பலனின்றி 07.08 காலை உயிரிழந்தார்.

இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் செய்தியினை மலையக மக்கள் முன்னணி  தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதித் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் சுஷ்மா சுவராஜ் பற்றி குறிப்பிட்டுள்ளதாவது,

இந்தியாவின் அனுபவம் மிக்க அரசியல்வாதியும் சிறந்த பெண் ஆளுமையைக் கொண்டவரும் பெண்களின் திறமைக்கு எடுத்துக்காட்டாகவும், இலங்கையின் ஒரு சிறந்த அரசியல் நண்பனுமாக இருந்த முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கைக்கும் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது செய்தியில், இலங்கையைப் பொறுத்தளவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மிகவும் சாதுர்ஜமாகவும், நுணுக்கமாகவும் செயற்பட்டு அதற்கு தீர்வுகளை பெற்றுக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர். பலமுறை இலங்கைக்கு விஜயம் செய்து இங்கு இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர்

சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருவதால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தமிழர் புறக்கணிக்க வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மக்கள் சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்றும், மக்களின் வாக்குரிமையை தான் பறிக்கவில்லை என்றும் மேலும் அவர் கூறினார்.

முடிந்தால் எதிர்வரும் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்க தயார் எனவும் தெரிவித்தார் தற்போதைய  அரசாங்கம் நான்கரை வருடங்களாக கொடுத்த வாக்குறுதி எதனையும் நிறைவேற்றவில்லை என்பதால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் நல்லதொரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

காஸ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கை – சிறீலங்கா ஆதரவு

இந்திய கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்படுவதை தொடர்ந்து லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவாக இருப்பதை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார். காஷ்மீரில் இஸ்லாமியர்கள் அதிகம். அதேபோல லடாக் பகுதியில் பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.

யூனியன் பிரதேசமாக பிரிப்பதன் மூலம் இந்தியாவின் முதல் பௌத்த மாநிலமாக லடாக் மாற இருக்கின்றது. இது குறித்து சிறிலங்கா ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தான் லடாக் சென்றிருப்பதாகவும், அனைவரும் கண்டிப்பாக பயணிக்க வேண்டிய இடம் அது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

70 சதவீதம் பௌத்த மத மக்களை கொண்ட லடாக் இந்தியாவின் முதல் பௌத்த மாநிலமாக ஆகின்றது.

சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் – வடக்கு, கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் சந்திப்பு

சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவிற்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று 05.08 அன்று விஜயராம மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, மகிந்த பேசுகையில், தமிழ் மக்கள் மத்தியில் போலியான வாக்குறுதிகள் வழங்குவதை அனைத்து அரசியல் கட்சிகளும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தற்போதுள்ள அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் அவை எதையும் நிறைவேற்றவில்லை.

இந்த சந்திப்பில் ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன், டியு குணசேகர, திஸ்ஸ விதாரண, ராஜா கொல்லுரே, அருண் தம்பிமுத்து, ரி.சிறிதரன், பி.உதயராசா, வரதராஜப் பெருமாள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளதால் பல சிங்களக் கட்சிகள் தமிழ் மக்கள் மீது அதிக அக்கறைகள் காண்பிப்பது போல நாடகமாடும் தமது படலத்தை ஆரம்பித்துள்ளன.

 

கொழும்பின் சர்வதேச நிதி நகரம்

கொழும்பு சர்வதேச நிதி நகரத்தில் நிர்மாணிக்கப்படும் நிலப்பரப்பு இலங்கைக்கு உட்பட்ட நிலப்பரப்பாக பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பு சர்வதேச நிதி நகரத்தில் முதலாவது கட்ட நிர்மாணப் பணிகள் 2023ஆண்டில் நிறைவடையும் என்று இந்தத் திட்டத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் தலைமை அதிகாரி கஸ்யப்ப செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

காணிகளை நிரப்பும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. 3கிலோமீற்றர் தூரத்தை கொண்ட கடல் நீர் தடை நிர்மாணிப்பதில் 99 சதவீதமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. நிதி நகரத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 130 கோடி அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உடற்சோதனையின் பின்னரே நல்லூரானை தரிசிக்கலாம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் உடற்சோதனையின் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

பெண் பக்தர்களை சோதனைக் கூடத்திற்குள்ளும், ஆண் பக்தர்களை வெளியிலும் உடற் சோதனை செய்த பின்னரே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் எடுத்துச் செல்லும் உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

தாயகத்திலே பௌத்த ஆக்கிரமிப்புக்களுக்கு கூட்டமைப்பினரே பொறுப்பாளிகள்;தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டு

தமிழர் தாயகத்தை முழுமையாக பௌத்தமயமாக்கும் தொலைநோக்குடன் இலங்கை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் பௌத்த ஆக்கிரமிப்புக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பாளிகளாக உள்ளனர். அவர்களே அதற்கான பொறுப்புக்கூறலையும் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விடயம் குறித்து தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அநுராதபுரம் பௌத்த சமயத்தில் புனித நகரமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து தாயகத்தின் முகவாயிலான வவுனியாவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் ஊடாக பௌத்த சமயத்தின் பெயராலான ஆக்கிரமிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன.

போரின் பின்னரான சூழலில் முல்லைத்தீவிலும், மன்னாரிலும், கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும், கூட்டமைப்பின் தலைமையின் கோட்டையான திருமலையிலும், மட்டக்களப்பிலும், அம்பாறை என்று தமிழர் பிரதேசத்தின் மூலை முடுக்கெல்லாம் பௌத்த  விகாரைகளையும் உருவச் சிலைகளையும் நிர்மாணிக்கும் பணிகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. போர் நிறைவுக்கு வந்து பத்து ஆண்டுகளாகியிருக்கின்றன. தற்போது வரையில் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த நிர்மானங்களில் ஆகக்குறைந்தது ஒன்றைக் கூட தடுத்து நிறுத்தி தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பாதுகாத்திருக்கின்றோம் என்று கூறுவதற்கு எந்தவொரு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இயலுமை அற்றவர்களாக இருக்கின்றமையானது மிக வேதனைக்குரிய விடயமாகும். இவ்வாறிருக்க இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் நல்லூர் ஆலய முன்னறலில் நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட மாவை சேனாதிராஜா, பௌத்த ஆக்கிரமிப்புக்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தலையீடுசெய்ய வேண்டும் என்ற பொருள்பட உரையாற்றியிருந்தார். இதேபோன்று தான் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும்,சாந்தி சிறீஸ்கந்தராசாவும் இந்தியாவின் தலையீட்டினை கோரியிருக்கின்றார்.Jaffna Navatkuli Sammidhi Sumana Vihara Opening 1 1 தாயகத்திலே பௌத்த ஆக்கிரமிப்புக்களுக்கு கூட்டமைப்பினரே பொறுப்பாளிகள்;தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டு

போர் நிறைவுக்கு வந்து பத்து வருடங்களில் தமிழ்த் தேசிய அரசியலை நீக்கமுறச்செய்ததோடு இலங்கை அரசை இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பாதுகாக்கும் முனைப்புடன் செயற்பட்டதோடு பிராந்திய,சர்வதேச தரப்புக்களுடனான உறவுகளை வலுவாக்குவதிலிருந்து விலகியிருந்து விட்டு தற்போது நடுக்கடலில் கப்பல் மூழ்கும் நிலையை அடைந்ததும் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்த்தை கோரும் கூட்டமைப்பின் தன்நலம் சார்ந்த வியூகத்தை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களும் உணர்வார்கள். இதுவொருபுறமிருக்க, பௌத்த சமயத்தின் பெயரால் ஆக்கிரமிப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றபோது கூட புதிய அரசியலமைப்பு வருகிறது என்று தமிழ் மக்கள் மத்தியில் கண்கட்டு வித்தை காட்டிக்கொண்டிருந்த கூட்டமைப்பினர் ஆகக்குறைந்தது இடைக்கால அறிக்கையிலாவது பௌத்தத்திற்கு முதன்மை தானம் வழங்குவதையாவது எதிர்த்திருக்கலாம். ஆனால் அதனைச் செய்திருக்கவில்லை.

வரவு செலவுத்திட்டங்களுக்கும், நம்பிக்கையில்லாப்பிரேணை நிறைவேற்றுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் தயாகப்பிரதேசங்களில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட பௌத்த நிர்மனங்களை முழுமையாக அகற்றவேண்டும் என்று ஒன்றொன்றாக கோரிக்கை வைத்திருந்தாலாவது இற்றைக்கு அரைவாசி நிர்மானங்கள் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அவ்விதமான கருமங்கள் எவற்றையுமே சம்பந்தன் ஐயா தலைமையிலான கூட்டமைப்பு முன்னெடுக்காது பின்னடித்தமைக்கான காரணம் என்ன? ஆக, பௌத்த சமய நிர்மானங்கள் தாயகத்தினை ஆக்கிரமிப்பதை நாம் எதிர்க்கவில்லை என்பது தானே பொருளாகின்றது. அவ்வாறாயின் போருக்கு பின்னரான பௌத்த ஆக்கிரமிப்புக்கள் பற்றி பேசுவதாயின் கூட்டமைப்பினரே அதற்கான பொறுப்புக்கூறலைச் செய்ய வேண்டியவர்களாகின்றனர். இதிலிருந்து இவர்கள் ஒருபோதும் விலகி நிற்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு அடுத்த தேர்தல்களிலும் அதன் பக்கமே சாயவுள்ள நிலையில் தற்போது தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பௌத்த நிர்மானங்களை தடுத்து நிறுத்தி அகற்றுவதற்கான திராணி கூட்டமைப்பிடம் இருக்கின்றதா?

கன்னியா விவகாரத்தில் இளைஞர் சமூகத்தின் எழுச்சியின் அச்சத்தால் நீதிமன்றத்தினை கூட்டமைப்பு நாடியதே தவிரவும் இதய சுத்தியுடன் கூட்டமைப்பு செயற்பட்டிருக்கவில்லை என்பது திண்ணம். தமிழ் தேசிய அரசியல் தலைமையின் கோட்டைக்குள்ளேயே நிலைமை அவ்வாறு இருக்கையில் ஏனைய பகுதிகள் பறிபோனாலும் வெறும் கூக்குரல் சத்தத்துடன் அனைத்தும் நின்றுவிடும்.

இந்த யாதார்த்தத்தை தாயக உறவுகள் புரிந்துகொண்டு பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியான இன அழிப்புக்கு எதிராக சனநாயக வீச்சுமிக்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்பதோடு தமிழர் தாயகத்திலே கட்டமைப்பு ரீதியான இன அழிப்பை செய்துவரும் அரசை கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக எந்தவொரு முன் நிபந்தனையும் விதிக்காமல் ஆதரித்த தமிழ் சக்திகளை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.